கல்பற்றா நாராயணன்

இணையத்தில் வாசித்த மொழிபெயர்ப்புக் கவிதை என்று கல்பற்றா நாராயணன் கவிதை ஒன்றை நண்பர் முரளி அனுப்பியிருந்தார்.

மிகவும் அற்புதமான கவிதை. பிறந்தநாளைப் பற்றிய மனப்பிம்பத்தை ஒரு நொடியில் கவிதை மாற்றிவிடுகிறது. பிறந்தநாளில் விரல்களுக்கும் வயதாகுமா எனச் சிறுமி கேட்பது அபாரம்.  முல்லா கதை ஒன்றில்  தனது தலைமுடிக்குத் தன்னை விட வயது அதிகம் என்று சொல்லுவார் முல்லா. அது இக்கவிதையை வாசிக்கையில் நினைவில் வந்து போனது.  கல்பற்றா மலையாளத்தின் மிக முக்கிய கவிஞர். அவரது சுமித்ரா என்ற நாவல் கே.வி.ஷைலஜா மொழியாக்கத்தில் வம்சி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.

••

பிறந்த நாள்

கல்பற்றா நாராயணன்

தமிழில் சா.விஜயகுமார்

**

பிறந்தநாள்ப் புலரியில்

கைகளை விரித்தவாறே

மகளோடி வந்தாள்

அப்பா, இந்த விரல்களுக்கு மூன்று வயதாகியோ?

மூன்றாம் வயது

விரல்வரை வந்துவிட்டதா எனத் தெரியவில்லையெனினும்

கிட்ட நெருங்கிக்கொண்டிருக்கிறது,

நான் சொன்னேன்

ஆம்.

இந்த மச்சத்திற்கோ?

அதற்கும்.

அவளுக்கது அத்தனை பிடிக்கவில்லையென்று  தோன்றிற்று.

அது என்னுடனே வளர வேண்டாம்.

காண்போரெல்லாம்

கன்னத்தைத் தொட்டு முத்தினார்கள்.

கன்னத்தை யார் தொடுவதும் அவளுக்கு விருப்பமில்லை.

அதிகவனத்துடன் சவரம் செய்கையில்

சவரச்சத்தம் நிசியில் தொடர்வண்டியைப் போல-

அவளென்னை வேதனைப்படுத்தும்விதம் கேட்டாள்;

இதையும் கொஞ்சம் ஷேவ் செய்து விடுகிறீர்களா?

இந்தக் காலிற்கும் மூன்று வயதாகியோ?

என்றாள் நம்பிக்கை குறைந்த தொனியில்.

காலுயர்த்திக் காட்டுகிற சாகசத்தில்

நீர் நிரம்பியிருந்த பாத்திரம் சரிந்து

மேசைப்புறம் நனைந்தது.

ஆம், கிட்டத்தட்ட.

அவளோடு அது ஓடத்துவங்கி

ஒன்றரை வருடங்களே கடந்திருந்தன.

அதுவும் துவக்கத்தில் தயங்கித் தயங்கி.

அதற்கு எத்தனையோ காலம் முன்பே அவளோடத்துவங்கியிருந்தாள்.

இந்தப் பல்லிற்கோ?

இம்முறை அம்மை இடைமறித்தாள்.

இரண்டிற்கு இரண்டேகால் வயது

மற்றவை ஒவ்வொன்றிற்கும்

இரண்டும், ஒன்றரையும், ஒன்றேகாலும்.

இதற்கு மூன்று மாதம்

என் செல்ல மகளே;

அம்மையின் விரல்களால்

அவளதைத் தொட்டுணர்ந்தாள்

என் செல்லக்குட்டி.

இந்தக் காதிற்கோ?

எனக்குத் தெரியவில்லை.

அவளதைக்கொண்டு நேற்றுக் கேட்டதல்ல

இன்று கேட்பது.

இந்தக் கண்ணிற்கோ?

தெரியவில்லை.

அவளதைக்கொண்டு நேற்றுக் கண்டதல்ல

இன்று காண்பது.

அவள் உதிர்க்கும் சொற்களுக்கு

அவளுடையதல்ல வயது.

சிலதிற்கு ஐநூறோ ஆயிரமோ.

அவளிப்போது அறுவடை செய்கிறாள்.

பலவும் அனேக வருடங்களுக்கு முன்பு யாரோ விதைத்தது.

என்றால் எனக்கு மட்டுமா மூன்று வயது?

ஆமோதிக்கத்தான் வேண்டுமோ?

நானவளுக்கோர் உண்மை சொன்னேன்,

என் செல்ல மகளே

உன்னில் எதற்கும் மூன்று வயதல்ல.

••

0Shares
0