உதிரமே கவிதையாகிறது.

ஏழு புகழ்பெற்ற லத்தீன் அமெரிக்கப் படைப்பாளிகளின் நேர்காணல்கள் கொண்ட Seven voices தொகுப்பினை வாசித்தேன். ரீடா கிபர்ட் நேர்காணல் செய்திருக்கிறார்.

எழுத்தாளர்களின் நேர்காணல்களை வாசிக்கும் போது அவர்கள் படைப்புகளுக்கு வெளியே பகிர்ந்து கொள்ள விரும்பும் அபிப்ராயங்கள். இலக்கிய நுட்பங்கள். அரசியல் நிலைப்பாடுகள். உணவுப்பழக்கங்கள். வாசிப்புப் பழக்கம். இசை மற்றும் பொது ரசனை குறித்து அதிகம் தெரிந்து கொள்ள முடியும். இந்தத் தொகுப்பு எழுத்தாளர்களின் விரிவான நேர்காணலைக் கொண்டது. ஐம்பது பக்கங்களுக்கும் மேலாக ஒருவரது நேர்காணல் இடம்பெற்றுள்ளது.

லத்தீன் அமெரிக்க எழுத்தாளராக இருப்பது ஒரு சுமை. ஒரு தேசத்தின் முதுகில் தூக்கிச் சுமந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எழுத்தாளர் என்பதை விடவும் லத்தீன் அமெரிக்கா என்பது முதன்மையாகிவிடுகிறது. கல்விப்புலத்தால் உருவாக்கப்பட்ட இந்த அடையாளம் பல நேரங்களில் சுமையாகவே உள்ளது என்பதை இந்த நேர்காணலில் பலரும் தெரிவிக்கிறார்கள்

பாப்லோ நெரூதா தனது நேர்காணலில் தனது வீட்டில் உள்ள கலைப்பொருட்களைப் பற்றி விவரிக்கும் போது பாரீஸில் உள்ள ஒரு கலைப்பொருள் விற்பனையகத்தில் அரிய சிற்பம் ஒன்றிருந்தது. அதை விலைக்குக் கேட்டபோது கடை உரிமையாளர் தர மறுத்துவிட்டார். தான் சீலே நாட்டைச் சேர்ந்தவன் என்று சொன்னபிறகு உங்களுக்குப் பாப்லோ நெரூதாவை தெரியுமா. அவரை எப்படியாவது நான் சந்திக்க விரும்புகிறேன் என்று சொல்லியிருக்கிறார் கடை உரிமையாளர். நான் தான் அந்த நெரூதா என்றதும் உடனே சிலை அவரது கைக்கு வந்துவிட்டது என்கிறார். இப்படி உலகெங்கும் தனக்குள்ள ரசிகர்களைப் பற்றிக் குறிப்பிடும் நெரூதா தான் மக்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவர்கள் என்னைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார்.

நெரூதாவின் வீட்டில் அவருக்கு எதிராக ஒட்டப்பட்ட இரண்டு சுவரொட்டிகள் பாதுகாக்கப்பட்டு வருவதை ரீடா பதிவு செய்திருக்கிறார். அந்தச் சுவரொட்டியில் நெரூதா நாட்டைவிட்டு போ என்றும். நெரூதா தற்கொலை செய்து கொள் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இந்த எதிர்ப்பு சுவரொட்டிகளை அவர் ஆசையாகச் சேகரித்துத் தன் வீட்டிலே பாதுகாத்து வருவதை ரீடா வியப்புடன் விவரித்திருக்கிறார்

இந்தியாவில் பணியாற்றிய அனுபவத்தைச் சொல்லும் போது தன்னை இந்தியா அதிகம் பாதிக்கவில்லை. சம்பளம் இல்லாத தூதுவராக வறுமையான சூழலில் பணியாற்றினேன். இந்தியாவிலிருந்த நாட்களில் பண்டித நேருவைச் சந்தித்த நிகழ்வினை நினைவு கூர்ந்திருக்கிறார்.

