ராக் இசைக்குழு எனும் கனவு

ரிமா தாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள Village Rockstars படம் பார்த்தேன்.

சமகால இந்திய சினிமாவில் உருவாகி வரும் புதிய அலைப்படங்களில் இது ஒரு சாதனை என்றே சொல்வேன்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியால் கலையின் மீது விருப்பமுள்ள எவரும் ஒரு நல்ல சினிமாவை உருவாக்க செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டு ரிமா தாஸின் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்.

அஸ்ஸாமைச் சேர்ந்த ரிமா தாஸ் எவரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்யவில்லை. திரைப்படப் பள்ளி எதிலும் சினிமா பயிலவில்லை. சுயமாகச் சினிமா கற்றுக் கொண்டு இப் படத்தை உருவாக்கியிருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, தயாரிப்பு, இயக்கம் ஆகிய நான்கையும் செய்திருக்கிறார்.

இப்படம் சிறந்த திரைப்படம். சிறந்த குழந்தை நட்சத்திரம். சிறந்த ஒலிப்பதிவு. சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட நான்கு தேசிய விருதுகளைப் பெற்றிருப்பதோடு தற்போது இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

இதுமட்டுமின்றிச் சர்வதேச அளவில் நாற்பதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறது. நூற்றுக்கணக்கான திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டுள்ளது.

இந்திய சினிமா செல்ல வேண்டிய திசையை ரிமா தாஸ் அழகாக அடையாளம் காட்டியிருக்கிறார். எப்படி இது போன்ற ஒரு படத்தை ரிமாவால் உருவாக்க முடிந்தது. தனது சொந்த மண்ணின், மனிதர்களின் வாழ்க்கையை உண்மையாகப் படமாக்க வேண்டும் விருப்பமே முதற்காரணம். கூடுதலாகப் பதின்பருவத்தில் ஏற்படும் ஆசைகள், கனவுகள் எப்போதுமே சொல்லித் தீராத கதை என்று உணர்ந்ததையுமே சொல்வேன்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பாக த்ரூபா The 400 Blows என்ற படத்தை இயக்கினார். அதுவும் இப்படம் போல ஒரு பள்ளிச்சிறுவனின் உலகை மிக யதார்த்தமாக சித்தரிக்கிறது. அப்படம் பிரெஞ்சு புதிய அலை சினிமாவின் தனித்துவமிக்க சாதனையாகக் கருதப்படுகிறது. அதே வெற்றியைத் தான் இப்போது ரிமா தாஸ் உருவாக்கி காட்டியிருக்கிறார்.

திரையில் சிறுவர்களின் உலகை பலரும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் இந்த அளவு உண்மையாக, துல்லியமாக, விரிவாக யாரும் காட்சிப்படுத்தியதில்லை. படம் அஸ்ஸாமின் கிராமத்தின் நடந்தாலும் நாம் நினைவுகளின் வழியே சொந்த வாழ்க்கையின் அடையாளங்களுடன் கரைந்து விடவே செய்கிறோம்.

தமிழகத்தில் இன்று கிராமம் நகரம் என்று பேதமில்லாமல் சிறுவர்கள் ஒன்று போலவே நடந்து கொள்கிறார்கள். வீடியோ கேம், கம்ப்யூட்டர் என்று முடங்கிக் கிடக்கிறார்கள். கையில் தூண்டிலுடன் மீன்பிடிக்கச் செல்லும் சிறார்களின் கூட்டத்தையோ, மரமேறி விளையாடும் சிறுவர்களையோ இன்று காணமுடியாது. சிற்றூர்களில் வளரும் சிறுவர்கள் கூடத் தொலைக்காட்சியின் முன்னே தான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.

இந்தத் தொலைக்காட்சியும் செல்போனும் இணையமும் வராத காலத்தின் சிறுவர்களுக்குக் காலை துவங்கி மாலை வரை விளையாடுவதற்கு விளையாட்டுகள் இருந்தன. ஊர்சுற்ற நண்பர்கள் இருந்தார்கள். நாள் முழுவதும் பசியிருந்தது. மண்ணில் புரண்டார்கள். வீதியில் உறங்கினார்கள். கிணற்றில், குளத்தில், ஆற்றில் நீந்திக் குளித்தார்கள். பறவை முட்டை தேடி அலைந்தார்கள். ஊருக்கு வரும் சிறு வணிகர்களின் பின்னால் ஒடினார்கள். இரவில் ஒன்று கூடி கதைபேசி மகிழ்ந்தார்கள்.

