மூத்தோர் பாடல் -1 மதுரைக்காட்சிகள்.

நகரம் கதைகளின் விளைநிலம். பெரிய நகரங்கள் நிறைய கதைகளைக் கொண்டிருக்கின்றன. லண்டன், பாரீஸ், மாஸ்கோ, நியூயார்க். பீட்டர்ஸ்பெர்க், டோக்கியோ, ரோம், பெர்லின் ஆகிய நகரங்கள் பற்றி இலக்கியத்தில் நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கு முன்னோடி போல தமிழ் இலக்கியமே நகரங்களைக் கொண்டாடி அதன் பெருமைகளை எழுத்தில் பதிவு செய்திருக்கிறது.

தமிழ் இலக்கியம் பதிவு செய்துள்ளது போல இந்தியாவின் வேறு எந்த மொழியிலும் நகரின் பெருமைகள் கவிதையில் எழுதப்படவில்லை. சிலப்பதிகாரம் பூம்புகாரைப் போற்றுகிறது. மதுரைக்காஞ்சியோ மதுரையைக் கொண்டாடுகிறது. அதிலும் மதுரை மாநகரின் இரவு வாழ்க்கையை மிக விரிவாகப் பேசுகிறது. இன்று வரை இவ்வளவு துல்லியமாக மதுரையின் இரவு வாழ்க்கை நவீன நாவல்களில் கூடப் பதிவு செய்யப்படவில்லை.

நான்காம் நூற்றாண்டில் ஒரு நகரைப் பாடுவதும் அதன் பெருமைகளை எடுத்துச் சொல்வதும் புதுமையாகும். நகரம் பிரதானமாக ஆட்சி அதிகாரம் செய்வதற்கும் வணிகத்திற்காகவும், புதிய தொழில்களுக்குமாகவே உருவாக்கப்படுகிறது. நகரவாழ்வில் காலம் முக்கியமானது. வேலை என்பது கால அளவை வைத்தே நிர்ணயிக்கபடுகிறது. காலமே பணமாக மாறுகிறது.  நகரின் பகலும் இரவும் கிராமத்தின் பகலிரவைப் போன்றதில்லை. ஆண்டிற்கு ஒருமுறையோ இருமுறையோ தான் கிராமத்தில் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. நகரிலோ அன்றாடம் கொண்டாட்டம் தான். புதிய மனிதர்களை அதிகம் காணமுடிகிற இடம் நகரமே.

பகலும் இரவும் இயங்கிய அங்காடிகளைப் பற்றி மதுரைக்காஞ்சி விரிவாகப் பதிவு செய்திருக்கிறது. அல்லங்காடி எனப்படும் இரவு நேரக்கடைகள் மதுரையின் தனிச்சிறப்பு. இன்று வெளிநாடுகளில் இரவு முழுக்கத் திறந்து வைத்திருக்கும் ஷாப்பிங் மால்களை, கடைகளைக் காணுகிறோம். அவை இரவிலும் வணிகம் நடைபெறும் இடங்கள். ஆனால் அல்லங்காடி என்பது இரவில் மட்டுமே நடக்கும் கடைகள். மதுரையில் இப்படிச் சிறிய சிறுகடைகள் மாலை நேரம் தான் தோன்றுகின்றன. பின்னிரவோடு அவை முடிந்துவிடுகின்றன. இட்லிக் கடைகள் பரோட்டா கடைகள் மட்டுமில்லை. ஏலம் போடுகிறவர்கள். சோன்பப்டி விற்பவர், பழைய ஆடைகளை விற்பவர், தள்ளுவண்டிக் கடைகள் எனப் பல்வேறு சிறு வணிகர்கள் மாலை நேரம் தான் தனது விற்பனையைத் துவங்குகிறார்கள்.

மதுரையில் பகலை விடவும் இரவு வசீகரமானது. பரபரப்பானது. எங்கள் ஊரான மல்லாங்கிணறு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மல்லிகை தோட்டங்கள் நிறைய இருக்கின்றன. இந்த ஊர்களில் இரவு நாலு மணிக்கெல்லாம் மல்லிகைப் பூக்களைப் பறிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இந்தப் பூக்கள் மதுரையில் உள்ள பூமார்க்கெட்டிற்குக் கொண்டு செல்லப்படும். காலை முதல் விமானத்தில் வெளிநாடு செல்லும் இந்த மதுரை மல்லிகைகளுக்குத் தனிவரவேற்பு இருக்கிறது.

ஆகவே கலையாத இருளில் பெண்கள் மல்லிகை தோட்டத்தில் பூப்பறிப்பார்கள். அந்தக் காட்சி மறக்கமுடியாதது. பூ கண்ணில் தெரியாது. ஆனால் சரியாக அதைக் கொய்து எடுப்பார்கள். பறித்த பூக்களைப் போட்டு வைக்க நார்க்கூடை வைத்திருப்பார்கள். அல்லது மடியில் போட்டுக் கொள்வார்கள். சேகரித்த பூக்களை மதுரைக்குக் கொண்டு போய் விற்றுவருவது இளைஞர்களின் வேலை.

