ஷார்ஜா – 3

அபுதாபி நண்பர்களுடன் ஷேக் சையத் மசூதிக்குள் நுழைந்த போது கனவுலகிற்குள் நுழைந்தது போலவே இருந்தது. சலவைக்கல்லால் உருவாக்கபட்ட பெருங்கனவாகக் கலைநுட்பத்தின் உச்சத்தைத் தொட்டிருந்தது மசூதி. நவீனகாலத்திலும் மரபின் தொடர்ச்சியாகக் கட்டிடக்கலையை வளர்த்தெடுக்கமுடியும் என்பதற்கான சாட்சியாக நின்று கொண்டிருந்தது இம் மசூதி.

கவிழ்த்திவைக்கபட்ட வெண்ணிற கும்பா போன்ற பிரம்மாண்டமான குவிமாடங்கள். இருபுறமும் மிதமான நீலவெளிச்சம், நான்கு பக்கமும் வான்நோக்கி உயர்ந்திருக்கும் மினார்கள். செம்பினால் செய்யப்பட்டுப் பொன்பூச்சுப் பூசப்பட்ட வேலைப்பாடுகளுடன் தூண்கள், சுவர்களில் பூவேலைப்பாடுகள். நடைபாதையெங்கும் மஞ்சளும் சிவப்பும் கலந்த ஒளிர்விளக்குகள்.

ஒரே நேரத்தில் நாற்பதாயிரம்பேர் பிரார்த்தனை செய்யும் பிரம்மாண்டமான பிரார்த்தனைக் கூடம். பூக்களும் கொடிகளுமான செதுக்குகள், உலகின் மிகப்பெரிய ஈரானியக் கம்பளம் மைய மண்டபத்தினுள் விரிக்கபட்டிருந்தது. ஈரானைச் சேர்ந்த Ali Khaliqi இந்தக் கம்பளத்தை உருவாக்கியிருக்கிறார். 1200 பெண்கள் அங்கேயே தங்கி இதனை நெய்திருக்கிறார்கள். கம்பளத்தின் எடை 47 டன். கம்பளத்தின் இன்றைய மதிப்பு 8.5 மில்லியன்.

மசூதியின் முன்புள்ள செயற்கைகுளத்தில் அதன் பிம்பம் பிரதிபலிப்பதை காண்பது அத்தனை அழகாகயிருந்தது. சற்று தள்ளி இதற்கெனத் தனியாக ஒரு இடத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள். அங்கிருந்து மசூதியின் முழுத்தோற்றத்தையும் காண இயலும்..

இந்த மசூதியை Yousef Abdelky என்ற சிரிய கட்டிடக்கலைநிபுணர் வடிவமைத்திருக்கிறார். நிறைய இந்தியர்கள் இந்தக் கட்டுமானப்பணியில் பணியாற்றியிருக்கிறார்கள். முப்பது ஏக்கர் பரப்பளவு கொண்டது இந்த வளாகம். நிலா வளர்வதற்கு ஏற்ப இந்த மசூதியின் ஒளியும் மாறிக் கொண்டேயிருக்கக் கூடியது. வெண்ணிறத்திலிருந்து அடர்நீலத்தை நோக்கியதாக இந்த மாற்றமிருக்கும் என்றார்கள். முழுநிலவு நாளில் இதைக் காண்பது பேரனுபவம்.

மெக்காவை நோக்கியுள்ள மையமண்டபத்தில் அல்லாஹ்வின் 99 திருப்பெயர்கள் அலங்கரிக்கபட்டிருக்கின்றன. மார்பிள் பேனல்கள். கண்ணாடி துண்டுகள் கொண்ட அலங்காரவளைவுகள். சித்திரஎழுத்துகளும் மலர் அலங்காரங்களும் கொண்ட சுவர்கள் என ஒவ்வொரு அங்குலமும் அலங்காரமாக உருவாக்கபட்டுள்ளது. தங்கத்தை உருக்கி வார்த்திருக்கிறார்கள். இது உலகிலுள்ள பெரிய மசூதிகளில் ஆறாவதாகும்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் நிறுவனர்களில் ஒருவரும், அதன் முன்னாள் அதிபருமான ஷேய்க் சையத் பின் சுல்தான் அல் நகியானின் (Sheikh Zayed bin Sultan Al Nahyan) பெயரே இந்த மசூதிக்கு வைக்கபட்டிருக்கிறது. இவ்விடத்திலேயே ஷேய்க் சையதின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மசூதியை நண்பர்களுடன் சுற்றிப்பார்த்துவிட்டு வெளியே வந்தேன். முழு மசூதியையும் ஒரு சேர தெரியும்படி புகைப்படம் எடுக்க நண்பர் சுபான் தன் காரில் என்னை அழைத்துக் கொண்டு போனார். கேலரி போல அமைக்கபட்டிருந்த அந்த இடத்தில் செயற்கை குளம் போன்ற நீர்நிலையில் மசூதி ஒளிர்ந்து கொண்டிருந்தது.  நிறையப் புகைப்படங்களை எடுத்தோம்.

