மா-னீ


ஹெப்சிபா ஜேசுதாசனின் மா -னீ நாவல் வெளியாகி இருபத்தியேழு வருசங்கள் ஆகிவிட்டது. இன்று வரை அந்த நாவல் குறித்து விரிவான விமர்சனம் எதுவும் வெளியானதாக தெரியவேயில்லை. தமிழ்வாசகபரப்பில் ஏனோ அந்த நாவல்  கவனம் கொள்ளாமலே போய்விட்டது.


அதற்கான முக்கிய காரணம்  ஹெப்சிபா தனது நாவல்கள் குறித்து அதிகம் பேசாதவர். எந்த இலக்கிய குழுவோடும் தன்னை இணைத்து கொண்டு சண்டை சச்சரவுகளில் ஈடுபடாதவர். மிக குறைவாக, ஆனால் சிறப்பாக எழுதியவர்.  நவீன விமர்சகர்களின் கருணையும் தயவும் மிக்க கடைக்கண் ஹெப்சிபாவின் நாவல் மீது இன்று வரை படவேயில்லை.திருவனந்தபுரத்தில் ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு நகுலனிற்கு விளக்கு விருது கொடுக்கப்பட்ட நிகழ்வில் ஹெப்சிபாவை ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அவரோடு பேசியதில்லை. ஆனால் அவரது சாந்தமான முகம் நினைவில் அப்படியே இருக்கிறது. அன்றைய நிகழ்வில் நகுலன் மேடையில் இருந்தபடியே ஹெப்சிபா இது யார் உன் பேரக்குழந்தையா என்று அரங்கில் இருந்த ஒரு குழந்தையை சுட்டிகாட்டி கேட்டார். ஹெப்சிபாவிடம் அதற்கும் புன்னகையே பதிலாக வந்தது. ஜேசுதாசன் சிறந்த பேராசிரியர். தேர்ந்த வாசகர். நுட்பமான விமர்சகர். அவரது அக்கறைகளும் வாசிப்பு அனுபவங்களும் தனிசிறப்பானவை.புத்தம்வீடு என்ற ஹெப்சிபாவின் நாவல் குறித்து சிஎல்எஸ் கருத்தரங்கில் வாசிக்கபட்ட கட்டுரையை படித்திருக்கிறேன். சில கல்லூரிகளில் புத்தம்வீடு பாடமாகவும் கூட வைக்கபட்டிருந்தது. அது மரபான தமிழ்நாவல்களில் இருந்து மாறுபட்டது. அதை விடவும் நான் மானீயை முக்கியமானதாக கருதுகிறேன்.
இன்று வாசிக்கப்படும் போதும் மா-னீ தேர்ந்த கதை சொல்லும் முறையும் கவித்துவ அழகுடன் கூடிய நடையும்  நுட்பமான விவரணைகளும், மிகையற்ற உணர்ச்சிநிலைகளும் கொண்ட அற்புதமான நாவல் என்பதில் உறுதியே ஏற்படுகிறது.மா-னீ சிதறுண்ட பர்மீய தமிழ் குடும்பம் ஒன்றின் கதையை பேசுகிறது. தமிழ்நாவல் வரலாற்றில் மறக்கமுடியாத பெண் கதாபாத்திரம் மா-னீ. லாசராவின் அபிதா போல இந்த பெயரும் சொல்ல சொல்ல நாவில் தித்திப்பு தருவதாகவே இருக்கிறது. மா –னீ என்ற இளம்பெண்ணே கதையை விவரிக்கிறாள். அவளது அன்பும் காதலும் குடும்பத்தின் மீதான அக்கறையும் அகதியாக வெளியேறிய போது அடையும் வலியும் துக்கமும் நாவலெங்கும் பீறிடுகின்றன.மானீ 140 பக்கமே உள்ள நாவல். அன்னம் பதிப்பகத்தால் 1982ம் ஆண்டு இதன் முதல்பதிப்பு வெளியானது. பத்து ரூபாய் விலை. ஆனாலும் பல ஆண்டுகள் விற்கபடாமலே இந்நாவல் தேங்கி போயிருந்தது,


