அஞ்சலி

எனதருமை நண்பரும் நான் சென்னையில் வாழ்வைத் துவங்குவதற்குக் காரணமாக இருந்தவருமான இயக்குனர் கே.பாலசந்தர் அவர்களின் மகன் பாலகைலாசம் ஆகஸ்ட் 15 அன்று காலமானார்.

உடல்நலக்குறைவின் காரணமாக அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என்ற சேதி கேள்விபட்ட நாளில் இருந்தே காண வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தேன், ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட அவரது மரணம் என்னை நிலை குலையச்செய்துவிட்டது.

அழுதுவீங்கிய கண்களுடன் வீட்டில் முடங்கிக்கிடந்தேன். என்னால் நண்பர்களின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாது. சொல்லவும் முடியாமல் மீளவும் முடியாமல் துக்கத்தில் அமிழ்ந்துகிடக்கிறேன்

கைலாசத்தின் இறுதிஊர்வலத்திற்குப் போக வேண்டும் என நினைத்தேன், ஆனால் பொதுவில் எனக்கு இறுதிஊர்வலங்களில் கலந்து கொள்வது ,தீவிர உடல்நலப் பிரச்சனையை ஏற்படுத்திவிடுகிறது,

நண்பன் ஜீவாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு திரும்பிய பத்து நாட்களுக்கு இடதுகண் வீங்கிப் புடைத்துக் கொண்டுவிட்டது, திறக்கவேமுடியவில்லை. தொடர்ச்சியாகச் சிகிட்சை மேற்கொண்டு குணமடைந்தேன், இது முதல்முறையில்லை, நெருக்கமான மனிதர்களின் இழப்பை தாங்கமுடியாமல் இப்படியான திடீர் விளைவுகள் ஏற்பட்டு உடல் நலிந்திருக்கிறேன்

உணர்ச்சிகளைக் கட்டுபடுத்திக் கொள்ள இயலவில்லை என்பதால் இறுதிநிகழ்வுகளுக்குப் போவதைத் தவிருங்கள் என மருத்துவர்கள் ஆலோசனை சொல்கிறார்கள். சந்தோஷமாகப் பார்த்த முகத்தை உறைந்த நிலையில் காணுவதற்கான மனதைரியம் எனக்கில்லை.

என்ன செய்வது, எப்படி வாழ்வைத் துவங்குவது எனத்தெரியாமல் அலைந்த நாட்களில் கைநீட்டி என்னை வரவேற்று. இருப்பிடமும் உணவும் தந்து மின்பிம்பங்களுடன் இணைந்து பணியாற்றச்சொல்லிய உனது நட்பிற்கு இணையேது. உன்னால் தான்  சென்னையில் வாழ்க்கையைத் துவக்கினேன். உனது அன்பால் தான் எனக்கான அடையாளங்களை உருவாக்கிக் கொண்டேன், எனக்காக நீ செய்த உதவிகள் எத்தனையோ. அதற்கு என்ன கைமாறு செய்துவிட்டிருக்கிறேன்.

ஒன்றாகப் பேசி திரிந்த நினைவுகளும், கழிந்த பகலிரவுகளும் நெஞ்சில் மோதுகின்றன.

ஊடகத்துறையில் எத்தனையோ சாதனைகளைச் செய்த போதும் உனது அடக்கம் என்னை வியக்க வைத்திருக்கிறது

இந்த உலகம் உனது அருமையைப் புரிந்து கொள்ளவில்லை என எப்போதுமே நினைப்பேன் நண்பனே, அதைப்பற்றிய ஆதங்கமும் குறைகளும் உன்னிடமில்லை

நீ பக்குவப்பட்டன், மனதைரியம் மிக்கவன், பெரிய கனவுகளைக் கண்டவன். ஏன் இத்தனை அவசரமாக உலகை விட்டுப் போய்விட்டாய்.

கைலாசத்தின் மறைவில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இயக்குனர் பாலசந்தர் அவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

உனது தோழமையின் நிழலுக்குள் வளர்ந்த நான், உனது நினைவுகளால் இனியும் வழிநடத்தப்படுவேன்.

இப்படிச் சொல்லித்தான் ஆற்றுப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது

•••

0Shares
0