எனது நண்பனுடன் அதிகாலையில் பைக்கில் பூமார்க்கெட்டிற்குச் சென்றிருக்கிறேன். மதுரையைச் சுற்றிலும் இன்றும் கிராமங்களே அதிகமுள்ளன. மரங்கள் அடர்ந்த நெடுஞ்சாலையின் வழியே மதுரைக்குள் நுழையும் போது எதிர்கொள்ளும் காற்றும். தூரத்து மதுரையின் வெளிச்சமும் மனதை அவ்வளவு சந்தோஷப்படுத்தும்.

கிராமவாசிகளுக்கு மதுரை என்பது சந்தோஷத்தின் அடையாளம். மதுரையை நெருங்க நெருங்க துயில் கலைந்த வீதிகளில் ஆட்களின் நடமாட்டத்தைக் காண முடியும். எத்தனை அழகான வீதிகள். மதுரையின் காலை நேரத்திற்கென்றே தனியழகு இருக்கிறது.

சென்னையைப் போல அது விடிந்தவுடன் பரபரப்பினை அடைவதில்லை. சாவகாசமாக விழிக்கிறது. காபி கடைகள் அல்லது டீக்கடைகளில் ஒலிக்கும் பாடலும், திருநீறு பூசிய பாய்லரும், குளித்துத் திருநீறு பூசி நிற்கும் டீமாஸ்டரின் தெளிந்த முகமும், அழகென்ற சொல்லுக்கு முருகா என ஒலிக்கும் டிஎம்எஸ்ஸின் பக்திப்பாடலும், நியூஸ் பேப்பரை அகலவிரித்துப் படித்தபடியே அரசியலை அலசும் ஆட்களும், கையில் தூக்கு வாளியுடன் காபி வாங்க வந்து நிற்கும் கலைந்த தலையும் ரப்பர் வளையல்களும் அணிந்த சிறுமியும். வீட்டுவாசலில் தான் போட்ட கோலத்தைத் தானே தள்ளி நின்று ரசிக்கும் பெண்ணும், கோல் ஊன்றியபடியே தள்ளாடி நடந்து டீக்கடை நோக்கி வரும் பெரியவரும், கொதிக்கும் எண்ணெய்யில் உள்ளங்கையில் தட்டி ஒட்டையிட்ட உளுந்தவடையைச் சுட்டு எடுக்கும் முண்டா பனியன் அணிந்த ஆளின் சிரத்தையும், அடைத்துச் சாத்தப்பட்ட கடைகளின் வாசலில் வேஷ்டியை இழுத்துப் போர்த்தி உறங்கும் ஆளின் பித்தவெடிப்புக் கொண்ட கால்களும், ரிக்சாவிலே சுருண்டுகிடக்கும் போதைக்காரனும், சாக்பீஸால் ஹோட்டல் வாசலில் இட்லி ரெடி என எழுதும் ஹோட்டல் பணியாளரும், விரிந்த கண்களுடன் சாலை வெறித்துப் பார்த்தபடியே இருக்கும் துண்டிக்கப்பட்ட ஆட்டின் தலையும், உரித்துத் தொங்கவிடப்பட்ட ஆட்டின் உருவமும் கால் எலும்புகளை வாங்க காத்திருக்கும் துணிப்பை வைத்திருக்கும் ஆளும், ஆட்டு ரத்தம் வாங்கிச் செல்ல சிலவர் தூக்கு வாளியுடன் நிற்கும் ஆணும், புண்ணாகிப் போன பருத்த தன் யானைக்காலிற்குப் பவுடர் போட்டுக் கொண்டிருக்கும் ரோகியும், கோவில் கோபுரத்தின் விளக்கொளியும், நடந்து செல்லும் சிற்பம் போலக் கச்சிதமான உடற்கட்டுடன், ஈரம்சொட்டும் கூந்தலுடன் கோவிலுக்குச் செல்லும் இளம்பெண்ணும், புதிதாக ஒட்டப்பட்ட சினிமா போஸ்டரை நெருங்கி நின்று ஒவ்வொரு எழுத்தாக வாசிக்கும் காக்கி டவுசர் அணிந்த ஆளின் முதுகும், பால்கேனுடன் மணி ஒலித்தபடி செல்லும் பால்காரனின் தனித்த குரலும், அகத்தி கீரை கட்டுகளுடன் வரும் கிராமத்துப் பாட்டியும், ஊருக்கு வரும் மகளை வரவேற்க அவசரமாக ரயில் நிலையம் நோக்கிச் செல்லும் தந்தையின் ஆவலமான முகமும், தண்ணீர் பிடிக்கக் குடத்துடன் அலையும் பெண்களும், பொதுக்கழிப்பறை வாசலில் பீடி புகைத்தபடியே காத்திருக்கும் ஆளின் செவ்வரி ஒடிய கண்களும், மேல்சட்டை அணியாமல் தெருவில் விளையாடப் பந்துடன் நிற்கும் சிறுவனின் கலையாத தூக்கமும், பசுவும், குரங்குகளும் கோழிகளும், அகன்ற வீதியில் கம்பீரமாக அலையும் செங்கொண்டை சேவலும், சாதுவாகச் செல்லும் பூனைகளும், தலையை மட்டும் தூக்கிப் பார்த்துவிட்டுச் சோம்பலாய் படுத்துக் கொள்ளும் தெருநாயும், கோபுரத்துக் கிளிகளும், வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை அணிந்து கட்சித்தலைவரை வரவேற்க டிராவலர்ஸ் பங்களா நோக்கிச் செல்லும் ஆளின் கனவுகளும், பூவணிகர்கள், பழவணிகர்கள். வெற்றிலை வணிகர்கள். எனப் பலதரப்பட்ட வணிகர்களின் பரபரப்பான பேச்சும் வேகமும் கொண்டது தானே மதுரை.

