சின்னஞ்சிறு மலை ரயில்

மலைரயிலில் பயணம் செய்யும் போது நமது வயது கரைந்து போய்விடுகிறது. குறிப்பாகக் குகைகளுக்குள் ரயில் செல்லும் போது ஏற்படும் இருட்டில் உடனிருக்கும் பயணிகள் கூச்சலிடும் போது நாமும் இணைந்து கத்துகிறோம். மரங்களுக்குள்ளும் பள்ளத்தாக்கின் மீதும் பெரிய பாலத்தைக் கடந்தும் ரயில் செல்லும் போது நாம் புதுவகை அனுபவத்தைப் பெறுகிறோம்.

உலகின் மிகச்சிறிய மலைரயிலாகக் கருதப்படுவது சீனாவின் ஜியாங் நிலக்கரி சுரங்கத்திற்கு அருகில் இயங்கும் ரயில் சேவையாகும். இந்த ரயில் சேவை பற்றிய ஒரு ஆவணப்படத்தைப் பார்த்தேன். நாற்பது நிமிஷங்கள் கொண்ட China’s Last Little Train மலைவாழ் மக்களின் வாழ்க்கை மட்டுமின்றி ரயில் பாதை உருவான நீண்ட வரலாற்றையே சொல்லிவிடுகிறது.

ஆவணப்படத்தின் துவக்கக் காட்சியில் மஞ்சள் மலர்கள் பூத்துக் குலுங்கும் வெளியினுள் குட்டி நீராவி என்ஜின் பொருத்தப்பட்ட ரயில் செல்கிறது. தொலைவில் காணும் போது ஏதோ விளையாட்டுப் பொருள் போலிருக்கிறது. மூன்று பெட்டிகள். ஒரு என்ஜின். சின்னஞ்சிறிய அந்த நீராவி ரயில் வேகமாக மலையினுள் செல்கிறது. கேமிரா ரயில் பெட்டியை நெருங்கிச் செல்லும் போது அதில் மலைகிராமவாசிகளும் அவர்கள் விற்பனைக்குக் கொண்டு செல்லும் விளைபொருட்களும் காணப்படுகின்றன. அந்த ரயில் தான் மலைக்கிராமங்களையும் அருகிலுள்ள நகரத்தையும் இணைக்கும் ஒரே போக்குவரத்து. ரயில் தண்டவாளங்களை ஒட்டியே மக்கள் நடந்தும் பயணிக்கிறார்கள். சிலர் பைக்கில் தண்டவாளத்தை ஒட்டி வண்டியோட்டிச் செல்கிறார்கள். மலையில் அப்படியொரு ரயில் பாதையினை உருவாக்கியிருப்பது வியப்பளிக்கிறது.

மீட்டர்கேஜ் பாதையது. இரண்டு மணி நேரம் மலையில் அந்த ரயில் பயணிக்கிறது. சின்னஞ்சிறு ரயில் நிலையங்கள். அதில் காத்து கிடக்கும் மக்கள். ஒரு பெண் தனது வீட்டிலிருந்து கீரைகள் காய்கறிகள் என இருபது கிலோ எடையுள்ள சுமையை முதுகில் தூக்கிச் சுமந்தபடியே நீண்ட தூரம் நடந்து வந்து ரயில் நிலையத்தில் காத்திருக்கிறார். அந்த ரயிலில் போய் அருகிலுள்ள நகரசந்தையில் காய்கறிகளை விற்க வேண்டும். பல ஆண்டுகளாகத் தான் இப்படித் தான் பயணிப்பதாகச் சொல்கிறார். ரயில் அன்று தாமதமாக வருகிறது. சந்தைக்கு அவள் போவதற்கு நேரமாகிவிடுகிறது. ஆனாலும் அவளது வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள்.

இன்னொருவர் தனது பன்றிகளை ரயிலில் ஏற்றி விற்பனைக்காகக் கொண்டு போகிறார். இது போல விலங்குகளை ஏற்றிக் கொண்டு செல்ல சிறிய தடுப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள். மூன்று பன்றிகளையும் அதில் அடைக்கிறார்கள். சந்தையில் பன்றி இறைச்சிக்காகக் கொண்டு செல்லப்படுகிறது

இந்த ரயிலைத் தினசரி முறையாகப் பராமரிக்க வேண்டும். ரயில் என்ஜின் டிரைவர் சிறுவயது முதலே தான் இதை ஒட்ட வேண்டும் என்று கனவு கண்டதாகவும் கடையில் அந்த வேலையே கிடைத்துவிட்டது என்கிறார். ரயில்வே பணிமனை காட்டப்படுகிறது. இந்த ரயிலின் உதிரிப்பாகங்கள் இப்போது கிடைக்காது என்பதால் அவர்களே தேவையான பாகங்களைத் தயாரிக்கிறார்கள். கடினமான பணியது. அன்றாடம் ரயிலின் சக்கரங்கள். பிரேக். மற்றும் திருகாணிகளைச் சரிபார்க்கிறார்கள். அவர்களுக்கான ஓய்விடம் அருகிலே உள்ளது

இந்த ரயில் நிலக்கரி சுரங்கத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்வதற்காகத் தான் ஏற்படுத்தப்பட்டது. இன்று சுரங்கம் மூடப்பட்ட நிலையில் அது மக்களின் போக்குவரத்து பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மலைகிராமவாசிகளின் துணை கொண்டு இந்த ரயில் பாதையை எப்படி உருவாக்கினார்கள் என்ற வரலாற்றையும் ஒருவர் படத்தில் விவரிக்கிறார். இரவு பகலாக உழைத்து அந்த மலைப்பாதையை உருவாக்கியிருக்கிறார்.

