இடக்கை – விமர்சனம்

கவிஞர் கார்த்திகா முகுந்த்

சரித்திர காலத்தில் வாழ்ந்தும் சரித்திரங்களில் இடம் பெற்றிராத எளிய மக்களை மையமாகக் கொண்டு வாசிக்கையில் ‘இடக்கை’ ஒரு புதிய வாசிப்பனுபவத்தைத் தருகிறது. சரித்திரங்கள் குறித்த எனது பார்வைக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தருகிறது. இதுவும் ஒரு வகையில் சரித்திரமாகத் தோன்றுகிறது; எழுதப்படாத எளிய மக்களின் சரித்திரம். நாவலில் குறிப்பிட்ட காலத்துக்குப் பின்  பற்பல ஆண்டுகளுக்குப் பிறகும் தங்கள் நிலையில் மாற்றம் இல்லாமல் வாழும் மக்களின் சரித்திரம்.

சில சமயங்களில் கதை நடைபெறும் காலத்தில் பிறக்காமல் போனது குறித்து மனம் ஆறுதல் அடைகிறது. சில சமயங்களில் நீதியைப் பெறக் காத்திருக்கும் பாதை இவ்வளவு நீண்டதாக இன்னும் மாறாமல் இருப்பது குறித்து ஒரு வகை அச்சமும் ஆயாசமும் ஏற்படுகிறது. ஒவ்வொரு சமயம் சிறிய எளிய விஷயங்களில் கனிந்த மனங்களின் அன்பு நெகிழச் செய்கிறது.

எனினும் நாவல் முடிந்த பிறகும் ஏதோ ஒன்று முடியாமல் இருப்பது போன்ற உணர்வு எழுந்தது. நிலை மாறாமல் இன்றும் துன்பப்பட்டு வாழும் மக்களின் நிலை குறித்த குற்ற உணர்வு, நாவலின் நிழலிலாவது அவர்களுக்கு ஒரு சிறிய நீதி கிடைத்திடாதா என்று எதிர்பார்ப்பதால், அத்தகைய நிறைவடையா உணர்வு தோன்றுவதாக எண்ணுகிறேன். எனினும் அந்த நிறைவற்ற உணர்வே பிரதியின் நேர்மையை உறுதி செய்கிறது.

ஔரங்கசீப் குறித்த முதல் அத்தியாயங்கள் கலையாத பனிமூட்டத்துக்குள் நடந்து செல்வது போல் மென்மையாக ஒரு இனம் புரியாத சோகம் கவிந்த கவிதை போல் இருந்தன.

ஒவ்வொரு கதாபாத்திரமும், ஓரிரு முறை குறிப்பிடப்படும் சிறிய கதாபாத்திரங்கள்கூட, வெவ்வேறு உணர்வுகளையும் தாக்கத்தையும் அடுத்தடுத்து ஏற்படுத்துகின்றன. ஔரங்கசீப், அஜ்யா, மக்பி, உதய்பூரி மஹல், தூமகேது, பிஷாடன், அநாம், முத்கலன், ரெமியஸ், சம்பு, சக்ரதார், நளா, டோலு, மஞ்சா, தர்ஷன், அனுராதா, காதம்பரி, குலாபி, அமந்தா, அடிகா… – எல்லா பெயர்களும் புத்தகத்தை மூடிவைத்த பின்னும் மனத்திலேயே இருக்கின்றன. ஒவ்வொரு பெயராக எழுத எழுத அடுத்தடுத்து பெயர்கள் நெருக்கியடித்துக் கொண்டு ‘என்னைச் சொல்… என்னைச் சொல்’ என மனதில் மேலெழும்பி வருகின்றன.

ஔரங்கசீப்பும் அவர் குருவும் உரையாடும் இடங்களைத் தாண்டிச் செல்ல அதிக நேரம் பிடித்தது. நாம் கடவுளை ஏமாற்ற முடியாது என வாசிக்கையில், எங்கள் ஒன்றாம் வகுப்பு ஆசிரியை சுந்தரவடிவு அவர்களின் நினைவு வந்தது. ஒவ்வொரு குழந்தைக்கும் முதன்முதலாக ஒழுக்கத்தை போதித்து நெறிப்படுத்துபவராக ஆசிரியர் தானே இருக்கிறார்!

நேற்றுதான் கேட்டது போல் அவர் வார்த்தைகள் மனதில் எப்போதும் உள்ளன: ‘நீ எங்கிருந்து கொண்டும் யாருக்கும் தெரியாது என எண்ணிக் கொண்டும் பொய் சொல்லலாம்; தவறு செய்யலாம். ஆனால் அது யாருக்குத் தெரியாமல் போனாலும் கடவுளுக்குத் தெரிந்து விடும். நாம் சொல்லும் பொய்களையும் செய்யும் தவறுகளையும் கடவுள் எப்போதும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். என்றைக்கு இருந்தாலும் அதற்கு தண்டனை கொடுப்பார்’.