நாங்கள் பூமார்க்கெட்டிற்குள் நுழையும் போது மலைமலையாகக் கொட்டி வைக்கப்பட்ட மதுரைமல்லிகைப் பூக்களைக் காணுவோம். வாடிக்கையாக விற்கும் கடையில் தான் வியாபாரம் செய்வார்கள். அன்று மார்க்கெட்டில் பூ என்ன விலை என்று எழுதிப்போட்டிருப்பார்கள். கொண்டுபோன பூவை கடையில் விற்றுவிட்டுக் கையில் ரொக்கத்தை வாங்கிவிட்டால் உடனே செல்லும் இடம் சாப்பாட்டுக்கடை தான்.

காய்கறி மார்கெட்டில் இங்கிலீஷ் காய்கறிகளை வாங்க ஆட்கள் திரண்டிருப்பார்கள். பட்டர்பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட் பீட்ரூட், பீன்ஸ், காலிபிளவர் போன்றவை தான் இங்கிலீஷ் காய்கறிகள். இவற்றை மொத்தமாக வாங்கிக் கொண்டு போவதற்காக சில்லறை வியாபாரிகள் நிறைந்திருப்பார்கள்.   

பூ விற்பவர்களுக்காகவே மதுரையில் ஐந்து மணிக்கெல்லாம் ஹோட்டலை திறந்துவிடுகிறார்கள். சூடான பூரியைப் பொறித்துக் கோபுரம் போல அடுக்கியிருப்பார்கள். விரும்பியதைச் சாப்பிட்டு, வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு ஏழு மணிக்குள் ஊர் திரும்பிவிடுவார்கள். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த இந்த மதுரைக்காட்சிகள் மனதில் அழியாச்சித்திரமாக உருக்கொண்டிருக்கிறது

பூவணிகம் போலவே பழக்கடைகள். அதுவும் இப்படிப் பின்னிரவில் தான் துவங்குகிறது. செகண்ட் ஷோ சினிமா விட்டு வெளியே வரும்போது பழம் ஏற்றிவந்த லாரிகள், வேன்களை வீதியோரம் காணமுடியும். மதுரையின் அல்லங்காடிகள் என்பது ஒரு தனியுலகம். இன்று வரை அதன் முழுமையை இலக்கியம் பதிவு செய்யவில்லை.

வணிகர்களில் தான் எத்தனை விதமான மனிதர்கள். பெரும்பாலும் இவர்கள் கறாரான வணிகர்களில்லை. உறவினைப் பேணுவதில் அத்தனை நெருக்கமானவர்கள். கோபம் அதிகமிருக்கும். ஆனால் அதைவிடப் பாசம் அதிகமிருக்கும்.

பத்தாயிரம் இருபதாயிரம் பேர் வேலைசெய்யும் பெரிய தொழிற்சாலைகள் மதுரையில் குறைவு. டெக்ஸ்டைல் மில்லை விட்டால் வேறு பெரிய தொழிற்சாலைகள் இல்லை. ஆகவே மதுரை இன்றும் விவசாயத்தைச் சார்ந்தே இயங்குகிறது. கூலவணிகம் எனப்படும் தானிய வணிகம் இன்றும் மதுரையின் முக்கியத் தொழில்.

உண்மையில் மதுரை சிறு வணிகர்களின் சொர்க்கம். ஆயிரமாயிரம் சிறுவியாபரிகள் இருக்கிறார்கள். நூறு ரூபாய் முதலீட்டில் நடக்கும் வணிகம் துவங்கி ஒரு லட்சம் வரை அன்றாடம் முதலீடு செய்து தொழில் நடத்துகிறார்கள்.

இன்றைக்கு இந்தக் காட்சிகள் நமக்குப் பழகிப்போய்விட்டன. ஆனால் ஆயிரம் வருஷங்களுக்கு முன்பும் மதுரை இப்படித் தான் இருந்திருக்கிறது.

மதுரையின் அடையாளம் அது கோவில் நகரம் என்பதே. மதுரைக்காஞ்சி காட்டும் மதுரையில் மீனாட்சியம்மன் கோவில் இல்லை. நகரில் நிறைய ஆலயங்கள் இருந்திருக்கின்றன. சிவனை வழிபட்டிருக்கிறார்கள். ஆனால் மதுரையை ஆளும் மீனாட்சியைப் பற்றி மதுரைக்காஞ்சி சிறப்பாக எதையும் சொல்லவில்லை. சிலப்பதிகாரத்திலும் காளி கோவிலே பேசப்படுகிறது.

மதுரை சுற்றுக்கோட்டைகள் கொண்ட நகரம். அழகான வீதிகள். பல்வேறு உயர்ந்த மாடங்களைக் கொண்ட வீடுகள். வணிகர்களுக்கான தனிவீதி, கோட்டை வாயிலைக் காக்கும் தெய்வம். மதில் காவலுக்கு நிற்கும் வீரர்கள். பெரிய அகழி. என அதன் சித்திரத்தை முழுமையாக நமக்குக் காட்டுகிறது மதுரைக்காஞ்சி.

