ஷார்ஜா பயணம் – 2

எந்த வெளிநாட்டிற்குப் போனாலும் சுற்றுலா பயணிகள் விரும்பி பார்க்கும் இடங்களை நான் காண்பதில்லை. ஒருவேளை அந்த இடம் மிகவும் முக்கியமானது எனக்கருதினால் ஊருக்குக் கிளம்பும் கடைசி நாளில் அதைக் காண்பேன்.

ம்யூசியம், ஆர்ட் கேலரி, பழமையான கோட்டைகள். நினைவகங்கள், இசைக்கூடங்கள், நூலகங்கள், புத்தக கடைகள், அறிவியல் கண்காட்சிகள், இயற்கை எழில் நிரம்பிய இடங்கள்  இவற்றைத் தான் விருப்பமாகத் தேடிச் சென்று காண்பேன். இசைநிகழ்ச்சிகள். நாடகங்கள். கலைநிகழ்ச்சிகளையும் விரும்பிப் பார்ப்பேன்.

ஆகவே துபாய், ஷார்ஜா பயணத்திலும் ம்யூசியம் ஆர்ட் கேலரி என்று தான் சுற்றிக் கொண்டிருந்தேன். துபாயில் கட்டப்பட்டுள்ள மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா என்ற 160 மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் 148வது மாடியில் பார்வையாளர் தளம் உள்ளது. அங்கே போய்ப் பார்க்கலாம் என நண்பர்கள் அழைத்தார்கள். புர்ஜ் கலிபாவை தொலைவில் இருந்து பார்த்தால் போதும், உயரமான கட்டிடங்கள் என்னை வசீகரிப்பதில்லை என மறுத்துவிட்டேன். முடிவில் காரிலே புர்ஜ் கலிபாவைச் சுற்றிவந்தோம்.

ஐக்கிய அரபு குடியரசானது துபாய், ஷார்ஜா, அபுதாபி, ராசல் கய்மா, புஜைரா, உம்முல்-குவைன், அஜ்மன் ஆகிய ஏழு அமீரகங்களைக் கொண்டதாகும். ஒவ்வொன்றும் தன்னாட்சி அமைப்பை பெற்றுள்ளன.  பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் இங்குத் தங்கள் ஸ்தாபனங்களை நிறுவியுள்ளன. ஜெபல் அலியை தலைமை இடமாகக் கொண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைந்துள்ளது.

அதிக அளவில்வெளிநாட்டினரைக் கொண்டது எமிரேட். இது உள்நாட்டு மக்கள் தொகையை விட அதிகம். இந்தியர்கள் அதிகம் அதிலும் குறிப்பாகக் கேரளாவை சேர்ந்தவர்கள் மிக அதிகம், புத்தகக் கண்காட்சி எங்கும் மலையாளிகள். கேரளாவில் எங்கோ இருப்பது போலவே இருந்தது. தமிழகத்தின் எல்லா முக்கிய உணவகங்களும் துபாயில் செயல்படுகின்றன. போனில் ஆர்டர் செய்தால் வீடு தேடி வந்து உணவு வழங்குகிறார்கள். காலைக் காபியை அப்படித் தான் குடித்தேன்.

அஜ்மனிலுள்ள தனது வீட்டிற்குக் காலை உணவிற்கு வரவேண்டும் என நண்பர் சுல்தானா ஆரிப் அழைத்திருந்தார். நண்பர் ஹெல்த் கணேசன் தனது காரில் வந்து என்னை  அழைத்துச் சென்றார். கணேசன் விருதுநகரைச் சேர்ந்தவர். ஆகவே ஊரைப்பற்றிய நினைவுகளைப் பேசிக் கொண்டோம்.

சுல்தானா ஆரிபுதின் வீடு கடற்கரையை ஒட்டி அமைந்திருந்தது. மிக அழகான இடம். காலை உணவருந்தியபடியே சென்னை மழைவெள்ளம் பற்றிய செய்திகளைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன். சென்னையில் மழை கொட்டிக் கொண்டிருந்த போது அஜ்மனில் 39 டிகிரி செல்சியஸ் வெயில் கொதித்துக் கொண்டிருந்தது.

