ஆர்வெலின் வாழ்க்கை

George Orwell: A Life in Pictures என்ற பிபிசி தயாரித்துள்ள ஆவணப்படத்தைப் பார்த்தேன். ஜார்ஜ் ஆர்வெல் இங்கிலாந்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்.  Big Brother is watching you என்ற இவரது வாசகம் கண்காணிப்பு அரசியல் குறித்த உரையாடல்களில்  சுட்டிக்காட்டப்படும் பிரபலமான மேற்கோளாகும்.

பிபிசி ஆவணப்படங்கள் பெரிதும் மரபான பாணியைக் கொண்டவை. ஆனால் இந்த ஆவணப்படம் அதிலிருந்து மாறுபட்ட விதத்தில் உருவாக்கபட்டிருக்கிறது.  ஆர்வெலின் ஆளுமையை முழுமையாக உணர்ந்து கொள்ளும் வண்ணம் உருவாக்கபட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு.

ஆர்வெல் இந்தியாவில் பிறந்தவர். பீகாரின் மோதிஹரி என்ற கிராமத்தில் பிறந்திருக்கிறார். ஆர்வெலின் தந்தை, ரிச்சர்ட் வால்ம்ஸ்லி பிளேர், இந்தியன் சிவில் சர்வீஸில் ஓபியம் விற்பனை செய்யும் அதிகாரியாக நேபாள எல்லையில் பணியாற்றியிருக்கிறார்.

காவல்துறை உயரதிகாரி. சிறை அதிகாரி. சுரங்கத்தொழிலாளி. உணவகத்தின் பாத்திரம் கழுவுகிறவர், பழைய புத்தகக் கடை பணியாளர். பள்ளி ஆசிரியர். கல்லூரி ஆசிரியர். பத்திரிக்கையாளர், ரேடியோ செய்தி அறிவிப்பாளர். ராணுவ வீரர். சென்சார் அதிகாரி, பிரச்சாரப் பிரிவு அதிகாரி எனப் பல்வேறு வேலைகளைத் தனது 47 வயதிற்குள் ஜார்ஜ் ஆர்வெல் செய்திருக்கிறார். இங்கிலாந்து முழுவதும் நடந்தும் வாகனத்திலும் சுற்றியலைந்திருக்கிறார்.

எரிக் ஆர்தர் பிளேர் என்பது இவரது இயற்பெயர். ஆர்வெலின் அம்மாவின் பூர்வீகம் பர்மா. முதல் உலகப் போருக்கு முன்பு, அவர்களது குடும்பம் ஆக்ஸ்போர்டுஷையரின் ஷிப்லேக்கிற்குக் குடிபெயர்ந்தது,

பர்மாவில் உள்ள இந்தியன் இம்பீரியல் போலீஸில் சேர ஆர்வெல் தேர்வு செய்யப்பட்டார். இதற்காகக் கப்பலில் பயணம் செய்து ரங்கூன் சென்றார், அங்கிருந்து பயிற்சிக்காக மாண்டலேயில் உள்ள போலீஸ் பயிற்சிப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டார். 1922 முதல் உதவி மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார், அப்போது அவரது சம்பளம் ரூ. 525

காலனிய அரசின் காவல்துறை அதிகாரியாகப் பணிபுரிவது அவருக்குள் குற்றவுணர்வை ஏற்படுத்தியது. ஏழை எளிய மக்களைக் காலனிய அரசு கடுமையாக ஒடுக்குகிறது என்பதை நேரடியாக உணர்ந்தார். பர்மாவில் சில காலம் சிறையதிகாரியாகவும் ஆர்வெல் பணியாற்றியுள்ளார்

பர்மாவிலிருந்த நாட்களில் மதம் பிடித்த யானை ஒன்றை சுடுவதற்காக ஆர்வெல் அழைக்கப்பட்டார். அந்த நிகழ்வினை Shooting an Elephant என மிகச் சிறந்த கட்டுரையாக எழுதியிருக்கிறார். அதில் மதம் பிடித்த யானையை அவர் எதிர்கொண்ட விதம் மிக துல்லியமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது இது போலவே தூக்குத்தண்டனை கைதியின் இறுதி நாளைப் பற்றி A Hanging என்ற செறிவான கட்டுரையை எழுதியிருக்கிறார் ஆர்வெல்.

