
பத்மராஜனின் படங்கள் மீது எப்போதுமே எனக்கு விருப்பம் உண்டு. நேற்றிரவு அவர் இயக்கிய ஒரிடத்து ஒரு பயில்வான் படத்தை திரும்பப் பார்த்தேன். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் என்ற சுவடேயில்லை. இன்றைக்கும் மிக நெருக்கமாக உள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரம் திரைப்படவிழாவில் பத்மராஜனின் திரைப்படங்களுக்கென தனியான திரையிடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அவரது முக்கியமான பத்து திரைப்படங்களை ஒரு சேரப்பார்த்தேன். மலையாள சினிமாவில் பத்மராஜன் தனித்த ஆளுமை.
அவரது முக்கிய திரைப்படங்கள் நமக்கு பார்க்கான் முந்திரிதோப்பு, ஒரிடத்தொரு பயில்வான். தூவானத்தும்பிகள். மூணாம்பக்கம், பெருவழிஅம்பலம், கூடெவிடே, தேசாடனக்கிளி கரையில்லா, கள்ளன் பவித்ரன், திங்களாச்சே நல்ல திவசம், இன்னலே, ஞான் கந்தர்வன்.
ஆனால் இந்தப் படங்களை விடவும் இவர் திரைக்கதை எழுதிய ஐ.வி. சசி இயக்கிய இதா இவிடே வரு,வாடகைக்கு ஒரு இதயம், பரதன் இயக்கத்தில் உருவான ரதி நிர்வேதம், மற்றும் சத்திரத்தில் ஒரு ராத்திரி, தகரா, போன்ற படங்கள் மலையாள கவர்ச்சிபடங்களாக வெளியாகி தமிழகத்தில் வெற்றிகரமாக ஒடின. ஆனால் அந்தப் படங்களைக் காண வந்தவர்களில் எத்தனை பேர் அதை இயக்கியவர் பரதன் எழுதியவர் பத்மராஜன் என்று தெரிந்திருப்பார்கள். படம் பார்க்க வந்தவர்களின் நோக்கம் வேறு இல்லையா?
1980களின் துவக்கத்தில் வெளியான இந்தப் படங்களைக் காண்பதற்காக மதுரையில் நீண்ட வரிசையில் காத்திருப்பார்கள். இதற்கென விசேச திரை அரங்குகள் இருந்தன. வெவ்வேறு வயதுகளில் தனியான பார்வையாளர்கள் இருந்தார்கள். அவர்கள் முக்கியமாக கவனிப்பது படத்திற்கான போஸ்டர்களை.
குறிப்பாக பாலன் கே நாயர், பீமன் ரகு என்ற இருவருக்கும் தனியாக ரசிகர் மன்றம் அமைக்கும் அளவிற்கு ரசிகர்கள் இருந்தார்கள். முக்கியமான காரணம் இவர்கள் நடிக்கும் படங்களில் கட்டாயம் கற்பழிப்பு காட்சிகள் இருக்கும். பெண்களை ஒட ஒட விட்டுத் துரத்துவார்கள் என்ற அரிய நம்பிக்கை மக்களிடையே இருந்தது. அந்த நம்பிக்கையை இறுதிவரை பாலன்கே நாயரும் பீமன் ரகுவும் காப்பாற்றினார்கள்.
அதே பாலன்கே நாயர் ஒப்போள் என்ற படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கியிருக்கிறார் என்று நண்பர்களிடம் சொன்ன போது சத்தியமாக நம்ப மறுத்ததோடு அவர் போன்று கவர்ச்சிக்குத் துணை செய்யும் நம்பிக்கையான நடிகர்களை இப்போதுள்ள மலையாள படங்களில் காண முடிவதில்லை என்று வருத்தபட்டார்கள்.
