அர்திமிசியா.


பதினேழாம் நூற்றாண்டை சேர்ந்த பெண் ஒவியரானஅர்திமிசியா ஜென்டிலெஸி (
(ARTEMISIA GENTILESCHI )பற்றிய பிரெஞ்சு திரைப்படம் ஒன்றை பார்த்தேன். Agnes Merlet என்ற பெண் இயக்குனர் அர்திமிசியாவை இயக்கியுள்ளார்.

பதினாறாம் நூற்றாண்டின் கடுமையான மதகட்டுபாடுகளையும், கலச்சார தடைகளையும் மீறி ஒரு பெண் ஒவியரான போராட்டமான வாழ்வையும் அவளது காதலையும் பேசுகிறது இப்படம்.

ரோமில் வாழ்ந்த அர்திமிசியா தன் வயது பெண்களை போலபூ வேலை செய்வது.நடனம் கற்று கொள்வது. தன்னை அலங்காரம் செய்து கொண்டு விருந்திற்கு செல்வது என்பதில் விருப்பமில்லாமல் ஒவியரான அவளது அப்பாவின் உதவி பெண்ணாக வண்ணங்களை தயாரிப்பது, தூரிகைகளை சுத்தம்செய்து தருவது என்று இள வயதிலே ஒவிய உலகிற்குள் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டாள். அவளது அப்பா ஒராசியோ ரோமில் வாழ்ந்த முக்கியமான ஒவியர்.

அர்திமிசியாவை வசீகரித்த முதல் அம்சம் மனித உடல் அமைப்பு. அவள் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் தன் உடலையும் அதன் நளினங்களையும் ஆராய்ச்சி செய்கிறாள். எப்படி எலும்புகள் விரிந்தும் ஒளிந்தும் தன் உடல்வாகை உருவாக்கியிருக்கிறது என்று வியக்கிறாள். தன் ஸ்தனங்களை மஞ்சள் வெளிச்சத்தில் நெருக்கமாக கண்ணாடி கொண்டு பார்க்கிறாள்.

உடலின் ஒழுங்கும் அதில் வெளிப்படும் துல்லியமும் அவளை ஆச்சரியம் கொள்ள வைக்கிறது. தன் உடலை ரகசியமாக ஒவியம் வரைகிறாள். அந்த ஒவியங்களை கண்ட அவளது பெண் ஆசிரியை பயந்து போய்விடுகிறாள். ஆனால் அதே ஒவியங்களை கண்ட அவளது அப்பா உடலின் மர்மங்களை அவள் எவ்வளவு நுட்பமாக அவதானம் செய்திருக்கிறாள் என்று அவளது ஒவிய முயற்சிகளுக்கு ஆதரவு தருகிறார்.

அந்த நாட்களில் ரோமில் ஒவியர் பலருக்கும் ஆதர்ச நாயகனாக இருந்தவர் கரவாஹோ. அவரது பாணி ஒவியங்களை வரைவதே புகழ்பெற்றிருந்தது. கரவாஹோவின் பாதிப்பில் தான் ஒராசியோவும் ஒவியங்களை வரைந்து கொண்டிருந்தார். அவரது புரவலர் ரோமில் வாழ்ந்த கான்டாரியோ பிரபு. அவரது அரண்மனையின் விதானங்களை ஒவியம் வரைவதற்காக ஒராசியோ நியமிக்கபடுகிறார்.

மாடலாக ஆண் பெண்களை நிறுத்தி வைத்து ஒவியம் வரையும் முறையே அன்று முக்கிய பாணியாக இருந்தது. ஒராசியோவின் ஸ்டுடியோவிலும் இதற்கான மாடல்கள் இருந்தார்கள். அப்படியொரு நாள் ஒரு சிங்கத்துடன் போராடும் ஆணை பற்றிய ஒவியம் ஒன்றினை வரைவதற்காக ஆண் ஒருவனை மாதிரியாக நிர்வாணமாக நிற்க வைக்கும் போது அதை அர்திமிசியா பார்த்து விட கூடாது என்று அப்பா தடுக்கிறார். தன் ஏன் தடுக்கிறார் என்று அவள் கோபபடவே வயது வந்த பெண் நிர்வாணமாக ஆணின் உடலை பார்ப்பது தவறு என்று அவளோடு சண்டையிடுகிறாள். அவள் நிழல்வழியாக அந்த உடலின் வெளித்தோற்றத்தை வரைகிறாள்.