ஆனால் அதை மனதார நம்பி வாழ்வது பலருக்கும் ஏன் எளிதாக இருக்கவில்லை; நீதி நெறி காக்க வேண்டிய அரசர்கள் உட்பட? அதற்கும் பதில் நாவலில் வருகிறது: ‘நீதியின் முன் அனைவரும் சமம் என்றால் அதற்கு முன்பாக மனிதர்கள் ஒருவருக்கொருவர் தான் சமம் என நினைக்க வேண்டும். அப்போது தான் சமநீதி கிடைக்கும்.’

இன்னும் இதுபோல் நினைவிலே இருக்கும் வரிகள் பல:
‘உறக்கம் என்ன அவர் சேவகனா?’,

‘வாள் எதையும் நினைவு வைத்திருப்பதில்லை’,

‘கடற்கரையில் நாணயத்தைத் தொலைத்த சிறுவன் போல’,

‘ஒரு துளிக் கண்ணீர் சேரும்போதுதான் கவிதைக்கு உயிர் வருகிறது’
‘சந்தோஷமும் கண்ணீரை வரவழைக்கும் தானே?’
‘துயரத்தின் கண்ணீரும் சந்தோஷத்தின் கண்ணீரும் ஒன்றா என்ன?’
‘கண்ணீரில் என்ன பேதமிருக்கிறது?’,

‘உலகில் இதுவரை கவிதைகளும் புத்தகங்களும்தான் தடை செய்யப்பட்டிருக்கின்றன. ஆயுதம் எதுவும் தடை செய்யப்படவில்லை.’!

கணவனுக்குக் காத்திருக்க வேண்டும் என்றெண்ணி பிறகு ஊரை விட்டுச் செல்லும் நளாவின் பெயர் ஒரு ironyயாகத் தோன்றுகிறது; ஔரங்கசீப் தைத்த குல்லா இறுதியில் யார் தைத்தது என்று தெரியாமல் தூமகேதுவிடம் சேர்வதும்.

‘இடக்கை’ – எஸ்ராவின் பிற நாவல்களில் இருந்து சில விதங்களில் மாறுபட்ட நாவல். குறிப்பாக நாவலில் இடம்பெறும் தண்டனைகளில், கலவரங்களில் காணப்படும் வன்முறை எஸ்ராவின் பிற நாவல்களில் காண முடியாதது. அதிலும் அஜ்யாவைத் துன்புறுத்தும் பகுதிகளில் அந்தத் தண்டனைகளை நானே எதிர்கொள்வது போல் நடுங்கிப் போனேன்.

நாவலின் நடையும் முந்தைய நாவல்களில் காண்பது போல மிகவும் முன்பின்னாக இல்லாமல் தேவையான இடங்களில் பின்னோக்குவதாக அமைந்துள்ளது; நதியின் போக்கு போல. புதிய பாத்திரங்கள் அடுத்தடுத்து வந்து அவர்களின் கதைகளை பின்னோக்கில் சொல்கையில்கூட கிளை நதிகள் பெரு நதியில் சேர்கையில் கொஞ்சம் பின்னோக்கி உந்தப்படுவது போல் இயல்பாகவே உள்ளது.

ஒவ்வொரு எளிய கதாபாத்திரமும் காட்டும் இருண்ட பக்கங்கள், அவர்களின் வாழ்வில் ஒரு சிறிய மகிழ்ச்சியேனும் இருந்திருக்காதா, அன்றாட வாழ்வில் ஏதேனும் ஒரு தருணம் அவர்களுக்கு இனிய நினைவு தந்திராதா… அஜ்யாவை ஔரங்கசீப் சகோதரி என்றழைத்த தருணம் போல் இன்னும் பலருக்கும் பல இனிய தருணங்கள் இருந்திருக்கலாமே என்று தோன்றியது. வாழ்வின் மீது நம்பிக்கை கொள்வதற்கு இது போன்ற தருணங்கள் தேவையாகவே இருக்கிறது.

நாவலை வாசித்து முடிக்கும் அதன் துயரமிக்க கதாபாத்திரங்கள் மனதில் ஒரு கேள்வியை ஆழமாக எழுப்புகிறார்கள்.

ஏன் வாழ்க்கை இத்தனை குரூரமாகயிருக்கிறது ?

அதிகம் உணர்ச்சிவசப்படாமல் இந்நாவலை இன்னொரு முறை ஆழ்ந்து வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

••

0Shares
0