ரயிலோடும் தூரம்


ரயில் பயணத்தில் பின்னிரவில் விழித்துக் கொண்டு இருட்டில் ஒடும் மரங்களையும் நட்சத்திரங்கள் கவிழ்ந்து கிடக்கும் தொலைதூர கிராமங்களையும் பார்த்திருக்கிறீர்களா ?


எனது பெரும்பான்மை ரயில்பயணங்களில் பின்னிரவில் விழித்தபடியே தொலைதூர காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன். கல்கத்தாவை நோக்கிய ரயிலில் இருந்து பார்த்த நிலவு. வாரணாசி எக்ஸ்பிரஸில் இருந்து கண்ட கங்கை காட்சிகள், டார்ஜிலிங் எக்ஸ்பிரஸில் தென்பட்ட ஈரமான கிராமங்கள், மலைரயிலில் கண்ட குகைகள், சபர்மதி எக்ஸ்பிரஸில் பார்த்த விடிகாலையின் மழை. இப்படி எத்தனையோ காட்சிகள். ஈரத்துணி போல மனது கனமேறிகிடக்கிறது.


இரண்டு நாட்களுக்கு முன்பாக கோவையிலிருந்து ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு மூன்று மணியை கடந்திருக்கும். ஆழ்ந்த துயிலில் ரயிலே மயங்கியிருந்தது. எனது பெட்டியில் ஒருவர் கூட விழித்திருக்கவில்லை. ஒடிக்கொண்டிருக்கும் ரயலின் சீரான வேகம், குளிர் இரண்டும் தூக்கத்திலிருந்து எவரும் விழித்துவிடாதபடியே அரவணைத்துக் கொண்டிருந்தது.


நான் விழித்துக் கொண்டிருந்தேன். படுக்கையில் கிடந்தபடியே இருட்டை பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்று மணிக்கு என்று மர்மஅழகிருக்கிறது. அது மனிதர்களை விழித்திருக்கவிடுவதில்லை. அவன் மீது மூடுபனியைப் போல தூக்கத்தை படரவிடுகிறது. தன்னை அறியாமல் அந்த மனிதனின் கண்கள் சொருகிக் கொண்டுவிடுகின்றன. உடல் தளர்கிறது. மெல்ல நீருக்குள் மூழ்குவது போல தூக்கத்தின் நெடிய ஆற்றிற்குள் அவனும் இறங்கிவிடுகிறான். சாலை விபத்துகளில் பெரும்பான்மை இந்த நேரத்தில் தான் நடக்கின்றன என்பதன் காரணம் இது தான்.


உறக்கம், விழிப்பு இரண்டையும் பற்றிய நமது அறிதல் மிக சொற்பமானது. இயற்கையின் கையில் நம்மை ஒப்படைத்துவிடுகிறோம். அது நம்மை சுத்தம்செய்கிறது. சாந்தம் கொள்ள வைக்கிறது. உறக்கமில்லாது  போயிருந்தால் உலகம் என்னவாகியிருக்கும் என்று யோசிப்பதுண்டு. நினைத்து பார்க்கவேமுடியவில்லை.


அது போலவே உறக்கத்தை வேறு ஏதாவது ஒன்றினால் மாற்று செய்ய முடியுமா என்றும் யோசித்திருக்கிறேன். சாத்தியமேயில்லை என்பது தான் நிஜம். குறிப்பாக மழைக்காலத்தில் பின்னிரவு காட்சிகள் அற்புதமானவை.


ஒரு முறை சண்டிகரில் இருந்து திரும்பி வரும் விடிகாலையின் போது கோதுமை வயலும் தொலைதூர கிராமத்தின் தனிமையையும், எதிரோடும் மரங்களையும், நகர்வில்லாத ஆகாசத்தையும், எங்கிருந்து பிறக்கிறது என்று அறியாத ஆழ்ந்த வாசனையும், சிதறும் வெளிச்சத்தையும் பார்த்துக் கொண்டேயிருந்தேன். பகல் ஒரு போதும் இத்தனை அழகானதில்லை என்று  தோன்றியது.


