ஒத்திகை.


நேற்று கேரளாவிலிருந்து ஜோஸ் என்ற நவீன நாடக இயக்குனர் என்னைப் பார்க்க வந்திருந்தார். எனது அரவான் நாடகத்தை மலையாளத்தில் மொழியாக்கம் செய்து கொள்வது தொடர்பான சந்திப்பு அது. பேச்சு தமிழ் நவீன நாடகச் சூழலைப் பற்றி திரும்பியது. வருடத்திற்கு பத்து நவீன நாடகங்கள் கூட சென்னையில் நடத்தப்படுவதில்லையே அது ஏன் என்று கேட்டார்.



நவீன நாடகங்கள் பெரும்பாலும் தனிநபர்களின் ஆர்வம் மற்றும் தொடர்ந்த ஈடுபாட்டின் காரணமாக மட்டுமே தமிழில் நடைபெற்று வருகின்றன. நாடகங்களை நிகழ்த்துவதில் உள்ள முக்கியப் பிரச்சனை நாடகத்திற்கான  பொருளாதாரம் மற்றும் ஒத்திகைக்கான இடம்.



நான் அறிந்தவரை இன்று வரை சென்னையில் நாடக ஒத்திகைகளுக்கு அல்லல்படாத குழுக்களே கிடையாது. பல நவீன நாடக முயற்சிகள் முடங்கிப் போனதற்கு முக்கிய காரணம் ஒத்திகைக்கான இடம் இல்லாதது மட்டுமே என்றேன்



அவர் ஒத்துக் கொள்ளவில்லை. நாடகம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. கேரளாவில் நாடகம் ஒரு பலமான அரசியல் வடிவம் என்று சொல்லி தங்களது நாடகங்களைப் பற்றி விளக்கி சொன்னார்.


அந்தப் பேச்சின் ஊடாக மராத்தியில் உள்ள மகேஷ் எல்கஞ்ச்வர் என்ற நவீன நாடக ஆசிரியர் தன் நாடகங்களின் ராயல்டியாக மாதம் நாலு லட்சம் சம்பாதிக்கிறார். மலையாளத்தில் அவரது ஒரு நாடகத்தைப் போடுவதற்கு இருபதாயிரம் பணம் தர வேண்டியிருந்தது என்ற தகவலை சொன்னார்.
வியப்பாக இருந்தது.


தமிழில் நவீன நாடகம் எழுதுகின்றவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படியும் எழுதப்பட்ட நாடகங்கள் ஒன்றோ இரண்டோ முறை மேடையேற்றபடுவதோடு சரி. அதுவும் ஒரு குழு மேடையேற்றிய நாடகத்தை இன்னொரு குழு ஒரு போதும் மேடையேற்றுவதில்லை என்றேன்.  இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அவர் கிளம்பி சென்ற பிறகும் அந்த உரையாடலில் இருந்து என்னால் மீள முடியவில்லை.


ஒருநாளைக்கு பத்து  அரசியல் கூட்டங்கள், நூறு கருத்தரங்கள் நடக்கின்ற சென்னை மாநகரில் நவீன நாடகத்திற்கான ஒத்திகைக்கு தினமும் மூன்று மணி நேரம் அளவு இடம் கிடைப்பது பெரிய காரியமாக உள்ளது.


சென்னையில் மட்டும் 1200 பள்ளிகளில் நல்ல மேடை அமைப்பு உள்ள கலையரங்கங்கள் உள்ளன. இதில் 78 பள்ளிகளில் சிறந்த ஒளி ஒலி அமைப்பு மற்றும் இருக்கையுடன் கூடிய அரங்கம் உள்ளது. இவை வருடத்தில் நான்கோ ஐந்தோ நாட்கள் மட்டுமே பயன்படுத்தபடுகின்றன  மற்ற நேரங்களில் அவை பூட்டப்பட்டு கிடக்கின்றதே அன்றி எவரும் பயன்படுத்த அனுமதிப்பதில்லை.


இது போலவே பொறியியல் கல்லூரிகள், தனியார் கலைக் கல்லூரிகள் சொந்தமான திறந்த வெளி மற்றும் நவீன அரங்குகள் நூற்றுக்கும் மேலாக உள்ளன. இதிலும் எவரும் அனுமதிக்கபடுவதில்லை.


மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூடங்கள் நாற்பதிற்கும் மேலாக உள்ளன. அது போலவே இருக்கைகள் கொண்ட அரங்குங்கள் நாலோ ஐந்தோ இருக்கின்றன. என்ஜிஒ மற்றும் கிறிஸ்துவ திருச்சபைகளிடமும் 50க்கும் அதிகமான கலை நிகழ்ச்சிகளுக்கான அரங்குகள் உள்ளன. அங்கும் அரிதாகவே நவீன நாடகம்  நிகழ்த்த அனுமதிக்கபடுகின்றது


குறைந்த கட்டணத்தில் இது போன்ற இடங்கள் கிடைக்கும் என்றால் கூட அதை பயன்படுத்தி கொள்ள பலர் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அறவே நவீன நாடகத்திற்கான ஒத்திகை அரங்கு கிடைப்பதில்லை என்பதே உண்மை.



நான் கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக நவீன நாடகங்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறேன். இந்த நாடகக் குழுக்கள் ஒத்திகைக்காக அலைந்து திரிவதைக் என் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்


1998 ல் நவீன நாடகம் ஒன்றின் ஒத்திகைக்காக ஒரு முறை நண்பரின் அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் அனைவரும் ஒன்று சேர்ந்தோம். அரைமணி நேரத்தில் அண்டை வீட்டு நபர்  எங்களை ஏதோ தீவிரவாதிகள் என்று பயந்து போலீஸில் தகவல் சொல்லிவிடவே ஒத்திகை அப்படியே நிறுத்தபட்டது. தங்கள் அமைதியைக் கெடுப்பதாக அந்த வீட்டு உரிமையாளர் எங்களுடன் சண்டையிட்டார். அதே ஆள் இன்று தன் சொந்த வீட்டை டிவி தொடர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டு சம்பாதித்து கொண்டிருக்கிறார்.


90களின் இறுதியில் நவீன நாடகத்திற்காக புத்துணர்வு அலை போல உருவானது. ஆடுகளம் என்ற நவீன நாடக்குழுவை ராமானுஜம் நடத்திக் கொண்டிருந்தார். அப்பணசாமி, ரோகாந்த்  மற்றும் நண்பர்கள் ஒன்று சேர்ந்து பிரெக்டின் நாடகம் ஒன்றை நிகழ்த்துவதற்காக முயற்சித்தார்கள். இந்த நாடக மொழியாக்கத்தில் நான் அவர்களுக்கு உதவி செய்தேன்.


வெவ்வேறு மேன்ஷனில் தங்கியிருந்த நாங்கள் ஒத்திகைக்காக மாலையில் எங்காவது ஒன்று சேர்வோம் . ஒரு நாள் தி.நகரில் உள்ள கல்யாண மண்டபத்தின் சமையல் அறைபகுதியில் மதியம் ஒன்று கூடி மாலை வரை ஒத்திகை நடக்கும். அடுத்த ஒத்திகைக்கு இடம் கிடைக்காது. அம்பத்தூர் பகுதியில் இருந்த ஒரு வீட்டில் சில நாட்கள் ஒத்திகை. அப்புறம் சில தினங்கள் கடற்கரையில் யாருமில்லாத பின்னிரவில் நடைபெறும் . இப்படியாக ஒரு நாடகம் நடத்துவதற்கு இருபது  இடங்களில்  ஒரு நாள் இரண்டு நாளாக ஒத்திகை பார்த்து அதை நிகழ்த்தினார்கள்.