பத்மராஜன், பரதன் மீது படிந்துள்ள இந்தக் கவர்ச்சி படிமம் அவர்களாலே விரும்பி உண்டாக்கி கொண்டவை. அதன்முன்பு வரை மெலோடிராமா மட்டுமே சினிமா என்று நம்பி வந்த மக்களை தன் பக்கம் கவனம் கொள்ள செய்ய வேண்டும் என்பதற்காகவே இது போன்ற பாலியல் சார்ந்த படங்களை உருவாக்கினார்கள் என்று என் மலையாள நண்பர்கள் சொல்கிறார்கள். இந்த படங்களின் வருகை மலையாள சினிமாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது நிஜமே
ஆனால் இவை மட்டுமே பரதன் பத்மராஜனின் அடையாளங்கள் இல்லை. அவர்கள் இருவருமே சிறந்த இயக்குனர்களாக பல முக்கிய படங்களை உருவாக்கியிருக்கிறார்கள். அது போலவே பத்மராஜனின் முக்கிய திரைக்கதைகளை சிறப்பாக படமாக்கியது பரதனே.அவர்கள் கூட்டணி மலையாள சினிமாவில் புதிய அலையை உருவாக்கியது.
பத்மராஜன் சிறந்த எழுத்தாளர். நாவலாசிரியர். அவரது சிறுகதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகி உள்ளன. திருச்சூர் ரேடியோ நிலையத்தில் வேலை செய்தவர். திருவனந்தபுரத்தில் படித்தவர். நடுத்தர குடும்பத்து மனிதர்.
1975 ம் ஆண்டு பிரயாணம் என்ற பரதன் படத்தில் திரைக்கதை ஆசிரியராக அறிமுகமானார். அதன் பிறகு அவர்கள் இருவரும் இணைந்து பல முக்கிய படங்களை உருவாக்கினார்கள். 1979ல் பெருவழி அம்பலம் என்ற படத்தின் மூலம் பத்மராஜன் இயக்குனர் ஆனார். அது அவரது நாவல். அதன் வெற்றிக்கு பிறகு உருவாக்கிய படமே ஒரிடத்து ஒரு பயில்வான்.
மல்யுத்தம் செய்யும் ஒரு பயில்வான் ஒரு கிராமத்திற்கு வந்து சேர்கிறான். அவனை தற்செயலாக சந்திக்கும் கிராமத்து டெய்லர் நெடுமுடி வேணு அவனைப் பயன்படுத்தி ஒரு போட்டி நடத்தி அதன்வழியாக தான் பணம் சம்பாதிக்க முடியும் என்று நம்புகிறார். அது போலவே இந்த போட்டிகளின் வழியே தனக்கென ஒரு அடையாளத்தையும் உருவாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருக்கிறது. ஆகவே பயில்வானை எப்படியாவது சரிக்கட்டி தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறார்.
பயில்வானோ உடல் அளவில் மிக உறுதியானவன். ஆனால் சோம்பேறி. சாப்பாடு, தூக்கம் என்றிருப்பவன். எதையும் யோசிக்கும் திறன் கிடையாது. ஆகவே அவன் நெடுமுடி வேணுவின் வரவேற்பை உண்மை என்று நம்பிவிடுகிறான்.
படத்தின் ஆரம்ப காட்சிகளாக பயில்வானை நெடுமுடி வேணு டீக்கடைக்கு அழைத்து போய் என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள் என்றவுடன் பயில்வான் அடுக்கடுக்காக முட்டைகளை உடைத்து குடிக்கும் காட்சியும், பயில்வான் குடிப்பதற்காக இரண்டு டீ நெடுமுடி வேணு ஆர்டர் செய்வதும், பயில்வான் வாழைபழங்களை சரசரவென பியத்து தின்பதும் குடல் குலுங்க செய்யும் நகைச்சுவைகள்.
பயில்வானின் வருகை கிராமத்தையே புரட்டி போடுகிறது. பயில்வான் தண்டால் எடுப்பது. பஸ்கி செய்வது போன்றவற்றை கிராமமே வேடிக்கை பார்க்கிறது. பயில்வான் குளிக்கிறான். கோழி மீன் வயிறு முட்ட சாப்பிடுகிறான். குறட்டை விட்டு தூங்குகிறான். அவன் மீதான மயக்கம் கலைய துவங்குகிறது. டெய்லரோ எப்படியாவது அவனை வைத்து சம்பாதித்து விட வேண்டும் என்று தொடர்ந்து செலவு செய்கிறார். இதற்காக மல்யுத்த போட்டிக்கு ஏற்பாடு செய்கிறார்,
யார் பயில்வானை எதிர்த்து சண்டையிடுவது. அதற்கு இன்னொரு பயில்வான் வேண்டுமே என்ற பிரச்சனை உண்டாகிறது. தனக்கு தெரிந்த பயில்வானை கடிதம் எழுதி வரவழைக்க பார்க்கிறார் உள்ளுர் பயில்வான். ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை, பயில்வானுக்கு எழுதப்படிக்க தெரியாது. முடிவில் பயில்வானுக்காக டெய்லரே கடிதம் எழுதி காத்திருக்கிறார். ஆனால் வெளியூர் பயில்வான் வர மறுக்கிறான்.