மா-னீ என்ற தலைப்பே நம்மை வசீகரிக்கிறது. அந்த சொல்லின் ஊடாக ஒரு இளம்பெண் வெளிப்படுகிறாள். அவளது பெயரே அவளை பற்றிய கற்பனையை நமக்குள் கிளர்ந்து எழுச்செய்கிறது. உண்மையில் அது தான் இந்த நாவலும் கூட.மா-னீ என்பது பர்மாவில் அவளுக்கு பள்ளி தோழிகள் வைத்த பெயர். உண்மையில் அவளது பெயர் கிரேஸ் அழகு மணி. வீட்டில் அவளை எல்லோரும் ராணி என்று கூப்பிட்டார்கள். அதுவும் வெறும் ராணியில்லை பர்மா ராணி. தென்தமிழ்நாட்டில் இருந்து பர்மாவிற்கு பிழைக்க போனவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்கள் கூலிகளாகவும், சிறு வணிகம் செய்வதற்காகவும் பர்மா சென்றவர்கள். தலைமுறையாக அங்கே தங்கிவிட்டார்கள். யுத்தமே அவர்களை தேசத்தை விட்டு வெளியேற்றியது.பர்மா பிரிட்டீஷ்காலனியாக இருந்தது என்பதால் இந்தியர்கள் அங்கே குடியேறுவதும் வேலை செய்வதும் இயல்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பர்மாவிற்கு சென்று வட்டிதொழில் நடத்திவந்தனர். அவர்களின் அக்கறையால் அங்கு தமிழ் பள்ளிகளும் கோவில்களும் கடைகளும் உருவாக்கபட்டன. தமிழ் வளர்ச்சிக்கு அவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். பர்மாவின் எந்த நகரத்திற்கு போனாலும் அங்கே தமிழ் பேச தெரிந்த நூறு பேராவது இருப்பார்கள் எனும் அளவிற்கு தமிழ் மக்கள் அங்கு வசித்து வந்தனர்.மியான்மர் எனப்படும் பர்மா தென்கிழக்கு ஆசியநாடுகளில் ஒன்று.  ஒருபக்கம் சீனாவும் இன்னொரு பக்கம் தாய்லாந்தும் இருக்கின்றன.  மிக வளமான நாடு. இயற்கையின் உன்னதங்கள் நிரம்பியது. ஐராவதி என்ற மிகப்பெரிய ஆறு ஒடுகிறது. பௌத்த மதம் வேரோடிய நாடு. ஆண்டின் மழை அளவு மிக அதிகமானது. அடர்ந்த காடுகளே அதன் வளத்திற்கு முக்கிய காரணம். பர்மீயர்கள் எனும் பூர்வமக்களின் தேசமது. பர்மீய மொழியே முக்கிய ஆட்சிமொழியாக இருந்தது. ஆங்கிலேயர்களின் ஆக்ரமிப்பின் பின்பு ஆங்கிலமும் அரசு மொழியாக்கியது. பின்பு தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளும் பரிவர்த்தனைக்கான அங்கீகாரத்தை பெற்றன. 1948ல் தான் பர்மா சுதந்திரம் பெற்றது.இன்றுள்ள மியான்மரின் அரசியல் சூழலில் தமிழும் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்கள் போலவே ஒடுக்கபடுகிறார்கள். அவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் கிடைப்பதில்லைபர்மாவின் முக்கிய விவசாயம் நெல். காடுகளில் இருந்து கிடைக்கும் தேக்கும் மூங்கிலும் வனப்பொருட்களும் அவர்களுக்கு பெரிய வருவாயை ஏற்படுத்தி தந்தன.  அதனால் பர்மாவிற்கு கூலி வேலை செய்ய நிறைய ஆட்கள் தேவைப்பட்டார்கள். அதற்காகவே இந்தியாவில் இருந்து அதிகம் பேர் பர்மா சென்றார்கள். அது போலவே ஒரளவு படித்தவர்களுக்கு அங்கே நல்ல வேலைகள் கிடைத்தது. ஆகவே தமிழ்நாட்டில் அடிப்படை கல்வி கற்றவர்கள் நல்ல உத்தியோகம் என்று பர்மாவிற்கு சென்றனர். ரங்கூனும் மாண்டலேயும் தான் பர்மாவின் முக்கிய நகரங்கள். அங்கே தான் அதிகம் வணிகம் சார்ந்து இயங்கிய தமிழ் குடும்பங்கள் இருந்தன.