கோட்டை மதில் கொண்ட மதுரையின் உருவத்தைப் பழைய சித்திரங்களில் காணமுடிகிறது. மதுரைக்காஞ்சியில் வரும் காஞ்சி என்பது ஊரைக் குறிக்கும் சொல் கிடையாது. நிலையாமையைக் குறிக்கும் சொல்லே காஞ்சி. மாங்குடி மருதன் அரச சபை கவிஞராக இருந்தவர். இந்தப் பாடலை மருதன் எந்த வயதில் எழுதினார் என்ற சந்தேகம் வந்தது. இதற்கெல்லாம் விடைகாணுவது எளிதானதில்லை.

இப்போதும் மாங்குடி என்ற கிராமம் இருக்கிறது. அங்கே மருதனாருக்கு நினைவு தூண் வைத்திருக்கிறார்கள். நானே நேரில் சென்று பார்த்திருக்கிறேன். அந்தக் கிராமம் ராஜபாளையம் அருகே உள்ளது.

பத்துப்பாட்டுள் மிகவும் நீண்ட பாட்டான மதுரைக்காஞ்சி 782 அடிகளைக் கொண்டிருக்கிறது. இன்றுள்ள நீள் கவிதையைப் போன்றது. தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை நாயகனாகக் கொண்டு பாடப்பட்டிருக்கிறது.

போரில் மகத்தான வெற்றிகளைப் பெற்ற மன்னவனுக்கு வாழ்வின் நிலையாமையை விளக்கவே மருதனார் முற்படுகிறார். உண்மையில் அதிகாரத்திலிருப்பவர்களுக்கு அறிவுரைகள் சொன்னால் பிடிக்காது. அதுவும் போரின் வெற்றிகளைப் பெரிதாகப் புகழ்ந்து சொல்லிவிட்டு போரின் அழிவுகளையும் சுட்டிக்காட்டினால் யார் கேட்டுக் கொள்வார்கள். ஆனால் மருதனார் இரண்டினையும் வெளிப்படையாகப் பேசுகிறார். ஒரே வித்தியாசம் வெற்றியை விரிவாகப் பேசுகிறார். போதும் போதும் எனப் புகழாரம் சூட்டுகிறார். லேசாகக் குத்திக்காட்டுவது போலப் போரின் அழிவுகளைச் சொல்லிச் செல்கிறார். தேடிச்சென்று சண்டையிடுவது வீரமில்லை என்பதே மருதனின் கருத்து.

மதுரைக்காஞ்சியில் 354 அடிகள் மதுரையைப் பற்றிச் சிறப்பித்துக் கூறுகிறது. நூலில் பாதி மதுரையின் சிறப்பு தான். சென்னையைப் பற்றி விரிவாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. மதுரையைப் பற்றி ஒன்றிரண்டு நூல்கள் வந்திருந்த போதும் விரிவாக ஆய்வு செய்து அதன் வரலாற்றைப் பேசும் புத்தகம் இன்னும் எழுதப்படவில்லை

பாக்தாத் நகரை அரபு இலக்கியங்கள் கொண்டாடுகின்றன. ஆயிரத்தோரு அராபிய இரவுகளில் பாக்தாத் மையமாக விளங்குகிறது. அப்படி மதுரையைப் பற்றியும் சொல்வதற்கு ஆயிரத்தோரு பகல் கதைகளும் ஆயிரதோரு இரவுக்கதைகளும் இருக்கின்றன. டவுன் ஹால் ரோட்டின் கதையை எழுதலாம் என்ற எண்ணம் நீண்டகாலமாகவே எனக்கிருக்கிறது.

மதுரை காஞ்சி சிறப்பிக்கும் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் ஒரு கவிஞன். புறநானூற்றில் உள்ள 72-ஆம் பாடல் நெடுஞ்செழியன் பெயரில் உள்ளது. அதனால் தான் மாங்குடி மருதனின் அறிவுரைகளைக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறான்.

யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை என்ற சேரமன்னனுடன் தலையாலங்கானம் என்ற இடத்திலே பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் போர் செய்து அவனை வென்று சிறைப்படுத்தியிருக்கிறான் . இதனால் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற பெயர் பெற்றுள்ளான். மதுரையில் இன்றும் செழியன் என்ற பெயர் அதிகமிருக்கிறது.

ரீகல் தியேட்டரில் நாவலர் நெடுஞ்செழியனின் சொற்பொழிவினைக் கேட்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அந்த அளவு அவர் பேச்சினை மதுரை மக்கள் ரசித்துக் கேட்டார்கள். இந்த நினைவு ஏனோ குறுக்கிடுறது.

மதுரை விளம்பரத்திற்குப் பெயர்போன ஊர். வித்தியாசமான சுவர் விளம்பரங்கள், பதாகைகள். வினைல் பேனர்களை மதுரையில் தான் காணமுடியும். ரசிகர் மன்றங்கள் துவக்குவதில் மதுரை தான் முன்னோடி. ஒரு நடிகருக்கு மதுரையில் ரசிகர் மன்றம் துவங்கிவிட்டால் அவர் நிலைபெற்றுவிட்டார் என்று அர்த்தம்.

