காகிதப்பறவைகள்

புதிய சிறுகதை

••

உண்மையான பறவைகளை விடவும் காகிதத்தில் செய்த பறவைகள் கூடுதல் வசீகரமாகியிருக்கின்றன. அவை வீட்டிற்குள் பயமின்றி  பறக்கின்றன. காகித பறவைகளின் வானம் வீட்டுக்கூரை தானே.

தபால்கார மார்டினின் மூத்தமகள் ஸ்டெல்லா அழகாகக் காகிதப்பறவைகள் செய்வாள். அவளுக்குத் திக்குவாய் என்பதாலும் மனவளர்ச்சி அடையவில்லை என்பதாலும் பள்ளிக்கு அனுப்பவில்லை. வீட்டில் சமையல் வேலைக்குத் துணையாக இருந்தாள். தாயற்ற பெண் என்பதால் அவளை  மார்டின்  கண்டிப்பதில்லை.

பகல் நேரங்களில் அவள் வண்ண காகிதங்களை வெட்டி காகிதப்பறவைகள் செய்வாள். சில சமயம் பலசரக்குப் பொருட்கள் கொடுப்பதற்காகச் சுபாஷ் அவர்கள் வீட்டிற்குப் போயிருக்கிறான். தையல் இயந்திரம் இருந்த அறை முழுவதும் காகிதப்பறவைகளை நூலில் கட்டி பறக்கவிட்டிருப்பாள் ஸ்டெல்லா.

அவள் காகிதப்பறவை செய்வதைச் சுபாஷ் அருகிலிருந்து பார்த்திருக்கிறான். ஒவ்வொரு பறவை செய்து முடித்தவுடன் அவள் அதை வெளியே எடுத்து வந்து வானத்தைக் காட்டுவாள். ஏன் அப்படிச் செய்கிறாள் என்று சுபாஷ் கேட்டதற்குத் திக்கித் திக்கிப் பேசியபடியே பறவைகள் வானத்தைத் தான் முதலில் பார்க்க வேண்டும் என்றாள்

அவள் சொன்னது உண்மை தானே. காகிதப்பறவை என்றாலும் அது பறவை தானே. சிவப்பு. ஊதா. பச்சை, கறுப்பு எனப் பல்வேறு வண்ண காகிதங்களில் அவள் பறவைகள் செய்திருந்தாள். அந்தப்பறவைகளைத் தலைமாட்டில் வைத்துக் கொண்டு தான் உறங்குவாள் என்று சொன்னாள் ஸ்டெல்லாவின் அம்மா

“நிஜப்பறவைகளை உனக்குப் பிடிக்காதா“ என்று சுபாஷ் அவளிடம் கேட்டான்

“நிஜப்பறவைகள் மனுஷங்களைப் பார்த்தா பயப்படும். சப்தம் போடும். எனக்குப் பயப்படுற பறவையைப் பிடிக்காது“ என்றாள்

ஏன் என்று அவன் கேட்கவில்லை. அவளாகச் சொன்னாள்

“நான் செய்த பறவைகள் என்னைப் போலவே வாய் பேசாதது. “

“நீ தான் பேசுறியே“ என்றான் சுபாஷ்

“திக்கித் திக்கி தானே பேசுகிறேன். அதுக்கு ஊமையா இருந்திருக்கலாம்லே“

“அப்படியெல்லாமில்லை. நீ நல்லா தான் பேசுறே“

“நிஜமாவா“

“ஆமா.. உன் குரல் ரொம்ப நல்லாயிருக்கு“

அதைக்கேட்டதும் அவளது முகம் மாறியது. ஸ்டெல்லாவிற்கு அப்போது வயது பதினைந்து . ஆனால் பூப்பெய்தவில்லை. ஆளும் மெலிந்து கழுத்து எலும்புகள் துருத்திக் கொண்டிருக்கச் சிக்கு பிடித்த தலைமுடியோடு இருந்தாள்

“எனக்கொரு பறவை செய்து தருவியா“ என்று கேட்டான் சுபாஷ்

“அதெல்லாம் முடியாது. நான் யாருக்கும் பறவை செய்து தரமாட்டேன். எல்லாப் பறவையும் எனக்கு மட்டும் தான்“