சுபான் சுயமாகப் புகைப்படக்கலையைக் கற்றுக் கொண்டவர். இரவுக்காட்சிகளை எடுப்பதில் விற்பன்னர். அவர் எடுத்துள்ள புகைப்படங்கள் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளன. ஒய்வு நேரத்தில் புகைப்படம் எடுப்பதற்காகவே பயணங்களை மேற்கொள்கிறார். அவர் எடுத்த சில புகைப்படங்களைக் காட்டினார். சர்வதேச தரத்தில் இருந்தன. நிச்சயம் அவர் உலகப்புகழ்பெறுவார் என வாழ்த்தினேன்.

நண்பர்கள் அனைவரும் அருகிலுள்ள படிகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்

கனவுப்பிரியனை சந்திப்பதற்கு முன்பாகவே அவரது சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். அவர் யார், எங்கிருக்கிறார் என எதுவும் தெரியாது. ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரத்னவேல் என்ற வாசகர் அவரது புத்தகத்தை அனுப்பி வைத்திருந்தார். படித்த போது நல்ல சிறுகதைகளாகத் தோன்றியது. வளைகுடா நாடுகளில் வேலைக்குச் செல்பவர்களுடைய வாழ்வியல் அனுபவங்களும் நினைவுகளுமாகக் கதைகள் இருந்தன

சுமையா, கூழாங்கற்கள் என இரண்டு சிறுகதை தொகுப்புகளை கனவுப்பிரியன் வெளியிட்டிருக்கிறார். அமீரக வாழ்க்கையை எழுதுவதில் நிகரற்ற படைப்பாளியாக இருக்கிறார். அவரது சிறுகதைகள் சரளமான மொழிநடை கொண்டவை. மெல்லிய நகைச்சுவையுணர்வும், சுஜாதா பாணி விவரிப்புகளும் கொண்ட சிறுகதைகளை எழுதிவருகிறார்.

புதிய நாவல் எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். நிச்சயம் அது கவனித்துக் கொண்டாடப்படும் என வாழ்த்தினேன்.

கனவுப்பிரியனின் கூழாங்கற்கள் என்ற சிறுகதை மனதிலே நிற்ககூடியது. நெருங்கிய உறவுக்குள் திருமணம் புரிவது தவறு. அவ்வாறு புரிந்ததால் பாலாவின் மகளுக்குத் திக்குவாய் ஏற்படுகிறது. வேலைக்காக வெளிநாடு செல்கிறவர் தன் மகளுக்காகக் கூழாங்கற்களைச் சேகரித்து வருகிறார். ஊருக்கு அதைக் கொண்டுவர கிளம்பும் போது இதுவரை அவர் சேகரித்து வைத்த கூழாங்கற்கள் யாவும் பவளம் எனத் தெரியவருகிறது. முடிவில் இதனைக் கண்டுபிடிக்க உதவியதற்காக அரசு வேலை தரப்படும் என்பதோடு மகளின் மருத்துவச் செலவையும் அரசாங்கம் ஏற்கும் என்று தெரிவிக்கபடுகிறது. ஒரு தந்தையின் மனவலியை அழகாக எடுத்துச் சொல்லும் கதையது

