லேண்ட்மார்க் நினைவுகள்

சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள லேண்ட்மார்க் புத்தகக் கடை செயல்பட்ட நாட்களில் வாரம் மூன்றோ, நான்கோ முறை அங்கே போய்விடுவேன். புத்தகக் கடைகளுக்குப் போவதைப் போன்ற மகிழ்ச்சி வேறு எதுவும் கிடையாது

சில நேரம் மதியம் இரண்டு மணிக்கு உள்ளே நுழைந்தால் மாலை வரை அங்கேயே புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருப்பேன். கடை ஊழியர்கள் பலரும் நண்பர்களாகி இருந்த காரணத்தால் எதுவும் கேட்கமாட்டார்கள். பொதுவாகவே அங்கே நாம் எந்தப் புதிய நூலையும் கையிலெடுத்து நின்றபடியே படித்துக் கொண்டிருக்கலாம்.

மதிய நேரங்களில் கூட்டம் அதிகமிருக்காது என்பதால் புதிதாக வந்துள்ள ஒவ்வொரு புத்தகமாகக் கையில் எடுத்து ஒன்றிரண்டு பக்கங்கள் வாசித்துப் பார்ப்பேன்.

ஆங்கில நூலின் விலை மிக அதிகம்.ஆகவே அதை வாங்கும் பொருளாதாரம் இருக்காது. ஆனாலும் ஆசையாகப் புத்தகங்களைக் கையில் வைத்துப் புரட்டுவேன். புதிய கவிதைத் தொகுப்பாக இருந்தாலும் தினம் இரண்டு மூன்று கவிதை என அங்கேயே வாசித்துவிடுவேன்.

ஒருமுறை அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு நண்பர் வேண்டிய புத்தகங்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்று லேண்ட்மார்க் அழைத்துப் போனார். எனக்குத் தேவையான புத்தகங்களை நானே சம்பாதித்து வாங்கிக் கொள்ள முடியும் போது வாங்கிக் கொள்கிறேன். உங்கள் அன்பின் அடையாளமாக ஒன்றோ இரண்டோ போதும் என்றேன்.

நண்பர் விடவில்லை. குறைந்தது ஐந்து புத்தகம் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். எந்த ஐந்து புத்தகங்களைத் தேர்வு செய்வது என்று தெரியவில்லை. லேண்ட்மார்க்கில் அரிய புத்தகம் ஏதாவது கண்ணில்பட்டால் அதை ஒளித்து வைத்துவிடுவேன். கையில் பணம் வந்தவுடன் வாங்கிக் கொள்ளலாம் என்று. சிலவேளைகளில் அதைக் கண்டுபிடித்து அடுக்கில் வைத்தும் விடுவார்கள். அப்படி நான் ஒளித்து வைத்த இரண்டு புத்தகங்களைத் தேர்வு செய்து கொண்டதுடன் லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளின் தொகுப்பு. ஆக்டோவியா பாஸின் கவிதைகளின் தொகுப்பு. மற்றும் மார்க்வெஸின் சிறுகதைத் தொகுப்பு என ஐந்து புத்தகங்களைத் தேர்வு செய்து கொண்டேன். புதிய புத்தகங்களுடன் லேண்ட்மார்க்கை விட்டு வெளியே வந்தவுடன் நண்பருடன் தேநீர் அருந்தச் சென்றேன். புதிய புத்தகங்களை உடனே படிக்க வேண்டும் என்று மனம் பரபரத்துக் கொண்டிருந்த்து. அதைப்புரிந்து கொண்டவர் போல நண்பர் விடைகொடுத்தார் ஐந்தில் எதை முதலில் படிப்பது என்று வேறு குழப்பம். லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளை அறைக்குத் திரும்பும் போது பேருந்திலே வாசிக்கத் துவங்கினேன்.

இவ்வளவு ஆசையாகத் தேடித்தேடி வாங்கிய புத்தகங்களைக் காப்பாற்றி வைத்துக் கொள்ள அன்றைய சூழலில் முடியவில்லை. அறையில்லாமல் சுற்றி அலைந்தேன் என்பதால் நிறைய நல்ல புத்தகங்களைத் தொலைத்திருக்கிறேன். சிலர் எனது புத்தகங்களைத் திருடிக் கொண்டு போயிருக்கிறார்கள்.

லேண்ட்மார்க்கை ஒட்டி சிறிய தேநீர் கடையிருக்கும். அந்தக் கடை எங்களின் சந்திப்பு. நண்பர்கள் யாராவது வரும்வரை அங்கே மாலையில் காத்துக் கொண்டிருப்பேன். விடுமுறை நாட்களில் லேண்ட்மாரக்கில் கூட்டம் மிக அதிகமிருக்கும். காரில் வந்து பை நிறையப் புத்தகங்களை வாங்கிப் போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். நண்பர்கள் யார் என்னை காண வெளிஊரிலிருந்து வந்தாலும் லேண்ட்மார்க் அழைத்துக் கொண்டு போய்விடுவேன்.