சில பறவைகளைச் செய்து முடித்தவுடன் அவளுக்குப் பிடிக்காமல் போய்விடும் என்பதால் உடனே கத்தரிக்கோலை வைத்து அதைத் துண்டு துண்டாக வெட்டிப் போட்டுவிடுவாள். அவளைச் சுற்றிலும் எப்போதும் கிழிந்த காகிதங்களே இருந்தன. ஸ்டெல்லா சாப்பிடும் போது கூடத் தன்னோடு ஒரு காகிதப்பறவையை வைத்துக் கொண்டாள்

ஒரு நாள் தபால்கார மார்டின் சுபாஷின் தாத்தாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்

“வீட்டு வாசலில் ரொம்பப் பெருசா பறவை ஒண்ணைச் செய்து ஸ்டெல்லா தொங்கவிட்டு இருக்கா.. பாக்க அழகா தான் இருக்கு….  நம்ம வீடு பறவைகளோட ஆலயம் மாதிரி ஆகிட்டு இருக்கு “

“இப்படியே அவளை வச்சிட்டு இருந்தா.. எப்படி மார்ட்டின்.. யாராவது டாக்டர்கிட்ட காட்ட வேண்டியது தானே“ என்றார் தாத்தா

“எல்லாம் காட்டியாச்சி.. இந்தச் சுமையை நான் வாழ்நாள் பூரா சுமக்க வேண்டியது தான். வயது பதினைந்து நடக்குது. எப்போ பாரு, பறவை செய்றது தான் வேலை.. நான் செய்த பாவம் வேற என்ன சொல்றது“

“ஏன் மார்டின் அப்படிச் சொல்றே.. அஞ்சு விரலும் ஒண்ணு போலவா இருக்கு.. ஒரு விரல் குட்டையா இல்லை“

“அப்படி நினைத்து மனதை தேத்திகிட வேண்டியது தான். அந்தப் பிள்ளைகிட்ட அபூர்வமான ஒரு குணம் இருக்கு.. யாராவது அவளைத் திட்டுனா. அழ மாட்டா.. சிரிப்பா.. திட்டத் திட்ட ரொம்பச் சிரிப்பா.. இப்படி உலகத்துல யாராவது இருப்பாங்களா என்ன“

“நிஜமாவா சொல்றே.. திட்டுனா சிரிப்பாளா“

“அதான் சொன்னேன். அபூர்வம்னு.. நானே கோவத்துல எத்தனையோ நாள் திட்டியிருக்கேன். ஒரு நாள் கூட அவ அழுததேயில்லை. சிரிப்பு தான். அப்படி எப்படித் தான் இருக்காளோ“

“அது ஒரு மனசு மார்டின்.. இப்படி இருக்கக் குடுத்து வச்சிருக்கணும். “.

“பிள்ளைக வளர வளர தான் கஷ்டம் தெரியுது.. இதுகளுக்குக் கல்யாணம் கட்டிக் கொடுத்து நல்லது பொல்லதுக்கு ஒடி உதவி செய்து எப்படிக் காலம் தள்ளப்போறேன்னு தெரியலை.. பொம்பளை பிள்ளை பெத்தவங்க கஷ்டம் லேசில்லை. யாருகிட்ட சொல்லி ஆற்றாமைபட முடியும்“

“நடக்குறது தான் நடக்கும். நீ கவலைப்பட்டு எதையாவது நிறுத்திட முடியுமா என்ன“ எனக்கேட்டார் தாத்தா

மார்டின் அது உண்மை என்பது போலத் தலையாட்டினார்

ஸ்டெல்லாவை யார் திட்டினாலும் அழ மாட்டாள் என்பதைக் கேட்டதும் சுபாஷிற்கு ஆச்சரியமாக இருந்தது. அடுத்தமுறை அவர்கள் வீட்டிற்குப் பலசரக்கு கொடுக்கப்போகும் போது அவளிடம் கேட்டான்