புரூஸ் லீ, ஜாக்கி சான், ஜேம்ஸ்பாண்ட் ரோஜர்மூருக்கும் கூட ரசிகர் மன்றம் கூட இருந்திருக்கிறது. இவ்வளவு ஏன் இந்தி இசையமைப்பாளர் பப்பி லகரிக்கு ரசிகர் மன்றம் உருவாக்கப்பட்டது. அவரையே மதுரைக்கு அழைத்து வந்து சிறப்புச் செய்தார்கள்.

சினிமா பார்ப்பதில் மதுரை ரசிகர்களுக்கு இணையில்லை. பிடித்த படத்தைக் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். டிக்கெட் கிடைக்காத புதுப்படத்திற்கு டிக்கெட் வாங்கச் சாப்பாடு கட்டிக் கொண்டு வந்து வரிசையில் நின்றவர்கள் மதுரையில் இருக்கிறார்கள். தமிழ்ப் படம் மட்டுமில்லை. ஆங்கிலம், இந்தி மலையாளப் படங்களும் மதுரையில் வெற்றிகரமாக ஓடியிருக்கின்றன.

சினிமா தியேட்டர் வாசலில் ஆங்கிலப்படத்தின் கதைச்சுருக்கத்தை எழுதி வைத்திருப்பார்கள். இப்படி ஒரு விளம்பர யுத்தி மதுரையில் தான் அறிமுகமானது.

மதுரைக்காஞ்சியிலும் இப்படி விளம்பரத்திற்காகப் பறந்த விதவிதமான கொடிகளைப் பற்றி மருதனார் விரிவாகச் சொல்கிறார். விழாக் கொடி, வெற்றிக் கொடி, வணிகர்களின் விளம்பரக் கொடி எனப் பலவகையான கொடிகள் மதுரை நகரிலே பறந்து கொண்டிருந்தன என்றும் குறிப்பிடுகிறார். இதில் மதுவகைகள் கிடைக்கும் கடைகளுக்குக் கூடக் கொடி பறந்திருக்கிறது. மதுரையின் பார்கள், மதுவிற்பனை கடைகள். அதன் மனிதர்களைப் பற்றித் தனியே எழுத வேண்டும். அது ஒரு தனியுலகம்.

மதுரையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பௌத்தப் பள்ளிகள் சமணர் பள்ளிகள் இருந்திருக்கின்றன. இன்று எண்பெருங்குன்றத்திலும் சமணப்பள்ளிகளைக் காணமுடிகிறது. ஆனால் பௌத்த அடையாளங்கள் அழிந்து போய்விட்டிருக்கின்றன.

மதுரைக்காஞ்சியில் நன்னனின் பிறந்தநாளை மக்கள் கொண்டாடிய செய்தி இடம்பெற்றிருக்கிறது. மாங்குடி மருதன் இதனை நன்னாள் என்று குறிப்பிடுகிறார். பிறந்தநாள் கொண்டாட்டமாகக் குரவைக் கூத்து நடந்திருக்கிறது. ஆட்டமும் பாட்டமுமாக மக்கள் இதனைக் கொண்டாடியிருக்கிறார்கள்.

பிறந்தநாளைக் குறிப்பதற்கு வெள்ளணி நாள் என்ற சொல்லைச் சிலப்பதிகாரத்தில் காணமுடிகிறது. வெண் துகில் அணிவது பிறந்த நாளின் வழக்கம் போலும்.

சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவனின் பிறந்த நாள் அன்று மாடுகள் உழவு வேலை செய்யவில்லை. தேசமெங்கும் விழா கொண்டாடப்பட்டிருக்கிறது. அன்று மன்னன் வீரமறவர்களுக்குப் பொன்னாலாகிய பரிசுகளை அளித்திருக்கிறான்.

ஆனால் தலைவனோ, தலைவியோ தனது பிறந்தநாளைக் கொண்டாடியதாகத் தெரியவில்லை. பிறந்த நாளின் போது காதலியைச் சந்தித்துப் பரிசுகள் தருவது போன்ற காட்சி எதையும் காணமுடியவில்லை.

நான் அறிந்தவரை இன்றும் கிராமப்புறத்தில் பிறந்தநாள் கொண்டாட மனிதர்கள் இருக்கிறார்கள். பிறந்த நாள் தெரியாதவர் நிறையவே இருக்கிறார்கள். பிறந்த நாள் கொண்டாட்டம் இந்த ஐம்பது ஆண்டுகளில் தான் அதிகமாகியுள்ளது.

பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடுவது ஐரோப்பிய மரபு. பிறந்த நாளின் போது ஆசிவாங்குவதும் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்வதும் தான் பொது வழக்கமாக இருந்தது. இன்று பிறந்தநாளைக் கொண்டாடுவது மிகப்பெரிய நிகழ்வாக மாறியிருக்கிறது.

மதுரைக்காஞ்சியில் மன்னரின் வெற்றிப்பெருமையை விளக்கும் விதமாக இடியின் வேகத்தை ஒப்புமை செய்கிறார் மருதனார்.