எனது கதையோ, கட்டுரையோ வெளியாகிக் கிடைக்கும் பணத்தோடு அப்படியே லேண்ட்மார்க் போவதே அன்றைய வழக்கம். ஏதாவது புத்தகம் வேண்டும் என்று சொல்லிவைத்திருந்தால் அதை எப்படியாவது வரவழைத்துக் கொடுத்துவிடுவார்கள். அப்படித்தான் மிலன் குந்தேரா நாவல்களை, இதாலோ கால்வினா, கோபே அபேயின் நாவல்களை வாங்கினேன்.

எழுத்தாளர் சுஜாதா அடிக்கடி அங்கே வருவார். அவர் என்ன புத்தகங்களை வாங்குகிறார் என்று ரகசியமாகப் பார்த்துக் கொண்டிருப்பேன். ஒவ்வொருமுறையும் பத்து இருபது புத்தகங்களை தேர்வு செய்திருப்பார். நின்று நிதானமாகப் புரட்டிப் பார்த்துத் தேர்வு செய்வதில்லை. எழுத்தாளர் யார் என்பதையும் எதைப்பற்றிப் புத்தகம் என்பதையும் மேலோட்டமாக வாசித்துப் பார்த்துத் தேர்வு செய்வார். அவரது வாசகர்கள் நண்பர்கள் என யாராவது கண்ணில்பட்டால் லேசாகப் புன்னகை செய்வார். யாரும் அவரைத் தொந்தரவு செய்யமாட்டார்கள்.

லேண்ட்மார்க்கில் ஆண்டிற்கு ஒருமுறை தள்ளுபடி விற்பனை நடக்கும். அப்போது மிகக் குறைவான விலையில் நல்ல புத்தகங்களை வாங்க முடியும். அதற்காகவே காத்துக் கிடப்பேன்.

புத்தகம் வாங்காவிட்டாலும் லேண்ட்மார்க் போவது என்பது விருப்பமான விஷயம். ஒரான் பாமுக்கின் மை நேம் இஸ் ரெட் நாவலை அது வெளிவந்த ஒரு மாதகாலத்தில் தற்செயலாக வாங்கினேன். வாசித்தபோது மிக நன்றாக இருந்தது. அதை நண்பர் ஜி.குப்புசாமியைச் சந்திக்கும் போது அவசியம் படிக்கும்படி சிபாரிசு செய்தேன். அப்போது பாமுக் நோபல் பரிசு பெறவில்லை. ஜி.குப்புசாமியே அதைத் தமிழில் மொழியாக்கம் செய்வார் என்று அன்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு. மிக நல்ல நாவல்.

லேண்ட்மார்க்கில் தமிழ் எழுத்தாளர்களை விடவும் மலையாளம் மற்றும் ஆங்கில எழுத்தாளர்களை அதிகம் சந்தித்திருக்கிறேன். பெரும்பாலும் மலையாள எழுத்தாளர் பால் சக்கரியாவை அங்கே காணலாம். அது போலவே ஒருமுறை அமிதாவ் கோஷை சந்தித்தேன். ஒரு முறை பிரெஞ்சு எழுத்தாளர் ஒருவரின் நூல் அறிமுகம் நடந்தது. இப்படி நிறைய எழுத்தாளர்களை, ஓவியர்களை, சினிமா இயக்குநர்களை அங்கே சந்தித்திருக்கிறேன்.  லேண்ட்மார்க்கில் இசைபிரிவு 97ல் தனியே துவக்கப்பட்டபோது நிறைய அரிய இசைதகடுகளை வாங்கியிருக்கிறேன்.

சென்னையில் ஹிக்கின்பாதம்ஸ். ஒடிஸி, அமெரிக்கன் புக் சென்டர் என நிறையப் புத்தகக் கடைகள் இருந்தாலும் நுங்கம்பாக்கம் லேண்ட்மார்க்கோடு ஏற்பட்ட நெருக்கம் அலாதியானது.

லேண்ட்மார்க் புத்தகக் கடை மூடப்பட்டது எனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்படுத்தியது. ஒரு புத்தகக் கடையோடு உள்ள உறவு என்பது சொல்லால் விவரிக்கமுடியாதது. இப்போதும் நுங்கம்பாக்கத்தைக் கடந்து போகும்போது கண்கள் லேண்ட்மார்க்கை தேடுகின்றன.

84 Charing Cross Road என்ற புத்தகம் அமெரிக்காவில் வசித்த ஹெலனுக்கும் லண்டனிலுள்ள பழைய புத்தக் கடை நிர்வாகி பிராங்கிற்குமான நட்பினை கடிதங்கள் வழியாக வெளிப்படுத்தும் சிறந்த நூல். உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்டது

அது போல லேண்ட்மார்க்கோடு எனக்குள்ள நெருக்கத்தை. எனது புத்தகத்தேடலை, லேண்ட்மார்க்கில் வாங்கிப் படித்த புத்தகங்களைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்றே தோன்றுகிறது.

வாசிப்போடு நெருக்கமுள்ள அனைவருக்கும் லேண்ட்மார்க் நினைவுகள் இருக்கவே செய்யும்.

••

0Shares
0