அவருக்கும் போர்ஹெஸிற்குமான சண்டையைப் பற்றிக் கேட்கும் அது இலக்கிய விவாதம். அவரை ஒரு போதும் எனது எதிரியாகக் கருதமாட்டேன். அவர் வேறு உலகில் வாழுகிறார். சமகாலப் பிரச்சனைகளை அவர் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. அவர் கவிதைகளை விரும்பி படித்திருக்கிறேன் என்கிறார் நெரூதா

இது போலவே சினிமாவில் தனக்கு லாரல் ஹார்டியை மிகவும் பிடிக்கும் என்றும் அவர்கள் வெறும் நகைச்சுவை நடிகர்கள் இல்லை. வாழ்வின் அபத்தங்களை அவலங்களைத் திரையில் நகைச்சுவையாகச் சித்தரித்தவர்கள். அந்த வகையில் அவர்கள் காப்கா, தஸ்தாயெவ்ஸ்கி போல வாழ்க்கையை அறிந்து வெளிப்படுத்தியவர்கள் என்கிறார்.

நெரூதாவிற்குத் துப்பறியும் நாவல்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம். அதைப் பற்றி இந்த நேர்காணலில் மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

தான் வசிக்கும் இடத்தின் அருகே சினிமா தியேட்டர் எதுவும் கிடையாது. ஆகவே அதிகம் சினிமா பார்க்கும் வாய்ப்புக் கிடையாது. பார்த்து ரசித்த வரையில் விட்டோரியா டிசிகாவின் படங்களைத் தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார் நெரூதா.

ஏன் கவிதைகளைக் கையால் எழுதுகிறீர்கள் என்று கேட்டதற்குக் கவிதை டைப்ரைட்டரில் எழுதப்படும் போது அந்நியமாகிவிடுவதாக உணர்கிறேன். கையால் எழுதப்படும் போது உடலின் உதிரமே கவிதையாக மாறுவதாக உணருகிறேன். என்கிறார் நெரூதா

இந்த நேர்காணல் அவர் நோபல் பரிசு பெறுவதற்கு முன்பு அளிக்கப்பட்டது என்பதால் இதில் உங்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி இடம்பெற்றிருக்கிறது. நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டாலும் அந்தத் தேசமே கொண்டாட்டத்தில் ஆழ்ந்துவிடுகிறது. இதில் யார் சரியானவர் என விவாதிக்க நான் யார். நோபல் கமிட்டி தான் இதை விளக்க வேண்டும் என்கிறார்

போர்ஹெஸின் நேர்காணலில் அவர் முன்பு அளித்த நேர்காணல்களின் அதே பதில் வேறு விதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நேர்காணலில் அவர் தனது குரலைப் போன்றது தனது ப்யூனஸ் அயர்ஸ் நகரம். அதை என்னிடமிருந்து பிரிக்க முடியாது என்கிறார். போர்ஹெஸ் பணியாற்றித் திரைப்படங்கள் மற்றும் திரைக்கதைகள் பற்றிக் கூறும் போது துப்பறியும் கதைகள் கொண்ட படத்திற்காகத் தாங்கள் திரைக்கதை உருவாக்கியதைக் கூறுகிறார். அத்துடன் தனக்கு ஹிட்ச்காக் படங்களை மிகவும் பிடிக்கும் என்கிறார். போர்ஹெஸிற்கு மிகவும் பிடித்த படம் A Man for All Seasons.

இது போலவே ஆஸ்துரியாஸின் நேர்காணலில் அவர் தனது புத்தகத்தின் முகப்பு ஒன்றில் எழுதிய வாசகத்தைக் குறிப்பிடுகிறார். அதாவது இந்தப் புத்தகத்தை வாசிப்பதற்குப் பதிலாகக் குடியுங்கள் என்று முகப்பில் எழுதியிருப்பதாகச் சொல்கிறார். மார்க்வெஸ் தனது நேர்காணலில் தான் மார்க்வெஸாக இருப்பது சலித்துவிட்டது. எங்குச் சென்றாலும் ஒரே கேள்விகள். ஒரே விதமான பாராட்டு. புகழ் எனது அன்றாட வாழ்க்கையைச் சீர்குலைத்துவிட்டது என்கிறார்.