கோவை ரயிலில் அன்றும்  விழித்துக் கொண்டு இறங்கி கதவை நோக்கி நடந்த போது முதலில் தோன்றியது. நிசப்தம். காற்றாடிகளும் குளிர்சாதனமும் இயங்கும் ஒசையை தவிர வேறு சப்தமேயில்லை. எவ்வளவு பேரிரைச்சல்கள்,  நிலையத்திற்குள் ரயில் வந்த போது எத்தனை கூப்பாடுகள், தள்ளுமுள்ளுக் குரல்கள்.


ரயில் கிளம்பிதிலிருந்து எத்தனை அலைபேசி ஒலிகள், இடைவிடாத பேச்சுகள். உலகெங்கும் மனிதர்களின்  ஒயாத பேச்சு சப்தமே நிரம்பிக் கிடக்கிறது. எல்லா ஊடகங்களின் வான்ஒலிகளையும் விட மனித பேச்சுகள் அதிகமில்லையா? ஆனால் துயிலில்  பேச்சு ஒடுங்கி நிசப்தம் பூத்திருக்கிறது.


துயிலில் மனிதர்கள் தங்களது வயதை இழந்துவிடுகிறார்கள். உறங்கும் மனிதர்களின் அழகு அற்புதமானது. மெல்லிய வெளிச்சத்தில் இரண்டு பாதங்கள் கண்ணில் படுகின்றன. பாதங்களை அவ்வளவு நெருக்கமாக அப்போது தான் பார்க்கிறேன்.  குளிக்கும் தருணங்களை அன்றி வேறு எப்போதாவது பாதங்களை நெருக்கமாக கண்டிருக்கிறேனா? எனக்கு பரிச்சயமான பாதங்கள் எவருடையது. அதை என் உள்ளங்கையில் ஏந்தி தாமரை மலரை காண்பது போல என்றாவது பார்த்திருக்கிறேனா?


குழந்தையின் பாதங்களில் ஒடும் ரத்த சிவப்பு பெரியவர்களானதும் ஏன் மறைந்து போய்விடுகிறது. இப்படி யோசனைகள் குமிழ்ந்து உடைந்தன. அந்த பாதங்களைக் கடந்து போக மனதில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிகம் நடை பயிலாத  பெண்ணின் பாதங்கள். இதுவரை உலகில் பார்த்தேயறியாத ஒரு பொருளின் வியப்பு போல அந்த பாதவடிவு தோன்றியது. எவ்வளவு தூரங்கள் இந்த பாதங்கள் நடந்திருக்கும். இனி எவ்வளவு தூரம் நடக்க போகிறது. வியப்பாக இருந்தது. இருட்டில் அதைக் கடந்து வந்து ஒடும் ரயிலின் கதவை திறந்து நின்றேன்.


காற்றை வேறு எங்கும் இவ்வளவு நெருக்கத்தில் அறிந்து கொள்ள முடியாது. சட்டை பொத்தான்களை அவிழ்த்துவிடும் காற்று. தலையை கோதிவிடும் காற்று. முகத்தில் விரல்களால் தடவிவிடும் காற்று. உடலின் மீது எறும்பு போல ஒடும் காற்று. காது மடல்களில் கூச்சத்தை உண்டாக்கும் காற்று. நீருற்று பீறிடுவது போல பொங்கி வழியும் காற்றின் வேகம். ஒரு காகிதத்தை போல நம்மை காற்றிடம் முழுமையாக ஏன் ஒப்படைத்துக் கொள்ள முடிவதில்லை. நமக்கும் காற்றுக்குமான உறவு ஒன்றில் ஒன்று கரைந்து போய்விடாமல் சமர் செய்வது போலவே ஏன் இருக்கிறது.