இது சென்னை என்றில்லாமல் எல்லா நகரங்களுக்கும் பொருந்தக்கூடியது. மதுரையில் உள்ள சுதேசி நாடக்குழு நண்பர்கள் நவீன நாடகம் போடுவது என்று முடிவான நாட்களில் நாடகத்தில் ஆர்வம் கொண்ட ஆறுமுகம் என்பவரது வீடு புறநகரில் இருந்தது. அவரது துணைவியார் வர்த்தினி நாடகத்தில் நடிப்பார்கள்,ஆகவே அவர்கள் வீட்டு மொட்டைமாடியில்  மாலை கூடி நாடகபிரதி வாசிப்பது, ஒத்திகை செய்வது என்று நடக்கும். சில  மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஞாயிறு விடுமுறை என்பதால் ஒத்திகைக்கு கிடைக்கும். அங்கும் இதே போலவே அலைக்கழிப்பின் முடிவில் தான் நாடகம் போட முடிந்தது



அரவான் நாடகத்தை நண்பன் கருணாபிரசாத் இயக்கி நடித்த போது அதற்கான ஒத்திகை இடமின்றி அல்லியான்சே பிரான்சேயின் பின்பக்கத்திலும்,  கார்ப்பரேஷன் மைதானத்திலும் ஒரு மாதம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒத்திகை நடந்தது. இருட்டில் தீப்பந்த வெளிச்சத்தில் கொசுக்கடியும், மழை ஈரமுமாக நடந்த ஒத்திகை அங்கேயே மேடையேறியது.


நான் அறிந்த வரை நாடக போட முயற்சித்த அத்தனை பேரும் இந்த பிரச்சனையை தீவிரமாக எதிர் கொண்டிருக்கிறார்கள். பத்து வருடத்தின் முன்பாக நவீன நாடகத்தில் நடிப்பதற்கு பெண்நடிகைகள் கிடைக்கமாட்டார்கள். என்னிடம் நாடகம்  எழுதி தரவேண்டும் என்று கேட்பவர்கள் முதலிலே பெண்கள் இடம் பெறக்கூடாது என்ற நிபந்தனையுடன் தான் நாடகம் எழுதித் தரச் சொல்வார்கள்.  அது பத்து வருடத்தில் மாறியிருக்கிறது. ஆனால் ஒத்திகை செய்வதற்கோ, தங்கி இருந்து பயிற்சிகள் மேற்கொள்வதற்கோ இடமே கிடையாது


நவீன  நாடக இயக்குனர் முருகபூபதி இதற்காக தேரிக்காட்டிற்கு தன்நடிகர்களை அழைத்து சென்று கிராம மக்களோடு ஒன்றாகத் தங்கி கூட்டு வாழ்க்கை போல ஒரு மாசம் வாழ்ந்தே செம்மூதாய் என்ற நாடகத்தை நிகழ்த்தினார். இப்போது அவர் இயக்கிய நாடகத்திற்கும் ஒத்திகைக்காக திருவண்ணாமலைக்கு சென்று இடம் தேட வேண்டிய நெருக்கடியே உண்டானது.


சிங்கப்பூர் சென்றிருந்த போது அங்குள்ள நூலகத்தைப்  பார்வையிட்டேன். நூலக கட்டிடத்தின் ஒரு தளத்தில் நவீன நாடகங்கள் போடுவதற்கும் ஒத்திகைக்கும் என்றே ஒதுக்கியிருக்கிறார்கள். தமிழகத்தில் எவ்வளவோ நூலகங்கள் உள்ளன. அதில்  எதிலும் இது போன்ற வசதியை நான் கண்டதில்லை. கல்விபுலங்களில் உள்ள கலை அரங்கங்களை சினிமா படப்பிடிப்புகள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்துகின்றன. அதில் வருமானம் கிடைக்கிறது. அவர்களில் ஒரு சிலராவது நவீன நாடகம் போடுவதற்கு தங்கள் அரங்கினை ஆண்டிற்கு நாலு நாட்கள் இலவசமாக தரலாம். ஆனால் அப்படி எவரும் இது வரை முன்வரவேயில்லை


அதுபோலவே சென்னையில் இருபதுக்கும் மேற்பட்ட நவீன நாடக குழுக்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஒன்றிணைந்து ஏதாவது ஒரு அமைப்பாக இணைந்து தங்களது ஒத்திகை பிரச்சனையை தீர்த்து கொள்ள முயற்சிக்கலாம். அதுவும் சாத்தியமாகவில்லை. சமீபத்தில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அறிந்தேன். சந்தோஷமாக இருந்தது.


