ஜப்பானிய தேநீர் கலையின் மாஸ்டராகக் கருதப்படுகிறவர் சென் ரிக்யூ. துறவியான இவர் தேநீர் தயாரிப்பதையும் பகிர்வதையும் கலையின் நிலைக்கு உயர்த்தினார். உலகெங்கும் தேநீர் உற்சாகம் தரும் பானமாக அருந்தப்பட்ட போதும் ஜப்பானில் தான் அது கலையாக மாறியது. 16 ஆம் நூற்றாண்டில் இந்த மாற்றம் ஏற்பட்டது.
ரிக்யூவின் காலத்தில் தேநீர் என்பது சாமானியர்கள் குடித்த பானமில்லை. தேநீர் குடிப்பது அரசின் உயர் அதிகாரிகளும், பௌத்த மதகுருக்களுக்கும் மட்டுமே உரியதாகக் கருதப்பட்டது. அதுவும் அரண்மனைக்கு வரும் விருந்தினர்கள் கௌரவிக்கப்படுவதற்காகத் தேநீர் விருந்து நடைபெற்றது.
ரிக்யுவுக்கு முன், ஜப்பானியத் தேநீர் விழா ஆடம்பரமாக இருந்தது. அதை மாற்றி அலங்கரிக்கப்படாத குடிசையில் நடைபெறும் எளிய நிகழ்வாக ஆக்கியவர் ரிக்யூ.
ரிக்யூவின் தேநீர் விழாவில் கலந்து கொள்ள வருகிறவர்களும் எளிய உடையில் தான் வரவேண்டும். மன்னராக இருந்தாலும் ஆடம்பர உடைகள் அனுமதிக்கபடாது. அது போல தேநீர் கூடத்திற்குள் நுழையும் போது அவர்களின் உடைவாளை வெளியே விட்டுச் செல்ல வேண்டும். தேநீர் அருந்துதல் சமாதானத்தின் அடையாளம். அங்கே ஆயுதங்களுக்கு இடமில்லை.
தேநீர் தயாரிக்கப்படும் பாத்திரங்களை அவர் கலைப்பொருளாக உருவாக்கினார். இவற்றை ரிகு சோஜிரோ பகுதி கைவினைஞர்களைக் கொண்டே செய்தார். அது போலவே தேநீர் அருந்தியபடி மலர்களை ரசிக்கும்படியாகச் செய்தார். இதற்காக இகேபானா கலையினைத் தேநீர் சடங்குடன் இணைத்துக் கொண்டார்.
பொன்னிறம் மற்றும் அடர் வண்ணங்கள் கொண்ட தேநீர் கோப்பைகளுக்குப் பதிலாக இயற்கையில் காணப்படும் பழுப்பு, பச்சை மற்றும் சாம்பல். மற்றும் மங்கலான வண்ணங்கள் கொண்ட கோப்பைகளை ரிக்யூ பயன்படுத்தினார். இதற்கு முக்கியக் காரணம் கோப்பையின் வண்ணங்களில் நம் கவனம் சிதறக் கூடாது. எவ்விதமான கவனச்சிதறலும் இல்லாமல், நாம் தேநீரை ருசித்து அனுபவிக்க வேண்டும் என்பதாகும்.
இந்தியாவில் தேநீரின் சுவையை விடவும் அதன் சூடு மற்றும் உடனடியாகத் தரும் உற்சாகம் காரணமாகவே மிகவும் புகழ்பெற்றிருக்கிறது.. தேநீர் கடை இல்லாத ஊரே இந்தியாவில் கிடையாது. ஆனால் நம்மிடம் தேநீர் கலை உருவாகவில்லை
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பயன்படுத்தப்படும் உண்கலன்கள் மற்றும் சமையல் பாத்திரங்களின் வரலாறு முழுமையாக எழுதப்படவில்லை. இது போலவே கோவிலின் மடப்பள்ளி மற்றும் அங்கே தெய்வத்திற்காகத் தயாரிக்கப்படும் உணவுகள். அதன் தயாரிப்பு முறை, அங்கே அனுமதிக்கபடாத விஷயங்கள் பற்றியும் விரிவான ஆய்வுகள் வெளியாகவில்லை.
உணவு கலையாக மாறுவது எளிதானதில்லை. அதிலும் தேநீர் போல எல்லோராலும் எளிதாக அருந்த முடிகிற, எளிதில் கிடைக்கிற ஒரு பானத்தைக் கலையாக மாற்றியது வியப்பளிக்கவே செய்கிறது.
இன்றைய ஜப்பானில் இந்தச் சடங்கு மரபின் தொடர்ச்சி போல நடைபெறுகிறது. ஜப்பானியப் பெரிய நகரங்களில் கிஸ்ஸடென் என அழைக்கப்படும் டீரூம்களை விடவும் அதிகமாக ஸ்டார்பக்ஸ் மற்றும் இத்தாலியக் காபி கடைகள் காணப்படுகின்றன.
ரிக்யூவிற்கு முன்பே தேநீர் தயாரிப்பதும் அருந்துவதும் ஜப்பானில் புகழ்பெற்றிருந்தது. அதை ரிக்யூ மறுவரையறை செய்தார் என்கிறார்கள். குறிப்பாக ரிக்யூ வடிவமைத்த தேநீர் கூடங்கள். மற்றும் தேநீர் குடிப்பதற்கான விசேச கோப்பைகள். தேயிலைத் தூள் வைக்கப்படும் கொள்கலன் தேநீர் தயாரிப்பதற்கான விசேச பாத்திரங்கள். தேநீர் தயாரிக்கபடும் முறை என அனைத்திலும் அவர் அழகியலை உருவாக்கினார். குறிப்பாகத் தேநீர் பருகுவதை இயற்கையோடு இணைந்த கலைச்செயல்பாடாக மாற்றினார்.
