
அறுபது வயதைக்கடந்த பலரது நினைவிலும் இன்றும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகை ஆட்ரி ஹெபர்ன் (Audrey Hepburn) தீராக்காதலியாகவே இருக்கிறாள். ஹாலிவுட் திரைப் படங்களை பற்றி வயதானவர்களுடன் பேசத் துவங்கியதுமே அவர்கள் முகத்தில் ஆட்ரி ஹெபர்ன் மீதான காதல் ஒளிவீசுவதை பலரிடமும் காண முடிந்திருக்கிறது.
உலகமெங்கும் வயதானவர்கள் இந்த ஒரு விஷயத்தில் மாறாமலே யிருக்கிறார்கள் என்பது வியப்பாகவே இருக்கிறது. சமீபத்தில் எனது நண்பரின் அப்பாவோடு பேசிக் கொண்டிருந்த போது அவர் ஆட்ரி ஹெபர்னுக்கு பின்னால் வெளிவந்த ஆங்கிலப் படங்களைப் பார்ப்பதையே விட்டுவிட்டதாகச் சொன்னார்.
அந்த அளவு ஈடுபாடா என்று கேட்டபோது விடுவிடுவென அவர் உள்ளே நடந்து 1950-60 களில் வெளியான ஆங்கிலப்படங்களைப் பற்றிய நாளிதழ் செய்திகள், ஆட்ரி ஹெபர்ன் கையெழுத்திட்ட புகைப்படம் என்று தன்னுடைய பெரும்சேகரிப்பை என் முன்னே பரப்பினார்.
அரசு அலுவலராகப் பணியாற்றிக் கொண்டு தன்னுடைய வேலை மட்டுமே உலகம் என்றிருந்த மனிதருக்குள் இப்படியொரு மனக்குகையிருப்பதை அப்போது தான் அறிய முடிந்தது.நேற்று காலையில் தான் ரோமன்ஹாலிடே வெளியாகியிருக்கிறது என்ற தொனியிலே பேசினார். அந்தப் பேச்சில் அவர் ஹெபர்னை மிக உரிமையாக நம்ம ஆளு இருக்காளே என்று குறிப்பிட்டது யாரோ தெரிந்த பெண்ணை அழைப்பது போன்ற ஈர்ப்பாக இருந்தது.
அப்படியென்ன இருக்கிறது ரோமன் ஹாலிடேயில் என்று வேண்டுமென்றே கேட்டேன். அவர் உணர்ச்சிவசப்பட்டவராக அதற்கு நிகரான படம் இதுவரை ஹாலிவுட்டில் வரவேயில்லை. டைட்டானிக் என்ன படம். இந்தப் படத்தை பாருங்கள். இதை விட அழகான காதல் கதை வேறு என்ன இருக்கிறது என்று கோவித்து கொண்டபடியே தான் ரோமன் ஹாலிடே படத்தை முப்பது முறைகளுக்கும் மேலாகப் பார்த்திருப்பதாகவும், ஒவ்வொரு முறை திரையை நோக்கும் போதும் ஆட்ரி ஹெபர்ன் அவரோடு மட்டுமே நேரடியாகப் பேசுவது போன்றே இருக்கிறது என்றார்
இதில் வியப்பு என்ன இருக்கிறது பருவவயதில் ஏற்படும் ஈடுபாடு என்று சொன்ன போது, அப்படியில்லை தமிழ் நடிகைகள் எவரிடமும் எனக்கு அந்த ஈடுபாடு வரவேயில்லை. அதை விடவும் ஹெபர்னை விடவும் மிக அழகான ஹாலிவுட் நடிகைகள் பலர் இருந்தார்கள். ஆனால் அவளிடம் மட்டும் விவரிக்கமுடியாத நெருக்கம் உண்டாகிறது என்றார்.