இந்த பிரச்சனை நாடகத்தோடு மட்டும் முடிந்து போய்விடக்கூடியதில்லை. மாறாக குறும்படங்கள் ஆவணப்படங்கள் போன்றவற்றை திரையிடுவதற்கும் இதுவே ஆதாரப் பிரச்சனை. ஆகவே மாற்று முயற்சிகளுக்கான கலாச்சார வெளியை உருவாக்குவது எப்படி என்பதைப் பற்றி இந்தத் துறை சார்ந்தவர்களும் அக்கறை கொண்டவர்களும் உடனடியாக கூட்டாக ஏதாவது முயற்சிகள் செய்ய வேண்டும்.


நான் அறிந்தவரை சில வழிகள் உள்ளன.


1) நகரில் உள்ள பள்ளி கலைஅரங்கம் மற்றும் மைதானங்களை விடுமுறை நாட்களில் இது போன்ற முயற்சிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளும்படியாக ஒரு அரசாணை வெளியிடலாம்.


2) புதிய நூலக கட்டிடம் கட்டப்படும் போது அதன் ஒரு தளம் இது போன்ற மாற்று முயற்சிகளுக்கான கலை அரங்கமாக உருவாக்கலாம்


3) அல்லது மாநகராட்சியோ, பண்பாட்டு துறையோ, சுற்றுலா துறையோ புதிய கலைவளாகம் ஒன்றினை கட்டி அதில் நவீன கலை வடிவங்கள் அத்தனைக்கும் இடம் அளிக்க முடியும்


4) மாநகராட்சி பூங்காவை மறுசீரமைப்பு செய்யும் போது அதில் சிறிய கலை அரங்கம் அமைக்கபட்டு முறையாக பராமரிக்கபட்டால் அதை பயன்படுத்திக் கொள்ள முடியும்.


5) இவை தவிர எங்கே என்ன அரங்குகள் உள்ளன. அவற்றின் கட்டணம் என்ன, அது எப்போது கிடைக்கும் என்பதை பற்றிய தகவல்கள் ஒரு இணையதளத்தில் அல்லது ஒருங்கிணைப்பு மையம் வழியாக திரட்டப்படலாம்.


பாண்டிச்சேரியில் இது ஒரளவு சாத்தியமாகியிருக்கிறது. நாடக ஒத்திக்கைக்கு என்று அங்கே அரசாங்க இடங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். கேரளாவிலும் கர்நாடகாவிலும் வங்காளத்திலும் நவீன நாடகம் குறித்த விழிப்புணர்வும் நிகழ்த்துதலும் அதிகமாகவே இருக்கின்றன. இடம் கிடைப்பதும் இவ்வளவு சிரமமானதில்லை.


தமிழில் நவீன நாடகம் என்பதை பற்றிய அறிமுகம் கூட சிறுநகரங்களில் நடைபெறவில்லை. கோமல் சுவாமிநாதன் சுபமங்களா நாடகவிழாவை தமிழகம் எங்கும் நடத்தி நவீன நாடகங்களுக்கான புதிய வாசலை திறந்து வைத்தார். அந்த முயற்சி அவர் மறைவோடு முடிந்து போய்விட்டது.


தேசிய நாடகப்பள்ளியின் உதவியோடு அவ்வவ்போது நடைபெறும் நாடக நிகழ்வுகள், மதுரையில் நடைபெறும் நிஜநாடக அமைப்பின் நாடகவிழா மற்றும்  புரிசையில் நடைபெறும் நாடகவிழா தவிர வேறு ஒருங்கிணைந்த நாடக விழாக்கள் இல்லை.


டிசம்பர் மாத இசைவிழாக்கள் இன்று சென்னையிலிருந்து மெல்ல கோவை மதுரை என்று விரிவு கொண்டுவிட்டன. ஆனால் நவீன நாடக நிகழ்வுகள் சென்னையிலே வெகுவாக குறைந்து வருகின்றன.


ஆகவே இதற்கான உடனடி தேவை நவீன நாடக குழுக்கள் ஒன்றிணைவதும் மாற்றுவெளியை உருவாக்கவும். பகிர்ந்து கொள்ளவும் தேவையான அக்கறையுமேயாகும்.


***


 

0Shares
0