பள்ளிக்கூடம் போவதும் பள்ளி விட்டு வருவதும் எளிய விஷயமில்லை. ஒன்றாக நண்பன் தோள் மீது கைபோட்டபடியே போவது, திரும்பி வரும் போது இஷ்டம் போலச் சுற்றியலைவது, முரட்டு பையனுடன் சண்டை போடுவது, காமிக்ஸ் புக் தேடி படிப்பது என அன்றைய பால்யகாலதின் நிகழ்வுகள் எதுவும் இன்றில்லை. ஆனால் இப்படம் அந்த நிகழ்வுகள் எதுவும் மாறிவிடவில்லை. அப்படியே இன்றும் அஸ்ஸாமில் தொடருகிறது என்பதன் சாட்சியம் போலிருக்கிறது

படம் துவங்கிய இரண்டாவது நிமிசத்தில் நாம் ஒரு திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு மறைந்துவிடுகிறது. துனுவின் உலகிற்குள்  நாம் பிரவேசித்துவிடுகிறோம்

பத்து வயதான துனு (பனீதா தாஸ்) அசாமின் சயாகோனுக்கு அருகேயுள்ள சிறிய கிராமத்தில் வசித்து வருகிறாள். அவளுக்கு அப்பா கிடையாது. அம்மா (பசந்த்தி தாஸ்) மற்றும் அண்ணன் உடன் வசிக்கிறாள்.. ஒரு நாள் பக்கத்து ஊரில் நடைபெறும் விழா ஒன்றில் தின்பண்டங்கள் விற்க செல்லும் அம்மாவோடு போகும் துனு அங்கே ஒரு இசைக்குழுவை காணுகிறாள். தானும் கிதார் வாசிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். ஊர் திரும்பி  அட்டை கிதார் ஒன்றை தயார் செய்கிறாள். அவளை ஒத்த சிறார்களை ஒன்று சேர்த்துக் கொண்டு இசைக்குழு உருவாக்க கனவு காணுகிறாள்.

இந்தக் கனவு என்னவானது என்பதே படம். சின்னஞ்சிறிய கதை. ஆனால் படம் ஒரு முழு வாழ்க்கையை நமக்கு அறிமுகம் செய்கிறது. குறிப்பாக அஸ்ஸாமிய கிராமப் புறத்தின் வாழ்க்கையைத் துல்லியமாக அடையாளம் காட்டுகிறது.

படம் நிறைய இடங்களில் பதேர் பாஞ்சாலியை நினைவுபடுத்துகிறது. அதில் வரும் துர்காவை போலவே இருக்கிறாள்  துனு. முகச்சாயல் கூட அப்படியே.

படத்தின் ஒரு காட்சியில் நான்கு பையன்களும் ஒரு சிறுமியும் ஒன்றாக மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் மரமேறக்கூடாது என்று பலரும் திட்டுகிறார்கள். ஆனால் துனு விருப்பத்துடன் மரமேறுகிறாள். அந்தச் சிறுவர்கள் மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பது மனதை சந்தோஷம் கொள்ள வைக்கிறது. படத்தின் பல காட்சிகளில் மரத்தில் தான் சிறுவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக நாமும் இருக்கிறோம் என்பதே கூடுதல் மகிழ்ச்சி

இன்னொரு காட்சியில் துனுவின் அண்ணன் அம்மாவிற்கு உதவுவதற்காகப் பாத்திரம் கழுவி கொண்டிருக்கிறான். அந்த ஒரு காட்சியில் அவனது இயல்பு முழுமையாக வெளிப்பட்டு விடுகிறது. பாத்திரம் கழுவ அவனுக்கு உதவி செய்கிறாள் துனு. அவர்களுக்குள் உள்ள புரிதல் படத்தில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.