வேறு வழியில்லாமல் பக்கத்து ஊரிலிருந்து வரும் ஒரு ஆளோடு பிரச்சனை பண்ணி அவனை சண்டைக்கு இழுக்கிறார்கள். அவனொரு பயில்வானை ஏற்பாடு செய்கிறான் குஸ்தி போட்டி உறுதியாகிறது. அதை காண கட்டணம் வசூல் செய்கிறார். ஊரே திரண்டு வருகிறது.
இந்த காட்சிகள் படமாக்கபட்டுள்ள விதம் நிஜமாக ஏதோ ஒரு கிராமத்தினுள் நாம் இருப்பது போன்ற உணர்வை உண்டாகிறது
ஆண்களும் பெண்களும் திரண்டிருக்கிறார்கள். வேடிக்கை பார்க்க வந்த சிறுவர்களின் வியப்பு கலந்த முகங்கள். பெருமிதத்தோடு பயில்வானை அழைத்து வருகிறார் வேணு.அவன் மண்ணை தொட்டு வணங்குகிறான். தாள ஒசை பின்ணணியில் துவங்குகிறது. எதிராளி வருகிறான். அவனும் மண்ணை வணங்குகிறான். தாளம் அதிகமாகிறது. இருவரும் உடைமாற்றுகிறார்கள். பயில்வான் தன் உள்ளாடையை மாற்றுவதை இளம்பெண்கள் வெட்கத்துடன் பார்க்கிறார்கள். இசை நளினமடைகிறது. பயில்வான் தொடை தட்டுகிறான். தாளம் உயர்கிறது. தாவியோடி தன்புஜ பலத்தை காட்டுகிறான். இருவரும் மோதிக் கொள்ள துவங்குகிறார்கள். தாளம் உச்சநிலையை அடைகிறது. இந்த காட்சியில் உள்ள பின்ணணி இசை மிக பொருத்தமாக படத்தினை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறது.
பயில்வான் எளிதில் வெற்றி பெற்றுவிடுகிறார். பயில்வானை தன் ஊரிலே தங்க வைத்துவிட வேண்டும் என்று முடிவு செய்த டெய்லர் அவருக்கு உள்ளுரிலே ஒரு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார். இந்த காட்சிகளில் பயில்வான் கொள்ளும் வெட்கமும் அவரை நெடுமுடி வேணு சமாதானம் செய்வதும் அற்புதமான காட்சிகள்.
பயில்வான் திருமணம் நடைபெறுகிறது. முதலிரவில் பயில்வான் தன் ஆசை மனைவியோடு குஸ்தி சண்டை போடுகிறான். அவளுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அவளை தூக்கி கிறுகிறுவென சுற்றுகிறான். பயமும் சிரிப்புமாக அவள் கத்துகிறாள். இந்நாள் வரையான மலையாளப்படத்தில் இப்படியொரு காட்சி சிறப்பாக வந்ததேயில்லை. அவள் களைத்துபோய் படுக்கையில் விழுகிறாள். பயில்வான் தன்வேலை முடிந்துவிட்டது என்று உறங்க துவங்குகிறான். அவளோ காமம் பீறிட ஏமாந்து போனவளாக அதிர்ச்சியடைகிறாள்.
பயில்வான் உடல் அளவில் பலமானவன் ஆனால் அவன் பாலுணர்வு முடங்கி போனது. அவனால் மனைவியோடு சேர்ந்து பாலுறவு கொள்ள இயலாது என்பது அவளை அதிர்ச்சிக்கு உள்ளாகிறது. அன்றிலிருந்து பயில்வானின் உலகம் கேலிக்கு உரியதாகி போகிறது. அவன் தண்டல் பஸ்கி எடுப்பதை அவன் மனைவி கேவலமாக பார்க்கிறாள். முன்பு போல ஆசையாக சாப்பிட முடியவில்லை. வீட்டிற்கு வருவதற்கே கூச்சப்படுகிறான். மனைவியோ அவனை எப்படியாவது பாலுறவில் இச்சை கொள்ள செய்துவிட முயற்சித்து தோற்கிறாள்.