காலை உணவை முடித்துக் கொண்டு நானும் அவரும் ARABIAN WILDLIFE CENTRE காண்பதற்காக SHARJAH சென்றோம். எங்களுடன் தொலைக்காட்சியில் பணியாற்றும் நண்பரும் வந்திருந்தார். அரிய வகைப் பாம்புகளில் துவங்கி சிறுத்தை வரை அத்தனை விலங்குகளையும் குளிர்சாதனம் செய்யப்பட்ட உள்அரங்கில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். பிரம்மாண்டமான கண்ணாடி அரங்குகள். கருநாகம் ஒன்றை பல வருஷங்களுக்குப் பிறகு அங்கே கண்டேன். அதன் கண்கள் கண்ணாடியை மீறித் துளைக்கின்றன.  பாலைவன நாகங்களையும், எலிகளையும், பறவைகளையும் ஒணான்களையும் கண்டேன். அங்கு வந்திருந்த சிறுவர்கள் உற்சாகமான பிளமிங்கோ பறவைகள், குரங்குகள், மான், முயல் எனச் சப்தமிட்டபடியே வந்தார்கள்.

அந்த வளாகத்தை ஒட்டி அமைக்கபட்டிருந்த Islamic Botanical Gardenயை பார்வையிட்டேன். திருக்குரானிலுள்ள அத்தனை தாவரங்களையும் வகைப்படுத்திக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். கூடவே அதே தாவரங்களின் தோட்டத்தையும் அமைத்திருக்கிறார்கள். பாலைவனத்தினுள் வாழைமரத்தை கண்டது வியப்பூட்டியது.  அதை முடித்துவிட்டு சிட்டிசென்டர் முன்பாக என்னைக் காரில் கொண்டுவந்துவிட்டுப் போனார் ஆரிப். அங்கே நண்பர்கள் பாலைவனப் பயணத்திற்காகக் காத்திருந்தார்கள்.

சசிகுமார், நந்தா, குறிஞ்சிநாதன்,ரபீக், நாகா, புகைப்படக்கலைஞர் மத்தியாஸ் ஆகியோர் காரில் பாலைவனம் நோக்கி புறப்பட்டோம். கிளம்பும் முன்பாகவே குறிஞ்சிநாதன் இலக்கியவிவாதத்தைத் துவக்கிவிட்டார். உற்சாகமான இலக்கியவாசகர். ஆழ்ந்து படித்தவர். நிறைய கேள்விகள் கேட்டார். குறிப்பாக எனது சிறுகதைகளை எழுத்து எழுத்தாக வாசித்திருக்கிறார். அவர் வழியாக அந்த கதைகளை கேட்க சந்தோஷமாக இருந்தது.  நண்பர் ரபீக் குழந்தைகளுக்கான இலக்கியங்களில் தீவிர ஈடுபாடு கொண்டவர். விழியனின் நண்பர். அவர் காரில் ஏறியதும் விழியனை தொலைபேசியில் அழைத்துப் பேச வைத்தார். அவருடன் சிறார் இலக்கியம் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். புத்தக கண்காட்சியில் சிறார்களுக்கு நடத்தப்படும் கதைசொல்லும் முகாம்கள். ஒவியம்  மற்றும் வரைகலை முகாம்களை பற்றி சொல்லிக் கொண்டு வந்தார்.

புகைப்படக்கலைஞர் மத்தியாஸ் மிக அமைதியானவர். உலகத் திரைப்படங்களை தேடித்தேடி காண்பவர். உலக இலக்கியம் பற்றிய எனது உரைகளை சேகரித்து வைத்துக் கொண்டு திரும்பத்திரும்ப கேட்டுவருவதாகச் சொன்னார்.

பேச்சு தமிழ் சினிமா பற்றித் திரும்பியது. சமீபத்திய திரைப்படங்கள். படித்த புத்தகங்கள். உலகசினிமா, இளையராஜா இசை, சென்னை வாழ்க்கை, இலக்கிய அனுபவங்கள் எனப் பாலைவனத்தைத் தொடுகிற வரை உரையாடல் நீண்டது. காரோட்டி வந்தவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவர் பண்பலையின் நேயர் என்பதால் அறிவிப்பாளர் நாகாவுடன் நெருக்கமாகிவிட்டார்.

பாலைவனத்தின் மணல்முகடுகளைக் காண்பது பரவசமூட்டியது. மேலும் கீழுமாகக் கார் தாவித்தாவி சென்றபோது முடிவற்ற பாலைவெளியை காண முடிந்தது. அந்திவானத்தின் வெளிச்சம் தங்கம் உருகியோடுவது போலிருந்தது. பாலைவன மணலில் அநாயசமாகக் காரை ஓட்டி சாகசம் செய்த அந்த ஓட்டுனரைப் பாராட்டவேண்டும் .