அதில் இடியின் வேகம் மரத்தைத் தின்னக்கூடியது. அதாவது மரத்தை அழித்துவிடக்கூடியது .அது மட்டுமின்றி இடியானது வரை உதிர்க்குமாம். அதாவது மலைகளை நொறுக்கி விழச்செய்யுமாம். இப்படி மரத்தை தின்று மலையை நொறுக்கி விழச்செய்யும் இடியினைப் போன்றவனே என்கிறார்

மரத்தை இடி தின்னுகிறது என்ற பிரயோகம் மிக அழகானது. கவிதையின் வழியாக இடியின் உக்கிரத்தை நாம் கண்ணால் காணமுடிகிறது. இதே பாடலில் அம்பு உமிழ் என்ற அழகான சொல்லாட்சி வருகிறது.

மரம் தின்னூஉ வரை உதிர்க்கும்

நரை உருமின் ஏறு அனையை!

அருங்குழு மிளை குண்டு கிடங்கின்

உயர்ந்து ஓங்கிய நிரைப் புதவின்

மதுரையைப் பல்வேறு ஓசைகள் பெருகிய ஊர் என்கிறார் மருதனார். ஏற்றம் இறைப்பவர்களின் ஓசை. கடா விடுபவர் எருதுகளுக்குப் பூணும் மணியின் ஓசை, பறவைகளைக் கடிந்து விரட்டும் ஓசை என்றும் பல்வேறு ஓசைகள் மலிந்த ஊர் என்கிறார். சங்க காலத்திலும் மதுரை தூங்கா நகராய் விளங்கியதை மருதனார் சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.

உண்மையில் அந்த மதுரையினைப் போலவே தான் இன்றும் மதுரையிருக்கிறது.

விடிகாலை நேரமோ மாலை நேரமோ நீங்கள் மதுரையை ஒரு சுற்று சுற்றி வாருங்கள். எத்தனையோ விதமான ஓசைகளை, பாடல்களை, வேறுபட்ட குரல்களைக் கேட்கலாம். ஆறு கிடந்தாற் போன்று அகன்ற நெடிய தெருவில் பல வேறுபட்ட குழுவினரின் ஓசை எழுந்து ஒலிப்பதைக் கேட்கலாம். பின்னிரவிலும் ஓசை அடங்காத ஊர் மதுரை. உண்மையில் இந்த ஓசைகள் யாவும் ஒன்று சேர்ந்த மகத்தான சங்கீதம் ஒன்றைப்போல ஒலிக்கின்றன.

பேருந்தில் நீங்கள் உறங்கிக் கொண்டு வந்தாலும் மதுரையை வந்து சேர்ந்தவுடன் இந்தச் சேர்ந்திசையைக் கேட்க இயலும்.

பண்ணியம் பகர்நர் என ஒருவரைப் பற்றி மதுரைக்காஞ்சி கூறுகிறது. இவர் வெளிநாட்டு வணிகரா அல்லது பலகாரம் விற்பவரா எனத் தெரியவில்லை. கடைகளில் பொருட்களை வாங்குவதற்காகக் கடல் அலை போல வந்துபோகும் மக்களின் பசியைப் போக்க உணவு கடைகள் இருந்திருக்கின்றன.

அதை விற்றவர்கள் தான் பண்ணியம் பகர்நரா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. பருப்புமாவும் அரிசி மாவும் கொண்டு செய்த பண்ணியங்கள் எனப்படும் சிற்றுண்டி வகைகளை அந்தக்காலத்தில் விரும்பி உண்டிருக்கிறார்கள்.

சேறும் நாற்றமும் பலவின் சுளையும்

வேறு படக் கவினிய தேம் மாங்கனியும்

பல்வேறு உருவின் காயும் பழனும்

கொண்டல் வளர்ப்பக் கொடி விடுபு கவினி .

மென்பிணி அவிழ்ந்த குறு முறி அடகும்

அமிர்து இயன்றன்ன தீம்சேற்றுக் கடிகையும்

புகழ்படப் பண்ணிய பேர் ஊன் சோறும்

கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்

இன்சோறு தருநர் பல்வயின் நுகர

என ருசிமிக்க உணவு வகைகளை விவரிக்கிறது மதுரைக்காஞ்சி. இன்று மலையாளத்தில் வெளியாகும் திரைப்படங்களில் கதை எந்த ஊரில் நடக்கிறதோ, அதன் சிறப்பு மிக்க உணவு வகைகளைப் படத்தின் ஊடாகக் காட்டுகிறார்கள். எந்த உணவினை விரும்பி மக்கள் சாப்பிடுகிறார்கள் என்பதையும் அது சமைக்கப்படும் விதம் பற்றியும் படம் பதிவு செய்கிறது. அங்கமாலி டைரீஸ் மலையாளப் படத்தில் தான் எத்தனை விதமான உணவுவகைகள்.

இதற்கெல்லாம் முன்னோடியாக என்றைக்கோ மருதனார் மதுரையைப் பற்றிச் சொல்லும் போதும் அதன் விசேச உணவு வகைகளை, ஐநிலத்தில் விளைந்த காய்கறிகள். பழங்கள். தானியங்கள். மீன், இறைச்சி எனச் சகலத்தையும் விவரித்திருக்கிறார்.