ஆண் உடலின் மர்மங்களை ஏன் அறிந்து கொள்ள கூடாது என்பதற்காகவே அவள் ரகசியமாக தேடுதல் கொள்ள ஆரம்பிக்கிறாள். கடற்கரையில் ஒரு பெண்ணோடு உடலுறவு கொள்ளும் ஒருவனை ரகசியமாக பார்க்கிறாள். அவளது கவனம் முழுவதும் உடல்கள் எப்படி உருமாறுகின்றன என்பதிலே இருக்கின்றன. இந்த காட்சி மிக அழகாக படமாக்கபட்டிருக்கிறது. கடற்கரை மணலில் அந்த உடல்கள் உருவாக்கிய தடத்தில் தன்னை பொருத்தி பார்த்து கொள்கிறாள் அர்திமிசியா.

அதன் காரணமாகவேஅவள் பதின்வயதை சேர்ந்த ஒரு இளைஞனோடு நட்பாகிறாள். அதற்கு ஒரே காரணம் அவனை மாதிரியாக கொண்டு ஒவியம் வரைய வேண்டும் என்பதே. அது போலவே அவனது நிர்வாணமான உடலை ஒரு நாள் வரைய துவங்குகிறாள். ஏன் ஆண் உடல் பெண் உடலை விட முறுக்கேறியும் எலும்புகள் விரிந்தும் காணப்படுகின்றன என்று கேட்கிறான். அவனோ காமம் பீறிட அவளை பார்த்தபடியே இருக்கிறாள். அந்த இளைஞனின் உடல்களை கோட்டு சித்திரமாக வரைகிறாள்
.
அவளை முறையாக ஒவியம் கற்கவைப்பது என்று அன்று புகழ்பெற்றிருந்த ஒவியப்பள்ளிக்கு அழைத்து போகிறார் ஒராசியோ. அங்கு பெண்கள் ஒவியம் கற்றுக் கொள்ள அனுமதியில்லை என்று மறுத்துவிடுகிறார்கள். திறமையுள்ள தன் மகளின் கனவுகள் நிறைவேற என்ன செய்வது என்று புரியாத தந்தை அவளது ஒரு திறமையான ஒவியரிடம் பயிற்சிமாணவியாக அனுப்பி வைக்கலாம் என்று ஆசைப்படுகிறார்.

உடல்களின் ஒழுங்கு அவளை மறுபடி மறுபடி அதை நோக்கியே கவனம் கொள்ள வைக்கிறது. இந்த நிலையில் கான்டோரியா பிரபுவின்
அரண்மனை சுவரோவியங்களை வரைய பிரபல ஒவியரான அகஸ்டினோ தஷி வருகை தருகிறான். அவனிடம் தன் மகளை பயிற்சி மாணவியாக அனுப்புகிறான்.

தஷி குடி, பெண்கள் என்று உல்லாசமாக வாழ்ந்த ஒவியன். மிகுந்த திறமைசாலி. அவன் ஒவியங்கள் வரைவதற்கு உதவி செய்யும் கேமிரா அப்ஸ்குரா என்ற ஆடியை பயன்படுத்தி ஒவியங்கள் வரைகிறான். அதை கற்றுக் கொள்கிறாள் அர்திமிசியா. அதே நேரம் தஷி இரெவெல்லாம் பெண்களுடன் குடித்துவிட்டு சல்லாபம் செய்வதையும் காண்கிறாள். அங்கும் அவளை உற்சாகம் கொள்ள வைப்பது காமம் இல்லை. காமத்தில் ஈடுபடும் உடல்களின் நெகிழ்வும் அதில் உடல்கொள்ளும் மாற்றங்களுமே. அதை வீட்டில் ரகசியமாக படம் வரைந்து பார்க்கிறாள்.

தஷி அவளது அழகில் மயங்கி அவளை தன் விருப்பமான துணையாக மாற்றிக் கொள்கிறான். அவனோடு பழகி அவனது விருப்பங்களுக்கு இணங்கி ஒவியங்களின் ரகசிய தூண்டுதல்களை அறிந்துகொள்கிறாள் அர்திமிசியா. இது அவளது தந்தைக்கு பிடிக்கவில்லை. தன் மகளை தஷி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறான். அதில் தஷிக்கு விருப்பமில்லை என்றதும் தன் மகளை அவன் கற்பழித்துவிட்டான் என்று நீதிமன்றத்தில் புகார் அளிக்கிறான்.