பாலைவனத்தின் நடுவில் கூடாரம் அமைக்கபட்டிருந்தது. அங்கே இசை நிகழ்ச்சி மற்றும் பெல்லி டான்ஸ் நடைபெறும் என்றார்கள். நிறைய வெளிநாட்டு பயணிகளின் கூட்டம்.

சிற்றுண்டிகளும் காபியும் கொடுத்தார்கள். தீப்பந்த நடனம் பெல்லி டான்ஸ் இரண்டும் சுமார் ரகங்கள். சம்பிரதாயம் போலவே நடத்துகிறார்கள். உரத்த இசையை நிறுத்திவிட்டால் பார்வையாளர்களுக்கு உண்மை புரிந்திருக்கும். உரத்த இசையே பார்வையாளர்களைக் கட்டிப்போடுகிறது. உண்மையில் அது ஒரு தந்திரம். அங்கேயே இரவு சாப்பாடு தருகிறார்கள்.  அதை முடித்துவிட்டு இரவு பாலைவனத்திலிருந்து கிளம்பும் போது வானில் முழு நிலா உதயமாகியிருந்தது. பௌர்ணமிக்கு சில தினங்களே இருந்தன என்பதால் வானில் நிலா பேரழகுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அதை ரசித்துப் பார்த்தபடியே காரில் திரும்பி வந்தோம். நந்தா தன்னுடைய காரில் அறையில் கொண்டுவந்துவிட்டார். உறக்கம் வரவில்லை. கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே ஒளிரும் நகரை வேடிக்கை பார்த்தபடியே இருந்தேன். திடீரெனப் பழைய துபாய் புகைப்படங்களை காண வேண்டும் போலிருந்தது. உடனே இணையத்தில் தேடி பார்த்துக் கொண்டிருந்தேன்.

கடந்த ஐம்பதாண்டுகளில் அமீரகத்தின் வளர்ச்சி வியப்பூட்டக்கூடியது. இரவு ஒன்றரை மணி வரையும் தூக்கம் வரவில்லை. தொலைக்காட்சியில் அரபி திரைப்படம் ஒன்று ஒடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எப்போது உறங்கினேன் எனத் தெரியாது. விடிந்த போதும் டிவி ஒடிக் கொண்டிருந்தது. அதிகாலை வெளிச்சத்தில் சாலைகளைக் காண்பது அத்தனை பிடித்திருந்தது. மஞ்சள் வெளிச்சத்தின் ஊடே நடந்து திரிந்தேன்.

நவம்பர் 3 காலை நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடும்விதமாகத் தமிழ்தேர் என்ற நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்றுக் கொண்டேன். சந்திப்பு நடந்த இடம் ஒரு தியானமண்டபம். ஆகவே மிகவும் அமைதியாக இருந்தது. நூறு பேருக்குள் வந்திருந்தார்கள். என்னுடைய உரையைத் தொடர்ந்து விரிவான கேள்விபதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

என் கதைகள். நாவல்கள், கட்டுரைகளை எவ்வளவு தீவிரமாக வாசித்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்ட போது சந்தோஷமாக இருந்தது. குறிப்பாக ஹேமா எனது படைப்புகளைப் பற்றி எடுத்துச் சொன்ன விதம் பாராட்டிற்குரியது. ப்ரியா கதிர்வேலன், ரமணி ராஜன், ரமா மலர் ஆகியோர் சிறப்பாக நிகழ்வை வழிநடத்தினார்கள். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த காவேரிமைந்தன், சோனாராம், ஜியாவுதீன் ஆகியோர் நன்றிக்குரியவர்கள். அன்று நர்கீஸ் பானு அவர்களுக்கு பிறந்தநாள் என்பதால் நிகழ்வில் கேக் வெட்டப்பட்டது. அவருக்கு எனது புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினேன். பின்பு 3 மணிக்கு நண்பர்களுடன் மதிய உணவிற்குச் சென்றேன்.

அன்று மாலை புத்தகக் கண்காட்சியில் உரையாற்றினேன். அடுத்தநாள் துபாயின் புகழ்பெற்ற தமிழ் 89.4 பண்பலையில் மூன்று மணி நேரம் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் சோனாராம். பண்பலை வரலாற்றில் இதுவரை எந்த எழுத்தாளருக்கும் மூன்று மணி நேரம் வழங்கப்பட்டதில்லை. இது ஒரு சாதனை என்றார் நாகா. அவரே நிகழ்வினை ஒருங்கிணைப்புச் செய்தார்.