“நீ அழவே மாட்டயாமே. நிஜமா“

“இல்லையே.. அழுவேன். ஆனா யாராவது திட்டுனா அழ மாட்டேன்“ என்று திக்கி திக்கி சொன்னாள் ஸ்டெல்லா

“திட்டுனா ஏன் அழமாட்டே“ எனக் கேட்டான் சுபாஷ்

“திட்டும்போது சிரிச்சிட்டா நமக்கு வலிக்கவே வலிக்காது“ என்றாள் ஸ்டெல்லா

“யாரு சொல்லிக் கொடுத்தது“ எனக்கேட்டான் சுபாஷ்

“பறவைகள்“ என்று வானைத் நோக்கி கையை உயர்த்தினாள் ஸ்டெல்லா

“நீ பறவை கிட்ட பேசுவியா“ என்று கேட்டான் சுபாஷ்

“தினமும் பேசுவேன். உன்கிட்ட ஒரு ரகசியம் சொல்லட்டா. இந்தப் பறவை எல்லாம் வானத்திலிருந்து  வருது. நட்சத்திரம் தான் பகலில் பறவையா மாறியிருது. “

நிஜமாவா எனப் பொய்யான வியப்போடு கேட்டான் சுபாஷ்

“காகிதத்துக்குள்ளே பறவை எப்படி வந்துச்சி.. அது ஒரு இரகசியம். நட்சத்திரம் தான் இப்படி மேஜிக் பண்ணுது“.

“பறவைகள் எதுக்கு வானத்தில் இருந்து வருது“

“ஒரு ரகசியம் சொல்ல. அது எனக்கு மட்டும் தான் தெரியும்“..

“என்ன ரகசியம்“

“அதைச் சொல்லமாட்டேன். “

“ என்கிட்ட மட்டும் சொல்லு“

“ இந்தப் பறவைகள் கஷ்டம்னா என்னை வானத்துக்கு அழைச்சிட்டு போயிடும். அதான் ரகசியம்“

“ எப்படிப் போவே“

“ எனக்கும் பறக்க தெரியும்“

“ அப்படியா. நீயும் ஒரு பறவையா“

“ ஆமாம். ஆனா யாருக்கும் தெரியாது“ என்று சொல்லிச் சிரித்தாள்

“நீ எதுக்கு அழுவே“ என்றுகேட்டான் சுபாஷ்

“எனக்கு ரோஜா பூவை பாத்தா அழுகை வந்துடும்“ என்றாள் ஸ்டெல்லா

“ரோஜா பூவை பார்த்து யாராவது அழுவாங்களா“ எனக்கேட்டான் சுபாஷ்

“நான் அழுவேன். ரோஜா பூ எவ்வளவு அழகா இருக்கு. வாசனையா இருக்கு.. ஆனா நான் அப்படி அழகாயில்லை. வாசனையா இல்லை தானே. அதை நினைச்சி தான் அழுவேன்“

“உன்னை மாதிரி வேற யாரும் அழமாட்டாங்க“

“அவர்களுக்குப் பூவை பாக்க தெரியலை. பூ தானேனு நினைக்குறாங்க“

“பூ அழகா இருந்தா. அதுக்காக அழணுமா“

“ஆமா.. இவ்வளவு அழகான ஒண்ணைப் பாத்துகிட்டு இருந்தா அழுகை வராதா.. “

ஸ்டெல்லா கேட்டது முட்டாள்தனமில்லை என்றே தோன்றியது.

ஒருமுறை பெயர் தெரியாத ஒரு மஞ்சள் ரோஜா மலரைக் கையில் வைத்திருந்த போது ஸ்டெல்லாவின் ஞாபகம் வந்தது. பாவம் ஸ்டெல்லா என்று முணுமுணுத்துக் கொண்டான்

ஸ்டெல்லா காலையில் குளிக்க மாட்டாள். மதியம் சாப்பிட்டவுடனே தான் குளிக்கப்போவாள். குளியல் அறைக்குள்ளும் பறவைகளுடன் தான் போவாள். சில நாட்கள் இரவில் தூக்கம் பிடிக்காமல் பறவைகள் செய்து கொண்டிருப்பாள் என்றும் சொன்னார்கள்.