குற்றபோதம் கொண்ட பயில்வான் அந்த ஊரில் இருந்தால் தன்னால் வாழமுடியாது என்பதை உணர்ந்து கொண்டு அவளிடம் சொல்லாமல் கிளம்பி வேறு ஊருக்குப் போகிறான். அங்கிருந்தபடியே அவளுக்கு கடிதம் எழுதுகிறான். அவளோ அதே ஊரை சேர்ந்த வேறு ஒருவனோடு பழக துவங்குகிறாள். அந்த விஷயம் கிராமத்தில் கிசுகிசுவாக பேசப்படுகிறது. பயில்வானுக்கு அதை பற்றி தெரியப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
நீண்ட நாட்களுக்கு பிறகு பயில்வான் ஊருக்கு திரும்பி வருகிறான். அவனை ஏமாற்றிய மனைவியை கொன்றுவிட போகிறான் என்று பயப்படுகிறார்கள். அவனோ கோபத்தில் தன் மனைவியை வீட்டில் அடைத்து பூட்டிவிட்டு மனைவியோடு நெருக்கம் கொண்டுள்ளவனை அடித்து புரட்டுகிறான். மெலிந்த திரேகியாக அவன் அடிவாங்கி தண்ணீரில் விழுகிறான். ஆனாலும் பயில்வான் புரட்டி புரட்டி எடுக்கிறான்.
முடிவில் வீட்டினுள் சென்று மனைவியை கொல்ல முயற்சிக்கிறான். அவளோ கையில் அருவாளோடு அவனைத் தாக்க முயற்சிக்கிறாள். அவன் அருவாளை பிடுங்கி அவளை கொல்ல கழுத்தில் வைக்கிறான். அவள் முகம் மாறுகிறது. பயில்வான் பலவீனமான குரலில் தன்னை அவளுக்கு பிடிக்கவில்லையா என்று கேட்கிறான். அவள் இல்லை என்று ஊறுதியான முகபாவத்துடன் சொல்கிறாள். அருவாளை போட்டுவிட்டு அப்படியே விலகி போக துவங்குகிறான். பயில்வானின் மனைவி தன்னை நேசித்து அடிவாங்கி கிடப்பவனை ஒடிப்போய் தூக்குகிறாள். பயில்வான் யாருமற்ற சாலையில் தனியே நடந்து போகிறான் என்பதோடு படம் முடிவடைகிறது .
இந்த படத்தில் பயில்வானாக நடித்திருப்பவர் ரஷீத். படத்தின் ஒளிப்பதிவு விபின்தாஸ். இசை ஜான்சன். 1981 ஆண்டில் வெளியானது.
படம் ஆணின் உடல் எப்படி அதிகாரத்தின் அடையாளமாக மாற்றபடுகிறது. பயில்வான் என்பவனும் ஒரு மனிதன் என்பதை எப்படி நாம் மறந்துவிடுகிறோம். அதுபோலவே சாகச கலைகள் அழிந்துவரும் சூழலில் பயில்வான்கள் என்ன ஆவார்கள். அவர்கள் யாரோடு சண்டையிட்டு தங்கள் வீரத்தை காட்டிக் கொள்வார்கள் என்று ஆழமான பார்வைகளை படம் விவரிக்கிறது
ஒரு காலத்தில் சாமுராய்கள் பெரிய போர்வீரர்களாக இருந்த நிலைமாறி சாப்பாட்டிற்கு வழியில்லாமல் எங்காவது வேலை தேடும் நிலைக்கு தள்ளபட்ட சாமுராய் பற்றி அகிராகுரசோவா படம் எடுத்திருக்கிறார். அப்படியொரு நிலை தான் பத்மராஜனின் பயில்வானுக்கும் ஏற்படுகிறது.
சத்யஜித்ரேயின் அபராஜிதோவில் பயில்வான்கள் காசியின் படித்துறைகளில் குஸ்தி பயிற்சி செய்வதை ரே மிக அழகாக படமாக்கியிருப்பார். சிறுவன் அப்பு அதை வேடிக்கை பார்ப்பான். காசியில் குஸ்தி சண்டை நடப்பது மிக பராம்பரியமான செயல். அதற்கென தனி களம். பார்வையாளர்கள் இருந்தார்கள்.