பெருவணிகர்கள் செய்த வணிகம், சிறு வணிகர்கள் செய்த வணிகம் இரண்டினையும் மதுரைக்காஞ்சி தனியே வகைப்படுத்திக் காட்டுகிறது. மதுரையில் தான் முதன்முறையாக ஜவுளிக்கடல் என்ற சொல்லை ஒரு கடையின் விளம்பரத்தில் பார்த்தேன். அது வெறும் விளம்பரச்சொல்லில்லை. உண்மை.

முத்து, ரத்தினம், நறுமணப் பொருட்களின் விற்பனைக்கூடமாக மையமாக மதுரை திகழ்ந்திருக்கிறது. உழவு, நெசவு, தச்சு, இரும்பு, சிற்பம், ஓவியம் கூத்து எனப் பல்வேறு வேலைகள் செய்த மக்கள் தனித்தனி வீதிகளில் வசித்திருக்கிறார்கள். மதுரையில் செயல்பட்டு வரும் கல்வி நிலையங்களின் வரலாறு விரிவாக எழுதப்பட வேண்டியது. அரசியல் மற்றும் பண்பாட்டுச் செயல்பாட்டின் முக்கிய மையமாக மதுரை என்றும் விளங்கியிருக்கிறது.மதுரைக்காட்சி ஒரு விரிவான ஆவணப்படம் போல மதுரையினைக் காட்சிப்படுத்தியிருக்கிறது. இசையும் நடனமும் ஆரவாரமும் சந்தைக்காட்சிகளும் வீதிகளும் யானையின் வருகையும் நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.

மருதனாரின் கண்கள் மிகக்கூர்மையானவை. கேலியும் கிண்டலும் கொண்ட அவரது பார்வை பாடலில் அழகாக வெளிப்பட்டிருக்கிறது.

வயதான பெண்கள் சீவிமுடிந்து போட்டிருக்கிற வெண்ணிற கூந்தலானது கரிய கடலில் மிதக்கும் வெண்மையான சங்கினைப் போலிருக்கிறதாம்.

இருங் கடல் வான் கோடு புரைய, வாருற்றுப்

பெரும் பின்னிட்ட வால் நரைக் கூந்தலர்

செந் நீர்ப் பசும் பொன் புனைந்த பாவை 410

செல் சுடர்ப் பசு வெயில் தோன்றியன்ன

செய்யர், செயிர்த்த நோக்கினர், மடக் கண்,

ஐஇய கலுழும் மாமையர், வை எயிற்று

வார்ந்த, வாயர், வணங்கு இறைப் பணைத் தோள்,

சோர்ந்து உகுவன்ன வயக்குறு வந்திகை

பசும்பொன்னால் செய்யப்பட்ட பாவையைப் போன்ற தோற்றமுடைய அழகான பெண்கள். மாலைவெயிலினை ஒத்த சிவந்த நிறத்தையுடையவராக இருக்கிறார்கள்., ஆண்களை வருத்துகிற பார்வையைக் கொண்ட அவர்கள் ஆங்காங்கே விடலைப் பையன்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது மதுரைக்காஞ்சி

காட்சிகளை அடுக்கிக் கொண்டே சென்று மதுரையை ஒரு மலர் விரிவதைப் போல இதழ் இதழாக மலரச் செய்து காட்டுகிறது மதுரைக்காஞ்சி. அந்த மதுரையும் இன்றிருக்கும் மதுரையும் ஒன்றில்லை. அந்த மதுரையில் வைகை ஆற்றினை ஒட்டி திருப்பரங்குன்றமிருக்கிறது. பரங்குன்றத்தைப் பற்றி மதுரைக்காஞ்சி விவரிக்கும் காட்சிகள் தனித்துவமானவை.

மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டங்களைக் கேட்டவர்களுக்கு மாங்குடி மருதனார் மன்னரைப் புகழ்ந்து பாடும் போது இவரே இன்றைய வீரவுரைகளுக்கு முன்னோடி என்பது புரியும்.

மதுரையில் தான் முதன்முதலாக வீரவாளை மேடையில் பரிசாகத் தரும் பழக்கம் தோன்றியது என நினைக்கிறேன். வீரத்தினைக் கொண்டாடத் துவங்கிவிட்டால் அந்தத் தலைவனைப் போற்றிச் சொல்வதில் மதுரைக்காரனுக்கு நிகரே கிடையாது. விசுவாசத்திலும் அப்படித் தான்.

மதுரைக்காஞ்சி விவரிக்கும் உணவு வகைகளைத் தயாரித்து விற்பனை செய்ய இன்று ஏதாவது மதுரை உணவகம் ஒன்று முயற்சி செய்யலாம்.

இன்றும் எங்கள் கிராமத்திலிருந்து மதுரைக்குப் போய் வருவதென்றால் மதுரைக்குப் போய்விட்டு வயிறு முட்டச் சாப்பிட்டுத் திரும்புவது என்றே அர்த்தம். மதுரைக்குப் போய்விட்டுச் சாப்பிடாமல் வருவார்களா என நக்கலாகக் கேட்பார்கள்.

