ஹாலிவுட் இயக்குனர்களில் பில்லி வொயில்டர் மிக முக்கியமானவர்.
இவரது The Apartment, Some Like It Hot, Sabrina, Double Indemnity,The LostWeekend போன்ற படங்களைதேடித்தேடி பார்த்திருக்கிறேன்.
ஒவ்வொன்றும் தனித்துவமானவை.
இவரது ஆகச்சிறந்தபடமாக நான் எப்போதும் கருதுவது சன்செட் பொலிவார்டு (SUNSET BOULEVARD). இருபதுக்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தை கறுப்புவெள்ளை காவியம் என்றே சொல்வேன்.
சினிமாவைப் பற்றிய சினிமா என்பது பெரும்பாலும் தோல்வியுற்ற வகையாகவே இருந்திருக்கிறது. அரிதாகவே ஒன்றிரண்டு படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. பில்லிவைல்டரின் இப்படம் Film noir எனப்படும் குற்றமும் அது சார்ந்த ஒடுக்கப்பட்ட, விசித்திர மனநிலையும் விவரிக்கும் படவகையில் சிறப்பானதாகக் கொண்டாடப்படுகிறது.
மௌனப்பட உலகின் வெற்றி பெற்ற நாயகியாக இருந்த ஒரு நடிகை இன்று சினிமா உலகால் புறக்கணிக்கபட்டவளாக தனியே ஒரு பேய் பங்களா போன்ற ஒன்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். மறுபடியும் சினிமா நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்ற வெறி அவளுக்குள் கொந்தளிக்கிறது. அந்த பெண்ணிடம் எதிர்பாராத விதமாக ஒரு திரைக்கதை ஆசிரியன் மாட்டிக் கொள்கிறான். அவர்கள் இருவருக்குள்ளும் உருவாகும் நட்பும் அவளது தீராத ஆசைகளும், கனவுகளுமே படத்தின் மையக்கரு. மௌனப்பட உலகைப்பற்றி இவ்வளவு நுட்பமான, ஆதங்கமான திரைப்படம் வேறு எதையும் நான் கண்டதில்லை. நார்மா என்ற அழுத்தமான பெண்கதாபாத்திரத்திற்கு நிகராக ஹாலிவுட் படம் இன்று வரை உருவாக்கபடவில்லை
ஹாலிவுட் திரைப்படங்களின் மிகச்சிறந்த துவக்ககாட்சி என கூறுமளவு இந்த படத்தின் துவக்ககாட்சி இடம் பெற்றிருக்கிறது. பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள சன்செட் பொலிவார்டு என்ற வீட்டின் உட்புறத்தில் உள்ள நீச்சல் குளத்தில் ஒரு ஆள் சுடப்பட்டு செத்து மிதந்து கொண்டிருக்கிறான். தண்ணீருக்குள்ளிருந்து கேமிரா மிதக்கின்றன உடலைக் காட்டுகிறது.
அவனது சாவைப்பற்றி அறிந்த பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள் அந்த வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். பத்திரிக்கையாளர்கள், பரபரப்புகள் வந்து சேர்வதற்கு முன்பாக ஒரு குரல் அவனது வாழ்க்கை கதையை விவரிக்கத் துவங்குகிறது. ஒரான் பாமுக்கின் என்பெயர் சிவப்பு என்ற நோபல் பரிசு பெற்ற நாவலும் கூட இப்படி தான் துவங்குகிறது.ஒருவேளை பாமுக் சிறுவயதில் இந்தப் படத்தினை பார்த்திருக்கவும் கூடும்.
செத்துகிடப்பவன் பெயர் ஜோ கில்லிஸ். இவன் ஒரு திரைக்கதை ஆசிரியன். ஹாலிவுட் சினிமாவிற்குள் எப்படியாவது தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டுவிட வேண்டும் என்று போராடிக் கொண்டிருப்பவன். இதற்காக திரைக்கதைகளோடு ஸ்டுடியோ ஸ்டுடியோவாக அலைந்து கொண்டிருக்கிறான். வருமானம் இல்லாமல் போனதால் கடன் வாங்கி தினசரி வாழ்வை ஒட்டுகிறான். கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு துரத்திக் கொண்டிருக்கிறார்கள். அவனது ஒரே சொத்தாக இருப்பது பிளைமவுத் கார் மட்டுமே . அதைக் கடனுக்கு பறிமுதல் செய்வதற்காக நீதிமன்ற உத்தரவை வாங்கிவிட்ட கடன்காரர்கள் காரை மீட்கத் துரத்துகிறார்கள்.