விடிகாலை காற்று என்று அதற்கு நானாக பெயர் இட்டுக் கொண்டேன். காற்றிற்கு எத்தனையோ பெயர்கள் இருக்கின்றன. அதில் எது நம் நினைவில் இருக்கிறது. கூதல் என்று பனிக்காலத்தின் காற்றிற்கு பெயர்.


சிறுவயதில் கூதல்காற்றிற்கு பயந்து சேலையை சுருட்டி போர்த்திக் கொண்டு கிடந்திருக்கிறேன். ஆனால் கூதல் பாதத்தை விரலால் சுரண்டிவிடுவது போல தடவவும். ஈரவிரல்களால் உடம்பை தடவிவிடுவது போல நெளிவு காட்டும். உறக்கத்திலிருந்து விடுபட முடியாமல் கூதலை தாங்கவும் முடியாமல் முணுமுணுப்பேன். அல்லது சிணுங்குவேன். அந்த கூதல் தான் இதுவா? எப்படி கண்டு கொள்வது. காற்றில் குளிர்ச்சியிருக்கிறது. ஆனால் உடல் பழகிவிட்டிருக்கிறது.


அடிவானத்திலிருந்து கசிவதுபோல வெளிச்சம் மினுங்கிக் கொண்டிருந்தது.
தூரத்து வெளிச்சம் என்ற சொல்லின் முழுமையான பொருள் அந்த நிமிசத்தில் தான் புரிந்தது. என்ன அற்புதம் அது. எங்கோ ஒரு ஒவியத்திலிருந்து உயிர் பெற்று எழுந்துவிட்டது போன்று அந்த வெளிச்சங்கள் ஊர்ந்து கொண்டேயிருக்கின்றன. எந்த இயக்கமும் இல்லை. அந்த வெளிச்சம் மட்டுமே ஊர் இருக்கிறது என்பதை சொல்லிக் கொண்டேயிருக்கிறது.


ஊர்களுக்கும் ரயில் செல்லும் தண்டவாளத்திற்கு இடையில் மரங்கள் ஒடிக் கொண்டேயிருக்கின்றன. குத்துசெடிகளில் பதுங்கியிருந்த இருள் தவளையென துள்ளி குதிக்கிறது. பின்னிரவின் நிறம் கருமையில்லை என்று சொல்லியபடியே எங்கும் நிற்காமல் ரயில் போய்க் கொண்டேயிருக்கிறது.



எல்லையற்ற நிசப்தம். குறைந்த விளக்கொளிகள். பறவைகள்  இல்லாத வானம், யாரும் நடந்து போகாத பாதைகள், தனித்திருக்கும் பனைமரங்கள், மேகம் கவிழாத நீர்நிலைகள், பாறைகள், சிதறிக்கிடந்த கற்கள், உடைந்த மண்பானையின் வயிற்றை நினைவுபடுத்தும் பாலத்தின் அடிப்பகுதி. மூடப்பட்ட ரயில்வே கேட்டுகளில் ஊடாக ரயில் பாய்ந்து செல்கிறது. சிறு நகரம் ஒன்று தென்பட ஆரம்பிக்கிறது. வெளிச்சத்தின் குமிழ்கள் அதிகமாகின்றன.


ரயிலின் வேகம் மட்டுபடுகிறது. நிற்கபோகிறதோ என்று நினைத்தேன். கட்டிடங்களின் முதுகுகள், சாலையில் நிறுத்தபட்டிருக்கும் ஒடாத வாகனங்கள். அடைத்து சாத்தபட்ட கடைகள், ரயில் நிற்காமல் சென்று கொண்டேயிருந்தது. ஊரைக் கடந்தவுடன் திரும்பவும் அதே தனிமையின் புறவெளி.