கைது செய்யப்படும் தஷியின் மீது விசாரணை நடக்கிறது. அதில் அர்திமிசியா தான் கற்பழிக்கபடவில்லை என்கிறாள். அவளது கன்னி தன்மை பரிசோதிக்கபடுகிறது. முடிவில் அவள் கன்னியில்லை என்று உறுதியாகிறது.

அவளிடமிருந்து உண்மையை அறிந்து கொள்வதற்காக கடுமையான தண்டனைகள் தரபப்டுகின்றனஅதில் ஒன்று கைவிரல்களை ஒன்றாக பிணைத்து இறுக்கி ஒடிப்பது. ரத்தம் சொட்ட சொட்ட அர்திமிசியா தஷியின் மீது தவறில்லை என்கிறாள். அவளை சித்ரவதை செய்வதை தாங்க முடியாமல் தஷி தானே அவளைகெடுத்துவிட்டதாக ஒத்து கொள்கிறான். ஒரு வருசம் சிறைதண்டனை கிடைக்கிறது.

அர்திமிசியா இந்த குழப்பமும் அதிர்ச்சியுமான நாட்களில் யூதாஸை பற்றிய ஒவியங்களை வரைய துவங்குகிறாள். யூதாஸின் தலையை துண்டிக்கும் சித்திரம் ஒன்றில் யூதாஸின் முகம் தஷியை ஒத்திருக்கிறது. அவளது ஒவியங்களில் பெரும்பான்மை அவளது உருவத்தையே பிரதிபலித்தன.

தன் மகள் மீதான அவதூறை போக்க அவளை இளம் ஒவியர் ஒருவனுக்கு அப்பா திருமணம் செய்து வைக்கிறார். நகரை விட்டு கணவனுடன் சென்ற அர்திமிசியா மிகுந்த உக்கிரத்துடன் ஒவியங்களை வரைய துவங்கினாள்.
தன் சமகால ஒவியர்களுடன் அவளுக்கு இருந்த நட்பும், புரவலர்களின் ஆதரவும்அவளை முக்கிய ஒவியராக்கியது. அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து இறந்து போய்விட்டன. மிச்சமிருந்தது ஒரே பெண் குழந்தை.

சாவு அவமானம், தீராத அகவலி இதிலிருந்தே அவளது ஒவியங்கள் உருவாகின. லோத்தின் குடும்பம் என்ற அவளது ஒவியம், மற்றும் மேரிமக்தலேனாவை பற்றிய ஒவியம் என்று அவள் வரைந்த ஒவியங்களின் அவளது துயரம் பீறிடுகிறது
பிளாரென்ஸில் உள்ள ஒவியகழகத்தில் உறுப்பினராக அனுமதிக்கபட்ட முதல்பெண் அர்திமிசியாவே. அவள் தேவாலய சுவரோவியம் வரைவதற்காக பெருந்தொகை தந்து அழைக்கபட்டாள். இங்கிலாந்து அரண்மனையின் அரச ஒவியராக தந்தை நியமிக்கபட்டபோது அவரோடு சேர்ந்து இயங்கினாள்.

இத்தோடு வானவியலின் தந்தை என போற்றப்படும் விஞ்ஞானி கலிலியோவின் தோழியாகவும் இருந்தார். கலிலியோவுடன் அவள் வானவியலின் நுட்பங்களை விவாதம் செய்தாள். ஆடம்பரமான செலவு, விருப்பமில்லாத கணவன் என்று அவளது குடும்ப வாழ்வு சிதைவுற துவங்கியது.

தன்னை போலவே தன் மகளும் ஒவியராக வேண்டுமஎன்று விரும்பி அவளுக்குஒவியம் கற்று தந்தாள். ஆனால் அர்திமிசியாவை போல அவளுக்கு ஒவியத்தில் விருப்பமில்லை. அப்பாவும் மகளும் வயதான நாட்களில் ஒன்றாக ஒவியம் வரைந்தார்.

