பை சைக்கிள் தீவ்ஸ் படத்தின் மூலம் உலகச் சினிமாவை திசை திரும்ப வைத்தவர் இத்தாலிய இயக்குநரான விட்டோரியோ டி சிகா.
அவரது இயக்கத்தில் 1956 ஆம் ஆண்டு வெளியான தி ரூஃப் (The Roof ) என்ற திரைப்படத்தைப் பார்த்தேன்.
புதிதாகத் திருமணம் செய்து கொண்ட நடாலும் லூயிசாவும் குடியிருப்பதற்காக வீடு தேடுகிறார்கள். ரோமில் ஏழைகளுக்கு வீடு கிடைப்பது மிகவும் கடினம். தங்களுக்கென ஒரு வாழ்விடத்தை உருவாக்கிக் கொள்ள இளம் தம்பதிகள் மேற்கொள்ளும் போராட்டமே இப்படம். சிறிய கதைக்கரு. ஆனால் அத்தனை அழகாக டிசிகா படத்தை உருவாக்கியிருக்கிறார்
நடால், லூயிசா திருமணத்தில் படம் துவங்குகிறது. திருமணம் முடிந்து தேவாலய வாசலில் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். பின்பு காரில் ஏறிப் பயணிக்கும் போது வாடகைக்கு எடுத்த திருமண உடைகளைக் கழற்றி தந்துவிடுகிறாள் லூயிசா.
ஒரு பேருந்தில் ஏறி அவர்கள் பயணிக்கிறார்கள். உட்கார இருக்கை கிடைக்காமல் நிற்கும் லூயிசாவின் அருகில் உரசியபடியே நின்று கொள்கிறான் நடேல். அவன் ஒரு கட்டிடத் தொழிலாளி. ஏழை.
லூயிசாவின் ஊருக்குப் போகிறார்கள். அங்கே லூயிசா அம்மாவைச் சந்திக்கிறாள். தாயும் மகளும் பேசிக் கொள்ளும் காட்சி தனித்துவமானது. தந்தைக்கு அவளது திருமணத்தினைப் பிடிக்கவில்லை என்கிறாள் தாய்.
தந்தையைக் காணுவதற்காகக் கடற்கரைக்கு ஓடுகிறாள் லூயிசா. அவரோ அவளது குரலைக் கேட்டும் கேட்காதவர் போலப் படகில் ஏறி மீன்பிடிக்கப் போகிறார். அந்தக் காட்சியில் லூயிசா பின்னாலே நடாலும் ஓடுகிறான். அவர்களுக்குள்ளிருக்கும் நேசம் அதிலே முழுமையாக வெளிப்பட்டுவிடுகிறது.
கணவனின் பெற்றோர்களுடன் சேர்ந்து வாழுகிறாள் லூயிசா. ஆனால் சிறிய வீடு. நெருக்கடியான இடம் என்பதால் அவர்களுக்கான தனிமை கிடைப்பதில்லை. இதில் ஆத்திரமான நடால் பெற்றோருடன் சண்டை போட்டுக் கொண்டு தனது பொருட்களை மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு வெளியேறுகிறான்.
ஒரு தள்ளுவண்டியில் வீட்டுச்சாமான்களை வைத்தபடியே எங்கே போவது எனத் தெரியாமல் அவர்கள் ரோம் நகரில் சுற்றியலைகிறார்கள்.
அப்போது புறம்போக்கு இடத்தில் குடிசை அமைத்துக் கொண்டால் வாழலாம் என்பதை நடால் அறிந்து கொள்கிறான். அதில் ஒரே நிபந்தனை. காவல்துறைக்குத் தெரியாமல் அந்த வீட்டினைக் கட்டிக் கொள்ள வேண்டும். அத்தோடு அந்த வீட்டிற்கு உறுதியான கதவும் கூரையும் இருக்க வேண்டும். அப்படியான வீடாக இருந்தால் நிர்வாகம் அவர்களைக் காலி செய்யாது.
ஆகவே புறம்போக்கு இடமொன்றில் ஒரு இரவில் சிறியதொரு வீட்டினைக் கட்டிவிடலாம் என்று நினைக்கிறான் நடால். இதற்குத் தேவையான பணத்தைக் கடன் வாங்கித் தருகிறாள் லூயிசா. இந்தப் பணிக்கு உதவி செய்ய நடாலுடன் வேலை செய்யும் கட்டிடத் தொழிலாளர்கள் முன் வருகிறார்கள்.
ஆகவே ஒரு இரவில் வீடு கட்டும் முயற்சியைத் துவக்குகிறான் நடால். ஆனால் எதிர்பாராமல் காவலர்கள் வந்து தடுத்துவிடுகிறார்கள்.
அதே இரவில் ரயில்வே பாதையை ஒட்டிய புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டலாம் என நினைக்கிறான் நடால். இதற்காக அவர்கள் பரபரப்பாக வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள். ஒரு இரவிற்குள் எப்படி வீடு கட்டி முடிப்பது என்பது பெரும் சவாலாக இருக்கிறது.
அவர்கள் வீடு கட்டினார்களா. எப்படி அவர்களின் கனவு நிறைவேறியது என்பது தான் படத்தின் மீதக்கதை.
புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கே உரித்தான ஆசையும் வெட்கமும் கொண்ட பெண்ணாக லூயிசா இருக்கிறாள். ஆனால் அவளது மனதிடம் உறுதியானது. அவளே நடாலை இயக்குகிறாள். ஒரு காட்சியில் நடால் பணம் கொடுத்து அவளை மட்டும் தனியே பயணிக்க அனுப்பி வைக்கிறான். அந்தக் காட்சியில் லூயிசா பிரிவின் ஏக்கம் மிளிர பயணிக்கிறாள். அவர்கள் திரும்பச் சந்தித்துக் கொள்ளும் போது சாலையின் ஒரு புறம் அவனும் மறுபுறம் அவளுமாக நின்றபடியே வாகனங்கள் கடந்து போகட்டும் எனக் காத்திருப்பது அழகான காட்சி.
பை சைக்கிள் தீவ்ஸ் போலவே இதிலும் ஒரு சிறுவன் வருகிறான். அவன் லூயிசாவிற்கு உதவி செய்கிறான். இரவில் அவன் வழிகாட்டி போல அவளை அழைத்துக் கொண்டு போவது நல்லதொரு காட்சி.
படத்தின் கடைசிக் காட்சி மிகவும் கவித்துவமானது. Cesare Zavattini இப்படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார். Gabriella Pallotti லூயிசாவாகவும் Giorgio Listuazi நடாலாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
டி சிகாவின் புகழ்பெற்ற நியோ-ரியலிஸ பாணியிலான இந்தத் திரைப்படம் , மனதை ஆழமாகத் தொடுகிறது.
••