தண்ணீருக்குள் இருந்த சுறாமீன் மெல்ல தன் உடலை கடல்பரப்பின் மீது வெளிக்காட்டுவது போல ரயில் திரும்பும் போது அந்த சிறுநகரம் முழுமையாக தன்னை காட்டிக் கொண்டது. கடலின் ஆழத்தில் எத்தனை மீன்கள் இருக்கின்றன. அதில் மனித கண்கள் காணாத மீன்கள் எவ்வளவோ இருக்கின்றன. அப்படி தான் இந்த மூன்றுமணியிலும் கண்ணில் படாமல் ஒளிந்து கொண்ட எத்தனையோ சிறு இயக்கங்கள் உள்ளன


காற்று மாறிக் கொண்டேயிருக்கிறது. அரை மணி நேரத்தில் காற்றின் போக்கு எந்த பக்கமிருந்து எந்த பக்கம் செல்கிறது என்பதை உடல் அறிந்து கொண்டுவிட்டது. ரயிலின் வேக மாற்றம் கூட உடலில் உணர முடிகிறது. வெளிச்சமேயில்லாத நிலவெளியில் ரயில் போய்க் கொண்டிருக்கிறது. தொலைவில் கிராமங்களே இல்லை. பாறைகளும், அடிவானமும் மட்டுமே தென்படுகிறது. எல்லா தனியான வெளியிலும் ஏதாவது ஒரு ஒற்றை வீடு இருக்கிறது.   யார் இப்படி ஒதுங்கி வாழ்கிறார்கள்.


காற்றின் வேகம் திரும்பும் அதிகமானது. காற்று சிரிப்பை உண்டுபண்ணுகிறது. என்னை அறியாமல் சிரிப்பு முகத்தில் கசிகிறது. யாரோ என்னை பார்த்துக் கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது. பின்னாடி திரும்பி பார்த்தேன். யாருமில்லை. ரசம்போன கண்ணாடியின் முன்பாக  இடைவிடாமல் சொட்டிக் கொண்டிருக்கும் கை கழுவும் குழாயின் நீர்சொட்டு சீரான லயத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறது.


வளைந்து ரயில் திரும்பும் போது எதிரில் இன்னொரு ரயில் கடந்து வருவது தெரிந்தது. அந்த ரயில் அருகில் வருவதற்காக ஆசையுடன் காத்துக் கொண்டிருந்தேன். இரண்டு ரயில்கள் ஒன்றையொன்று கடந்து சென்றன. எதிரில் ஒடும் ரயிலின் உள்ளே தெரியும் வெளிச்சம். எவரது முகமும் தெளிவாக புலப்படாமல் கடந்து போகும் ரயிலின் வேகம்.


சில நிமிசங்கள் நான் அந்த ரயிலில் போய்க் கொண்டிருப்பது போலவே தன்உணர்வு ஏற்பட்டது. ரயில்  கடந்து போன பிறகும் அது மனதிலிருந்தும் விலகி போகவேயில்லை. தொலைதூர காட்சிகளின் மீது கவனம் குவியமுடியாமல் அந்த ரயில் மனதில் ஒடிக் கொண்டிருந்தது. பின்பு என்னை அறியாமல் அந்த காட்சிகளின் மீது கரைந்து போகத் துவங்கினேன்.


விளக்கிலாத வீடுகள் இன்றிருக்கிறதா? என் பால்யத்தில் கிராமத்தில் விளக்கில்லாத வீடுகள் நிறைய இருந்தன.  அந்த வீடுகளில் சிம்னி விளக்கை ஏற்றி வைப்பார்கள். அதுவும் ஒரேயொரு விளக்கு தான். சில வீடுகளில் சமையல் அறையில் பாட்டிலில் திரி போட்டு காடாவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருக்கும். அதுவும் சில மணி நேரம் மட்டுமே.