தேநீர் தயாரிப்பதையும் தேநீர் அருந்துவதையும் ஜென் போதனைகளின் வடிவமாக்கினார் ரிக்யூ.
ஜப்பானில் தொடர்ந்து அரசியல் குழப்பங்கள் மற்றும் அமைதியின்மை நிலையிலிருந்த நேரத்தில். ரிக்யூ தனது கடைசித் தேநீர் விழாவை ஏப்ரல் 21, 1591 அன்று நடத்தினார்,
மன்னர் ஹிதேயோஷி உத்தரவால் அந்த விழா முடிந்த உடனேயே செப்புகு எனும் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். அதற்கு முன்பாகத் தேநீர் தயாரிக்கும் கலன்களை நண்பர்களுக்குப் பரிசாக வழங்கினார். தனது தேநீர் கோப்பையை உடைத்து நொறுக்கினார். தற்கொலை செய்வதற்கு முன்பு தனது ஒரு கவிதையை வாசித்துக் காட்டினார்.
ஹிதேயோஷி ரிக்யூவை தற்கொலை செய்து கொள்ளக் கட்டளையிட்டார் என்ற உண்மை இன்னமும் வெளிப்படவில்லை. பல்வேறு காரணங்களைச் சொல்கிறார்கள்.
உங்களுடைய சொந்த மனவுறுதியே உங்களுக்கு எப்போதும் இருக்கக்கூடிய சிறந்த ஆசான் என்கிறார் ரிக்யூ. அந்த மனவுறுதியின் வெளிப்பாடே அவரது மரணம்.
மன்னர் ஹிதேயோஷி ரிக்யூவிற்கான நட்பும் உறவும் புதிரானது. முன்கோபியான ஹிதேயோஷிவை ஒரு குழந்தையைப் போல ரிக்யூ நடத்தினார் என்கிறார்கள்.
ஒரு முறை ரிக்யூ நடத்தும் அசகாவோ தேநீர் விழாவைப் பற்றிக் கேள்விப்பட்டு மன்னர் ஹிதேயோஷி அதில் கலந்து கொள்ளச் சென்றார்.
தோட்டத்தின் வழியாகத் தேநீர் குடிலை நோக்கி நடந்து வரும் பாதையில் பல ஒழுங்கற்ற வடிவ கற்கள் சீரற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்தன. அதற்குக் காரணம் முழுமையடையாத பாதையின் வழியே தான் நாம் நடக்கிறோம் என்ற உணர்வை உருவாக்குவதே.
ஒரு மூங்கில் துண்டைப் பயன்படுத்தி ரிக்யூவால் செய்யப்பட்ட பூந்தொட்டியில் சிறிய விரிசல் ஏற்பட்டு, அதிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. விருந்தினர் ஒருவர் அதைச் சுட்டிக்காட்டியபோது, ‘இந்தத் தண்ணீர்தான் உயிர் ‘ என்றார் ரிக்யூ .
மார்னிங் க்ளோரிஸ் எனப்படும் அசகாவோ மலர்கள் கொண்ட பெரிய தோட்டம் அங்கே இருந்தது. அசகாவோ மலரைத் தமிழில் அடும்பு என்பார்கள். நீல நிறமானது
ரிக்யூவின் தேநீர் குடிலை சுற்றிய தோட்டத்தில் ஒரு அசகாவோ மலர் கூட இல்லை. அத்தனையும் பறிக்கப்பட்டிருந்து. அவர் தன்னை வரவேற்க அசகாவோ மலர்கள் இல்லை என்று கோபம் கொண்டார். தன்னை ரிக்யூ அவமதிப்பதாக நினைத்தார்
ஆனால்அவர் தேநீர் குடிலுக்கு வந்தவுடன் அறை இருளடைந்தது. . வெளியே இலைகள் சலசலக்கும் சத்தம், பறவைகள் கீச்சிடும், ஓசை கேட்டது. பின்பு ஜன்னலின் சிறிய துளை வழியாகப் பிரகாசமான வெளிச்சம் உள்ளே நுழைந்தது. அந்த வெளிச்சம் சென்ற திசையினை ஹிதேயோஷியின் கண்கள் பின்தொடர்ந்தன.
அங்கே சுவரில் ஒரு மலர் குவளையில் ஒரேயொரு அசகாவோ மலர் மட்டுமே இருந்தது. வெளிச்சம்பட்டு அந்த ஒற்றை மலர் பேரழகுடன் ஒளிர்வதைக் கண்ட ஹிதேயோஷி மயங்கிப் போனார்.
நாம் ஒரே நபரை அடிக்கடி சந்தித்தாலும், அந்த நபருடனான ஒவ்வொரு சந்திப்பையும் வாழ்வில் ஒரேயொரு முறை மட்டுமே கிடைத்த பொக்கிஷமாகக் கருதி, செயல்பட வேண்டும் என்கிறார் ரிக்யூ. அதன் அடையாளமே இந்தத் தேநீர் விருந்து நிகழ்ச்சி.
பணிவு மற்றும் எளிமையில் அழகு காண்பது என்பதே உயர்வானது என்பதை ரிக்யு அனைவருக்கும் நினைவூட்டினார்.
தேநீர் பாத்திரங்களில் உள்ள தூசி மற்றும் அழுக்குகளைத் துலக்கினாலும், இதயம் இன்னும் தூய்மையற்றதாக இருந்தால் என்ன பயன் என்று கேட்கிறார் ரிக்யூ.
தேநீர் குடிப்பவர்களில் எத்தனை பேர் தனது இதயத்தின் தூய்மையைப் பற்றி நினைக்கிறார்கள் சொல்லுங்கள்.
••