வெவ்வேறு ஊர்களில் இருந்து மல்யுத்த வீரர்களை அழைத்து வந்து மல்யுத்த போட்டி நடத்துவதை அந்த காலத்தில் இருந்த பீடிக்கம்பெனிகள் மற்றும் சோடா தயாரிப்பவர்கள் விளம்பரத்திற்காக செய்தார்கள். அந்த நிகழ்வுகளை நினைவூட்டுகிறது இப்படம்
அது போலவே நெடுமுடி வேணு கதாபாத்திரம் சுவர் இல்லாத சித்திரங்கள் என்ற பாக்யராஜ் படத்தில் டெய்லராக வரும் கவுண்டமணியை பெரிதும் நினைவுபடுத்துகிறது. பத்மராஜன் படம் வெளியாவதற்கு இரண்டு வருசங்கள் முன்னால் சுவரில்லாத சித்திரங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
தவளை பிடிக்க வருகின்ற கிராமத்து ஆட்களில் இருந்து படம் துவங்குகிறது. தவளை ஒரு குறியீடு போலவே படத்தில் வெளிப்படுத்தபடுகிறது.
பத்மராஜன் படங்களின் பொதுதன்மை அது பெண்களின் அகவுலகை பற்றி பெரிதும் பேசுபவை.குறிப்பாக பெண்கள் தங்களுக்கான வெளியின்றி வீட்டிற்குள்ளாகவே ஒடுங்கி கிடக்கிறார்கள். பால் உறவானது அவர்கள் மீது திணிக்கபடுகிறது. விருப்பமான வாழ்க்கை எப்போதுமே மறுக்கபடுகிறது. யாரையாவது சார்ந்த வாழ வேண்டிய நிர்பந்தம் உள்ளது. வன்பாலுறவு என்பது அவர்கள் சந்திக்கும் வன்முறை. குடும்பத்தை காப்பாற்ற வேண்டி பெண்கள் தங்கள் அக ஆசைகளை கூட துறக்கிறார்கள் என்று ஒவ்வொரு படத்திலும் பெண்களின் அக புற விஷயங்களில் உண்மையான அக்கறை காட்டியவர் பத்மராஜன்.
அது போலவே அதிகாரம் தான் ஆணை உயர்வானவன் என்று ஆக்கியிருக்கிறது. அவன் தனக்கு கீழ் உள்ள எல்லாவற்றையும் அடக்கி வைக்கவே ஆசைப்படுகிறான். குடும்பம் என்ற அமைப்பு சிதறும் போது அவன் அடையாளம் அற்றவன் ஆகிவிடுகிறான் என்று பத்மராஜனின் படங்கள் வெளிப்படுத்துகின்றன
பத்மராஜனின் படங்களில் வரும் கதாநாயகர்கள், கதாநாயகிகள் இயல்பானவர்கள். அவர்கள் தன் விருப்பத்தின் பாதையில் பயணம் செய்கின்றவர்கள். இருப்பிடத்திலிருந்து விலகி இன்னொரு இடத்திற்கு அவர்கள் வந்து சேர்வதும் அங்கே அவர்கள் கொள்ளும் பிரச்சனைகளுமே பெரிதும் அவர் கதைக்களன்களாகி உள்ளன.
பால்யத்தில் பத்மராஜனுக்குள் பதிந்து போயிருந்த கிராம விழாக்கள், சடங்குகள், நகர வாழ்க்கை பற்றிய கற்பனைகள், கிராமத்திற்கு வந்து சேரும் கலைஞர்கள். நகரில் ஒரு விதமாகவும் கிராமத்தில் வேறு ஒரு ஆள் போலவும் நடந்து கொள்ளும் இரட்டைதன்மை கொண்ட மனிதர்கள், யாவும் அவர் திரைப்படத்தில் வெளிப்பட்டார்கள்.