இந்த சிக்கலில் இருந்து மீள்வதற்காக தனது திரைக்கதை ஒன்றை வாங்கி கொள்ளும்படியாக ஷெல்ட்ரக் என்ற தயாரிப்பாளரிடம் போய் பேரம் பேசுகிறான். அவர் மறுக்கிறார். கடனாகவாவது கொஞ்சம் பணம் தாருங்கள் என்று கெஞ்சுகிறான் ஜோ. அங்கே பெட்டிஷீபர் என்ற இளம்பெண்ணைச் சந்திக்கிறாள். அவள் அவனது திரைக்கதை சுவாரஸ்யமில்லாமல் இருக்கிறது என்று விமர்சனம் செய்கிறாள். அதனால் கில்லிஸிற்கு கடனும் கிடைப்பதில்லை.
பகுதிநேரமாக அவன் ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் வேலைசெய்கிறான். அங்கே கடன் கேட்க போகிறான். அப்போது அவன் காரைப் பறிமுதல் செய்ய ஆட்கள் துரத்துகிறார்கள்.
அவர்களிடமிருந்து தப்பிப் போகும் போது கார் ரிப்பேராகிவிடவே ஒரு பழங்கால பங்களா ஒன்றின் உள்ளே தன் காரை நிறுத்திவிட்டு அந்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று வேடிக்கை பார்க்கிறான். அந்த வீட்டில் பணியாற்றும் மாக்ஸ்வான் என்ற பட்லர் அவனை உள்ளே அழைத்து போய் அவனுக்காக மேடம் மாடியில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறான். புரியாமல் மாடியேறி போகிறான் கில்லிஸ்.
அங்கே நார்மா டெஸ்மெண்ட் என்ற வயதான நடிகையைச் சந்திக்கிறான். அவள் மௌனப்பட உலகின் வெற்றிகரமான நடிகை. ரசிகர்களின் மனதில் இருந்து என்றோ மறைந்து போன அவள் உயிரோடு இருப்பதே கில்லிஸிற்கு வியப்பாக இருக்கிறது. அவள் தன்னை வேறு யாரோ என்று தவறாக எண்ணிக் கொண்டதைப் பற்றி விவரிக்கிறான். அவளது செல்லப்பிராணியான சிம்பன்சி குரங்கு செத்துவிட்டது என்றும் அதை முறையாக அடக்கம் செய்ய ஆட்கள் வருதவதற்காக தான் காத்திருப்பதாகச் சொல்கிறாள். அவளது வீடு. ஒப்பனை, பகட்டான அலங்காரம் யாவும் கடந்த கால வாழ்வில் இருந்து அவள் மீளவேயில்லை என்பதைக் காட்டுகிறது.
அவள் கில்லிûஸ யாரென விசாரிக்கிறாள். அவன் ஒரு திரைக்கதை ஆசிரியர் என்றதும் தான் சலோமி என்ற ஒரு திரைக்கதையை எழதிவருவதாகச் சொல்லி அவன் தனக்கு உதவி செய்ய முடியுமா என்று கேட்கிறாள். ஆரம்பத்தில் தயங்குகிறான் கில்லிஸ். பிறகு அவள் வாரம் 500 டாலர் பணம் தருவதாகச் சொன்னதும் ஒத்துக் கொள்கிறான். அவள் கில்லிûஸ அங்கேயே இரவு தங்கிக் கொள்ளச் சொல்கிறாள்.
