மூத்தோர் பாடல் 3

சிறுகட் பன்றியின் பெருஞ்சினம்

சிவகாசிக்கு முன்பாக உள்ளது திருத்தங்கல். பட்டாசு ஆலைகளும் தீப்பெட்டி தொழிற்சாலைகளும் நிறைந்த ஊர். பலமுறை அங்கே போய் வந்திருக்கிறேன். ஆனால் அது சங்க காலத்தைச் சேர்ந்த ஊர் என்பதும் இரண்டு முக்கியச் சங்க கவிஞர்கள் அங்கே வாழ்ந்தார்கள் என்பதையும் சமீபத்தில் தான் அறிந்து கொண்டேன். பழந்தமிழ் இலக்கியங்களை வாசிக்க வாசிக்க ஏற்படும் பிரமிப்பும் பெருமையும் அளவில்லாதது. இந்த லாக்டவுன் நாட்களில் அதிகமும் சங்க இலக்கியங்களைத் தான் வாசித்தேன்.

சங்ககாலக் கவிஞர்களில் பலரும் தனது ஊரின் பெயரையும் தந்தையின் பெயரையும் இணைத்தே அறியப்பட்டிருக்கிறார்கள். இன்று கேரளாவில் அப்படி அழைக்கும் முறை இருக்கிறது.

தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் , தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் என்ற இரண்டு கவிஞர்களும் திருத்தங்கலைச் சேர்ந்தவர்கள். இந்த ஊரின் நாராயணப் பெருமாள் கோவில் திருமாலின் நூற்றியெட்டுத் திருப்பதிகளில் ஒன்று.

தடம்புனற் கழனித் தங்கால் என்று இளங்கோவடிகள் சிறப்பித்துப் பாடுவது இந்த ஊரைத் தான் என்று புலவர் கோவிந்தன் குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரத்தில் வரும் வார்த்திகன் இந்தத் திருத்தங்கலைச் சேர்ந்தவன். அவனது கதையை இளங்கோவடிகள் விவரிக்கிறார். அந்தக் கதையின் படி

புகார் நகரத்தில் பராசரன் என்ற வேதம்படித்த அந்தணன் சேர நாட்டுக்குச் சென்று மன்னரைப் பாடிப் பரிசல்கள் பெற்று வந்தான்; வழியில் பாண்டி நாட்டில் தங்கால் என்ற ஊரிலுள்ள அரச மரத்தை உடைய மன்றத்தில் தங்கினான். அப்போது அந்த ஊரைச் சார்ந்த சிறுவர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். தன்னோடு சேர்ந்து வேதம் ஓதினால் அவர்களுக்குப் பரிசு தருவாகப் பராசரன் சொன்னான். வார்த்திகன் மகன் தக்கிணன் என்பவன் சிறப்பாக மந்திரங்களைச் சொல்லி பாராட்டினையும் பொன்னால் ஆன நாண் ஒன்றினையும், கைவளை, தோடு எனப் பல பரிசுகளைப் பராசரனிடமிருந்து பெற்றான்.

இந்த அணிகலன்களை அணிந்து கொண்டு வார்த்திகன் குடும்பம் நடமாடுவதைக் கண்ட அரசாங்க காவலர்கள் இந்தப் பொருட்களை எங்கிருந்தோ திருடிவிட்டார்கள் என்று குற்றம்சாட்டி வார்த்திகனைச் சிறையில் அடைத்தார்கள். . வார்த்திகன் மனைவி கார்த்திகை என்பாள் அவ்வூர்க் கொற்றவை கோயில் முன் நின்று முறையிட்டாள் உடனே அந்தக் கோவிலின் கதவு மூடிக் கொண்டது.