மூன்று ஆண்டுகள் பர்மாவில் பணியாற்றிய பிறகு ஆர்வெல் எழுத்தாளராக வேண்டும் என்ற ஆசையில் மீண்டும் இங்கிலாந்து திரும்பினார்.

அவர் விரும்பியது போல எழுத்தாளர் ஆவது எளிதாகயில்லை. பதிப்பகங்கள் எதுவும் அவரது எழுத்தைப் பிரசுரிக்க முன்வரவில்லை. பத்திரிக்கைகளும் அவரைக் கைவிட்டன.

ஆகவே 1928 இன் ஆரம்பத்தில் அவர் பாரீஸுக்குக் குடிபெயர்ந்தார். அங்கே தொழிலாள வர்க்கத்தினர் குடியிருக்கும் நெருக்கடியான குடியிருப்பில் வசித்து வந்தார், அந்த நாட்களில் வேசைகள். திருடர்கள் .பிச்சைக்கார்க்ள் குடிகாரர்கள். நோயாளிகள் எனப் பலதரப்பட்ட மக்களுடன் நெருங்கிப் பழகினார். அவர்கள் வாழ்க்கை முறை குறித்துப் பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதினார் .

1929 டிசம்பரில், பாரீஸிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்வெல் இங்கிலாந்துக்குத் திரும்பி, சவுத்வோல்டில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அங்கே தான் வசித்தார்.

ஒருமுறை சிறையில் கிறிஸ்துமஸை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதை அனுபவிப்பதற்காக ஆர்வெல் வேண்டுமென்றே போதையில் பிரச்சனை செய்தார். அதைப் பெரிய குற்றமாகக் கருதாமல்  இரண்டு நாட்கள் காவல்நிலையத்தில் வைத்துவிட்டு விடுதலை செய்துவிட்டார்கள்.

ஏப்ரல் 1932 இல், மேற்கு லண்டனின் ஹேய்ஸில் உள்ள சிறுவர் பள்ளியொன்றில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். பின்பு 1933ல் ஃப்ரேஸ் கல்லூரியில் ஆசிரியராகச் சில காலம் பணியாற்றினார். .இந்த நாட்களில் அவரது காசநோய் முற்றவே சிகிச்சை மேற்கொள்வதற்காக ஆசிரியர் வேலையைக் கைவிட்டார்.

இந்த ஆவணப்படத்தின் ஒரு காட்சியில் உறைவிடப்பள்ளியில் படிக்கும் நாட்களில் தான் படுக்கையிலே மூத்திரம் போய்விடுவேன் என்றும் மறுநாள் வார்டன் இதைக் கண்டுபிடித்துக் கடுமையான தண்டனை கொடுப்பார் எனவும் குறிப்பிடும் ஆர்வெல் ஒருவன் தன்னை அறியாமலே தவறு செய்யமுடியும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு என்கிறார்..

ஜார்ஜ் ஆர்வெலின் கட்டுரைகளை நான்  மிகவும் விரும்பி வாசித்திருக்கிறேன். அவரது நாவல்கள் என்னைக் கவரவில்லை.

தமிழில் அவரது நாவல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஒன்றிரண்டு கட்டுரைகளும் மொழிபெயர்ப்பில் வாசிக்க கிடைக்கின்றன. ஆர்வெலின் தேர்வு செய்த கட்டுரைகளை தனி நூலாக மொழியாக்கம் செய்து வெளியிட வேண்டும். அதுவே அவரை சரியாக அறிமுகம் செய்யும் வழி..

