அமெரிக்க எழுத்தாளரான கேதரின் ஆன் போர்ட்டர் எழுதிய, “கயிறு “என்ற சிறுகதையை க.நா.சு மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தக் கதையை எப்படித் தேடிக்கண்டுபிடித்து மொழியாக்கம் செய்தார் என்று வியப்பாகவே இருக்கிறது.

க.நா.சுவின் ரசனையும் தேர்வும் அபாரமானது. இந்தக் கதையில் என்ன இருக்கிறது என்று பலரும் அலட்சியமாக விலகிப் போய்விடச் செய்யும் கதையிது. ஆனால் கதையில் அந்தக் கயிறு ஒரு முக்கியமான குறியீடாக இருக்கிறது என்பதை க.நா.சு நன்றாக உணர்ந்திருக்கிறார். ஆழ்ந்த வாசிப்பின் வழியே கண்டறியும் வெளிச்சமது.
கேதரின் ஆன் போட்டர் அமெரிக்காவின் முக்கியமான சிறுகதையாசிரியர். அன்றாட வாழ்க்கையிலிருந்து அவர் உருவாக்கும் சித்திரங்கள் விசித்திரமானவை.
இந்தக் கதையில் ஒரு குடும்பம் நகரிலிருந்து வீடு மாறி நாட்டுப்புறத்திற்குப் போகிறார்கள். முக்கியமான காரணம் வீடு போதவில்லை என்பதே. அவர்கள் பெரிய வீடு ஒன்றைப் பிடித்து அதில் குடியேறுகிறார்கள். நகரில் எந்தப் பொருள் வேண்டும் என்றாலும் உடனே விலைக்கு வாங்கிவிடலாம். ஆனால் நாட்டுப்புறத்தில் இருப்பவர்கள் இதற்காக நடக்க வேண்டும் அல்லது பயணம் செய்து போய்வர வேண்டும். ஆகவே காபி பொடி கிடைக்காமல் தலைவலியில் தவிக்கிறாள் அவனது மனைவி. கடைக்குச் சென்ற அவன் திரும்பி வருவதில் தான் கதை துவங்குகிறது
ஒரு கூடை மளிகைப் பொருட்களையும் இருபத்தி நான்கு கெஜம் கயிற்றையும் சுமந்துகொண்டு அவன் திரும்பி வருகிறான். இவ்வளவு பெரிய கயிறை எதற்காக வாங்கிவந்திருக்கிறான் என்று அவளுக்குப் புரியவில்லை. அதை விடவும் தான் கேட்ட காபித்தூளை அவன் வாங்கி வர மறந்துவிட்டான். அந்தக் கோபம் அவளிடம் வெளிப்படுகிறது…
எதற்காக இவ்வளவு பெரிய கயிறு என்று கேட்கிறாள். அவனுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. இருக்கட்டும் பயன்படும் என்கிறான். என்ன பயன்படும். ஏதாவது ஒன்றைச் சொல் என்கிறாள். அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை. இந்தக் கயிற்றைக் கொடி கட்டி ஏதாவது லாண்டரி நடத்தப்போகிறாயா என்று கோவித்துக் கொள்கிறாள். இருக்கட்டும் என்று அவன் சமாதானம் சொல்கிறான். அவளால் ஏற்க முடியவில்லை
எதற்காக இப்படி ஒரு கயிற்றை அவன் வாங்குகிறான். உண்மையில் அவனுக்கும் காரணம் தெரியாது. ஆனால் கடைக்குப் போகும் போது நாம் ஏதோ ஒரு ரகசிய ஆசையால் தூண்டப்பட்டு இதுபோல ஒரு பொருளை வாங்கிவிடுகிறோம். அதன் உடனடி பயன் என்று யோசிப்பதில்லை. அதற்குக் கட்டாயம் வீட்டில் திட்டு கிடைக்கிறது. இந்த எளிய சம்பவத்தைத் தான் கேதரின் கதையின் மையமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வீட்டில் பயனற்ற ஏதேதோ பொருட்கள் நிரம்பியிருக்கின்றன. அதில் ஒன்றாக இந்தக் கயிறு இருக்கட்டுமே என்று அவன் நினைக்கிறான். அவளோ இத்தனை குப்பைகளை ஒழிக்க வேண்டும் என்று தானே நகரை விட்டு பெரிய வீடு பிடித்துக் குடியேறினோம். பின்பு ஏன் இதை வாங்கி வந்திருக்கிறாய் என்கிறாள். இருவர் பக்கமும் சம அளவிலே நியாயமிருக்கிறது. ஆனால் சண்டை வருகிறது. கோவித்துக் கொள்கிறார்கள்.
உண்மையில் அவன் வாங்கி வந்த கயிறு மட்டுமில்லை காரணம். அவர்களுக்குள் உள்ள உறவின் அடையாளம் போலவே அந்தக் கயிறு உருமாறுகிறது. கயிறு என்பதன் பணியே இணைப்பது தானே. கயிற்றின் ஒருமுனை அவன் மறுமுனை அவனது மனைவி. புதுவாழ்க்கைக்குப் பழகும் வரை இது போன்ற கோபம் எழுதுவது இயற்கையே.