துனு ஆட்டுக்குட்டியோடு பேசுகிறாள். சைக்கிள் ஒட்ட ஆசைப்படுகிறாள். பையன்களுடன் ஒன்றாகச் சேற்றில் விழுந்து புரளுகிறாள். சிறுவர்கள் ஒன்றாகச் சேற்று நீரில் படுத்துகிடக்கும் காட்சி ஒன்று படத்தில் வருகிறது. அபாரம். நாணல் அறுப்பதற்குச் சிறார்கள் போகிறார்கள். கையில் தூண்டிலுடன் செல்லும் பையன்களுக்கு மீன் கிடைப்பதில்லை. ஆனால் துனுவிற்கு மீன் கிடைக்கிறது.

துனு தன் ஆசையின் பாதையில் தனியே சுற்றியலைகிறாள். ஒரு கிழவர் அவர்களுக்குக் கதை சொல்கிறார். அது மகாபாரதக் கதை. அதில் யுதிஷ்ட்ரன் சொல்லும் புதிர்களுக்கான பதில்களை வியப்போடு கேட்கிறாள் துனு. அதைத் தன் அம்மாவிடம் சொல்லும் போது அம்மா முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சி சிறப்பாகக் காட்சிப்படுத்தபட்டிருக்கிறது.

இயற்கையின் அகன்ற கரங்களுக்குள்ளாக அவர்கள் வாழுகிறார்கள். படத்தில் மழை மெல்லத்துவங்கி சீற்றம் கொண்டு பின்பு பெருமழையாகி வெள்ளமாகிறது. இந்தச் சீரான மாறுதல் இத்தனை துல்லியமாக எந்தப் படத்திலும் ஆவணப்படுத்தபடவில்லை.

வீடுகளை, பொருட்களை இழந்த போதும் சிறார்களின் விளையாட்டுதனம் போகவில்லை. மழையோடு சைக்கிளில் பள்ளிக்கூடம் போகிறார்கள். வெள்ளத்தில் அடித்துப் போன பாலத்தைப் பார்வையிடுகிறார்கள். தங்களின் வயல் அழிந்து போய்விட்டதைக் கவலையோடு காணுகிறார்கள். முற்றிய கதிர்களைப் படகில் சென்று அறுத்தெடுக்கும் காட்சி மனதை துயர்கொள்ள வைக்கிறது.

ஒரு காட்சியில் துனு வெறும்சோறு தான் சாப்பிடுகிறாள். குழம்போ, காய்கறிகளோ கூட அவளது உணவில் இல்லை. அம்மா ஒரு காட்சியில் உருளைக்கிழங்கு வாங்கிக் கொண்டு வருகிறாள். அவ்வளவே அவர்களின் வாழ்க்கை.

துனு பூப்பெய்திய பிறகு அவளின் இயல்பு மாறிவிடுகிறது. அந்தக்காட்சியில் அவளைக் கேலி செய்யும் பையனிடம் அவள் நடந்து கொள்வது நேர்த்தியாக படமாக்கபட்டிருக்கிறது. பூப்பெய்தியதை ஒட்டி நடக்கும் சடங்குகளும் விருந்தும் விரிவாகக் காட்டப்பட்டிருக்கிறது

துனுவின் அம்மா பதேர் பாஞ்சாலியில் வரும் அபுவின் அம்மா சர்பஜயாவை நினைவுபடுத்துகிறாள். இருவரும் ஒன்று போல உருவாக்கபட்ட கதாபாத்திரங்கள். சர்பஜயாவும் கணவன் இறந்தபிறகு மகனை வளர்க்க போராடுகிறாள். அது போலவே துனுவின் அம்மாவும் நடந்து கொள்கிறாள். ஒரு காட்சியில் தனது மகளை மற்றவர்கள் கண்டிக்கிறார்கள் என்பதற்காக துனுவின் அம்மா கோபம் கொள்வது அப்படியே சர்பஜயா பதேர் பாஞ்சாலியில் நடந்து கொள்வது போலவே இருக்கிறது.

ஒலைத்தொப்பியுடன் துனு மழையை எதிர்கொள்ளுவதும். படகில் தனியே போவதும், அம்மா அவளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதும், பாக்குமரமேறி பறித்துப் போடுவது. ஆட்டுக்குட்டியை கொஞ்சுவது, மஞ்சள் புடவையைச் சுற்றிக் கொண்டு பொம்மை போல நிற்பது, அரிக்கேன் விளக்கின் வெளிச்சத்தில் வீட்டில் அம்மாவோடு பேசிக் கொண்டிருப்பதும், பையன்களுடன் ஒன்றாக ஊர் சுற்றுவதும் என துனுவே நம் மனதை ஆக்ரமித்துக் கொள்கிறாள்.