ஆவணப்படம் முழுவதும் ஆர்வெல் புகைபிடித்தபடியே இருக்கிறார். நல்ல உயரம். தீர்க்கமான கண்கள். எதையும் நேரடியாக, அழுத்தமாகத் தெரிவிக்கிறார் , வாதிடுகிறார். பரபரப்பான நகர வாழ்க்கையை விட்டு ஒதுங்கி இயற்கையான சூழலில் வாழ ஆசைப்படுகிறார்.

படத்தின் ஒரு காட்சியில் ஆர்வெல் பிறந்த குழந்தையொன்றின் முன்னால் நின்று தீவிரமாக உலக விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்தக் காட்சியிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை. எடை பார்க்கும் இயந்திரம் ஒன்றில் அக்குழந்தை வைக்கப்பட்டிருக்கிறது. அதன் முன்னே ஆர்வெல் பேசிக் கொண்டிருக்கிறார். அக்காட்சி ஒரு படிமம் போல மனதில் உறைந்து விட்டது.

எழுத்தாளராக ஆர்வெல் மேற்கொண்டதும் இது போன்ற செயலையே.

எதிர்கால சமூகம் குறித்த கவலை, பயம், அக்கறை, கற்பனை யாவும் ஆர்வெலிடம் அதிகமிருந்தன.  1984 நாவலில் அவர் உருவாக்கிக் காட்டிய எதிர்கால உலகத்தை இன்று நாம் கடந்து வந்துவிட்டோம். நாவலில் உள்ளது போல எதுவும் நடக்கவில்லை.

ஆனால் முப்பத்தைந்து வருஷங்களுக்குப் பிறகு இன்று ஆர்வெல் சுட்டிக்காட்டிய அதிகாரத்தின் இரும்புப் பிடியை நாம் உணரத் துவங்கியிருக்கிறோம். இன்று அவரது வாசகங்கள் உயிர்பெறத் துவங்குகின்றன. அதிகாரத்தால் கண்காணிக்கப்படுதல் உலகெங்கும் நடந்தேறுகிறது.

ஆர்வலின் வாழ்க்கை வரலாற்றைக் காணும் போது வியப்பாக இருக்கிறது.

எத்தனை வகையான வேலைகள். வாழ்க்கை நிலைகள். ஆர்வெல் ஒரு போதும் சந்தோஷமாக நாட்களைக் கழித்ததில்லை என்றே தோன்றுகிறது.

இங்கிலாந்தின் வடக்கில் சுரங்கத் தொழிலாளியாக அடிநிலை மக்களுடன் இணைந்து பணியாற்றுகிற காட்சிகள் மனதைத் தொடுகின்றன. தன் உயரத்திற்கு குனிந்து சுரங்கத்திற்குள் போவது கழுத்துவலியை உண்டாக்குகிறது என்கிறார் ஆர்வெல். சுரங்கத்தில் பணியாற்றிய போது எளிய மக்களின் வாழ்க்கைத் துயரத்தை முழுமையாக உணருகிறார். அவர்களின் கஷ்டங்கள் குறித்தும் மேம்பாடு குறித்தும் எழுதத் துவங்குகிறார்.

தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் இருந்த காரணத்தால் அவருக்கு இளமையிலே காசநோய் ஏற்படுகிறது. சிகிச்சை எடுத்துக் கொண்ட போதும் ஆர்வெல் வீட்டிற்குள் முடங்கியிருக்கவில்லை. ஸ்பானிஷ் உள்நாட்டுப் போரில் ராணுவ வீரராகக் கலந்து கொள்கிறார். ஒரு முறை குண்டடிபடுகிறார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புகிறார். துப்பாக்கிக் குண்டு தாக்கும் போது ஒரு மனிதன் என்ன உணர்வுகளை அடைகிறான் என்பதைத் துல்லியமாக எழுதுகிறார்.

