1947ல் வெளியான Calcutta என்ற ஆங்கிலப்படத்தைப் பார்த்தேன். John Farrow இயக்கியது.
மூன்று விமானிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது.
கொலை செய்யப்பட்ட நண்பனைப் பற்றிய விசாரணையை மேற்கொள்ளத் துவங்கும் நீல், எப்படி குற்றவுலகின் வலைப்பின்னலில் எப்படிச் சிக்கிக் கொள்கிறான் என்பதைச் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
இரண்டாம் உலகப்போருக்குப் பிந்திய காலகட்ட கதையிது. நீல் கார்டன் (ஆலன் லாட்), பில் கன்னிங்ஹாம் (ஜான் விட்னி) மற்றும் பிளேக் (வில்லியம் பெண்டிக்ஸ்) என்ற மூன்று அமெரிக்க விமானிகள் சீனாவிலிருந்து கல்கத்தாவிற்கு விமானத்தில் பறந்து வருகிறார்கள். ஹோட்டல் இம்பீரியலில் ஒன்றாக அறை எடுத்துத் தங்குகிறார்கள். நீல் மற்றும் பெத்ரோ பிளேக் இருவரும் பயணித்த விமானம் நடுவானில் கோளாறு ஏற்படவே காட்டில் தரையிறங்க நேருகிறது, அவர்களின் உதவிக்கு வருகிறான் பில்
வர்ஜீனியா என்ற இளம்பெண்ணைப் பில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகத் தெரிவிக்கிறான். அவனது திருமண ஏற்பாட்டினை நண்பர்கள் கேலி செய்கிறார்கள். எதிர்பாராத விதமாக அந்தத் திருமண நிச்சயம் ரத்தாகிவிடுகிறது. இதற்குக் காரணம் எரிக் லேசர் என்ற இரவு விடுதி உரிமையாளர் என்கிறாள் இரவுவிடுதியின் பாடகி மரினா.
நீல் உண்மையை அறிந்து கொள்வதற்காக வர்ஜீனியாவை சந்திக்கிறான். அவள் உண்மையில் பில்லை விரும்பவில்லை. பணத்திற்காகவே அவனைத் திருமணம் செய்ய ஒத்துக் கொண்டதாக அறிகிறான். அவள் அணிந்திருந்த நகை பில் வாங்கிக் கொடுத்தது என அறிந்து அதைப் பறித்துக் கொண்டு அந்த நகை வாங்கிய இடத்தைக் கண்டறிய முயல்கிறான்
சீனர்களின் கடையது. அங்கே சென்று அந்த நகையைப் பற்றி விசாரிக்கிறான். அப்போது அது பில் வாங்கிய நகை என்று தெரியவருகிறது.
இதற்கிடையில் பெத்ரோ தனது விமானப்பயணத்தில் மாலிக் என்ற ஒருவனைச் சந்திக்கிறான். அவன் கல்கத்தாவில் ஏற்றுமதி வணிகம் செய்து வருவதாகச் சொல்கிறான். இரவு விடுதியில் அவனைப் பார்த்துள்ள காரணத்தால் அவன் மீது பெத்ரோ சந்தேகம் கொள்கிறான்.
மிசஸ் ஸ்மித் பில் ஏழாயிரம் டாலருக்கு செக் கொடுத்து நகையை வாங்கிச் சென்ற விபரத்தைக் கூறுகிறாள். இதை நீல் வங்கியில் பேசி உறுதி செய்து கொள்கிறான். அவள் வளர்க்கும் குரங்கு விநோதமாக உள்ளது.
ஒவ்வொரு உண்மையாக வெளிப்பட ஆரம்பிக்கிறது. எதிர்பாராத விதமாக மாலிக் கொல்லப்படவே நீல் காவல்துறையினரால் கைது செய்யப்படுகிறான். தான் குற்றவாளியில்லை என நிரூபித்த நீல் உண்மை கொலையாளி யார் எனத் தானே கண்டறிய முற்படுகிறான் எதிர்பாராத திருப்பமான முடிவு உருவாகிறது.
எளிய துப்பறியும் கதை. கதையை விடவும் 70 ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய வாழ்க்கையின் காட்சிகளும் மனிதர்களுமே என்னை வசீகரிக்கிறார்கள். நீலின் உதவியாளராகப் பணியாற்றும் சீனர் நடந்து கொள்ளும் விதம். அவர் பேசும் ஆங்கிலம். அன்றைய ஹோட்டல் அறைகள். இரவு விடுதிக்காட்சிகள். அங்கே நடக்கும் ரூலெட். தேவையில்லாத பிரச்சனை உருவாக்கும் மனிதன். சூதாட்ட விடுதியை நடத்தும் ஆள் என மயக்கமூட்டும் ஒரு உலகம் கண் முன்னே விரிகிறது
அமெரிக்க நாளிதழ்களில் கல்கத்தா அடிக்கடி இடம்பெறுவதால் அந்த நகரில் கதைக்களம் இருப்பது போன்று படத்தை உருவாக்கினோம் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.படத்தில் வர்ஜீனியாவாக நடித்துள்ள Gail Russell தோற்றம் மிகவும் வசீகரமானது.
A Madras Miasma என்றொரு துப்பறியும் நாவலை சில ஆண்டுகளுக்கு முன்பு வாசித்திருக்கிறேன். இது சென்னையைக் கதைக்களமாகக் கொண்ட ஆங்கில நாவல். Brian Stoddart எழுதியது. கூவத்தில் பிணமாகக் கிடந்த வெள்ளைக்காரப் பெண்ணின் கொலை குறித்த தேடுதலைக் கதை விவரிக்கிறது. 1920களில் கதை நடக்கிறது. Superintendent Le Fanu துப்பறிகிறார்.
கல்கத்தா திரைப்படத்தை அரங்கத்திற்குள்ளாகவே படமாக்கியிருக்கிறார்கள். கல்கத்தா பெயரளவில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஹாலிவுட் திரைப்படத்தில் இந்தியா ஒரு போதும் நிஜமாகப் பதிவு செய்யப்பட்டதேயில்லை. வணிக காரணங்களுக்காகவே அன்றும் இன்றும் இந்தியா பயன்படுத்தப்பட்டு வருகிறது
••