படத்தின் ஒரு காட்சியில் துனுவின் அண்ணன் ஆசிரியரால் பள்ளியில் இருந்து அடித்துத் துரத்தப்படுகிறான். பின்பு அவன் பள்ளிக்கு போகவே மறுக்கிறான். தன் சைக்கிளை தொட்டுவிட்டதற்காக ஒரு பையன் துனுவை அடித்துவிடுகிறான். அவனை அடிக்க மற்ற பையன்கள் துரத்திக் கொண்டு ஒடுகிறார்கள். அவனைப்பிடிக்க முடியவில்லை. அதே சிறுவன் மறுநாள் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு அவர்களின் இசைக்குழுவில் ஒருவனாக மாறுகிறான்.

பள்ளிவிட்டு திரும்பும் போது சிறுவர்கள் ஒருவரையொருவர் அடித்துச் சண்டையிட்டு உருளுகிறார்கள். பிறகு அதே சிறுவர்கள் தோழமையுடன் ஒன்றாக ஊர் சுற்றுகிறார்கள். வெள்ளம் அந்தச் சிறுவர்களின் உலகை ஒடுக்கிவிடுகிறது. அடித்துச் செல்லபட்ட பாலத்தை அவர்கள் வேடிக்கை பார்க்கும் போது அவர்களின் முகத்தில் வெளிப்படும் கவலை குறிப்பிடத்தக்கது.  சிறுவர்களின் உலகை இத்தனை நிஜமாக யாரும் சினிமாவில் பதிவு செய்ததேயில்லை.

ஒரு ராக் இசைக்குழுவை உருவாக்க வேண்டும் என்ற துனுவின் கனவு ஒரு அடையாளம் மட்டுமே. அது ஒன்று தான் இன்றைய அதி நவீன உலகம் அவர்களைத் தொடர்பு கொண்டிருக்கிறது என்பதன் சாட்சியம். அவர்களும் வேறு உலகை நோக்கிச் செல்ல விரும்புகிறார்கள் என்பதன் அடையாளம். அந்த ஆசையைப் படத்தில் புரிந்து கொள்பவள் துனுவின் அம்மா மட்டுமே. ஒருவேளை துனுவின் அப்பா இருந்திருந்தால் இதை அனுமதித்திருப்பாரா என்பது சந்தேகமே.

சிறுவயதிலிருந்தே நாடகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த ரிமா தாஸ் 2003 ல் நடிப்பதற்காக மும்பை வந்திருக்கிறார்.. அதன் பிறகே திரைப்பட உருவாக்கம் பற்றி அறிந்து கொள்ளத் துவங்கியிருக்கிறார்.

கேமிரா வாங்குவதற்காகத் தான் அணிந்திருந்த தங்க நகைகளை விற்றிருக்கிறார். ஒரு கேனான் Canon 5D கேமிராவை வாங்கி ஒரேயொரு லென்ஸை வைத்துக் கொண்டு ஒரு உதவியாளருடன் தானே படப்பிடிப்புச் செய்யத் துவங்கினார். அப்படித் தான் அவரது முதல்படம் Man With The Binoculars வெளியானது. அது திரைப்பட விழாக்களில் பங்கேற்ற சந்தோஷத்தில் அடுத்தபடத்தை மூன்று நபர்கள் கொண்ட சிறிய குழுவோடு படம் பிடிக்கச் சென்றார் அதுவே Village Rockstars. இப்படத்தில் Canon 5D camera with only one lens மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார். படத் தொகுப்பினையும் அவரே மேற்கொண்டிருக்கிறார்.

Village Rockstars படம் முழுவதும் சிறார்களின் சந்தோஷம்  நிரம்பியிருக்கிறது. இத்தனை மகிழ்ச்சியான, தூய, நிறைவான சினிமாவைப் பார்த்து நீண்டநாளாகிவிட்டது என்பதே உண்மை

••

0Shares
0