அடையாளமின்மை தான் அவர்களின் முக்கிய பிரச்சனை. தாங்கள் யாராக அறியப்படுகிறார்களோ அதிலிருந்து விலகி செல்ல அவர்கள் யத்தனிக்கிறார்கள். அது போலவே பாலுறவில் ஏமாற்றம் கொண்டவர்களே அவர் படங்களில் அதிகம் சித்தரிக்கபடுகிறார்கள். தேசாடனக்கிளி கரையில்லா படத்தில் கெடுபிடியான பள்ளியிலிருந்து தப்பி சென்று தனித்து வாழும் இரண்டு மாணவிகளுக்குள் உள்ள உறவு பெயரிட்டு விளக்கி சொல்ல முடியாதது. அவர்கள் பிரிந்துவிடுவோம் என்ற சூழலில் தற்கொலை செய்துவிடுகிறார்கள். அந்த மாணவிகள் தங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க செய்யும் முயற்சிகளும் அதன் சிக்கல்களும் உண்மையானவை.
பத்மராஜனின் பெரும்பான்மை படங்களுக்கு எடிட்டிங் செய்தது லெனின். இசையமைத்தவர் இளையராஜா. அவர்களோடு பத்மராஜனுக்கு நெருக்கமான உறவு இருந்தது.
தன்னுடைய முதல்நாவலான நட்சத்திரங்களே காவல் என்ற புத்தகத்திற்கு கேரள சாகித்ய அகாதமி பரிசு பெற்ற பத்மராஜன் தன் முதல்படத்தில் சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்றார். ஒரிடத்து ஒரு பயில்வான் கோலாலம்பூர் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பரிசு பெற்றது.
பத்மராஜன் படங்கள் அடித்தட்டு மக்களைப் பெரிதும் கவனம் கொண்டிருந்தது. ஒடிப்போனவர்கள், வேசைகள், நாடோடிகள், ஒதுக்கபட்டவர்கள், என்று அவர் படங்களில் முக்கியத்துவம் பெற்ற கதாபாத்திரங்கள் ஏராளம்.
இவரது திங்களாச்சே நல்ல திவசம் படத்தினை ஜப்பானிய இயக்குனரான ஒசுவின் டோக்யோ ஸ்டோரியோடு ஒப்பிட்டு பார்க்க முடியும். இரண்டும் கைவிடப்பட்ட பெற்றோர்களின் துயரக்கதையை சொல்கின்றது.
பத்மராஜன் படங்களின் தலைப்புகள் மிகுந்த கவித்துவமானவை. பைபிளில் இருந்தும் கிருஷ்ணனை பற்றிய படிமத்திலிருந்தும் தனது படத்திற்கான ஆதார புள்ளியை உருவாக்கி கொள்ள முடிந்த இவர் ஒரு தேர்ந்த கதைசொல்லியாக திரையில் பல நுண்மைகளை உருவாக்கினார்.
பத்மராஜன் படங்களில் விசித்திரமான முடிவுகள் கொண்ட கிளைமாக்ஸ் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அது போலவே 1991ம் ஆண்டு ஞான் கந்தர்வன் படத்தின் வெளியிட்டினை பார்வையிடுவதற்காக காலிகட்டிற்கு வந்தவர் அங்கிருந்த ஒரு ஹோட்டல் அறையிலே இறந்து போனார். அவரது எதிர்பாரத மரணம் மலையாள சினிமா உலகை உலுக்கியது.
இவரது பெருவழி அம்பலம் படத்தின் திரைக்கதை மீரா கதிரவனால் மொழியாக்கம் செய்யப்பட்டு தமிழில் வெளியாகி உள்ளது.
தற்போது காழ்சா, தன்மந்திரா போன்ற படங்களை இயக்கியுள்ள பிளஸி பத்மராஜனின் இணை இயக்குனர். தன்மந்திரா படத்தின் கதை பத்மராஜனின் கதையே.
அவர் இயக்கிய படங்கள்.
Peruvazhiyambalam(1979) Kkallan Pavithran (1981) Oridathoru phayalvan (1981) Novemberinte Nashtam (1982) Koodevide (1983)Parannu parannu Parannu (1984) Thinkalazhcha Nalla Divasam (1985) Desadanakkili Karayarilla (1986)Kariyilakkattu Pole (1986) Arappatta Kettiya Gramathil (1986) Namukku Paarkan Munthiri Thoppukal (1986)Nombarathi Poovu (1987) Thoovana Thumbikal (1987) Aparan (1988) Moonnam Pakkam (1988) Season (1989) Innale (1990) Njan Gandharvan (1991)
***