பர்மீயர்கள் கடின உழைப்பாளிகள். அதிலும் பர்மீய பெண்கள் சலிக்காத உழைப்பாளிகள். அவர்கள் இயல்பாகவே உறுதியான மனது கொண்டவர்கள். ஆனால் அடுத்தவர் மேல் அன்பு செய்வதில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள். அழகும் கச்சிதமான உடற்கட்டும் கொண்ட பர்மீய பெண்களை வெள்ளைகாரர்கள் தங்களது பாலியல் இன்பங்களுக்காக அதிகம் பயன்படுத்தி கொண்டார்கள்.இந்திய தேசிய ராணுவம் உருவாக்கபட்ட போது அதற்கு பெருமளவு உதவி செய்வதவர்கள் பர்மீய தமிழ் வணிகர்களே. இந்திய சுதந்திரத்திற்கு பர்மீய தமிழர்களின் பங்கு முக்கிய ஆதரவாக இருந்தது. யுத்த காலம் மற்றும் அது தொடர்ந்த நெருக்கடிகள், பர்மாவினை விட்டு தமிழர்கள் வெளியேறி கால்நடையாக தமிழகம் வந்து சேர்ந்த நிகழ்ச்சிகளை சாமிநாத சர்மா எனது பர்மீய நடைப்பயணத்தில் முழுமையாக விவரித்திருக்கிறார். அது போலவே ரங்கூனில் இருந்த தமிழ் வாழ்க்கை பற்றி ப.சிங்காரத்தின் இரண்டு நாவல்களும் விரிவாக பேசுகின்றன.1948ல் மார்டன் தியேட்டர்ஸ் பர்மாராணி என்ற படத்தை தயாரித்து வெளியிட்டது. இதில் டி. ஆர் .சுந்தரம் நடித்திருக்கிறார்.  பர்மாராணி என்ற பெண்உளவாளி எப்படி யுத்த காலத்தில் ஆங்கிலேயர்களுடன் இணைந்து பணியாற்றினாள் என்ற சாகச கதையை இந்த படம் விவரிக்கிறது. ரங்கோன் ராதா, பராசக்தி, புதிய பறவை போன்ற படங்களில் பர்மா யுத்தம் ஏற்படுத்திய விளைவுகள் பதிவு செய்யபட்டிருக்கின்றன. பர்மா – சயாம் ரயில்பாதை உருவாக்கத்தின் போது ஜப்பானிய ராணுவம் காட்டிய கெடுபிடிகளும் அதன் தொடர்விளைவுகளையும் முன்வைத்தே  The Bridge on the River Kwai என்று டேவிட் லீன் படமாக்கினார். அந்த படம் பர்மாவில் படமாக்கபடவில்லை. மாறாக இலங்கையில் படமாக்கபட்டது.இந்த நாவல் பர்மாவின் வடக்குபகுதியில் உள்ள கத்தா எனப்படும் சிறுநகரில் வாழ்ந்த தமிழ்குடும்பத்தின் கதையை விவரிக்கிறது. ரங்கூனை போல கத்தா பெரிய நகரமில்லை. வனம் சார்ந்த சிறிய நகரம். ஐராவதி ஆற்றின் வழியாக பயணம் செய்தே அதை அடைய நேரிடும். தேக்கு வனங்கள் நிரம்பிய பகுதி. அங்கே ஆரம்ப காலத்தில் அதிக தமிழ்குடும்பங்கள் வசிக்கவில்லை. பெகுவில் ரயில்பாதை போடுவதற்கான பணி நடைபெற்ற போது சென்ற தமிழ்குடும்பங்கள்  அப்படியே கத்தாவிற்கு குடிபோனார்கள். கத்தா வழியாக எளிதாக சீனாவிற்கு சென்றுவிட முடியும் என்பதால் அங்கே ராணுவ பாதுகாப்பு சற்று கூடுதலாக இருந்தது. பெரிய சிறைச்சாலை ஒன்றுமிருந்தது.இந்த கதை ஹெப்சிபாவின் உண்மை கதை என்பது போன்று நாவல் முகப்பில் உள்ள சமர்ப்பணம் தெரிவிக்கிறது. தன் நினைவில் ஒளிரும் பர்மாவை ஹெப்சிபா எழுத்தில் நிலை பெற செய்திருக்கிறார் போலும்.கதை ராணி என்ற பெண் வழியாகவே விவரிக்கபடுகிறது. அவள் காட்டு இலக்காவில் வேலை செய்யும் தன்னுடைய தந்தை செல்வராஜ். அவளது அம்மா அன்னம்மா  சகோதரர்கள் ரஞ்சன் ஸ்டான்லி இருவரை பற்றி முதல் அத்தியாயத்தில் அறிமுகம் செய்து வைக்கிறாள். எப்படி அவர்கள் குடும்பம் தமிழகத்தில் இருந்து பர்மா வந்தது என்ற கடந்தகாலம் விவரிக்கபடுகிறது