விடிந்து எழும்போது அவனது அறையில் இருந்த பொருள்கள் அத்தனையும் காலி செய்யப்பட்டு நார்மாவின் வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டிருப்பதை அறிகிறான். நோரா பிடிவாதமானவள் என்பது அவனுக்குப் புரிகிறது. பிரம்மாண்டமான வீட்டில் தனியே வீட்டில் வசிக்கும் நோரா டெஸ்மாண்ட் இப்போதும் தனக்கு ரசிகர்கள் தினம் ஆயிரம்கடிதம் எழுதுவதாக நம்புகிறாள். அதனால் தன்னை எப்போதுமே ஒப்பனை செய்து கொண்டு தான் நடிக்க உள்ள புதிய படம் பற்றிய கனவுகளுடன் இருக்கிறாள்.
அவளை ஏமாற்றி பணம் பறிக்கத் துவங்குகிறான் கில்லிஸ். அதே வேளையில் அவள் அறியாமல் வீட்டில் இருந்து இரவில் வெளியேறிப் போய் முன்பு தயாரிப்பாளர் அறையில் சந்தித்த பெட்டி ஷீபர்ûஸ சந்தித்து அவளோடு பழகத்துவங்குகிறான். அது காதலாக மாறுகிறது. இருவருமாக ஒரு திரைக்கதையை எழுதத் துவங்குகிறார்கள்.
நார்மா தான் நடித்த படங்களை தானே திரையிட்டு ரசிக்கிறாள். அதை கில்லிஸ் பார்த்து ரசிக்க கட்டாயப்படுத்துகிறாள். அவனுக்காக மௌனப்படத்தில் இருந்து காதல்காட்சிகளை நடித்துகாட்டுகிறாள். கில்லிஸின் போலிஅன்பால் மகிழ்ந்து அவனுக்குப் புதிய உடைகள், ஸ்போர்ட்ஸ் கார் என்று வாங்கித் தருகிறாள். தனது கடனில் இருந்து மீள அவளைப் பயன்படுத்திக் கொள்கிறான் ஜோ கில்லிஸ்.
புதுவருசம் பிறக்க உள்ளது. கில்லிஸ் மீதான தனது காதலைச் சொல்ல ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்கிறாள் நார்மா. இசை நடனம் என்று துவங்குகிறது. தன்னை நார்மா காதலிப்பதை அறிந்து ஆத்திரப்படுகிறான். இந்தக் கிழவியிடம் மாட்டிக் கொண்டுவிட்டோமே என்று வெறுத்துப் போய்விடுகிறான். அவளிடமிருந்து தப்பி வெளியே போய் நண்பர்களின் புது வருசப்பார்ட்டியில் கலந்து கொள்கிறான். அவனது புறக்கணிப்பைத் தாங்க முடியாமல் நார்மா தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறாள். தகவல் அறிந்து ஒடிவருகிறான் கில்லிஸ். அன்றிலிருந்து நார்மாவை விட்டு அவனால் விலகிப் போக முடியவேயில்லை.
தனது திரைக்கதையை பிரபல இயக்குனர் சிசில் பி டிமிலி இயக்க வேண்டும் என்று ஆசைப்படும் நார்மா அதற்காக அவரது உதவியாளர்களைத் போனில் தொடர்பு கொண்டு டிமிலி தனது திரைக்கதையைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று அடிக்கடி கேட்கிறாள். யாரும் முறையாக அவளுக்கு பதில் சொல்வதேயில்லை.
ஒரு நாள் அவளது வீட்டிற்கு ஹாலிவுட் ஸ்டுடியோ ஒன்றில் இருந்து போன்வருகிறது. அவளிடம் உள்ள பழைய கார் ஒன்று படத்தில் நடிக்கத் தேவை என்பதற்காக ஸ்டுடியோவில் இருந்து பேசுகிறார்கள். அவளோ தன்னை மறுபடி நடிக்க கூப்பிடுகிறார்கள் போலும் என்று தவறாக நினைத்து கொண்டு தனது பழைய காருடன் ஸ்டுடியோவிற்குப் போகிறாள்.