இதிலுள்ள ஏழு எழுத்தாளர்களும் மதிய தூக்கம் பற்றிச் சொல்கிறார்கள். இந்த நேர்காணல்களே மதிய உறக்கத்தின் பின்பு தான் எடுக்கப்பட்டிருக்கிறது. தனது கதைகள் புதிய அனுபவங்களும் பழைய நினைவுகளும் கொண்டவை. இரண்டினையும் ஒன்றிணைத்தே எழுதுகிறேன் என்கிறார் மார்க்வெஸ். தனது படைப்புகள் பற்றி ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆய்வு நூல்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றைத் தான் கண்டுகொள்வதில்லை. எதையும் வாசிப்பதுமில்லை. ஒரு ஆய்வுக்கட்டுரையை வாசித்த போது பயந்து போனேன். இப்படி எல்லாம் அவர்கள் எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்று வியப்பாக இருந்தது. அது அவர்களின் சுதந்திரம் என்பதால் தான் எதிர்க்கருத்து கூற விரும்பவில்லை என்கிறார்.

எப்போது மனதில் கதை எழுதுவதற்காகக் கரு தோன்றினாலும் அதை உடனே ஒரு சிறிய நோட்டில் குறித்து வைத்துக் கொள்வேன். பின்பு ஓய்வான தருணத்தில் அந்தக் குறிப்பிலிருந்து சிறுகதைகளை எழுதுவேன் என்கிறார் மார்க்வெஸ்

நீங்கள் ஏன் நடிகராக ஆகவில்லை. உங்கள் தோற்றம் நடிப்பதற்கு ஏற்றதாக உள்ளதே என்ற கேள்விக்கு என்னால் மைக் முன்னால் நின்று பேசவே முடியாது. அவ்வளவு கூச்சமானவன். நான் எப்படி நடிக்க முடியும் என்கிறார் மார்க்வெஸ்

இலக்கியப் படைப்புகள் அளவிற்குத் தன்னைச் சினிமாவும் பாதித்துள்ளது.நிறைய காட்சிப்படிமங்கள் சினிமா மூலமே அறிமுகமாகியிருக்கிறது என்றும் மார்க்வெஸ் குறிப்பிடுகிறார்

ஆக்தோவியா பாஸ் தனது நேர்காணலில் இந்தியாவில் இயற்கையை அன்னையாகக் கருதுகிறார்கள். அதன் கருணையும் கோபமும் அவர்களுக்குச் சமமானதே. இந்தியாவிலிருந்த நாட்களில் பௌத்தம் குறித்து அதிகம் அறிந்து கொண்டேன். நாகர்ஜுனரின் தத்துவம் மீது தீவிர ஈடுபாடு கொண்டேன். இந்தியாவில் மனிதர்களும் மற்ற ஜீவராசிகளும் இணைந்தே வாழுகிறார்கள். மேற்குலகில் அப்படியில்லை. விலங்குகளின் இடம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் தொன்மையும் மரபும் தனித்துவமானது என்கிறார் பாஸ்

தனது சமகாலத்தை எதிர்கொண்ட விதம் மற்றும் படைப்பின் நுட்பங்கள். எழுத்துமுறை, தனது ஈடுபாடுகள், அரசியல் நிலைப்பாடுகள் பற்றித் திறந்த மனதுடன் ஏழு படைப்பாளிகளும் உரையாடியிருக்கிறார்கள்.

தனது சொந்த ஊரான ப்யூனஸ் அயர்ஸ் தனது குரலைப் போன்றது. அது எனது அடையாளம். அதை ஒரு போதும் இழக்கமுடியாது என்ற போர்ஹெஸின் வார்த்தைகள் மனதில் திரும்பத் திரும்ப ஒலித்தபடியே இருக்கின்றன

0Shares
0