ஸ்டெல்லா செய்யும் பறவைகளை அவளது தங்கை மரியாவிற்குப் பிடிக்கவே பிடிக்காது. பலமுறை அவற்றைக் கிழித்துப்போட்டிருக்கிறாள். ஆனால் அதற்காக ஸ்டெல்லா வருத்தம் கொண்டதில்லை. மௌனமாக அவள் முன்னால் சிலுவை குறி போட்டு கர்த்தர் உன்னைப் பார்த்துக் கொள்வார் என்பது போலக் கடந்து போய்விடுவாள்.

மரியாவிற்குப் பணம் தான் உலகம். வீட்டிலிருந்து அடிக்கடி காசை திருடிக் கொண்டு போய்க் கடைகளில் தின்பண்டங்கள் வாங்கித் தின்பது அவளது வழக்கம். பள்ளியிலும் கூட அவள் திருடினாள். ஆசிரியர்கள் இதற்காக அவளை இரண்டு முறை பள்ளியை விட்டு நிறுத்தியிருக்கிறார்கள். ஆனால் மரியா திருந்தவேயில்லை. ஒரு முறை அவள் பள்ளியிலிருந்து யாரோ ஒரு மாணவியின் சைக்கிளை திருடிக் கொண்டுவந்துவிட்டாள். அந்த மாணவியின் குடும்பமே அவர்கள் வீடு தேடி வந்து திட்டியது. அன்று மரியாவை மார்டின் தோசைக்கரண்டியால் அடித்தார். மரியா அடிவாங்கிக் கொண்டபடியே கேட்டாள்

“அப்போ எனக்கு ஒரு சைக்கிள் வாங்கிக் குடு“

“ஏன் மகாராணிக்கு நடந்து போக முடியாதோ“ என்று கேட்டார் மார்டின்

“என்னாலே முடியாது. நான் அப்படித் தான் திருடுவேன்“ என்றாள் மரியா

“கையைக் காலை உடைச்சி வீட்டுல போடுறேன்“ என்று திட்டினார் மார்டின்

“அதான் ஒரு லூசை பெத்துவச்சிருக்கியே.. அது போதாதா“ என்று கேட்டாள் மரியா

மார்டினுக்குக் கோபம் தலைக்கு ஏறியது.

அவளது தலைமயிரை பற்றி இழுத்து அடி அடியென அடித்தார். மரியா அடங்காத குரலில் கத்தினாள்

“நீ என்னையே கொன்னாலும் நான் திருடுவேன்“.

அடிப்பதை கைவிட்டு மார்டின் அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு அழுத்தமான குரலில் சொன்னார்

“நான் செத்துட்டா. இந்தக் கண்றாவி எல்லாம் பாக்க வேண்டியது இருக்காது“

“அப்போ செத்துப்போ“ என்றாள் மரியா

உள்அறையில் பறவை செய்து கொண்டிருந்த ஸ்டெல்லா வெளியே வந்து திக்கித் திக்கி சொன்னாள்

“டாடி.. நாம மரியாவுக்காகப் பிரே பண்ணுவோம்“

அதைக்கேட்டதும் மார்டின் கண்கலங்கியது.

அன்றிரவு அவர்கள் மரியாவிற்காகப் பிரார்த்தனை செய்தார்கள். அதில் மரியா மட்டும் கலந்து கொள்ளவில்லை. அவள் பிடிவாதமாகச் சுவரை நோக்கியபடியே உட்கார்ந்திருந்தாள். அவளை எவராலும் பிரார்த்தனை செய்ய வைக்கமுடியவில்லை

இன்னொரு நாள் பகலில் அவள் ஸ்டெல்லாவிடம் சொன்னாள்

“உன் பறவை எல்லாம் தீவச்சி கொளுத்தப்போகிறேன் பாரு“

ஸ்டெல்லா அதைக்கேட்டுச் சிரித்தாள்

“சிரிக்காதடி.. எரிச்சலா வருது“ என்றாள் மரியா

மீண்டும் மெலிதாகச் சிரித்தாள் ஸ்டெல்லா. அது மரியாவிற்கு ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. ஸ்டெல்லாவின் தலைமயிரைப் பிடித்து இழுத்து தலையைச் சுவரோடு கொண்டு போய் முட்டவைத்தாள். கண்டபடி திட்டினாள். அப்படியும் ஆத்திரம் அடங்கவில்லை. காலால் மிதித்தாள். கீழே விழுந்துகிடந்த ஸ்டெல்லா காற்றில் சிலுவை குறியிட்டாள். மரியாவிற்கு ஆத்திரம் கொப்பளித்தது.