இதனை அறிந்த மன்னன் நடந்த விஷயங்களை விசாரித்து வார்த்திகன் குற்றமற்றவன் என்று விடுவித்தான். தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டதும் பிராயச்சித்தமாக அந்த ஊரில் விளைநிலங்களையும் கோவிலுக்கு நிலத்தையும் தானம் செய்தான். அதன்பிறகு மூடியிருந்த கோவில் கதவுகள் தானே திறந்து கொண்டன என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

கோவலன் கதையின் மறுவடிவம் போலவே வார்த்திகன் கதை அமைந்திருக்கிறது. ஆனால் வார்த்திகன் விடுவிக்கப்படுகிறான்.

இந்த ஊரை இராசராசப் பாண்டிநாட்டு மதுராந்தக வளநாட்டு கருநீலக்குடி நாட்டுத் திருத்தங்கால் என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மாறவர்மன் சுந்தரப் பாண்டியன் காலத்தில் இந்த ஊரில் பாரதம் படிக்க மண்டபம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.

தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் எழுதிய பாடல் நற்றிணை 386 ல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலின் சிறப்பு இது காட்டுப்பன்றியைப் பற்றியது. இன்றைக்கும் திருத்தங்கல் ரயில்வே கேட் முன்னால் பன்றிகளின் கூட்டம் சுற்றித்திரிவதைக் காண முடியும். அருகிலுள்ள வத்ராப் மலைப்பகுதியில் காட்டுப்பன்றிகளைக் காண முடியும். ஒரு காலத்தில் ஜமீன்தார்கள் காட்டுப்பன்றி வேட்டைக்குச் செல்வார்கள்.

செங்கண்ணனார் பாடலில் ஒரு தோழி தலைவியிடம் தலைவனின் ஊரைப் பற்றிச் சொல்கிறார். அதில் காட்டுப்பன்றியின் சிறிய கண்களையும் அதன் மிகுந்த சினத்தையும் அழகாக எழுதியிருக்கிறார். பன்றியின் கண்கள் மிகக்சிறியவை. காட்டுப்பன்றி மூர்க்கமாகத் தாக்ககூடியது. காட்டில் வாழுபவர்கள் உழுது விதைத்து விளைந்திருந்த தினைக்கதிர்களை அந்தப் பன்றி தின்னும் பின்பு அது அருகிலுள்ள குகைக்குச் சென்று உறங்கும். அந்தக் குகை புலி வாழுமிடம் என்று அறிந்த போதும் அஞ்சாமல் உறங்கும் என்றும் இப்படிப்பட்ட நாட்டின் தலைவன் உன் தலைவன். அவன் உன்னிடம் முருகன் மீது சத்தியம் என்றான். நீயோ உன்னைப் போலப் பொய் சொல்லுகிறவர்கள் இப்படிச் சத்தியம் செய்யமாட்டார்கள் என்று பதில் உரைத்தாய்.

இப்போது அவன் உன்னைத்தேடி ஊருக்கு வந்திருக்கிறான். திருமணம் வேண்டிப் பணிவோடு வந்திருக்கிறான். அவனது துணிகரமான செயலைக் கண்டு வியக்கிறேன் என்கிறாள் தோழி.

இதில் பன்றியின் சினமும் அது பயமற்று புலியின் குகையில் உறங்குவதும் அழகான காட்சியாக இடம்பெற்றிருக்கிறது. திருத்தங்கல்லில் உள்ள கருநெல்லி நாதர் கோவில் புகழ்பெற்றது. இங்கே ஆண்டிக்கோலத்தில் முருகன் காட்சி அளிக்கிறார். செங்கண்ணனார் பாடலில் முருகன் மீது தான் சத்தியம் செய்கிறான் தலைவன்.

காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக இந்தப் பகுதி விவசாயிகள் வெடிவைத்து விரட்டுவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் காட்டுப்பன்றிப் பயமற்றது. மற்ற விலங்குகளை விடக் காட்டுப் பன்றிகளுக்கு மோப்பத்திறன் அதிகம். உடல் சாம்பல் கலந்த கருமை நிறம் கொண்டது. உடல் முழுவதும் முரட்டு முடிகள் இருக்கும். விவசாய நிலத்தில் இரவில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் இந்தக் காட்டுப்பன்றிகளின் அழிமானத்தைத் தடுக்க முடியாது. கவிதையில் தலைவன் சத்தியம் செய்வதும் அதை நம்பமாட்டேன் என்று தலைவி மறுப்பது அழகான ஊடலாக வெளிப்படுகிறது. ஆனால் அவன் பயமற்று அவளைத் திருமணம் செய்ய வந்திருக்கிறான். காத்திருக்கிறான் என்று கவிதை நிறைவு பெறுகிறது. செங்கண்ணனார் எழுதி இந்த ஒரேயொரு கவிதை தான் காணக்கிடைக்கிறது. நிச்சயம் இவர் நிறைய எழுதியிருப்பார். அவை தொகைநூலில் சேர்க்கப்படாமல் போயிருக்கக் கூடும். அப்படி விடுபட்ட கவிதைகளை என்ன செய்திருப்பார்கள். இப்படி ஒரு தொகுப்பில் ஒரேயொரு கவிதை இடம்பெற்ற கவிஞர் அன்று தன்னை எப்படி உணர்ந்திருப்பார். எப்படி இந்தத் தொகைநூல் வரிசைப்படுத்தபட்டது. இதை எவ்வாறு அன்றைய கற்றோர் சபை எதிர்கொண்டது. நிறையக் கேள்விகள் எழுகின்றன.

சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்,

துறுகட் கண்ணிக் கானவர் உழுத

குலவுக் குரல் ஏனல் மாந்தி, ஞாங்கர்,

விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது,

கழை வளர் சாரல் துஞ்சும் நாடன். 5

”அணங்குடை அருஞ் சூள் தருகுவென்” என நீ,

”நும்மோர் அன்னோர் துன்னார் இவை” என,

தெரிந்து அது வியந்தனென் தோழி! பணிந்து நம்

கல் கெழு சிறுகுடிப் பொலிய,

வதுவை என்று அவர் வந்த ஞான்றே. 10

ராஜபுத்திர நுண்ணோவியம் ஒன்றில் காட்டுப்பன்றியை வெகு அழகாக வரைந்திருக்கிறார்கள். ஓவியத்தில் காட்டுப்பன்றியைத் தீட்டுவது விலங்கினை குறிப்பதற்கு மட்டுமின்றிச் சொத்து இழப்பு, மன வேதனை, பயங்கரமான பயம், மரணம், இதையெல்லாம் அடையாளப்படுத்தவும் காட்டுப்பன்றிச் சித்தரிக்கப்படுகிறது.

சிங்கத்துடனும் புலியுடனும் தலைவனின் வீரத்தைச் சிறப்பித்துக் கூறும் பொதுத்தன்மைக்கு மாற்றாகக் காட்டுப்பன்றியின் துணிச்சலை. சினத்தை உவகைக் கூறியிப்பது தனித்துவமானது.

நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 187 புலவர்கள் பாடியிருக்கிறார்கள் இந்தக் கவிஞர்களும் அவர்களின் பாடலின் அடையாளத்துடன் தான் அறியப்படுகிறார்கள். 59 பாடல்களைப் பாடிய கவிஞர்களின் பெயர்கள் காணப்படவில்லை. ஒருவேளை காலத்தில் அந்தப் பெயர்கள் மறைந்துவிட்டனவா என்று தெரியவில்லை. இந்நூலைத் தொகுத்தவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் இதைத் தொகுக்கச் செய்தவர் “பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி”. எப்படி இந்த நூலைத் தொகுத்திருப்பார்கள். அச்சு இல்லாத காலத்தில் அந்தப் பாடல்கள் மக்கள் மனதிலும் ஏடுகளிலும் தான் காப்பாற்றபட்டு வந்திருக்கும். அவற்றைத் தேடித் தொகுப்பது சவலான பணி. அந்தத் தொகுப்புப் பணி நிச்சயம் ஒருவரால் மேற்கொண்டிருக்க முடியாது. அது போலவே எந்தக் கவிதைகளைத் தேர்வு செய்வது என்ற முடிவும் எளிதானதில்லை.