இரண்டாம் உலகப்போரின் போது மக்கள் படைப்பிரிவில் தன்னை இணைத்துக் கொள்கிறார். அத்துடன் இரண்டு ஆண்டுகள் அரசின் பிரச்சாரத்துறையில் பணியாற்றுகிறார். அப்போது பிபிசி ரேடியோவில் யுத்தசெய்திகளை வழங்கியிருக்கிறார்.

போரின் வெற்றிக்குப் பிறகு இங்கிலாந்து வெற்றியைக் கொண்டாடுகிறது. நகரமே கோலாகலமாகவுள்ளது.  ஆனால் போரில் பாதிக்கப்பட்டு , வீடு இழந்த மக்களின் பிரச்சனைகளை அரசு கண்டுகொள்ளவில்லை என ஆர்வெல் அரசைக் கண்டித்து எழுதுகிறார்.  பொதுவெளியில் உரையாற்றுகிறார்.

யுத்தம் மக்களின் மனநிலையை மாற்றிவிடுகிறது என்பதை நேரடியாக உணருகிறார்.  யுத்தம் முழுமையாக முடியாத நிலையில் ஐரோப்பாவினுள் மீண்டும் பயணிக்கிறார். யுத்த்த்தால் ஏற்பட்ட சிதைவுகளை, இழப்பினை கண்டறிகிறார்.

இந்நிலையில் எதிர்பாரத விதமாக அவரது மனைவி அறுவை சிகிச்சை ஒன்றில் இறந்து போகிறார். தத்து எடுத்துக் கொண்ட மகனை வளர்க்கத் தனியே போராடுகிறார்.

காசநோய் முற்றிய நிலையில் புது நாவல் ஒன்றை எழுதுவதற்காகத் தீவு ஒன்றுக்குப் போகிறார். மனித நடமாட்டமேயில்லாத இடமது. அறையில் தனது படுக்கையிலிருந்தபடியே சிறிய தட்டச்சுப்பொறி ஒன்றினை உபயோகித்துப் புதிய நாவலை எழுதுகிறார்.

அவரது ஐந்து வயது மகன் கதவைத்தட்டி ஹாய் சொல்லும் காட்சி ஒன்று படத்தில் இடம்பெற்றுள்ளது. அற்புதமான காட்சியது. அச்சிறுவன் தந்தையை எவ்வளவு நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறான் என்பதை அக்காட்சி அழகாக வெளிப்படுத்துகிறது.

நோயோடு இரவுபகலாக எழுதுவது அவரது உடல்நிலையை மிகவும் மோசமாக்குகிறது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

1984 என்ற புதிய நாவல் வெளியாகி மிகுந்த வரவேற்பினை பெறுகிறது. மருத்துவமனையில் தனது தோழி சோனியா பிரவுனெல்லைத் திருமணம் செய்து கொள்கிறார், அடுத்த ஆறுமாதங்களில் நோயிலிருந்து விடுபட முடியாமல் மரணமடைகிறார்.

47 வருஷ வாழ்க்கை. அதற்குள் எத்தனை விதமான அனுபவங்கள். பயணங்கள். ஆர்வெல் முழுமையான, நிறைவான வாழ்கையை வாழ்ந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது

Animal Farm, Nineteen Eighty-Four என்ற இரண்டு நாவல்களே ஜார்ஜ் ஆர்வெலின். அடையாளம் போலக் கருதப்படுகின்றன. ஆனால் இந்த இரண்டினையும் விட அவர் எழுதிய Down and Out in Paris and London, The Road to Wigan Pier, Homage to Catalonia, Collected Essays of George Orwell போன்ற கட்டுரைகளே உயர்வானவை.  .

Men can only be happy when they do not assume that the object of life is happiness என்பது ஆர்வெலின் புகழ்பெற்ற மேற்கோள். இதையே வாழ்க்கையில் ஆர்வெலும் கடைபிடித்திருக்கிறார்

••

0Shares
0