எது அவளது வசீகரம் என்று கேட்டேன், அவர் அதற்காகவே காத்திருந்தது போல சொன்னார், திரையில் அவளது முகபாவத்தில் தென்படும் கள்ளமற்ற தன்மையும் வசீகரமும் என்னை அறியாமல் இன்றும் அவளை காதலிக்க வைக்கிறது. என்னை அவளுக்குத் தெரியாது. என் போல பல ஆயிரம் பேர் இன்றும் அவளைக் காதலித்து கொண்டேயிருக்கிறோம் என்றார்.
நான் ஆட்ரி ஹெபர்னின் புகைப்படங்கள் ஒவ்வொன்றாக புரட்டி பார்த்து கொண்டிருந்தேன்.நண்பரின் அப்பா தன் கையில் புகைப்படங்களை வாங்கி ஒவ்வொன்றின் பின்னாலும் உள்ள சுவாரஸ்யமான சம்பவங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். அத்தோடு எந்த ஊரில், எந்த நாளில் அந்தப் படங்களை தான் பார்த்தேன் என்பதைக் கூட துல்லியமாக விவரித்தார்.
இந்தக் காதலை யாரிடமாவது பகிர்ந்து கொண்டிருக்கிறீர்களா என்றதும் அவர் மெல்லிய புன்னகையோடு எனக்கு பெண் பார்க்கப் போனபோது ஆட்ரி ஹெபர்னின் ஜாடையில் உள்ள பெண் வேண்டும் என்று தேடி,கடைசியில் இவளை துத்துக்குடியில் கண்டு பிடித்து திருமணம் செய்து கொண்டேன். நன்றாக கவனித்துப் பாருங்கள். அவளது முகபாவத்தில் ஆட்ரி ஹெபர்னின் ஜாடை இருக்கும் என்றார்.
அது வரை எவ்வளவோ முறை நண்பரின் தாயைப் பார்த்திருக்கிறேன். அவர் சொன்ன நிமிசத்தில் திரும்பிப் பார்த்த போது சந்தேகமில்லாமல் ஆட்ரி ஹெபர்னின் முகசாயலின் நெருக்கமிருந்தது. அவர் தன் மனைவியை அருகில் அழைத்து அவர்களது புகைப்பட ஆல்பத்தை எடுத்து வரச்சொன்னார். அதில் திருமணமான நாட்களில் ,ஆட்ரி ஹெபர்ன் அணிந்திருந்த கறுப்பு நிற கவுன் போலவே உடையணிந்து நண்பனின் தாய் ஒரு புகைப்படத்தில் இருந்தார்.
உங்கள் மனைவி ஆட்ரி ஹெபர்ன் படங்களைப் பார்த்திருக் கிறார்களா என்று கேட்டேன். அவர் சிரித்தபடியே இல்லை. அதில் அவளுக்கு ஒரு போதும் விருப்பம் இருந்ததேயில்லை. ஏனோ எனக்கு அப்படியொரு ஈடுபாடு என்றார். அன்று இரவு பத்தரை மணி வரை அவர் ரோமன் ஹாலிடே பற்றியே சொல்லிக் கொண்டிருந்தார்.
நான் ரோமன் ஹாலிடே முன்பு பார்த்திருந்தேன். ஆனால் என் மனதில் அதன் வசனங்கள் மற்றும் துல்லியமான காட்சி படிமங்கள் இல்லை. ஆனால் நண்பரின் அப்பா வசனங்களை அப்படியே மனதில் வைத்திருந்தார். அன்றிரவு வீடு திரும்பும் போது அவரது சேமிப்பிலிருந்த ஒரு ஆட்ரி ஹெபர்ன் படத்தை எனக்கு தந்தார். வீடு வந்த பிறகு அதைக் கையில் வைத்து பார்த்து கொண்டேயிருந்தேன். இன்று ஹெபர்ன் உயிரோடு இல்லை என்ற உண்மை அந்த புகைப்படத்தின் முன்பு அர்த்தமற்றேயிருந்தது.