அத்துடன் பர்மாவின் தென்பகுதியில் உள்ள ஒரே கல்லூரியான ஐட்ஸனில் தங்கி படிக்கும்  அவளதுஇரண்டு அண்ணன்களுக்கும் அவளுக்குமான பாசமும் கேலிகிண்டல்களும் அறிமுகமாகிறது.கத்தாவில் ஒரேயொரு உயர்நிலைபள்ளியிருக்கிறது. அங்கே தான் கிரேஸ் அழகுமணி படிக்கிறாள். அவளது பெயரை உடன்படிக்கும் பர்மீய சிறுமிகளால் கூப்பிட முடியவில்லை. அவர்கள் வைத்த பெயரே மா-னீ. காரணம் பர்மாவில் பெண்களின் பெயர்கள் மா-மா, ஷ்வோ- மா, நாண் –மா. மா -கிம்-மியா இப்படிதானிருக்கும் ஆகவே அவள் பெயரையும் மா –னீ என்றாக்கிவிட்டார்கள். அந்த பெயரை வீட்டில் கூட அண்ணன்கள் கேலியாக அழைப்பதுண்டு. அவள் தன்பெயரை ராணி என்று தான் அனைவரிடமும் சொல்கிறாள்திருவதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த அருமனை என்ற ஊரை சார்ந்த செல்வராஜ் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்த பட்டதாரி. சொந்த ஊரில் குமாஸ்தா வேலை செய்ய திருப்தியில்லாமல் ரங்கூனுக்கு வந்து சேர்கிறார். காட்டிலாக்காவில் வேலைக்கு சேர்ந்து வனப்பகுதியான கத்தாவிற்கு குடியேறுகிறார். ஆங்கிலயே அதிகாரிகளின் நன்மதிப்பை பெற்றதால் அவருக்கு தனி வீடும் வேலையாட்களும் உதவிகளும் கிடைத்தன.  அதில் குடும்பத்தை ஒட்டுவதன் ஊரில் உள்ள தனது அம்மா மற்றும் தம்பி தங்ககண்ணிற்கு தேவைப்படும் பணத்தையும் அனுப்பி வைத்து உதவுகிறார்.வீட்டில் ஒரு பர்மீய சமையற்காரன் இருந்தான். அவருக்கு கிழே நிறைய பர்மீயர்கள் வேலை செய்தனர். இவர்களை சமாளிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் பர்மீய மொழியை கற்றுக் கொள்கிறார்.  அவருக்கு பர்மீய மொழி கற்று தந்தவர் ஊ-லூ என்ற ஆசிரியர். எப்போதும் லுங்கி கட்டிக் கொண்டு பட்டு தலைப்பாகை சூடிய வயதானவர். அவர் வழியாகவே லுங்கி என்பது பர்மீய சொல். அவர்கள் கட்டிய உடை இந்தியாவிற்கு வந்தபோது அங்கிருந்தே லுங்கி என்ற வார்த்தை உருவானது என்பதை அறிந்து கொள்கிறார்.காட்டில் வேட்டையாடுவது வெள்ளைகாரர்களின் முக்கிய பொழுது போக்கு . அதற்கு உறுதுணையாக செல்வராஜ் துப்பாக்கியுடன் மிளா வேட்டைக்கு போவதே நடைமுறை.. அவரது ஒரே ஆசை எப்படியாவது எம்ஏ படித்து பாஸ் பண்ணிவிட வேண்டும் என்பது. எம்.ஏ பாஸ்பண்ணிவிட்டால் உயரதிகாரியாகி விடலாம். அப்புறம் வசதியாக வாழலாம் என்று கனவு காண்கிறார். இதற்காக அவர் அதிகாரிகளுக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் வீட்டில் விருந்து கொடுக்கிறார்அந்த பர்மீய வீடும் புறச்சூழலும் அன்னம்மாவின் மனநிலையும் மிக துல்லியமாக விவரிக்கபட்டிருக்கிறது. இந்த நாவலின் தனிச்சிறப்பு பர்மீய வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தியிருப்பது. அது படிக்கும்போதே நம்மை பர்மாவில் இருப்பது போன்ற நெருக்கத்தை உருவாக்கிவிடுகிறது.