இருட்டிலே சாப்பிடுகின்றவர்களை கண்டிருக்கிறேன். வாசலில் உட்கார்ந்தபடியே தாயும் பிள்ளைகளும் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். ஏதுôவது விசேச நாட்களில்  பெட்ரோமாக்ஸ் விளக்குள் வந்து சேரும். அந்த வெளிச்சத்தில் வீடு ஒளிர்வதை கண்டு சிறார்கள் கூச்சலிடுவார்கள். பெண்களுமே வாசலில் உட்கார்ந்து பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்திற்கு வரும் ஈசல்களும் பூச்சிகளும் வெளிச்சத்தை முடிந்த அளவு குடித்துவிட நினைத்து கண்ணாடியில் முட்டி ஒயக்கூடியவை.
பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் குப்பையில் கிடந்த கிழிந்த துணிகள் கூட அழகாக காட்சி தரும்.


பெட்ரோமாக்ஸின் வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டு கிராமத்து விவசாயி அதை திருடி கொண்டுவந்து வீட்டில் வைத்து சில நாட்கள் இரவில் வெளிச்சம் காட்டி பின்பு பிடிபட்டு சிறை சென்று திரும்பியது எல்லாம் நடந்திருக்கிறது. ஆனால் விளக்கிலாத வீடுகளின் தனிமையும் நினைவுகளும் சொல்லில் பகிர்ந்து கொள்ள முடியாதது. அது அவர்கள் கண்ணில் ஒட்டியிருக்கிறது


தனது பண்ணை வீட்டிலிருந்து இடம்மாறி மாஸ்கோ நகருக்கு வந்து சேர்கிறார் எழுத்தாளர் டால்ஸ்டாய். பெரிய வீடு. முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் வீதி. ஒரு இரவில் அவர் உறக்கமற்று தன் அறையின் ஜன்னலை திறந்துவிடுகிறார். கடுமையான குளிர்காற்று. ஆனால் அந்த குளிரில் ஒரு இடத்தில் வெளிச்சம் மினுங்கிக் கொண்டிருக்கிறது.


அங்கே யார் வசிக்கிறார்கள். என்ன வெளிச்சம் அது என்று தெரிந்து கொள்வதற்காக டால்ஸ்டாய் வீட்டிலிருந்து வெளியேறி நடக்க ஆரம்பித்தார். மிதமிஞ்சிய குளிர் அவர் உடலை வாட்டியது. ஆனால் அந்த வெளிச்சத்தை கண்டுவிட வேண்டும் என்ற வேட்கை அவரை உந்தித் தள்ளியது. நடந்து கொண்டேயிருந்தார்.


தொலைதூர வெளிச்சத்தை நம்பி நடப்பது கானலை பின்தொடர்வது போன்றதே. நடக்க நடக்க வெளிச்சம் தூரத்தில் பின்வாங்கி போய்க் கொண்டேயிருந்தது. ஒருவழியாக அவர் அந்த இடத்தை கண்டுபிடித்த போது இடிந்து போன கட்டிடம் ஒன்றின் உள்ளே நூற்றுக்கணக்கான பிச்சைகாரர்கள், இடமில்லாமல் போனவர்கள் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடியே மிகுகுளிரை தாங்கமுடியாமல் கணப்பு போட்டு எரியும் நெருப்பின் முன்னே சுருண்டு கிடந்தார்கள்.


டால்ஸ்டாயை அவர்கள் தங்களை போன்ற ஒரு பிச்சைக்காரன் என்று நினைத்துக் கொண்டு அருகில் வந்து உட்கார இடம் கொடுத்தார்கள். அவர்களை கண்டது மனம் நெகிழ்வுற்று ஏன் அவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று கேட்கிறார். நாங்கள் மட்டுமில்லை. எங்களை போல பல நூறு பேர்  இந்த நகரில் இரவில் உறங்கவும் இடமில்லாமல் கிடக்கிறோம். நெருப்பு தான் எங்களின் ஒரே துணை. இந்த வெளிச்சமும் வெம்மையும் இல்லாது போனால் செத்து போய்விடுவோம் என்கிறார்கள்.