அங்கே படப்பிடிப்பு அரங்கில் இருந்த சிசில் பி டிமிலியைத் தேடிப்போய் சந்திக்கிறாள். சிசில்பி டிமிலி அவளை வரவேற்று தனது இருக்கையில் அமரச் செய்து படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க சொல்கிறார். மௌனப்படத்தில் இருந்து டாக்கி எனும் பேசும்படம் வந்ததை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. பேசும்படத்தில் நடிப்பை விட வார்த்தைகள் முக்கியமாகிவிட்டது என்று குற்றம் சொல்கிறாள். நார்மாவை எப்படி வெளியே அனுப்புவது என்று புரியாமல் டிமிலி திண்டாடுகிறார். திடீரென அவள் மீது ஒரு ஒளிவட்டம் பாய்கிறது. அந்த ஒளியில் அவள் ஒரு தேவதை போல மின்னுகிறாள்.
நார்மா படப்பிடிப்பு அரங்கிற்குள் வரும் அந்தக் காட்சி மிக மிக அற்புதமானது. ஸ்டுடியோ மாறியிருக்கிறது. படப்பிடிப்பு தளங்கள் உருமாற்றம் கொண்டுள்ளன. அவளை அங்குள்ள ஒரு காவலாளி மட்டுமே அடையாளம் கண்டு கொள்கிறான். அவள் அதை பெரிய விசயமாக நினைக்கிறாள். படப்பிடிப்பு அரங்கின் உள்ளே காரில் போய் இறங்குகிறாள். அரங்கில் அவள் வந்ததும் கடந்தகாலம் மனதில் ஒடி மறைகிறது. இந்தக் காட்சியில் நார்மாவின் முகபாவங்களும் அதில் வெளிப்படும் பெருமிதமும் ஏக்கமும் அவள் நடித்த அதே இடத்தில் இன்று வேறு ஒரு நடிகை இருப்பதும், பழைய லைட் மேன்கள் அவளை அடையாளம் கண்டு கொண்டு பாராட்டுவதும், அவள் இன்றும் தனக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பெருமை கொள்வதுமாக ஒரே காட்சியின் வழியே உன்னதமான உணர்வெழுச்சியை உருவாக்கிவிடுகிறார் பில்லிவைல்டர்.
நார்மா தனது கடந்த காலத்திலிருந்து மீளவே இல்லை என்பதை உணர்ந்து கொண்ட சிசில் பி டிமிலி அவளை ஆறுதல் படுத்தி அனுப்பிவைக்கிறார். தான் மறுபடியும் நடிக்கப் போகிறோம் என்று கருதிய நார்மா தன்னை அழகுபடுத்திக் கொள்வதும், உடலை வருத்தி பயிற்சிகள் செய்வதும் உணவு கட்டுபாடு கொள்வதுமாக அவளது அவலநிலை காட்சிகளாக விரிகிறது.
இதற்கிடையில் கில்லிஸின் காதலி பெட்டி ஷீபர்ஸ் உண்மையை அறிந்து கொண்டு தானே போன் செய்து நார்மாவிடம் கில்லிஸ் அவளைக் காதலிக்கவில்லை. பணத்திற்காக அவளை ஏமாற்றுகிறான் என்பதை சொல்லிவிடுகிறாள். அதை நார்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆத்திரம் கொண்டு கத்துகிறாள்.
அப்போது அந்த வீட்டில் டிரைவர், பட்லர், நார்மாவின் உதவியாளராக என பல்வேறு வேலைகள் செய்துவரும் மேக்ஸ்வான் முன்பு தான் ஒரு திரைப்பட இயக்குனர் என்றும் தானே நார்மாவை முதன்முறையாக சினிமாவில் அறிமுகப்படுத்தியவர், அவளது முன்னாள் கணவன் என்று சொல்லி தனது கடந்தகாலத்தை விவரிக்கிறான். மாக்ஸ்வான் அந்த நடிகையை எவ்வளவு நேசிக்கிறார் என்று வியந்து போய்விடும் கில்லிஸ் நார்மாவை விட்டு விலகிப் போக முடிவு செய்து அவளிடம் எல்லா உண்மைகளையும் முகத்திற்கு நேராகச் சொல்லிவிடுகிறான்.
அத்துடன் அவளை இப்போது சினிமா உலகில் யாரும் சீந்துவதேயில்லை. அவள் வெறும்பிம்பம் மட்டுமே என்று கேலி செய்கிறான். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவள் தனது துப்பாக்கியால் கில்லிûஸ இரண்டு முறை சுடுகிறாள். கில்லிஸ் நீச்சல் குளத்தில் செத்துவிழுகிறான்.