முதன்முறையாக அந்த ரயிலை ஒட்டிய வயதான டிரைவர் மீண்டும் ஒருமுறை அந்த ரயிலைப் பார்வையிட வருகிறார். அவரும் நண்பரும் ரயிலைத் தொட்டுத் தொட்டுப் பார்க்கிறார்கள். கடந்த கால நினைவுகளைப் பேசிக் கொள்கிறார்கள்.

அவர்கள் உருவாக்கிய அந்த என்ஜின், அந்த வழித்தடம் இன்றும் பயன்படுவது மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது. ரயில்வே கவுண்டரில் உள்ள பெண்ணுக்கு அவர்களைத் தெரியவில்லை. அவர்களும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை

இந்த ரயிலில் சென்று படிக்கும் பள்ளி மாணவர்கள். ஆசிரியர்களைப் பற்றி விவரிக்கிறார். பள்ளிவிடும் நேரம் ரயில் கிடையாது என்பதால் நீண்ட தூரம் நடந்தே வீடு திரும்புகிறாள் ஒரு சிறுமி. குகையில் தனியாக அவள் ஒரு டார்ச் லைட்டுடன் நடந்து வரும் போது அவளது வேதனை அழுத்தமாக உணர்த்தப்படுகிறது. அந்தச் சிறுமி வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவளது அம்மா சாப்பிட ஒரு கிண்ணத்தில் கஞ்சி தருகிறாள். வேகவேகமாக அந்தச் சிறுமி சாப்பிடுகிறாள். வீட்டுப்பாடம் படிக்கிறாள். அன்றாடம் இத்தனை மைல்கள் போய்ப் படித்துவரும் அவளது ஆசையும் கனவுகளும் நம்பிக்கை அளிக்கின்றன

ரயில்வே பணிமனையில் வேலை செய்யும் பெண் அங்குப் பணியாற்றும் தோழர்களுக்காக உணவு தயாரிக்கும் காட்சி அழகாக விவரிக்கப்படுகிறது. இது போலவே இறந்தவர்களை நினைவு கொள்ளும் நாளில் எப்படிப் பல்வேறு சடங்குகள் நடக்கின்றன என்பதையும் விரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். அதில் வானுலகில் வசிப்பவர்கள் செலவு செய்வதற்காகக் காகித பணம் போல அச்சிட்டு அதைத் தீவைத்துக் கொளுத்துகிறார்கள். அந்தப் புகையை அவர்கள் பணமாக மாற்றிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இருபது கிலோமீட்டர் நீளமுள்ள குறுகிய பாதையில் ரயில் செல்லும் போது அற்புதமான இயற்கைக் காட்சிகளைக் காணுகிறோம். ரயிலிலிருந்து விழும் சாம்பலுக்குள் கிடக்கும் நிலக்கரியை மக்கள் சேகரித்துப் பயன்படுத்துகிறார்கள். குகைகளின் முன்னால் பாதுகாப்புப் பணியில் உள்ள மனிதன் ஒற்றை ஆளாகப் பகலை கடக்கிறான்.

ஒரு நாளில் நான்குமுறை இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் போக்குவரத்தை மட்டுமே நம்பி மலைவாசிகள் வாழுகிறார்கள். புதிய சாலைகள் அமைக்கப்பட்டதும் இந்த ரயில் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று ஒரு காட்சியில் அரசாங்க அதிகாரி விவரிக்கிறார்.

1938, சீன-பிரிட்டிஷ் ஜியாங் நிலக்கரி சுரங்கம் பஜியோகோவில் நிறுவப்பட்டது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, உற்பத்தி செய்யப்பட்ட நிலக்கரியைக் கொண்டு செல்வதற்காக இந்த ரயில் பாதையை உருவாக்கியிருக்கிறார்கள்

ஓய்வுபெற்ற சில நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் இந்த இரயில் பாதை எவ்வாறு உருவானது என்பதை நினைவில் வைத்திருக்கிறார்கள். பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஆரம்பக் காலத்தில் இந்த ரயிலில் ஏர் பிரேக்குகள் கிடையாது, எனவே ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு பொறுப்பான பயணி கையால் பிரேக்கை இயக்க வேண்டியதிருக்கும். இது போலவே சரக்கு ரயில்களில், பிரேக்மேன்கள் வேகமான ரயில் பெட்டிகளுக்கு இடையில் குதித்து, கையால் பிரேக்குகளை இறுக்குவார்கள்.

இந்தப் பகுதி வீடுகள் யாவும் கலாச்சாரப் புரட்சியின் போது கட்டப்பட்டன. பெரிய அணிவகுப்பு மைதானமும் மேடையும் கட்டப்பட்டிருக்கிறது, அங்கு இசை நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம்.

இந்த மலையில் வாழும் மக்களுக்குச் சின்னஞ்சிறிய ரயில் தான் வெளி உலகத்துடனான ஒரே இணைப்பு.  ஆவணப்படத்தின் கடைசிக்காட்சியில் அந்த ரயில் புகைவிட்டபடியே செல்லும் போது காலத்தினஅழியாத நினைவுகளை வெளிப்படுத்தியபடியே செல்வதாகவே தோன்றியது

••

0Shares
0