லுசினோ விஸ்காண்டியின் La Terra Trema 1948 ஆம் ஆண்டு வெளியானது. இத்தாலியின் மீனவ கிராமம் ஒன்றின் வாழ்க்கையை யதார்த்தமாக, கலைநேர்த்தியுடன் படமாக்கியிருக்கிறார் விஸ்காண்டி.

இப்படம் சிசிலியன் மீனவர்களின் வாழ்க்கையை நிஜமாகச் சித்தரிக்கிறது என்று வெனிஸ் திரைப்படவிழாவில் விருது பெற்றிருக்கிறது.
ஜியோவானி வெர்காவின் நாவலை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாக்கபட்டிருக்கிறது. தொழில்முறை சாராத நடிகர்களைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதே படத்தின் பலம்..
மீனவர்கள் கலையாத இருளுக்குள் வலையோடு கடலுக்குச் செல்வது. மீனவ குடும்பத்தின் நெருக்கடிகள். உணவு தயாரிக்கும் விதம். குடியிருப்பின் நெருக்கடியான சூழ்நிலை. பிடித்துவரப்படும் மீனுக்கு விலையில்லாமல் போவது. இடைத்தரகர்கள் மீனவர்களை ஏமாற்றுவது என கடலோர வாழ்க்கையைப் ஆவணப்படம் போல துல்லியமாக சித்தரித்துள்ளது சிறப்பாகும்.
இத்தாலியின் சிசிலியின் கிழக்குக் கடற்கரையில் உள்ள சிறிய மீன்பிடி கிராமமான அசி ட்ரெஸாவில் கதை நடைபெறுகிறது. அங்குள்ள வாலாஸ்ட்ரோ குடும்பத்தின் கதையைச் சொல்கிறது.

இரண்டாம் உலகப் போரில் ராணுவ வீரனாகப் பணியாற்றிவிட்டு ஊர் திரும்புகிறான் என்டோனி. தனது குடும்பத் தொழிலான மீன்பிடிப்பதில் ஈடுபடுகிறான். உள்ளூரில் அவனுக்குக் காதலியிருக்கிறாள்.
என்டோனியின் தாத்தா அவர்கள் சம்பாதித்து வரும் பணத்தைச் சரியாகப் பங்குபிரித்துத் தருகிறார். எளிமையான அந்த வாழ்க்கையைச் சந்தோஷமாகவே என்டோனி அனுபவிக்கிறான்.
ஆனால் தங்களை வணிகர்கள் ஏமாற்றுகிறார்கள். மீனுக்கு உரிய விலையைத் தர மறுக்கிறார்கள் என்று உணர்ந்து கோபம் கொள்கிறான். அவர்களை எதிர்த்துச் சண்டை போடுகிறான்.
இதை என்டோனியின் தாத்தா கூட விரும்பவில்லை. அவர் என்டோனியிடம், “வணிகர்கள் எப்போதுமே சரியானவர்கள்” என்று சொல்கிறார். வெளிப்படையாக, பழைய தலைமுறையினர் தங்கள் அவலநிலையை விதியாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை என்டோனி உணர்ந்து கொள்கிறான்.
மீனுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்று அறிந்த போதும் மீனவர்களால் வணிகர்களைப் பகைத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் குறைந்த சம்பளத்தில் குடும்பத்தை நடத்த வேண்டும் என்பதுடன்,மோசமான வானிலையிலும் கூட, கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டும்.
ஒரு நாள் ஆத்திரம் அதிகமாகி வணிகர்கள் வைத்திருந்த தராசினை பிடுங்கி கடலில் வீசுகிறான். இதனால் மோதல் ஏற்படுகிறது. காவலர்கள் என்டோனியை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். அவன் மீனவர்களுக்குச் சங்கம் உருவாக்கபட வேண்டும் என்று வாதிடுகிறான். சுரண்டப்படுவதை எதிர்த்துப் போராட மீனவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அது ஒன்றே தீர்வு என்கிறான்.

என்டோனியின் சகோதரி லூசியா காதல் வசப்படுவது. அவளது காதலன் கட்டிட வேலை செய்தபடியே காதல்மொழி பேசுவது, என்டோனி தனது காதலி நெட்டாவைத் தேடிச் சென்று உரையாடுவது மிக அழகான காட்சிகள்
நெட்டாவின் பெற்றோர் தங்கள் திருமணத்திற்கு ஒப்புதல் தர வேண்டுமானால் தான் அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என என்டோனி உணர்ந்து கொள்கிறான். ஆகவே சொந்தமாக ஒரு படகு வாங்குவதற்காகக் குடியிருந்த வீட்டை அடமானம் வைக்கிறான். ஆரம்பத்தில் நிறைய மீன் கிடைக்கிறது. அவர்கள் சந்தோஷமாகக் கொண்டாடுகிறார்கள்.
ஆனால் எதிர்பாராத புயலில் அவனது படகு சிக்கிக் கொண்டுவிடுகிறது. காணாமல் போன அவர்களைக் குடும்பம் தேடுகிறது. புயலில் படகு பழுதடைகிறது. அதைச் சரி செய்ய அவர்களிடம் பணமில்லை.மீண்டும் பிறருக்காக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இத்துடன் கடனும் சேர்ந்து கொள்ளவே அவனது கனவு தோற்றுப் போகிறது. வலஸ்ட்ரோ குடும்பத்தின் தோல்விகளுக்குப் பிறகு கிராம மக்கள் அவர்களை ஒதுக்கிய விதம் அதிர்ச்சிகரமானது.
புயலில் சிக்கிக் காணாமல் போன என்டோனியின் படகு திரும்பி வருகிறதா எனக் காணுவதற்காகக் கடற்கரையில் வலஸ்ட்ரோ பெண்கள் காத்திருக்கும் காட்சி மறக்கமுடியாதது.

வலஸ்ட்ரோ குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கிக் கொள்கிறது. ஊரைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் அதில் என்டோனிக்கு விருப்பமில்லை. முடிவில் தனது தோல்வியை அவன் கசப்போடு ஏற்றுக் கொள்கிறான்.
இனவரைவியல்ஆவணம் போலக் கதை நிகழும் இடத்தையும் நிகழ்வுகளையும் ஒளிப்பதிவாளர் ஜி.ஆர். ஆல்டோவின் கேமிரா நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறது. அபாரமான காட்சிக் கோணங்கள். நகர்வுக்காட்சிகள். படத்தினை இன்றும் புதியதாக வைத்திருப்பது அதன் தேர்ந்த ஒளிப்பதிவு மற்றும் தொழில்முறை சாராத நடிகர்களின் உணர்ச்சி வெளிப்பாடேயாகும்.