யாரோ நெருக்கமாக அறிந்த பெண்ணைப் போன்ற உணர்வே மேலோங்கியிருந்தது. ஹெபர்ன் முகத்தில் அன்பிற்கான ஏக்கம் படிந்திருக்கிறது. குறிப்பாக பிரிவு துயர் அவள் முகத்தில் எப்போதுமே இருக்கிறது.
அன்றிரவு திரும்பவும் ரோமன் ஹாலிடே படம் பார்த்தேன். வில்லியம் வைலர் இயக்கியது. ரோமின் வீதிகளில் வெகு இயல்பாக படமாக்கியிருக்கிறார்கள்.ஒரு ராணி தனது ஆடம்பரமான வாழ்வை விட்டு விலகி சாதாரண பெண்ணாக வாழ விரும்பி பத்திரிக்கையாளர் ஒருவரிடம் அடைக்கலம் ஆகும் எளிமையான கதை.
ஆனால் சிறு சிறு சம்பவங்களும் அதன் தொடர்ந்த விளைவுகளும் படத்தை நெருக்கமாக்கியது. படம் முழுவதும் ஆட்ரி ஹெபர்னின் ஆளுமை தான். அதுவும் அரண்மனையில் துங்கி எழுந்த பெண் எளிய மனிதனின் அறையில் உறங்கி எழுந்து கொள்ளும் போது காட்டும் வெளிப்பாடும் ரோம் நகர வீதிகளில் சுற்றியலைவதில் காட்டும் சந்தோஷமும் முடிவில் அதே மகாராணியாகும் போது ஏற்படும் வெளிப்படுத்த முடியாத துக்கமும் படத்தை என்றும் புதியதாக வைத்திருக்கிறது.
இந்த படத்தின் திரைக்கதை தனித்துவமானது. சாகசப்படங்களின் கதைகளைப் போல அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற பதைபதைப்பை இப்படியொரு காதல் படத்தில் உருவாக்குவது எளிதானதில்லை. அத்தோடு படம் சம்பிரதாயமான காட்சிகளும் கதாநாயகனை முன்நிறுத்தும் முயற்சியும் கொண்டதில்லை. எளிய குடியிருப்பு, நெருக்கடியான வாழ்க்கை. பத்திரிக்கைகள் செய்திக்கான அடையும் பரபரப்பு என்று அந்த நாளின் இயல்புலகம் அப்படியே பதிவு செய்யபட்டிருக்கிறது
இந்த படத்தில் நடித்த ஆட்ரி ஹெபர்னுக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது கிடைத்தது. அத்தோடு அவளது வருகை ஹாலிவுட்டில் சூறாவளி போல அதுவரையிருந்த கதாநாயகியை ஒதுக்கி தள்ளியது. ரோமன் ஹாலிடேயை தழுவி தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் என எல்லா மொழிகளிலும் படங்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் எம்ஜிஆர் நடித்த சந்திரயோதயம் என்ற படம் இதை மையமாகக் கொண்டதே.
ஆட்ரி ஹெபர்ன் டச்சு -பிரிட்டீஷ் வம்சாவழியை சேர்ந்தவர். அவரது அப்பா காப்பீட்டுகழக ஊழியர்.அதனால் குடும்பம் தொடர்ந்து இடம் மாறிக் கொண்டேயிருந்தது. நாஜிகளின் யுத்தகொடுமைகளை நேரடியாக அனுபவித்த ஹெபர்ன் தன் மனதில் சாவை நோக்கி நடந்து சென்ற யூத குடும்பங்களும் குறிப்பாக சிறுவர் சிறுமிகளும் அழியாமல் அப்படியே இருக்கிறார்கள் என்று ஒரு நேர்முகத்தில் தெரிவித்திருந்தார்.
