தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றான விட்டல்ராவின் நதிமூலம் சுதந்திரப் போராட்ட நாட்களின் சாட்சியமாக எழுதப்பட்டிருக்கிறது. நாமக்கல் நகரை இதை விடச் சிறப்பாக யாரும் எழுதிவிட முடியாது. ஒரு ஆவணப்படம் போல நகரின் தொன்மையான வீதிகளையும் அதன் மனிதர்களையும் நாவல் அழகாகச் சித்தரித்துள்ளது. விட்டல்ராவ் ஒரு ஓவியர் என்பதால் காட்சிகளைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார். எத்தனை கதாபாத்திரங்கள். மறக்கமுடியாத நிகழ்வுகள். காலத்தின் நீரோட்டம் நாவலை முன்னெடுத்துப் போகிறது

மதராஸிலிருந்த நீல் சிலையை அகற்ற வேண்டும் என்பதற்காக நடந்த போராட்டம் இந்த நாவலில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது
இந்த நாவலின் 34 முதல் 50 பக்கம் வரை ஒரு திருமணம் விவரிக்கப்படுகிறது. இது போல விரிவாக, நுணுக்கமாகத் திருமணம் எந்தத் தமிழ் நாவலிலும் எழுதப்பட்டதில்லை. திருமணக் கொண்டாட்டத்தின் பகுதியாக நாமும் கலந்துவிடுகிறோம்.
மாத்வ குடும்பம் ஒன்றில் நடக்கும் அந்தத் திருமணத்தின் சடங்குகள் சம்பிரதாயங்கள். இருவீட்டாரின் செய்முறைகள். பரிமாறப்படும் உணவு வகைகள், ஹரிகதா நிகழ்ச்சி. தேவதாசிகளின் வருகை என முழுமையாகத் திருமண நிகழ்வை விட்டல்ராவ் பதிவு செய்திருக்கிறார்.
இந்தத் திருமண வைபவம் ஒரு காலகட்டத்தின் சாட்சியம். இதற்குள் தான் எத்தனை தளங்கள். மாறுபட்ட சடங்குகள். பெண் பார்க்கப் போவதில் துவங்கி திருமணப்பேச்சு வார்த்தை நடைபெறும் விதம். சீதன விவகாரம். தடபுடல் ராயர் அணிந்துள்ள ஆடையின் கம்பீரம். அவர்கள் குடும்பத்தின் பெருமை என அடுக்கிக் கொண்டே செல்லும் விட்டல்ராவ் திருமணக்காட்சியின் போது தனது எழுத்தாற்றலின் உச்சத்திற்குச் சென்றுவிடுகிறார்.
திருமண நிகழ்வை விவரிக்கும் போது இடைவெட்டாகத் தீவட்டிக் கொள்ளையர்களைப் பற்றிச் சிறிய குறிப்பு ஒன்றையும் எழுதியிருக்கிறார். தீவட்டி கொள்ளையர்கள் கொள்ளையடிக்க வருவதன் முன்பாக ஒரு ஆள்விட்டுக் கடிதம் அனுப்பி வைப்பார்களாம். சொல்லாமல் திருடுவது அவர்களின் வழக்கமில்லை என்கிறார். அந்தக் கொள்ளையர்கள் திருடப் புறப்படும் முன்பாக நாமகிரியம்மனை வேண்டிக் கொண்டு தான் புறப்படுவார்களாம். அவர்களுக்கு அம்பாளின் கடாட்சம் முழுமையாக இருந்தது கொள்ளை அடிக்கப் போன இடத்தில் பெண்களைத் தொடமாட்டார்கள். எட்டி நின்றே பேசுவார்கள். தாலியைத் திருட மாட்டார்கள் என்று சொல்லும் ஒருவர் தே ஆர் ஆனெஸ்ட் என்கிறார்.
விட்டல்ராவ் நாவலில் சொல்லியிருப்பது நிஜம் எனது சொந்த கிராமப் பகுதியிலும் இது போன்ற திருடர்கள் இருப்பதை அறிவேன். அதைப் பற்றி எழுதியும் இருக்கிறேன்.
மாப்பிள்ளை ராணுவத்தில் வேலை செய்தவர் ஆகவே பாஸ்ரா கிட்டா என்றே அழைக்கப்படுகிறார். பெண் இன்னமும் ருதுவடையாத சிறுமி. திருமணச் சமையலுக்காகச் சேலத்திலிருந்து ராமராவ் பட்டர் தலைமையில் சமையல்காரர்கள் வந்திருக்கிறார்கள். உதவிக்குப் பதினைந்து பேர். அதில் மூன்று பேர் கணவனை இழந்த பின்பும் சிகை எடுக்காத கேஸிகள்.
முந்திரிப்பருப்பை ஓரடி உயரமுள்ள கோபுரம் போலக் குவித்துப் பாகு கலந்து பிள்ளையார் பிடித்து வைக்கிறார்கள். சந்தனக் கட்டையில் ஐந்து விசிறிகள் தயாரிக்கப்படுகின்றன. அதுவும் அன்னப்பட்சி போன்ற அமைப்பு கொண்ட மடக்கு விசிறி. ஜானவாச ஸ்வீட்டாகப் பதிர்பேணி.