“நாயே.. அப்படிச் செய்யாதடி“ என்றபடியே அவள் காகிதம் துண்டிக்க வைத்திருந்த கத்தரிக்கோலை எடுத்து அவள் கன்னத்தில் சொருகினாள். ரத்தம் குபுகுபுவெனக் கொட்டியது. மரியா அந்த இடத்திலிருந்து ஓடினாள். எங்கே ஒடி ஒளிந்தாள் என்று தெரியாது. ஸ்டெல்லாவை பொதுமருத்துவமனையில் அனுமதித்திருந்தார்கள்.

சுபாஷ் தாத்தாவோடு மருத்துவமனைக்குப் போயிருந்தான். கூடத்தின் வெளியே கலங்கிய கண்களுடன் மார்டின் நின்றிருந்தார்

“இப்படி பிள்ளைகளைப் பெத்து வச்சிருக்கனே. நான் என்ன செய்றது“ என்று புலம்பினார்

“என்ன சொல்றாரு டாக்டரு“ என்று கேட்டார் தாத்தா

“ஆபரேஷன் பண்ணவேண்டுமென்று சொல்றாரு“ என்றார் மார்டின்

தாத்தா தான் கொண்டுவந்திருந்த பணத்தைச் சுபாஷ் அறியாமல் மார்டினிடம் கொடுத்தார். பிறகு மார்டின் கைகளைப் பற்றிக் கொண்டு சொன்னார்

“குடியிருக்க வீடு சரியில்லைனு நினைக்குறேன். வீட்டை மாத்திபாரு“..

மார்டின் தலையாட்டினார். ஒரு மாதகாலம் ஸ்டெல்லாவை மருத்துவமனையில் வைத்திருந்தார்கள். கத்திரிக்கோல் கன்னத்தைக் கிழித்ததில் காது நரம்புகளும் துண்டிக்கபட்டுவிட்டன என்றார்கள். மருத்துவமனையிலிருந்து ஸ்டெல்லா வீடு திரும்பிய பிறகு ஒரு நாள் அவளைப் பார்ப்பதற்காகச் சுபாஷ் போயிருந்தான். தலைமுடி மொட்டையடிக்கப்பட்டு கழுத்தில் மரச்சிலுவை தொங்க அழுக்கடைந்த பாவாடை சட்டை போட்டிருந்தாள். அவள் கண்களில் வேதனை படிந்திருந்தது. எப்போதும் போலக் காகிதங்களை வெட்டி பறவைகள் செய்து கொண்டிருந்தாள். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு எவருடனும் ஒரு வார்த்தை கூட அவள் பேசவில்லை என்றார்கள்

மரியாவை கொண்டு போய்க் கொடைக்கானலில் உள்ள அத்தைவீட்டில் படிக்க விட்டுவந்திருந்தார்கள். அதன்பிறகு ஸ்டெல்லா செய்த பறவைகள் எதற்கும் அவள் கண்கள் வரையவில்லை.

தான் செய்த காகிதப்பறவைகளுடன் அவள் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே போய்விடுகிறாள் என்றும் எங்கே போகிறாள் என்ன செய்கிறாள் என்று யாருக்கும் தெரியவில்லை என்றும் மார்டின் தாத்தாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்

“எங்க போகப்போறா.. விடு.. வீட்டுக்குள்ளேயே இருந்தா மூச்சடைத்து போயிரும்லே“

மார்டின் சில நாட்கள் அவள் ரயில்வே பாலத்தில் ஸ்டெல்லாவைப் பார்த்திருக்கிறார். அவள் யாரோ ஒருத்தியைப் போலத் தோன்றினாள். ஏன் தன்பிள்ளைகள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்ற கவலை அவரை மிகுந்த வேதனை கொள்ளச் செய்தது. பெரும்பான்மை நாட்கள் அவள் பகல் நேரத்தில் தேவாலயத்தின் பின்புறம் தான் காகிதப்பறவைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் மார்டின் அதிகாலை தாத்தாவைத் தேடி வந்திருந்தார்.