ஆம்ஸ்டர்டாமில் பாலே நடனம் கற்றுக் கொள்ளத் துவங்கினார். ஆனால் அவரது உயரமும் குழந்தை பருவத்தில் போதுமான ஆரோக்கிய உணவு உட்கொள்ளாத உடல் குறைபாடும் அதில் முன்னேற்றம் கொள்ள இயலாமல் தடுத்தது. ஆகவே பாலே நடனப் பயிற்சியாளர் அவள் நடிப்பில் ஆர்வம் காட்டலாம் என்று அறிமுகம் செய்தார். இசை நாடகங்களில் நடிக்கத் துவங்கி அதிலிருந்து ஹாலிவுட்டின் துணை நடிகையாக மாறி எதிர்பாரத திருப்பமாக ரோமன் ஹாலிடேயின் கதாநாயகி என்ற அந்தஸ்தை அடைந்தார்.
படத்தில் எலிசபெத் டெய்லரை ராணியாக நடிக்க வைப்பது என்று தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருந்தது.ஆனால் இயக்குனரான வில்லியம் வைலருக்கு ஆட்ரி ஹெபர்னின் தோற்றமும் சோதனை நடிப்பும் பிடித்து போய்விடவே அவளை நடிக்க வைப்பது என்று உறுதியாக இருந்தார்.
கிரிகோரி பெக் கதாநாயகனாக நடித்தார்.அவருக்கும் ஹெபர்னுக்கும் இடையில் வெளிப்படுத்தபடாத காதல் படப்பிடிப்பின் போதே உருவாகியிருந்தது அதுவே திரையில் எதிரொளித்தது என்கிறார்கள் விமர்சகர்கள்.
அதை ஹெபர்னே ஒரு முறை காதல் என்று சொல்லமுடியாவிட்டாலும் ஒரு ஈர்ப்பு இருந்தது என்று ஒத்துக் கொண்டிருக்கிறார்.வெற்றி அவரை ஒய்வில்லாமல் நடிக்கச் செய்தது. ஹாலிவுட்டின் முக்கிய கதாநாயகர்கள் அத்தனை பேரும் ஹெபர்னுடன் நடித்துள்ளனர்.
Sabrina, Gigi, War and Peace, Love in the Afternoon ,Breakfast at Tiffany`s, My Fair Lady என மாறுபட்ட வேடங்களில் நடித்து புகழ்பெற்றார். அவரது தனிப்பட்ட வாழ்வு எல்லா நடிகைகளின் வாழ்வையும் போல எதிர்பாராத காதல், கசப்பு அனுபவங்கள், மிதமிஞ்சிய சோகம் மற்றும் தனிமையால் பீடிக்கபட்டேயிருந்தது
ஒரு பக்கம் உலகின் சிறந்த பெண் எனக் கொண்டாடப்பட்ட ஆட்ரி ஹெபர்ன் இன்னொரு பக்கம் தன்னை உண்மையாக நேசிப்பவர்கள் எவருமில்லை என்று வெளிப்படையாக நேர்காணலில் தெரிவித்தார். மர்லின் மன்றோவைப் போலவே ஹெபர்ன் மீதும் அமெரிக்க ஜனாதிபதியான கென்னடி மற்றும் அவரது சகோதரின் கண் பட்டது. கென்னடியின் பிறந்த நாள் விழாவில் வாழ்த்து பாடினார் ஆட்ரி ஹெபர்ன்.
இரண்டு திருமணங்கள்.மூன்று குழந்தைகள் என்று அலைக்கழிப்பு மிக்க சொந்தவாழ்வு அவரை நிம்மதியற்றே வைத்திருந்தது. உலகம் முழுவதும் குழந்தைகள் போதுமான உணவு, மருத்துவம் இன்றி வறுமையிலும் கஷ்டத்திலும் அவதியுறுவதை உணர்ந்து தன்னை ஒரு சேவகியாக உருமாற்றிக் கொண்ட ஆட்ரி ஹெபர்ன் UNICEF நிறுவனத்தின் துதுவராக தென்னாப்பிரிக்கா வியட்நாம் என்று சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.