•••

தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் நகைகள் செய்யும் பொற்கொல்லராக விளங்கியவர். இவரது பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் 6 உள்ளன. இதில் அகநானூறு 48வது பாடலாக உள்ள பாடல் அற்புதமானது. தங்கால் பொற்கொல்லனார். தங்கால் முடக் கொற்றனார் எனவும், தங்கால் முடக்கோவனார் எனவும் அறியப்படுகிறார்

தலைவனையே நினைத்துக்கொண்டிருக்கும் தலைவியின் நிலையைத் தோழி செவிலித் தாய்க்குச் சொல்லும் இந்தப் பாடல் அழகானது

‘அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை! நின் மகள்,

‘பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு,

நனி பசந்தனள்’ என வினவுதி. அதன் திறம்

யானும் தெற்றென உணரேன். மேல் நாள்,

மலி பூஞ் சாரல், என் தோழிமாரோடு

5

ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி,

‘புலி புலி!’ என்னும் பூசல் தோன்ற

ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ்

ஊசி போகிய சூழ் செய் மாலையன்,

பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்,

10

குயம் மண்டு ஆகம் செஞ் சாந்து நீவி,

வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு,

‘யாதோ, மற்று அம் மா திறம் படர்?’ என

வினவி நிற்றந்தோனே. அவற் கண்டு,

எம்முள் எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி, 15

நாணி நின்றனெமாக, பேணி,

‘ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல்

மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப்

பொய்யும் உளவோ?’ என்றனன். பையெனப்

பரி முடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து, 20

நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கிச்

சென்றோன்மன்ற, அக் குன்று கிழவோனே.

பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து,

அவன் மறை தேஎம் நோக்கி, ‘மற்று இவன்

மகனே தோழி!’ என்றனள். 25

அதன் அளவு உண்டு கோள், மதிவல்லோர்க்கே.

‚அன்னையே நீ வாழ்க! எனத் துவங்கும் இந்தப் பாடலிலும் தலைவியின் ஒளிபொருந்திய நெற்றி சிறப்பித்துக் கூறப்படுகிறது.

சங்க இலக்கியத்தில் பெண்களின் நெற்றியை வியந்து போற்றுகிறார்கள். பெரும்பாலும் ஒளி பொருந்திய நெற்றி என்றே இடம்பெறுகிறது. கண்களை விடவும் நெற்றி ஏன் முக்கியத்துவம் அடைகிறது. நெற்றி ஒளிர்வதும் மனநிலையின் வெளிப்பாடா.

இந்தப் பாடலில் பாலும் பழமும் உண்ணாமல் தலைவனையே நினைத்துத் தலைவி வருந்திக் கொண்டிருக்கிறாள். அதன் காரணம் என்னவென்று எனக்கும் முழுமையாகத் தெரியாது. ஆனால் அவள் காதல் வசப்பட்டிருக்கிறாள். என்று சொல்லி அன்று நடந்த ஒரு காட்சியைச் சொல்கிறாள்.

இந்தக் காட்சி சினிமாவில் வரும் பிளாஷ்கட் போல அழகாக இடம்பெறுகிறது வேங்கை மரத்திலுள்ள பூக்களைப் பறிக்கப் போகிறார்கள். அப்போது தலைவி ‘புலி புலி’ என்று சப்தமிடுகிறாள். அங்கே வந்த தலைவன் வில்லைக் கையிலேந்திக்கொண்டு எங்கே புலி என்று கேட்கிறான். வேங்கை மரத்தைக் காட்டவே அவன் நீ பொய்யும் சொல்லுவாயா என்று கேட்டுச் சிரித்தபடியே தனது குதிரையில் சென்றுவிட்டான். அன்றுமுதல் அவனையே தலைவி நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று தோழி சொல்கிறாள். வேங்கை மரம் பூத்தால் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை அந்தக்காலத்திலிருந்தது.