என்ன சொல்வது என்று புரியாத மனத்துயருடன் வீடு திரும்பி நடந்த டால்ஸ்டாய் வழியில் யாருமில்லாத வீதியில் உட்கார்ந்தபடியே அழுகிறார். என்ன உலகம் இது. மனிதர்கள் நெருப்பை தவிர வேறு துணை கொள்ள முடியாதபடி உள்ள வாழ்க்கைநெருக்கடியின் ஊடாக தான் எதற்காக எழுகிறோம். இந்த துயர் ஏன் நகரவாசிகளால் பகிர்ந்து கொள்ளபடவேயில்லை ,விடியும் வரை குளிரில் நடுங்கியபடியே வீட்டிற்கு செல்ல மனதில்லாமல் கிடக்கிறார்.


அந்த பின்னிரவு வெளிச்சம் அவரது எழுத்தின் திசையை மாற்றியது. கைவிடப்பட்டவர்களின் துயரினை பகிர்ந்து கொள்வதற்கு எழுதத் துவங்கினார்.
அதனால் பின்னிரவு காட்சிகள் மிக முக்கியமானவை. சித்தார்த்தனை புத்தனாக்கியது ஒரு பின்னிரவே. 


அரண்மனையிலிருந்து வெளியேறி சித்தார்த்தன் விழித்தபடியே ஒரு இரவெல்லாம் கடந்திருக்கிறான். அந்த இரவை எப்படி புரிந்து கொள்வது. அது விடுபடலின் இரவு. அரவணைத்துக் கொண்ட தன்கையை விலக்கி சென்ற சித்தார்த்தனை அனுமதித்து அதன் பிறகு பல இரவுகள் விழித்தபடியே இரவோடு பேசிக் கொண்டிருந்த யசோதராவின் பின்னிரவு அவளிடம் என்ன சொல்லியது. அவள் என்ன பகிர்ந்து கொண்டாள்.


ரயில் ஒடிக் கொண்டேயிருக்கிறது. தாழம்பூவின் மயக்கமூட்டும் மணம் போல மென்னொளியுடன் கூடிய நிலவெளியிலிருந்து விடிகாலையின் வாசனை கசிந்து கொண்டிருக்கிறது. காற்று நிரம்பிய பலூனை போல தொலைவுகாட்சிகளால் என்னை நிரப்பிக் கொண்டிருந்தேன். கைப்பிடியிலிருந்து நழுவி காற்றில் பறக்க வேண்டும் என்ற உத்வேகம் எழும்பிக் கொண்டேயிருந்தது.


யோசனைகள் நினைவுகள் யாவும் கரைந்து போயின. காற்றும் மெல்லிய வெளிச்சமும் ஏகாந்தமான வெளியும், மரங்களும் கண்ணில் விழுந்து மறைகின்றன. விழித்திருப்பவன் பாக்கியவான் என்கிறது பௌத்தம்.


முதல் செல்போன் ஒசை ஒலிக்க துவங்குகிறது. யாரோ ஒரு மனிதன் பாதி தூக்கத்தில் இன்னும் சென்னை வரவில்லை என்று தெரிவிக்கிறான். எவரது செருப்பு சப்தமோ கேட்க துவங்குகிறது. யாரோ முதுகின் பின்வந்து நிற்கிறார்கள். தண்ணீரில் முகம் கழுவியபடியே எந்த ஊர் என்று கேட்கிறார். தெரியவில்லை என்று சொல்லியபடியே தொலைவை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.


அந்த மனிதன் தூரத்தை கைகாட்டி அது செல்போன் டவர் தானே என்று கேட்டார். அவரவர் பார்வை அவர்களுக்கு. தெரியவில்லை என்று சொல்லியபடியே திரும்பிவந்து படுத்துக் கொண்டேன். எனது எதிர்படுக்கையில் இருந்தவர் டிரைன் லேட்டா என்று கேட்டார் .சென்னையை நெருங்கிக் கொண்டிருக்கிறேன் என்பது யாரும் சொல்லாமலே எனக்கு புரிந்திருந்தது.  
***

0Shares
0