சோமலியாக சூடான் போன்ற தேசங்களில் ஹெபர்ன் எடுத்து முன்முயற்சிகளின் வழியே ஆயிரக்கணக்கான குழந்தைகள் காப்பாற்றப் பட்டார்கள்.ஒரு கனவுகன்னியாக அறிந்திருந்த ஹெபர்னை அந்த பிம்பத்திலிருந்து மாறி தங்களுக்கு உதவி செய்ய வந்த தேவதை என்று மக்கள் கொண்டாடினார்கள்.
ஒடியோடி மக்களுக்காக உழைப்பதில் ஆர்வம் காட்டினார். மக்களை தேடிச் சென்று பழகி அவர்களின் சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்ள துவங்கியதும் ஆட்ரி ஹெபர்னிடம் பெருத்த மாறுதல்கள் உருவானது. அவர் உலகை நேசிக்கத் துவங்கினார். குழந்தைகளின் அடிப்படை உரிமைகளுக்காக வாதிட்டார். நோயிலும் வறுமையிலும் வாடும் குழந்தைகளுடன் சேர்ந்த உணவு உண்டு சேர்ந்து உறங்கி அவர்களுக்காக தான் ஒருத்தி இருக்கிறேன் என்று நம்பிக்கை ஊட்டினார்.
அவரது தொடர்ந்த சேவையின் போது உடனிருந்த யுனெஸ்கோ நிறுவனத்தின் புகைப்பட கலைஞரும் சென்னையை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற புகைப்பட கலைஞருமான ஜான் ஐசக் ஆட்ரி ஹெபர்னை பற்றி மிகப் பெருமையாக எழுதியிருக்கிறார். ஹெர்பனை தேடி வரும் மக்கள் அவரை தாயுள்ளம் கொண்டவராகவே அறிந்தார்கள். எத்தனையோ பயணம் செய்ய முடியாத இடங்களில் கூட அவர் நடந்தே சென்றார். அவரை ஒரு நடிகை என்று ஒரு முறை கூட நான் உணரவேயில்லை என்று குறிப்பிடுகிறார்.
பணம் புகழ் கவர்ச்சிபடிமம் என்பதை துக்கி எறிந்து ஆட்ரி ஹெபர்ன் மக்களின் துயரம் தீர்ப்பதற்காகவே தனது மிஞ்சிய வாழ்நாளை பயன்படுத்திக் கொண்டார். வயிற்றில் புற்று நோய் ஆழமாக ஊடுருவிய போதும் அதை பற்றிய பயமின்றி அவர் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களை தேடி சென்று உதவி செய்து வந்தார்.
உண்மையில் ரோமன் ஹாலிடேயின் கதை அவரது வாழ்வில் நிஜமானது. நேற்றுவரை ஹாலிவுட்டின் கனவுதேவதையாக இருந்தவர் அந்தப் பெயர், புகழை மறந்து மக்களோடு மக்களாக வாழத் துவங்கினார். ஹெபர்னை பற்றிய செய்திகளை வாசித்த பிறகு இத்தனை ஆயிரம் மனிதர்கள் ஏன் அவளைக் காதலிக்கிறார்கள் என்ற உண்மையைப் புரிந்து கொள்ள முடிந்தது.
ஹெபர்னை காதலித்தவர்களுக்கு அது வெறும் பாலினக்கவர்ச்சி இல்லை.மாறாக சகமனிதர்களின் மீது காட்டும் பரிசுத்தமான அன்பின் அடையாளம். ஆட்ரி ஹெபர்ன் இறந்த போது அவரது நண்பரும் பிரபல நடிகருமான கிரிகோரி பெக் அவளுக்கு பிடித்தமான Unending Love என்ற பாடலைப் பாடினார். அந்தப் பாடலை எழுதியவர் ரவீந்திரநாத் தாகூர்.
ஹெர்பன் தன் மனதிற்குள்ளாக இந்தியாவை தனது நெருக்கமான தேசமாக உணர்ந்திருந்தார்.ஹெபர்னை காதலிப்பவர்கள் நம்மிடையே பெருகியிருப்பதற்கு அதுவும் காரணமோ என்றே தோன்றுகிறது.
**