கனவுப்பரியனுடன் இலக்கியம், தத்துவம். ஆயிரத்தோரு அராபிய இரவுகள் என நிறையப் பேசிக் கொண்டிருந்தேன். வேல்முருகன். தென்னரசு வெள்ளைசாமி, கோபிநாத், தீபக் ராஜேந்திரன், பிரபு கங்காதரன், செந்தமிழ்செல்வன், நித்யாகுமார், போன்ற நண்பர்களும் நிறைய இலக்கியம் பரிச்சயம் கொண்டவர்கள் என்பதால் பேச்சு உற்சாகமாக இருந்தது. அனைவரும் ஒன்றுகூடி இரவு உணவு உண்டோம். பின்பு அருகிலுள்ள விடுதி ஒன்றில் அறை ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கே சென்று இரவு பனிரெண்டுவரை பேசிக் கொண்டிருந்தோம்

அபுதாபியை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. துபாயின்பரபரப்பு போலின்றி அபுதாபிக்கெனத் தனியானதொரு அழகும் அமைதியும் இருந்தது. நண்பர் வேல்முருகன் என்னை அபுதாபி அழைத்துவர வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார் என்றார்கள். அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.

தென்னரசு ஆர்வமாக இலக்கியத்தின் அடிப்படைகள் பற்றிக் கேட்டுக் கொண்டுவந்தார். அவரது பேச்சில் ஊர்மணம் அப்படியே இருந்தது. அதை மிகவும் ரசித்தேன். கோபியும் தீபக்கும் தொடர்ந்து என்னை வாசித்து வருபவர்கள். ஆகவே எனது கதைகள், நாவல்கள் குறித்து நுட்பமாகப் பகிர்ந்து கொண்டார்கள். பிரபு வாசித்தல் ஒரு மனிதனை உயர்த்துகிறதா, அது அவனது வாழ்க்கையை மாற்றிவிடாதா என மிக ஆழமான கேள்வியைக் கேட்டார். அதையொட்டி பேசிக் கொண்டிருந்தோம். செந்தமிழும் நித்யாவும் கண்களில் ஆர்வம் கொப்பளிக்க உரையாடினார்கள்.  மறக்கமுடியாத நாளாக அமைந்திருந்தது.

பேச்சிற்கு நடுவில் எங்களைத் தனது கேமிராவில் சுபான் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அவரது கண் கேமிராவில் இருந்தாலும் காது உரையாடலை உன்னிப்பாகக் கிரகித்துக் கொண்டிருந்தது. இரவு நண்பர்கள் சென்றபிறகு நானும் நந்தாவும் அபுதாபி நண்பர்களின் அன்பைப் பற்றி வியந்து பேசிக் கொண்டிருந்தோம். காலையிலும் நண்பர்கள் தேடி வந்து பரிசுப்பொருள் ஒன்றை தந்து போனார்கள். அபுதாபியிலிருந்து துபாய் நோக்கி காலையில் திரும்பி வரும் போது சாலையில் வாகனநெருக்கடியில்லை. காலை காற்றை நுகர்ந்தபடியே வந்தோம்.  தொலைவில் ஒரு ஒட்டகம் அலைந்து கொண்டிருப்பதை கண்டேன்.

மதியம் 12 மணிக்கு ஷெரட்டன் ஹோட்டலுக்குச் சென்று அறையைக் காலி செய்துவிட்டு திரும்பினேன். நானும் நந்தாவும் ஊர்சுற்றினோம்.

அமீரகத்தில் தமிழ்தேர் போன்ற அமைப்புகள் மாதம் தோறும் இலக்கியக்கூட்டங்களை நடத்துகின்றன. தமிழ் 89.4 பண்பலை நிறைய நல்ல நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஒலிபரப்பி வருவதுடன் அருமையான பழைய பாடல்களை ஒலிபரப்பி நினைவுகளில் சிறகடிக்க வைக்கிறார்கள். செல்லுமிடமெல்லாம் தொடரும் தமிழுக்காக அவர்களுக்கும் நன்றி.

நவம்பர் 2ல் நண்பர் சுல்தானா ஆரிப் அஜ்மானில் நடைபெறும் அமீரக கொடி நாள் விழாவிற்கு அழைத்துச் சென்றார். சிறப்பான விழாவாக இருந்தது. விழாவில் அமீரக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பாரம்பரிய நடனமும் நடைபெற்றது. அந்த விழாவைப் பார்வையிட்டேன். அதைத் தொடர்ந்து அஜ்மான் ம்யூசித்திற்குள் சென்று அங்குள்ள பாரம்பரிய கலைப்பொருட்களை பார்வையிட்டேன்.