நாகா ஒரு கவிஞர். மூன்று கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறார். திரைப்பட பாடல்கள் எழுதியிருக்கிறார். பல ஆண்டுகளாக ரேடியோவில் பணியாற்றி நல்ல அனுபவம் கொண்டவர். தீவிர இலக்கிய வாசிப்பாளர். எனது படைப்புகளை நுட்பமாக வாசித்திருக்கிறார். ஆகவே நிகழ்ச்சியை கச்சிதமாக வடிவமைப்பு செய்திருந்தார்.

இதுவரை நான் கலந்து கொண்ட ரேடியோ நிகழ்ச்சிகளி இதுவே முதலிடம் என்பேன் . எனது பன்முகத்தன்மை குறித்து விரிவாக, ஆழமாக, சுவாரஸ்யமாக கேள்விகள் கேட்டார். இடையில் எனக்குப் பிடித்தமான திரையிசை பாடல்களை ஒலிபரப்பினார். இப்படி ஒரு பண்பலை நிகழ்ச்சி இதுவரை நடந்ததில்லை என நேயர்கள் பலரும் பாராட்டினார்கள்.

பள்ளி மாணவி முதல் பிரபல மருத்துவர் வரை பலரும் நேரலையில் என்னிடம் கேள்விகேட்டார்கள். மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. அற்புதமாக நிகழ்ச்சியை ஒருங்கிணைப்புச் செய்திருந்தார். நிகழ்ச்சியின் ஊடே சுவையான காபியும் தந்து உபசரித்தார்.

நிகழ்ச்சியை முடித்துவிட்டு அபுதாபி செல்வது எனத் திட்டமிட்டிருந்தோம். அபுதாபி நண்பர்கள் பலரும் எனது நிகழ்ச்சியைக் காண ஷார்ஜா புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தார்கள். அப்போது அவசியம் அபுதாபி வரவேண்டும் என அழைப்பு விடுத்தார்கள். நேரமிருந்தால் வருகிறேன் என்று சொல்லியிருந்தேன்.

நீங்கள் நிச்சயம் அவர்களைச் சந்திக்க வேண்டும் என நந்தா சொன்னதால் மாலையில் பயணம் புறப்பட்டேன். இரவு ஏழுமணிக்குள் போய்விடலாம் எனச் சொன்னார் நந்தா. வழியில் வாகன நெருக்கடி. எட்டு மணிக்கு அபுதாபி சென்றேன்.

நேரடியாக ஷேக் சையத் கிராண்ட் மாஸ்க் போய்ப் பார்த்துவிடலாம் என நந்தா சொன்னார். நண்பர்கள் அதன் வாசலில் ஒன்று திரண்டிருந்தார்கள். அமீரகத்தின் மிகச் சிறந்த புகைப்படக்கலைஞர் சுபான்(Subhan Peer Mohamed), சிறுகதையாசிரியர் கனவுப்பிரியன். வேல்முருகன். தென்னரசு வெள்ளைசாமி, கோபிநாத், தீபக் ராஜேந்திரன், பிரபு கங்காதரன், செந்தமிழ்செல்வன், நித்யாகுமார், என நண்பர்கள் பலரும் வந்திருந்தார்கள்

கிராண்ட் மாஸ்க் பேரழகு மிக்கக் கலைக்கூடமாக இருந்தது. அலங்கார ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது. நுழைவாயிலில் நின்று வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த மசூதியை பல்வேறு கோணங்களில் அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறார் சுபான்(Subhan Peer Mohamed). ஆகவே எந்த இடத்தில் நிற்கவைத்து என்னைப் படம்பிடிக்க வேண்டும் என முன்னதாக முடிவு செய்திருப்பார் போலும். அவரது வழிகாட்டல் படி சொன்ன இடத்தில் நின்றேன். இப்போது அந்தப் புகைப்படங்களைக் காணும் போது பரவசமாகயிருக்கிறது.

புகைப்படக்கலைஞர்களின் கண்கள் போற்றுதலுக்குரியவை.  சுபானுக்கு என் அன்பும் நன்றிகளும்.

– தொடரும்

நன்றி

புகைப்படங்கள்

சுபான்

நந்தா

சசிகுமார்

0Shares
0