ஹெப்சிபா  நுட்பமான எழுத்தாளர் என்பதற்கு அவரது மா –னீ நாவலின் முதல் அத்தியாயமே சாட்சி. எத்தனை விபரங்கள். எவ்வளவு நுட்பமான விவரிப்புகள். வர்ஜீனியா வுல்பிடம் காணப்படுவது போன்று புறச்சூழலை விவரிப்பதன் வழியே மனிதர்களின் மனநிலையை எடுத்து சொல்லும் கதை சொல்லும் முறை ஹெப்சிபாவிடம் அருமையாக கைவந்திருக்கிறது. அதிலும் பர்மீய கதாபாத்திரங்களை அவர் விவரிக்கும்போது உள்ளார்ந்த கேலியும் அக்கறையும் வெளிப்படுவது வெகுசிறப்பானது.ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக வயது வந்த பெண் வெளியாட்களுடன் பேசுவதோ உலகை தனியாக சுற்றி அறிந்து கொள்வதோ சாத்தியமானதேயில்லை. வீடு தான் அவளது உலகம். குடும்பத்து மனிதர்களின் அனுபவங்களில் இருந்தே அவள் தன்னை உருவாக்கி கொள்கிறாள். வெளிஉலகம் அவள் வரையில் அதிசயமான உலகம். மா-னீயும் அப்படியே இருக்கிறாள்.பர்மாவினை பற்றிய படைப்புகளில் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய  Burmese Days   முக்கியமானது. இந்த நாவல் 1934ம் ஆண்டு வெளியானது. ஜார்ஜ் ஆர்வெல் விலங்குபண்ணை என்ற நாவலை எழுதி மிக பிரபலமானவர். இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். ஆனால் இந்தியாவில் பிறந்தவர். இவரது அப்பா இந்தியாவில் கிழக்கிந்தியகம்பெனியில் சில ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். ஜார்ஜ் ஆர்வெல் ஐந்து ஆண்டுகாலம் பர்மாவில் உயர் போலீஸ் அதிகாரியாக வேலை செய்திருக்கிறார். இந்த நாட்களில் அவர் பர்மாவின் வடபகுதிகளின் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்கான முழு அதிகாரத்தை கையில் வைத்திருந்தார்மா –னீ நாவலில் இடம் பெற்றுள்ள காலகட்டத்தில் அதே கத்தா நகரில் ஜார்ஜ் ஆர்வெல் வசித்திருக்கிறார். இவரது நாவலிலும் கத்தாவும் வடபர்மீய வாழ்வுமே இடம்பெறுகிறது.ஆர்வெலின் பர்மீய நாட்கள் நாவலில் டாக்டர் வீராச்சாமி என்ற தமிழ்கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. இவரே நாவலின் முக்கியபாத்திரம். இவருக்கு எதிராக ஊழல்பெருச்சாளியான ஒரு பர்மீய நீதிபதி தொடர்ந்து புகார்கள் அனுப்பி  எப்படியாவது டாக்டரை ஒழித்து கட்டி நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்று தொடர்ந்து முயற்சிக்கிறார். டாக்டர் வீராச்சாமியோ ஆங்கில அரசின் விசுவாசி. அவர்கள் எது செய்தாலும் நியாயம் என்று நம்புகின்றவர். ஆனால் தன் மீது சுமத்தப்படும் பொய்குற்றங்களை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.இந்த புகார்களில் இருந்து தன்னை விடுவிக்க அவர் தனது ஆங்கில நண்பரான ஜான் பிளாரேயை நாடுகிறார். பிளாரே ஆங்கிலேயராக இருந்தாலும் பர்மீயர்களின் சார்பில் பேசக்கூடியவர். அவர்களுக்காக எப்போதும் துணை நிற்பவர். இவர் ஒரு பர்மீய பெண்ணை காதலித்து அவளை இரண்டாவது மனைவி போல துணைக்கு வைத்திருக்கிறார்.  ஜான் உதவியால் தன் மீதான புகார்களில் இருந்து தற்காலிகமாக தப்பி முடிந்த வீராச்சாமி முடிவில் பர்மீய நீதிபதியின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடுகிறார்.இந்த நாவலின் ஊடாக பர்மா காலனியாக இருந்தபோது நடைபெற்ற அரசியல் கொந்தளிப்புகள், ஆங்கிலேய அதிகார துஷ்பிரயோகங்கள், பர்மீய மக்களை கொத்தடிமை போல நடத்திய விதம் யாவும் விவாதிக்கபடுகிறது.
உலகப்புகழ்பெற்ற ஜார்ஜ் ஆர்வெலின் பர்மீய நாட்களை விடவும் அதே கத்தாவை ஹெப்சிபா சிறப்பாக எழுதியிருக்கிறார். ஆங்கிலேயராக ஆர்வெலிடம் வெளியே இருந்து பர்மாவை பார்க்கும் குணமிருக்கிறது. ஆனால் ஹெப்சிபா அதை தனது சுயமான வாழ்நிலம் போன்று பாவித்து எழுதியதால் அவரால் அதிக கவனத்துடன் நுட்பத்துடன் பர்மீய வாழ்வை எழுத முடிந்திருக்கிறது. ஒருவகையில் பர்மீயர் ஒருவர் தமிழில் நாவல் எழுதியது போன்றே உள்ளது. அது தான்  தனிப்பெரும் சிறப்பு.ஹெப்சிபா பர்மாவில் காணப்படும் புத்த மடாலயங்கள், அங்கு நடைபெறும் வழிபாடுகள்; எளிய மக்கள் புத்தம் மீது கொண்டுள்ள ஈடுபாடு போன்றவற்றை விரிவாக எழுதியிருக்கிறார். பயா பயா என்று உச்சரிக்கும் உதடுகளுடன் பௌத்த கோவிலான பகோடாவை நோக்கி மக்கள் செல்லும் காட்சியும் பொங்கிகள் எனப்படும் பௌத்த குருமார்கள் பற்றியும் தங்கதகடுகள் பதித்த பகோடாக்களிலிருந்து காற்றில் மிதந்து வரும் கோவில்மணிகளின் சப்தமும் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் கோபுரமும் அந்த கோபுர உச்சியினை காற்று வந்து மோதி சப்தமிடுவதும்  எழுத்தின் வழியே காட்சிகளாக ததும்புகின்றனமா –னீ கிறிஸ்துவ பெண் ஆனாலும் அவளுக்கு பௌத்த மடாலயங்களுக்கு சென்று வரவேண்டும் என்ற ஆசையிருக்கிறது. அவள் யாரும் அறியாமல் சென்று வருகிறாள். மோட்சபயணம் என்ற பௌத்த பாதையில் நடந்து பார்க்கிறாள். மனதை சாந்தம் கொள்ள வைக்கும் பௌத்தத்தை போற்றுகிறாள்.