அவளை கைது செய்ய காவலர்கள் வந்து சேர்கிறார்கள். மாக்ஸ்வான் அவளிடம் வீட்டிலே படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அதற்காக நிறைய புகைப்படக்கலைஞர்கள் வந்திருக்கிறார்கள் என்று சொல்லி ஏமாற்றி அவளை அறையில் இருந்து கிழே அழைத்து வருகிறான். மிதமிஞ்சிய ஒப்பனையுடன் இறங்கிவரும் நார்மா எனது க்ளோசப் காட்சிக்காக தயாராக இருக்கிறேன் சிசில்பி டிமிலி என்று சொல்லியபடியே படியை விட்டு இறங்கிவருகிறாள். பத்திரிக்கை கேமிராக்கள் அவளை படம் எடுக்கின்றன. அப்போது அவள் முகத்தில் தோன்றும் பயம், வெறுப்பு, தன்னை யாரும் நேசிக்கவில்லையே என்ற ஆதங்கம், தான் மறுபடியும் நடிக்க போகிறோம் என்ற ஆசை என அவள் தன் கனவில் இருந்துமீளவேயில்லை என்பதுடன் படம் நிறைவு பெறுகிறது.
சினிமா நட்சத்திரமாக பெயர் புகழுடன் வாழ்ந்துவிட்டு பின்பு அடையாளமற்றுப் போன பலகலைஞர்களின் சாயல்களை இந்தப் படத்தில் காணமுடிவதே இதன்சிறப்பம்சம். நார்மா ஒரு குறியீடு. மௌனசினிமாவின் அடையாளம். அவள் அந்த உலகில் இருந்து மீளமுடியாமல் இருக்கிறாள். மௌனப்பட உலகின் நாயகர்களை தன் வீட்டிற்கு அழைத்து விருந்து தருகிறாள். கடந்த காலத்தில் ஏற்பட்ட சம்பவங்களை நினைத்து தானே சிரித்து கொள்கிறாள்.
அவளை இயக்கிய மாக்ஸ் வான் அவளால் ஈர்க்கபட்டு அவளுக்காக வாழ்நாள் முழுவதும் சேவை செய்கிறான். ஆனாலும் அவளால் தன் தனிமையை வெற்றிக் கொள்ள முடியவில்லை. அவளுக்குள் சுரந்து நிரம்பிய அன்பின் சாற்றை ஒரு மிடறு பருகக்கூட எவரும் அவளை நாடிவரவில்லை. கசப்பில் ஊறி திளைக்கிறாள். கோபத்தால் மட்டுமே அதை கடக்க முடிகிறது. அதனால் மிதமிஞ்சி கோபப்படுகிறாள். அவளை சமாதானப்படுத்தும் ஜோவை தன் வயதை மறந்து குழந்தையென கொஞ்சுகிறாள். அவன் தன்னை புறக்கணிக்கும் போது கதறி அழுகிறாள்.
வாழ்க்கை எந்த திரைக்கதையை விடவும் அதிக புதிரானது என்பதையே படம் விளக்குகிறது. பில்லிவைல்டர் மர்லின் மன்றோவை வைத்து முக்கிய படங்களை இயக்கியவர். மர்லினின் நிஜப்பெயர் நார்மா ஜீன். நார்மா என்ற பெயர் மீதான வசீகரம் இந்தக் கதாபாத்திரத்தினை உருவாக்க தூண்டியிருக்ககூடும். படம் பார்க்கையில் நிறைய இடங்களில் சாவித்திரியின் நினைவு பொங்கி மனதை கனக்க செய்தது.