துபாயில் தமிழ் நாடங்களைத் தயாரிக்கும் பனிரெண்டு நாடககுழுக்கள் இருக்கிறார்கள். அவர்கள் தயாரித்த குறுநாடகங்கள் சமீபத்தில் மேடையேற்றம் செய்யப்பட்டன. அதில் சசிகுமார் இயக்கிய நாடகம் சிறப்பாக இருந்தது என்றார்கள். நாடகப்போட்டியில் பரிசு பெற்ற நாடகம் சுபஸ்ரீ அவர்களுடையது. அவரது வீட்டிற்குப் போயிருந்தேன். அருமையான காபி கொடுத்தார். சுபஸ்ரீயின் கணவர் ஸ்ரீராம் அருமையான மனிதர். உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். அடுத்த முறை அவர்கள் வீட்டிலே வந்து தங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்கள். நிச்சயம் வருவதாகச் சொன்னேன்.

விமானநிலையத்திற்கு ஆறுமணிக்குப் புறப்படலாம் என முடிவு செய்திருந்தேன். நண்பர் சசிகுமார் வீட்டில் சப்பாத்தியும் காபியும் கொடுத்தார்கள். சசிகுமார், அவரது நண்பர், நந்தா மூவரும் என்னை வழிஅனுப்ப விமானநிலையம் வரை வந்தார்கள். வாகனநெருக்கடி காரணமாக ஒன்றரைமணி நேரம் சாலையில் காத்துக்கிடந்தோம். கடைசி நிமிசத்தில் அடித்துபிடித்துக் கொண்டு விமானநிலையத்திற்குச் சென்றேன். எனது நூல்களைத் தீவிரமாக வாசித்துவரும் ஹேமா தனது குடும்பத்துடன் வந்து காத்திருந்தார். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

விமானத்தில் ஏறி அமர்ந்தேன். படம் பார்க்கவோ, படிக்கவோ பிடிக்கவில்லை. கண்ணை மூடிக் கொண்டேன். விமானம் கிளம்பிய சற்று நேரத்தில் ஐந்து நாட்களாக ஒடிய களைப்பும் அசதியும் ஒன்று சேர்ந்து கொண்டது. சென்னையை நெருங்கிவிட்டதாக அறிவிப்பு வந்த போது தான் கண்விழித்தேன்.

சென்னையில் தூறல். மழையின் ஊடாகவே வீடு வந்து சேர்ந்தேன். நலமாக ஊர் திரும்பிவிட்டதாக நண்பர்களுக்குக் குறும்செய்தி அனுப்பிவிட்டுப் படுத்தேன்.

கனவில் அபுதாபியில் கண்ட ஷேக் சையத் மசூதி ஆகாசத்தில் மிதந்து கொண்டிருந்தது. மேகத்தைத் தாண்டி நடந்தபடியே நானும் நண்பர்களும் அதை நோக்கி போய்க் கொண்டிருந்தோம். முத்துக்குப் பெயர் போன நாடு அமீரகம். உலகின் மிகப்பெரிய முத்து ஒன்று வானில் மிதந்து கொண்டிருப்பது போல மசூதியின் குவிமாடம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. புறா கூட்டம் மசூதி சுவரில் அமர்ந்து அதன் அழகை காண்பது போல நாங்கள் பறந்து மசூதியை சுற்றிக் கொண்டிருந்தோம். விடிந்து காலைச்சூரியன் அறைக்குள் வந்த போது தான் சென்னையிலிருக்கிறேன் என்ற தன்னுணர்வு வந்தது.

ஒவ்வொரு பயணமும் ஒரு தனித்த அனுபவமே. ஊர்களை, வியப்பூட்டும் இடங்களைக் காண்பதை விடவும் மனிதர்களே என்னை அதிகம் வசீகரிக்கிறார்கள். நிறையப் புதிய நண்பர்களைச் சம்பாதித்துத் திரும்பினேன் என்பதே இந்தப் பயணத்தில் எனது சந்தோஷம்

••

நன்றி

புகைப்படங்கள்

சுபான்

நந்தா

0Shares
0