மா-னீ பள்ளி சிறுமியின் வயதில் இருந்து பதின்வயது கொண்ட பெண்ணாகும் வரை நாவல் விவரிக்கிறது. நாவலின் வழியே கத்தாவில் உள்ள பர்மீய வாழ்க்கை. அங்கு ஒடும் ஐராவதி ஆற்றின் வெள்ளப்பெருக்கு. காற்றடி காலத்தில் ஆளை தூக்கி போட்டுவிடும் கொடுங்காற்று அடிப்பது, வறண்ட வெயில்காலம் போன்றவை விவரிக்கபடுகிறது.கத்தாவிற்கு முதன்முறையாக ரயில் விடப்படுவது. அவர்கள் ஆகாய விமானம் பறப்பதை காண்பது , முதன்முறையாக சினிமா தியேட்டர் வருவது, ரேடியோ கேட்க துவங்குவது என்று நாகரீகமாகி வரும் பர்மாவின் சிறுநகரின் கதையும் மா–னீ கதையோடு கூடவே விவரிக்கபடுகிறதுமா-னீயின் குடும்பம் மிக ஐதீகமானது. அப்பா கட்டுபெட்டியான சிந்தனைகளுடன் இருக்கிறார். ஆனால் ஆங்கில கல்விபடித்த அவரது பையன்கள் சுதந்திரமாக சிந்திக்கிறார்கள். அவர்கள் சிகரெட் பிடித்து கெட்டு போனது போல தன் மகள் கெட்டுபோய்விடக்கூடாது என்று மா –னீயின் அப்பா பயப்படுகிறார். அவர் பர்மீயர்களை ஒரு போதும் தனக்கு சமமானவர்களாக நினைப்பதில்லை. தன்னிடம் கூலி வேலை செய்யும் பர்மீயர் எவராவது தன்னை வீட்டிற்கு சாப்பிட கூப்பிட்டுவிடுவாரோ என்று பயப்படுகிறார். தன் வீட்டில் வேலை செய்யும் பர்மீயர்களை மிக கடுமையாகவே நடத்துகிறார்.மா-னீயின் பெரிய அண்ணன் மா- மியா என்ற பர்மீய பெண்ணை காதலிக்கிறான். அது அவனது அப்பாவிற்கு பிடிக்கவில்லை. மா –மியா கர்ப்பமாகிவிடுகிறாள். அவளை ரஞ்சன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பர்மீயர்கள் கோபம் கொண்டு கத்துகிறார்கள். அப்பா இந்த அவமானம் தாங்கமுடியாமல் ரத்தகொதிப்பு நோயாளி ஆகிவிடுகிறார். ரஞ்சன் அந்த பர்மீய பெண்ணை திருமணம் செய்து கொண்டுவிடுகிறான். குடும்பம் சிதைவுற துவங்குகிறது. அடுத்த அண்ணன் பைலட்டாக வேலைக்கு சேர்ந்து குடும்பத்தை கொஞ்சம் முன்னேற்ற பார்க்கிறான்.இதற்குள் யுத்தம் துவங்கிவிடவே ஜப்பானியர்கள் பர்மாவின் மீகு குண்டுபோட துவங்குகிறார்கள். ஊரை காலி செய்துவிட்டு போவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாகிறது. தமிழ்நாட்டிற்கு திரும்பி போய்விடலாம் என் அவர்கள் திட்டமிடுகிறார்கள். ஆனால் எதிர்பாராத குண்டுவீச்சு மற்றும் கலவரம் காரணமான மா –னீ குடும்பத்தை விட்டு தனித்து பிரிந்து ரயில் ஏறிவிடுகிறாள். அவளுக்கு மலையாளியான நர்ஸ் அன்னம்மா உதவி செய்கிறாள். அவர்கள் கப்பலில் இந்தியா திரும்புகிறார்கள்.பிறந்ததில் இருந்து சொந்த ஊரை அறியாத மா –னீ முதன்முறையாக சொந்த ஊருக்கு வந்து சேர்கிறாள். அங்கே அறிந்தவர் யாருமில்லை. சித்தப்பா தங்ககண் நாடாரை சந்திக்கிறாள். அவரது வீட்டில் அடைக்கலம் ஆகிறாள். அங்கும் நிம்மதியாக வாழ முடியவில்லை. பிரிந்த குடும்பத்தில் மீதமாக அம்மா மட்டுமே ஊர் வந்துசேர்கிறாள். அவர்களது பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றிவிட்டதாக தங்களை குற்றம் சொல்கிறார்களே என்று சித்தி மனச்சடவு கொள்கிறாள்.