சாலையில் வீடு மாறிச் செல்லும் வேனைக் காணும் போதெல்லாம் அதில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள நாற்காலியும் கட்டிலும் கண்ணாடியும் மனதைத் துவளச் செய்யும். வீட்டுப் பொருட்களுடன் ஒரு போதும் பெண்கள் பயணம் செய்வதில்லை. ஒருமுறை வேனில் ஏற்றப்பட்டிருந்த நாற்காலியில் ஒரு கிழவர் அமர்ந்து போவதைக் கண்டேன். அவர் முகத்தில் ஊர் மாறிச் செல்வதன் சோகம் அப்பியிருந்தது.
வீடு மாறும் போது தான் வீட்டில் எத்தனை எத்தனை பொருட்கள் சேகரமாகியிருந்தன என்று கண்ணில் படுகிறது. கிணற்றைத் தூர் வாறும் போது அதிசயமான பொருட்கள் வெளியே வரும். அது போலே வீட்டை காலி செய்யும் போது தொலைந்து போன. மறந்து போன எத்தனையோ பொருட்கள். நாணயங்கள். புகைப்படங்கள் தலைகாட்டும். இந்தக் கதையின் மறுபக்கமது
புது ஊருக்கு புது வீட்டுக்குச் சென்றவுடன் அருகிலுள்ள கடைகள். பால் வாங்கும் இடம். மைதானம். ரேஷன் கடை. காய்கறி கடை இவற்றைக் கண்டறிவதும் உறவு கொள்ளுவதும் முதற்பணி. பலருக்கும் புது வீட்டில் உறக்கம் வராது. ஆனால் சில வாரங்களில் அந்த ஊர் நீண்டகாலம் வாழ்ந்த ஊரைப்போலாகிவிடும். வேர்விடும் வரை தான் மரம் காற்றில் தள்ளாடுகிறது. பின்பு காற்றைக் கண்டுகொள்வதேயில்லை. மனிதர்களும் அப்படித்தான்.
இந்தக் கதையில் வரும் தம்பதிகள் நெருக்கடியான சூழலில் தான் வீடு மாறியிருக்கிறார்கள். ஒவ்வொரு பைசாவும் கணக்கிடப்பட்டுச் செலவிடும் நேரத்தில், தேவையில்லாமல் பணம் கொடுத்து ஒரு கயிற்றை வாங்குவது முட்டாள்தனம் என்று அவள் நினைக்கிறாள். அது சரியே. ஆனால் தேவையான பொருட்களை மட்டுமே நாம் வாங்குவதில்லை. என்றோ பள்ளி வயதில் கிடைக்காத ஒரு மேஜை விளக்கினை வாங்கி வந்த ஒருவன் வீட்டில் அதை எப்படிச் சொல்லிப் புரிய வைப்பான். அவனுக்கு அது அடைய வேண்டிய ஆசையின் வடிவம். ஆனால் வீட்டோருக்கு அது தேவையற்ற பொருள். இப்படிப் பொருட்கள் அன்றாடப் பயன்பாட்டிற்கு வெளியில் பல்வேறு ரூபங்களும் அர்த்தங்களும் கொண்டிருக்கின்றன. அதைத் தான் இந்தக் கதையின் வழியே நாம் உணருகிறோம்
இந்தக் கயிற்றை அவன் முட்டைகளின் மீது வைத்த காரணத்தால் முட்டைகள் உடைந்துவிடுகின்றன. இது கடைக்காரனின் தவறில்லை. அவனது தவறு என்கிறாள். அது உண்மையே. அவ்வளவு கவனம் ஆண்களுக்குக் கிடையாது தான். அதே நேரம் கடைக்காரனின் மீது தவறு இருக்கவே செய்கிறது என்கிறான் அவன். அவளுக்குக் கோபம் அதிகமாகிறது. வீடு என்பதே ஒழுங்கீனங்களின் தொகுப்பு தானே என அவன் நினைக்கிறான். அவளோ வீட்டில் அனைத்து விஷயங்களை ஒழுங்காக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறாள். அவள் தனக்காக வாங்கிய பயனற்ற, அர்த்தமற்ற எல்லாவற்றையும் அவன் நினைவில் வைத்திருந்தான் அது தான் பிரச்சனையே.
அவள் கயிற்றைக் கடையில் திரும்பக் கொடுக்கும்படி சொல்கிறாள். அவன் கோபம் அடைகிறான்.
உண்மையில் அவள் காலையில் ஒரு சூடான காபியைக் குடித்திருந்தால் அவனுடன் இவ்வளவு சண்டை போட்டிருக்க மாட்டாள். சின்னஞ்சிறிய கதை. முடிவை நீங்களே படித்து அறிந்து கொள்ளுங்கள்
பெரிய விஷயங்களை, நிகழ்வுகளை மையமாகக் கொண்டு தான் சிறுகதை எழுதவேண்டும் என்றில்லை. இது போலச் சிறிய, ஆனால் அழுத்தமான கதைக்கருக்களையும் அழகான கதையாக எழுதலாம். அதன் சிறந்த உதாரணமே இந்தக் கதை.
எழுத்தாளர் ராபர்ட் கார்ன்வெல் போர்ட்டரின் கதைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது கதையின் மேற்பரப்பில் நுணுக்கமான தகவல்கள் காணப்படுகின்றன. கதையின் கச்சிதமான கட்டுமானமும் ஆழ்ந்த தன்மையும் குறைந்த உரையாடலும் நம்மைக் கதைக்குள் இழுத்துப் பரவசமூட்டுகின்றன என்கிறார்.
ஆன்டன் செகாவின் கதைப்பாணியைக் கேதரின் கடைப்பிடிக்கிறார் என்பதற்கு இந்தக் கதையே சாட்சி.
••