திரை ஒரு கனவு வெளி. அதற்குள் நுழைபவர்கள் அதிலிருந்து மீள்வது எளிதில்லை. நார்மாவாக நடித்திருப்பவர் மௌனப்படஉலகின் பிரபலமான நடிகை குளோரியா ஸ்வான்சன். இது அவளது சொந்தக்கதை போலவே அமைந்திருக்கிறது. குளோரியா மௌனப்படங்களில் புகழ்பெற்றவர். அதிலிருந்து பேசும்படங்களுக்கு நாயகியாக சில காலம் பணியாற்றி பின்பு சொந்தகாரணங்களால் திரையுலகை விட்டுவிலகி ஒதுங்கி வாழ்ந்தவர். இப்படம் குளோரியாவிற்கு மீண்டும் ஒரு முறை நட்சத்திரமாகும் சாத்தியத்தை தந்தது. அதில் மிகப்பெரிய புகழ்பெற்றார். நோரா டெஸ்மாண்டிற்கு படத்தில் கிடைக்காத அந்த வாய்ப்பு குளோரியாவிற்குச் சாத்தியமானது. படம் முழுவதும் அவளது உணர்ச்சிபாவங்கள் ஒளிர்கின்றன. தனது கடந்தகாலத்தை எண்ணும் பெருமிதம், தனிமை, நிராகரிப்பின் வலி என்று நடிப்பின் உச்சமான அமைந்திருந்தது குளோரியாவின் பங்களிப்பு.
படம் முழுவதும் வசனங்கள் வெகு கவித்துமாக எழுதப்பட்டுள்ளது. நார்மாவை முதன்முதலாக சந்திக்கும் ஜோ அவளிடம் நீங்கள் மிகப்பெரிய நடிகையில்லையா என்று கேட்டதும் அவள் தான் எப்போதுமே மிகப்பெரியவள் ஆனால் படங்கள் தான் சிறியவை என்று சொல்கிறாள். சிசில் பி டிமிலியிடம் ஒரு உதவியாளர் நார்மா என்ற ஆயிரம்வருச பழமையான ஒரு நடிகை அவரை தேடி வந்திருப்பதாக கேலி செய்கிறான். அதை கேட்ட டிமிலி நான் ஒருகாலத்தில் அவளது ஞானத்தந்தை என்று சொல்லி சிரிப்பதோடு இளவயதில் அவள் மிகச் சிறந்த நடிகை. பத்திரிக்கைகளின் மிக மோசமான விமர்சனம் மற்றும் இடைவிடாத நடிப்பு இரண்டுமே அவளை இந்த நிலைக்கு உள்ளாக்கியிருக்கிறது. எந்த நல்ல ஆன்மாவும் இது போன்ற மோசமான சூழலால் கெட்டுபோய்தான்விடும் என்கிறார்.
மறுபடியும் அவள் நடிக்கப் போகிறாளா என்று ஜோ நார்மாவிடம் கேட்கும் போது அவள் தன்னால் மறுபடியும் என்ற வார்த்தையைச் சகித்து கொள்ளமுடிவதேயில்லை. அந்த வார்த்தை தன்னை பெரிதும் அவமதிக்கிறது என்கிறாள். சினிமாவை விட்டு விலகி வாழும் நடிகையின் மனநிலையை உண்மையாக வெளிப்படுத்தும் அற்புதமான வசனமது .
1950ம் ஆண்டு வெளியான இந்த படம் மூன்று ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளது. படத்தின் ஒளிப்பதிவு முன்மாதிரியானது. ஒளிப்பதிவாளர் John F. Seitz நீச்சல் குளத்தில் மிதக்கும் இறந்த உடலை படமாக்க எவ்விதமான சிறப்பு தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தாமல் கண்ணாடிகளின் உதவியால் அதை சாத்தியமாக்கிகாட்டியிருக்கிறார். ஐம்பது வருசங்களின் முன்பாகவே இன்றுள்ள தொழில்நுட்ப சாத்தியங்களை திரையில் உருவாக்கி காட்டியுள்ளது பிரமிப்பு தருகிறது.
சன்செட் பொலிவார்ட் படத்திற்கு நான்கு தளங்கள் உள்ளன. ஒன்று ஒதுங்கி வாழும் நடிகைக்கும் ஒரு திரைக்கதை ஆசிரியனுக்குமான உறவும் சினிமாவில் அவளது மறுபிரவேசத்திற்கான எத்தனிப்பும் பற்றியது. மற்றொரு தளம் தனிமையில் வாழும் ஒரு பெண்ணிற்கும் அவளை விட வயதில் குறைந்த இளைஞனுக்குமான காதல் கதை . மூன்றாவது தளம் ஒரு கொலை அதை செய்தவர் ஒரு நடிகை. அந்த கொலையின் பின்புலமாக விரியும் திரையுலகின் கடந்தகாலம் . நான்காவது தளம் சினிமா உலகின் வெளித்தெரியாத வலி மற்றும் துயரங்களின் தொகுப்பு.