மாப்பிள்ளை அழைப்பின் போது மணப்பெண்ணின் தாயைக் கல்யாண பெண் போல அலங்கரித்து அழைத்து வருகிறார்கள். மாப்பிள்ளை அகன்ற ஜரிகை பார்டருள்ள வேட்டிக்கு மேலே ஓபன் கோட் அணிந்து வருகிறான். தலையில் மைசூர்குல்லா.
ஜானவாச சாப்பாடு. நான்குவிதமான கோசுமல்லிகள். பாசிப்பறுப்பும் தேங்காய் துருவலுமாய் ஒன்று. கடலைப் பருப்பும் கோசுமல்லி இரண்டு வாழைப்பழக் கோசம்பரி ஒன்று வெறும் தேங்காய் கோசம்பரி ஒன்று
மணப்பெண்ணின் தாலிச்சரட்டில் தங்கத் தாலிப்பொட்டையும் தங்கக் குண்டுமணிகளையும் தேவதாசிகள் தான் கோர்த்துத் தருவது என்று சம்பிரதாயம். அதற்காகத் தேவதாசி ஒருவர் அழைத்து வரப்படுகிறார்.
திருமணத்தை நடத்தி வைக்கும் பரசுராமாச்சாரியார் விரிவாகக் கல்யாண சடங்குகளைச் செய்கிறார்.
திருமணத்தில் கதர் துணி பயன்படுத்தப் படுவது விமர்சனத்திற்கு உள்ளாகிறது. சீரக வெல்லம் என்றொரு சடங்கைப் பற்றி எழுதியிருக்கிறார். அழகான சித்தரிப்பு.
ஹோமத்தின் எதிரில் அரிசியைக் கொட்டிப் பரப்பி அதில் விரலால் யானை ஒன்றை வரைந்த பரசுராமாச்சாரியார் பக்கத்திலிருந்த உப்பைக் கொட்டி அதிலும் இப்படி ஒரு யானையை வரைகிறார். அவர் சொல்லிக் கொடுத்தபடியே மாப்பிள்ளை பெண்ணிடம் கேட்கிறார்
என் அரிசி யானையைத் தருகிறேன். உன் உப்பு யானையைத் தருகிறாயா.
அரிசி யானை உப்பு யானை என்ற படிமம் எத்தனை அழகானது.
திருமணம் முடிகிறது. பகல் சாப்பாடு சப்பென்று சாதாரணந்தான். காய் எதுவுமில்லை. வெறும் பருப்பு சாம்பார்
இரவு சாப்பாட்டுக்குப் போளி தயாராகிறது. போளி மீது நெய்யைக் கரண்டி கரண்டியாக ஊற்றுகிறார்கள்.
புதுமணத்தம்பதிகள் மரப்பாச்சிகளைப் போட்டுத் தாலாட்டுகிறார்கள். நாமகிரி தாயாரைச் சேவிக்கச் செல்வதுடன் திருமணம் நிறைவுபெறுகிறது.

நதிமூலம் நாவல் சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் எழுந்த தமிழகத்தின் சுதந்திர அலையை மிக உண்மையாகச் சித்தரித்துள்ளது. சுதந்திர வேட்கை கொண்ட இளைஞர்கள் எப்படி ஆயுதம் ஏந்தினார்கள். கருஞ்சட்டை பேரணி எப்படி நடக்கிறது. பவானிசிங் போன்றவர்களின் வருகை. அன்றைய பிரிட்டிஷ் விசுவாசம், சட்ட மறுப்பு இயக்கம் நடைபெற்ற விதம். அன்றைய மதராஸின் தோற்றம். டிராம்களின் இயக்கம். ஆஸ்டின் கார்களின் ஒட்டம். கெனில்வொர்த் கேசில் உருவான விதம். துரையின் வாழ்க்கை என அந்தக் காலகட்டத்தை வெகு அழகாகவும், உண்மையாகவும், துல்லியமான விவரங்களோடும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்
காங்கிரஸ் மாநாட்டில் சைலண்ட் சினிமா காட்டப்போவது வியப்பூட்டும் செய்தியாகப் பரவுகிறது. முதன்முறையாக மக்கள் சினிமா காணக் கூடுகிறார்கள். நம்ம ஊருக்கு சினிமா வருமா ராயரே என ஒருவர் கேட்கிறார். தேசிய எழுச்சி ஊட்டும் பாடல்கள் கொண்ட நாடகங்களைப் போலீஸ் தலையிட்டுத் தடுக்கிறார்கள்.
தாகூர் வீடும் உலகமும் என்றோர் நாவல் எழுதியிருக்கிறார். இரண்டின் மாற்றங்களும் எப்படி ஒன்றையொன்று பாதிக்கின்றன என்பதைப் பற்றிய நாவலது. விட்டல்ராவின் நாவலும் அத்தகையதே. சமூக மாற்றங்களும் தனிநபர்களின் வாழ்க்கைப்போக்கும் ஒன்றையொன்று அணைத்தும் விலக்கியும் தனியாகவும் செல்வதை மூன்று தலைமுறைகளின் வழியே நாவல் மிக அழகாகச் சித்தரித்துள்ளது.
சுதந்திரப்போராட்ட காலத் தமிழகத்தைப் பற்றிக் குறைவான நாவல்களே எழுதப்பட்டுள்ளன. அதில் விட்டல்ராவின் நதிமூலம் அவசியம் படிக்க வேண்டிய நாவல்.