இளம்பெண்ணின் தோற்ற மயக்கமும் காதலனின் சிரிப்பும் அத்தனை அழகாகக் கவிதையில் இடம்பெற்றிருக்கிறது. ஒரு காட்சி வேறு ஒரு காட்சியாக மாற்றம் தருவது தான் காதலின் துவக்கம். ஒருவேளை அவனது கவனத்தைத் தன் பக்கம் இழுப்பதற்காக அவள் பொய்யாக ஒரு நாடகம் ஆடியிருக்கிறாளோ என்றும் தோன்றுகிறது. எதுவாயினும் அவர்கள் சந்தித்துக் கொண்டார்கள். காதல் பிறந்துவிட்டது. அந்த நினைப்பு அவளை வாட்டுகிறது.

சங்க கவிதைகளில் வரும் தோழி தலைவனின் சமவயதை உடையவளா, மூத்தவளா, எந்த வகுப்பைச் சார்ந்தவள் என்று எதையும் நம்மால் கண்டறிய முடியவில்லை. ஒருவேளை தோழி என்பதே கவிதையில் உருவான பாத்திரம் தானோ. காரணம் காதலிக்கும் எல்லாப் பெண்களுக்கும் ஒரு தோழி இருக்கிறாள். அவளே காதல் துயரை உலகிற்குத் தெரியப்படுத்துகிறாள். தோழி காதல் கொள்ளும் போது தலைவியாகிவிடுவாளா.

வேங்கை மரத்தினைப் புலியாக நினைப்பது பற்றிக் காளிதாசனும் ரகுவம்சத்தில் எழுதியிருக்கிறார். வேங்கை மரத்தின் பூக்கள் பாறைகளில் உதிர்ந்து கிடப்பதைக் கண்ட யானை அது புலி தானோ என்று நினைத்துத் தாக்க முனையும் காட்சியினைக் கபிலர் தனது பாடலில் எழுதியிருக்கிறார். பரிபாடலிலும் குறுந்தொகையிலும் இது போன்ற காட்சி சுட்டப்படுகிறது. இந்தக் காட்சிகள் தங்கால் முடக் கொற்றனார் பாடலை வாசிக்கும் போது நினைவிற்கு வருகின்றன.

வேங்கை மரத்தில் பூக்கள் பறிக்க இயலாத உயரத்திலிருந்தால் “புலி புலி”என்று சபதமிட்டால் வேங்கை மரம் பூக்களைப் பறிப்பதற்கு வசதியாய்த் வளைந்து கொடுக்கும் என்ற நம்பிக்கை மலைவாழ் மக்களிடம் இருந்தது அதையே இந்தப் பாடல் குறிக்கிறது என்றும் ஒரு விளக்கவுரையைப் படித்தேன். அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

இரண்டு கவிஞர்களின் தன் வாழ்வியல் சூழிலில் இருந்தே தனது கவிதையை உருவாக்கியிருக்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தங்கால் என்ற அந்தச் சிற்றூரின் சித்திரமும் அந்தக் கவிஞர்களின் வாழ்க்கையும் இன்று யோசித்தால் வியப்பாக இருக்கிறது. காலம் எத்தனையோ மாற்றங்களை நிகழ்த்திவிட்டது. இன்றைய திருத்தங்கலில் அந்தக் காட்சிகள் எதுவுமில்லை. ஆனால் கவிதையில் என்றும் அழியாத சித்திரங்களாக அவை இடம்பெற்றிருக்கின்றன.

••

0Shares
0