ஒருமுறை இரண்டு வெள்ளைக்கார நண்பர்களை மதுரையிலுள்ள ஒரு மெஸ்ஸிற்குச் சாப்பிட அழைத்துக் கொண்டு போயிருந்தேன். அசைவ உணவுவகைளை ஒரு தட்டில் கொண்டு வந்து ஒரு ஊழியர் காட்டினார். அத்தனையும் தனக்கு வேண்டும் என்றார் வெள்ளைக்கார நண்பர். கொண்டுவரச் சொன்னேன். காரத்தைத் தாங்கமுடியாமல் கண்ணில் நீர்வழிய ருசித்துச் சாப்பிட்டார்கள். மூன்று அவ்வளவு சாப்பிட்டும் மொத்த ரூபாய் ஆயிரத்திற்குள் தான் வந்தது. அவர்களால் நம்பமுடியவில்லை. ஒரு வாரம் மதுரையில் அவர்கள் விதவிதமாகச் சாப்பிட்டார்கள். ஒரு மாத காலம் சாப்பிடுவதற்காகவே மதுரைக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு இங்கிலாந்து புறப்பட்டுப் போனார்கள்.

அன்று தினம் ஒரு ஹோட்டல் எனச் சாப்பிட்டாலும் மதுரை ருசி அலுக்கவேயில்லை. இன்று மதுரையில் நல்ல ஹோட்டலை கண்டுபிடித்துச் சாப்பிடுவது அரிதாகிவிட்டது.

புகழ்பெற்ற அசைவ உணவகங்களில் தரமான உணவு கிடைப்பதில்லை. ருசியும் மாறிவிட்டது. ஆனால் சிறிய கடைகளில் நம்பி சாப்பிடலாம். அதைக் கண்டுபிடிப்பது தான் கஷ்டம்.

சினிமா பாடல்களை மதுரையில் கேட்கிற விதமே அலாதி. மிகச் சப்தமாகப் பாட்டுக் கேட்டால் தான் பிடிக்கும். ஒலிபெருக்கிகளுக்குத் தடைவிதித்து விட்டால் மதுரையில் கொந்தளிப்பு உருவாகிவிடும். அதை நேரம் பாடகர்களைக் கொண்டாடுவார்கள். பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் மதுரைக்காரர் என்பதால் அவர் மீது தனிப்பாசமும் உண்டு.

மதுரையில் நடிகர் சங்கமிருக்கிறது. அந்தச் சங்கத்தில் போய்ப் பார்த்தால் எந்த நடிகருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று நடிகைகள் எழுதிக் கொடுத்திருப்பதைக் காணமுடியும். வள்ளியாக நடிப்பவர்களுக்கு இன்றைக்கும் தனிப்புகழும் பெயருமிக்கிறது.

மதுரை தியாகராஜா கல்லூரியில் சில காலம் பேராசிரியராகப் பணியாற்றிக் கவிஞர் ஏ.கே.ராமானுஜம் வைகை ஆற்றின் வறண்ட காட்சியினை ஆங்கிலக் கவிதையாக எழுதியிருக்கிறார். இன்றும் ஆண்டில் பெரும்பகுதி வைகை ஆற்றில் வெயில் தான் ததும்பி வழிகிறது. ஆற்றில் அழகர் இறங்கும் போது தண்ணீர் விடுவார்கள். எதிர்சேவை நடக்கும். அழகர் பவானி வருவார். சென்ற ஆண்டும் அதுவும் நடைபெறவில்லை. வைகை ஆற்றினைப் பற்றி மதுரைக்காஞ்சி குறிப்பிடுவதைக் காணும் போது காசியில் பார்த்த கங்கையே நினைவில் வந்து போகிறது

மதுரையிலும் அதைச் சுற்றியும் வசித்த ஒவ்வொருவர் மனதிலும் மதுரை ஒரு அழியாச்சித்திரமாக இடம்பெற்றிருக்கிறது. கவிஞர் ஜெயபாஸ்கரன் மதுரையில் வசிக்கிறார். அவரும் ஒரு வணிகர். அவர் கவிதைகளில் வெளிப்படும் மதுரை தனித்துவமானது. சுரேஷ் குமார இந்திரஜித் கதைகளில் சித்தரிக்கப்படும் மதுரையின் சித்திரங்கள் அலாதியானவை. ஜி. நாகராஜனும், சிங்காரமும் மதுரையினை அழகாகச் சித்தரித்திருக்கிறார்கள். மதுரையில் டெய்லராக வசித்த கர்ணன் கதையில் மதுரை காட்சிகள் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் சாமுவேல் சுதானந்தா மதுரைக்காஞ்சிக்கு அழகான விளக்கவுரை எழுதியிருக்கிறார். இளம் வாசகர்களுக்கு அதுவே சரியான வழிகாட்டி நூலாகும்.

எனது கதை ஒன்றில் கண்ணகியை எரித்த நெருப்பின் மிச்சம் மதுரையின் ஒரு இடத்தில் ரகசியமாக இன்றும் எரிந்து கொண்டிருப்பதாக எழுதியிருக்கிறேன். அந்த நெருப்பு மதுரைக்காரர்களின் மனதில் தான் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.

மதுரையின் ஒவ்வொரு கல்லிலும் சரித்திரமிருக்கிறது. நினைவுகளின் பெரும் விளைநிலமாக உள்ளது மதுரை. அதனாலே மதுரைக்காஞ்சியை வாசிக்கும் போது நெருக்கமாக உணரமுடிகிறது

••

.

0Shares
0