முடிவில் சித்தப்பா அவளது எதிர்கால நலனிற்காக மாப்பிள்ளை பார்க்க துவங்குகிறார். பைலட்டாக உள்ள அண்ணன் அவளை தேடி வருகிறான். கல்யாணத்திற்கு தேவையான உடைகள் நகைகள் வாங்க உதவி செய்கிறான். மா-னீயின் திருமணம் நடைபெறுகிறது. அவள் முதன்முறையாக அவளை மணந்துகொள்ள போகும் ஜானை சந்திக்கிறாள். அவன் தன்னை புரிந்துகொண்டு நன்றாக நடத்துவான் என்பது அவனது தோற்றத்திலே தெரிகிறது. அவனிடம் தன்னை ஒப்படைக்கிறாள். அத்துடன் நாவல் நிறைவு பெறுகிறதுநாவல் முழுவதும் பெண்ணின் வழியாகவே விவரிக்கபடுகிறது. அவளது ஆசைகள் கனவுகள் ஏமாற்றஙகள் இவையே நாவலை முன்நகர்த்துகின்றன. குறிப்பாக பெண்ணின் மனநிலை காற்றில் அசையும் இலைபோல எப்போது எந்த திசையில் அசையும் என்று தெரியாது என காட்டுகிறது. தாயும் மகளும் பேசிக் கொள்ளும் காட்சிகளும், வழிபடுவதற்கான தேவாலயம் இல்லாத ஊருக்கு வந்துவிட்டதாக மா-னீயின் அம்மா புலம்புவதும், பர்மீய வேலைக்காரன் மாங்போவும் மருத்துவமனை செவிலியாக வரும் அன்னம்மாவின் கதாபாத்திரமும் செதுக்கு சிற்பங்களை போல நுட்பமாக உருவாக்கபட்டிருக்கிறார்கள்.நாவல் முழுவதுமே மா-னீ கடவுளிடம் தன்குடும்பத்தை காப்பாற்றும்படியாக பிரார்த்தனை செய்தபடியே இருக்கிறாள். பிரிந்து போன அண்ணனுக்காகவும் நோயாளியான அப்பாவிற்காகவும் கண்ணீர்விடுகிறாள். அவளது நேசம் புரிந்து கொள்ளபடாமலே போகிறது என்ற துக்கமே அவளை அழவைக்கிறது.
பர்மாவை பிரிந்து தமிழகம் வந்ததை அவளால் தாங்க முடியவேயில்லை. கத்தா என்ற அந்த சிறுநகரம் அவளுக்குள் முழுமையாக பதிந்து போயிருக்கிறது. இந்த நாவலில் பிரதான கதாபாத்திரங்களை விடவும் அதிகம் சிறு கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அசலானவர்கள். அவர்கள் சில அத்தியாயங்களே விவரிக்கபட்ட போதும் தனித்துவமாக பதிவாகியிருக்கிறார்கள்.ஐராவதி நதியை பற்றிய ஹெப்சிபாவின் விவரணைகள் அபாரமானவை.  நதியின் பூர்வ வரலாறும் அதன் பெருக்கோட்டமும் வரைபடம் போல சித்தரிக்கபடுகிறது. ஐராவதி நதியை பற்றி குறிப்பிடும் போது அது உறங்கும் கடல் என்கிறார் ஹெப்சிபா. அத்துடன் கேலியான குரலில் அது தான் பர்மாவின் ஹைவே. எந்த ஒரு சாலையை விடவும் அதிகம் பயணம் செய்வது ஐராவதி நதியின் மீது தான் என்றும் சுட்டிக்காட்டுகிறார்.ஆற்றில் செல்லும் சரக்கு கப்பல்களும் படகுகளும் வண்ணத்துப்பூச்சிகள் பறந்து போவது போலிருப்பதாக எழுதியிருக்கிறார். சிறுவர்கள் ஆற்றில் அடித்து போய்விடாமலிருக்க ஆற்றோரம் குடியிருக்கும் மக்கள் சிறார் இடுப்பில் கயிறு கட்டி அதை ஒரு முளையில் சேர்த்து முடிந்திருப்பார்கள் எனவும் ஐராவதியில் கிடைக்கும் மீன் ருசி, கரையோரம் வாழும் பர்மீயர் வெள்ளகாலத்தில் சந்திக்கும் அவலங்கள் என்றும் சிறப்பு அடையாளங்களை நாவல் முழுவதுமே  காட்டுகிறார்.