தனக்காக சிறைக்கு சென்ற அகஸ்டினோ தஷியை அவன் தன்வாழ்நாளில் திரும்ப சந்திக்கவேயில்லை. அப்பாவின் எதிர்பாரத மரணம் அவளை நிலைகுலைய வைத்தது. தனிமை, கடந்தகாலத்தின் வலிகள், வறுமை என்ற வாழ்வின் சரிவில் தனித்து நடக்க துவங்கிய அர்திமிசியா 1653ல் மரணமடைந்தாள்

அர்திமசியா என்ற இந்த படம் அவளது பதின்வயதில் துவங்கி அவள் மீது சுமத்தப்ட்ட கற்பழிப்பு குற்றங்களுக்கான நீதிவிசாரணை வரை விவரிக்கிறது. வாழ்க்கைவரலாற்று புத்தகங்களில் காட்டப்படுவது போல தஷி ஒரு முறைகேடான ஆளாக காட்டப்படாமல் காதல், மற்றும் ஒரு பெண்ணின் ஒவியதிறமைகளை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்திய கலைஞனாக இதில் சித்தரிக்கபடுகிறான். அவர்கள் இருவருக்குமான உறவும், ஒவியங்கள் குறித்து இருவரது ஆழ்ந்த விவாதங்களும் அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கின்றன

சுவரோவியங்களை வரைகின்றவர்கள் எந்த அளவு வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்திகளை கொண்டு உருவாக்கிய ஒளிகருவிகளும் அதன் மஞ்சள் வெளிச்சமும் அந்த வெளிச்சத்தின் ஊடாக பிரதிபலிக்கும் கோடுகளும் என்று நுட்பமாக படம் உருவாக்கபட்டிருக்கிறது. அதே நேரம் பிளாரென்ஸின்இயற்கை காட்சிகளும் நிலவியலும், கலைநுட்பங்களும் படத்தில் துல்லியமாக சித்தரிக்கபட்டிருக்கின்றன

படத்தின் இசை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அர்திமிசியாவின் மனக்கலக்கம் முழுவதும் இசையின் வழியாகவே வெளிப்படுத்தபட்டிருப்பது இதன்சிறப்பு. அர்திமிசியாவின் ஒவியங்களை இன்று இணையத்தில் காணமுடியும். . Judith Slaying Holofernes என்ற அவளதுஒவியம் மிக அற்புதமானது. அந்த ஒவியத்தில் காணப்படும் உணர்ச்சிகளின்உறைந்தநிலை காலத்தை மீறி அதை தொடர்ந்து ஈர்த்தபடியே உள்ளது. 

அந்த ஒவியங்களின் இருந்த வன்மும் ஆண் உடல்களின் முறுக்கேறிய தன்மையும், பற்றி எரியும் காமமும் அவளது மனதின் ஆழ்ந்த பிரதிபலிப்புகளே என்பதை இந்த படம் பார்த்து முடிக்கும் போது ஆழமாக புரிந்து கொள்ள முடிகிறது.

ஆண் உறுப்புகளின் மீது அதீத நாட்டம்கொண்ட மலினமாக பெண்ணாக அர்திமிசாய சித்தரிக்கபட்டிருக்கிறாள். இது வரலாற்றிற்கு உண்மையில்லாமல் உருவாக்கபட்டிருக்கிறது என்ற குற்றசாட்டு இந்த படத்தின் மீது எழுந்தது ஆனால் இதன் இயக்குனர் ஒவியம் மற்றும் ஒவியரின் வாழ்க்கை இரண்டிற்குமான தொடர்பை பற்றியதே இப்படம். இது நான் அறிந்து கொண்ட அர்திமிசியாவின் வாழ்க்கை என்று அறிவித்தார்.

Valentina Cervi அர்திமிசியாவாக நடித்திருக்கிறார். அவளது முகத்தில் கோபமும்  அவலமும் வெளிப்படும் விதம் அற்புதமானது. தன் உடலை தானே வியக்கும் போது அவளதுமுகத்தில் காணப்படும் அந்த மகிழ்ச்சி வார்தைகளால் சொல்ல முடியாதது. முன்னோடியான பெண் ஒவியரை பற்றிய சிறப்பான படமிது. அர்திமிசியா பற்றி அறியாதவர்கள் இதை ஒரு சிறந்த நாவலின் திரைவடிவமாகவும் கொள்ளலாம்.

***

0Shares
0