நார்மா காதலில் தோற்றுப்போன பெண்ணின் மனத்துயரை மிக வலிமையாக வெளிப்படுத்துகிறாள். ஜோவை சந்திக்கும் போது அவனிடம் பிறந்த ராசி என்னவென்று கேட்டுக் கொள்கிறாள். அவன் Sagittarius என சொன்னபதிலைக் கேட்டு அது தனக்கு பொருத்தமான நம்பிக்கைக்கு உரிய ராசி என்று சொல்லி சிரிக்கிறாள். நார்மா கொஞ்சம் கொஞ்சமாக தன் வாழ்வை நடிப்பாக்கி கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தும் அவளுக்காக ஒரு சேவகனைப் போல செயல்படும் மாக்ஸ்வான் கதாபாத்திரம் உன்னதமானது. ஒரு நடிகையின் மீதான காதலில் ஒரு மனிதன் எந்த அளவு தனது சுயத்தை விட்டு தரமுடியும் என்பதற்கான உதாரணமது.
இந்தியாவில் இருந்து ஒரு மகாராஜா நார்மா மீதான காதலில் அவளது ஒரு பட்டுஉடையை பரிசாக வாங்க அமெரிக்காவிற்குத் தேடி வந்து பலமாதங்கள் காத்துகிடந்தார் என்றும் பின்பு அவள் தந்த பட்டுதுணியில் அவர் தூக்கிலிட்டு கொண்டுவிட்டார் என்றும் படத்தில் ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது. புகழின் உச்சம் என்பதற்கு காட்டப்படும் உதாரணமது. இதில் நடிகையின் புகழ்மட்டுமில்லை. நமது மகாராஜாக்களின் ரசனையும் சேர்ந்து வெளிப்படுகிறது.
நார்மா படம் முழுவதும் உறக்கமற்று அலைகிறாள். கையில் மெழுகுவர்த்தியோடு அவள் இரவில் நடந்து செல்லும்காட்சியின் போது அவள் ஒருபெண் டிராகுலா போலவே இருக்கிறாள். இன்றுள்ள சினிமாவில் நடிப்பதற்கு வசனங்கள் தேவையாக இருக்கிறது. நாங்கள் வசனங்களை நம்பவில்லை. முகத்தை நம்புகிறோம். முகம் பேசவேண்டியதை தானே வெளிப்படுத்திவிடக்கூடியது என்று நார்மா ஒரு காட்சியில் சொல்கிறாள். அது உண்மை என்பதற்கு அவளது முகபாவங்களே சாட்சியாக உள்ளது.
ஜோ தான் தங்குவதற்காக ஒதுக்கபட்ட அறைக்கு போகிறான். அங்கே வரும் மாக்ஸ்வானிடம் இது யாருடைய அறை என்று கேட்கிறான். நார்மாவின் கணவன் அறை. இல்லை கணவர்களின் அறை என்று சொல்லும் மாக்ஸ்வான் நார்மா மூன்றுமுறை திருமணம் செய்திருக்கிறாள் என்று சொல்லும் போது அவன் முகத்தில் வெளிப்படுத்தும் மெல்லிய புன்னகை மறக்கமுடியாத திரைக்காட்சியாகும்.
கடந்த நூறு வருசங்களில் வெளியான சிறந்தபத்துபடங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ள இப்படம் தொடர்ந்து உலகெங்கும் பார்வையாளர்களின் விருப்பதிற்குரிய ஒன்றாகவே உள்ளது.
Great stars have great pride. என்று படத்தில் நார்மா ஒரு இடத்தில் குறிப்பிடுகிறாள். அது இந்தபடத்திற்கும் மிகப்பொருத்தமான வாக்கியமாகும்.