“ஸ்டெல்லாவை காணோம். காலைல இருந்து காணலை“ எனப் பதைபதைப்புடன் சொன்னார்

“நல்லா தேடிப்பார்த்தீங்களா“ எனக்கேட்டார் தாத்தா

“பிரசங்கம் பண்ண வந்தவேன்ல போயிட்டதா சொல்றாங்க “

“ எங்க போயிருப்பா“

“அதான் தெரியலை. விசாரித்து பாத்துட்டேன். அவ கூட வரலைனு சொல்றாங்க… அவ பெட்டியில் வைத்திருந்த பறவை எல்லாத்தையும் எடுத்துகிட்டு போயிருக்கா“

“சொந்தகாரங்க வீட்டுக்குப் போயிருப்பாளா. விசாரித்து பாத்தீங்களா“

“அப்படி எங்கேயும் போக மாட்டாள் ` என வேதனையான குரலில் சொன்னார்

எங்கே போயிருப்பாள். அவளால் தனியே எப்படி வாழ முடியும். இந்தக் காகிதப்பறவைகள் அவளை எங்காவது அழைத்துக் கொண்டு போயிருக்குமா.. இல்லை பறவைகள் காணாமல் போய்விட்டால் அதன் தாய் தேடுமா.. எங்கெங்கோ தேடியும் அவர்களால் ஸ்டெல்லாவைக் கண்டறியமுடியவில்லை.

விரிந்து பரந்த இந்தப் பெரும்வுலகில் எங்கே போய் ஒளிந்து கொண்டாள் என்று அவரால் கண்டறியவே முடியவில்லை.

ஸ்டெல்லா வீட்டிலிருந்து வெளியேறியதும் மரியா ஆள் மாறிப்போனாள். வீட்டை விட்டு வெளியே போகவேயில்லை. சதா பிரேயர் செய்தபடி இருந்தாள். வீட்டுவேலைகளை முழுமையாகக் கவனித்தாள். தனித்திருந்த நேரங்களில் அவளும் ஸ்டெல்லா போலக் காகித பறவைகள் செய்ய ஆரம்பித்தாள்.

ஸ்டெல்லா அந்தக் குடும்பத்திலிருந்து மறைந்து போனாள்.

பலசரக்கு கொண்டு போகும் நேரத்தில் எல்லாம்  இனி அவளைப் பார்க்கவே முடியாதா என்று ஏங்கியிருக்கிறான் சுபாஷ்.

அவ்வளவு தான் வாழ்க்கை. ஏதோவொரு புள்ளி பிசகிவிட்டால் வீடு விலகிப்போய்விடும். ஒரு மனிதன் வீட்டிலிருந்து விடுபட்டுப் போய்விட்டால் உலகில் அவனைக் கண்டறிவது எளிதானதில்லை.

ஸ்டெல்லாவை காகிதப்பறவைகள் தான் வானிற்கு அழைத்துக் கொண்டு போய்விட்டதா.

காகிதப்பறவைகளுக்கு என்ன தான் வாழ்க்கை.

சில நாட்கள் சுபாஷ் பாலத்தின் அருகே சைக்கிளை நிறுத்திவிட்டு தூரத்து தேவாலயத்தைப் பார்த்தபடியே இருப்பான்.

அந்திக் கருக்கலில் தனியே செல்லும் கொக்கினைக் காணும் போது  ஸ்டெல்லாவை நினைத்துக் கொள்வான்.

அவளது சிரித்த முகம் மனதில் தோன்றி மறையும் போது அவனை அறியாமல் கண்கள் கலங்கவே செய்யும்.

••

0Shares
0