அழகிய மெல்லிய மஸ்லின் சட்டையின் பொத்தான்களிலிருந்து முத்துகள் வரிசையாக அசைந்தாட,  புஷ்பதாம்பாளம் ஒன்றை தாங்கிக் கொண்டு வெல்வெட் செருப்பின் மேல் மெத்தென்று நடந்து அவள் பகோடாவிற்கு போகிறாள். அவள் தலையில் உள்ள புஷ்பசுமை பர்மீயப்பெண்களுக்கு சற்று அத்துமீறியதாக இருக்கும் என்று பர்மீய பெண்ணான மா-மியா பற்றி ஹெப்சிபா தீட்டும் சொற்சித்திரம் காட்சியாக நம்முன்னே தோன்றிமறைகிறது.ஹெப்சிபா தேர்ந்த கதாசிரியர் என்பது அவர் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை சித்தரிக்கும் தருணங்களை கொண்டு அறிந்து கொள்ள முடிகிறது. துளியும் மிகையில்லாத உணர்ச்சி வெளிப்பாடுகள் அவை. இவரது எழுத்தில் எமிலி டிக்கன்சனின் குரல் போன்ற நெருக்கம் உள்ளது. அதே நேரம் கதை சொல்வதில் வர்ஜீனியா வுல்ப் போன்றும் நனவும் நினைப்புமாக கலந்து எழுதுகிறார்.செகாவின் சிறுகதைகளை வாசிக்கையில் உருவாகும் மனவெழுச்சி இரண்டுவிதமானது. ஒன்று மிக சந்தோஷமாக இருக்கும் அதே நேரம் துக்கமாகவும் தோன்றும். அந்த இரண்டுமான கலவை அபூர்வமானது.. அதே மனஎழுச்சியை இந்த நாவலும் தந்தது. நாவல் என்பது நூற்றுக்கணக்கான நிகழ்வுகளின் தொகுப்பு இல்லை. மாறாக ஆயிரக்கணக்கான நுட்பமான தகவல்கள், விவரணைககள் கொண்ட மினியேச்சர் ஒவியம் போன்றது என்பதற்கு மா-னீ ஒரு உதாரணம். இதில் நாலைந்து முக்கிய சம்பவங்களே உள்ளது. அதன் விளைவுகள் என்னவாகிறது என்பதையே கதை தொடர்ந்து செல்கிறது.யுத்தகாலம் பற்றியும் அதன் பின்உள்ளசரித்திரம் பற்றியோ நாவல் அதிகம் கவனம் கொள்ளவில்லை. கதையை சொல்பவள் ஒரு பெண் அவளை யுத்தம் தன் இருப்பிடத்தை விட்டு துரத்தியடிக்கிறது என்பதில் ஹெப்சிபா உறுதியாக இருந்ததால் அவளுக்கு தெரிந்த அளவு விசயங்கள் மட்டுமே நாவலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.மா-னீ, நாவலின் இறுதியில் தன் உண்மை பெயரான கிரேஸ் அழகுமணியாக்கு திரும்புகிறாள். அந்த இரண்டு பெயர்களுக்கும் ஊடே பர்மாவில் வாழ்ந்த அவளது நினைவுகள் மறைந்துகிடக்கிறது.வாழ்நிலத்திலிருந்து வெளியேற்றபட்டவர்கள் தன் நினைவில் ஊரையும் அதன் மனிதர்களையும் கொண்டு செல்வார்கள். தனிமையில் அவர்களுக்காக கண்ணீர் சிந்துவார்கள். அவர்களது மனதில், கண்களில், உணவில் எப்போதும் அந்த ஏக்கம் படிந்திருக்கும் என்பார்கள். மா –னீயும் அதை தான் செய்கிறாள்.


இன்றுள்ள இலங்கை தமிழ்சூழலில் இந்த நாவல் இன்னும் முக்கியமானதாகவும் நெருக்கமானதாகவும் உள்ளது. அதற்காகவே இந்நாவல் மறுபடி வாசிக்கபடவும் கொண்டாடப்படவும் வேண்டியிருக்கிறது.
**

0Shares
0