புதிய குறுங்கதை.
கடலும் மலையும் சூழ்ந்த ஒரு நாட்டை காதில்லாத அரசன் ஒருவன் ஆண்டுவந்தான். அவனது மூதாதையர்கள் காலத்திலிருந்தே அரசவம்சத்தில் பிறக்கும் எவருக்கும் காதிருப்பதில்லை. அது அவர்களுக்கு பெரிய குறையாகவும் இல்லை.
அரசனுடைய காதுகளை உண்மையான செய்திகள் எந்த காலத்திலும் எட்டியதேயில்லை என்பதால் காதை அவர்கள் பயன்படுத்தாமல் இருந்திருந்து காதற்று போய்விட்டதாக ஒரு நம்பிக்கையிருந்தது.
அதை மெய்பிப்பது போலவே அரசவம்சத்தில் பிறக்கும் குழந்தைகளும் காதில்லாமலே பிறந்தன. காதில்லாத அரசன் அரண்மனையை விட்டு வெளியே வருவதுமில்லை . யாரையும் நம்பியதுமில்லை. மிகுந்த முன்கோபியாக இருந்தான். தன் அரண்மனையைச் சுற்றி பெரிய கோட்டை கட்டிக் கொண்டு ஆயிரம் பாதுகாவலர்கள் சூழ எப்போதுமிருந்தான். மக்களோ பட்டினியும் பஞ்சமுமாக போக்கிடம் இன்றி தவித்துக் கொண்டிருந்தார்கள்.
காதில்லாத அரசனுக்கு அவ்வவ்போது தன் நாட்டுமக்களின் நலன் பற்றி சந்தேகம் வந்துவிடும். அப்படியொரு நாள் தன் மந்திரியை அழைத்து மனிதர்களுக்கு முதுகு இருப்பதால் என்ன பிரயோசனம் இருக்கிறது என்று கேட்டான்.
மந்திரி யோசித்து விட்டு ஒரு பிரயோசனமும் இல்லை. என்றதும் அரசன் ஆவேசத்துடன் பிரயோசனம் இல்லாத முதுகு மக்களுக்கு எதற்கு வேண்டும். உடனடியாக சவுக்கால் அடித்து முதுகை பிய்த்து எடுத்துவிடுங்கள் என்றான்.
மந்திரி உடனே ராஜாவின் ஆணையை நாடெங்கும் செயல்படுத்த ஆணையிட்டான். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பேதமின்றி முதுகை உறிக்கும் வேலை மும்மரமாக நடந்தது. ஆனால் ஒரு மனிதனின் முதுகைக் கூட முழுவதுமாக உறிக்க முடியவில்லை. நாடெங்கும் ஒரே ஒலமாக இருந்தது.
காதில்லாத அரசனுக்கோ பயங்கர கோபம் வந்தது. அவன் முதுகை உறிப்பதற்கான விசேச ஆயுதங்களை செய்யும்படியாக கஜானாவிலிருந்து நிதியை அள்ளி அள்ளிக் கொடுத்தான். ரத்தம் சொட்ட சொட்ட மக்கள் அலறிய போதும் அவன் காதில் கேட்கவேயில்லை. மக்கள் ஒடி ஒளிந்து காட்டிற்குள் பதுங்கி கொண்டார்கள். மந்திரிகளோ ராஜ்ஜியத்தில் ஒருவனுக்கு கூட இப்போது முதுகில்லை என்று அறிவித்து மன்னரை சந்தோஷம் கொள்ள வைத்தார்கள்.
மன்னரும் முதுகில்லாத மக்களை காண வேண்டும் என்று அரண்மனையை விட்டு பயணம் புறப்பட்டார். காட்டுவழியில் மன்னர் வருவதை அறிந்த கோபமுற்ற இளைஞர் கூட்டம் வண்டியைத் தாக்கியது. மன்னர் வழியிலே கொல்லப்பட்டார்.
மக்கள் உடனே தங்களுக்கு காதுல்ல ஒரு அரசன் வேண்டும் என்று கூச்சலிட்டார்கள். மந்திரி அவர்களை சமாதானப்படுத்தி தன் மகனுக்கு மூன்று காதுகள் இருப்பதாகவும் அப்படியொருவன் ஆட்சி செய்தால் நாடு சூபிட்சமாக இருக்கும் என்று அறிவித்தார்.
நாட்டிற்கு புதிதாக மூன்று காதுள்ள அரசன் ஆட்சிக்கு வந்தான். அவன் அரசன் ஆன பிறகு தான் தெரிந்தது அவனது மூன்று காதுகளும் புகழ்ச்சியுரையை மட்டுமே கேட்கும் என்று. யார் எந்தப் புகார் சொன்னாலும் காதுகளிலும் விழுவதேயில்லை.
சுற்றியிருப்பவர்கள் பகலிரவாக புகழ்ந்து பாராட்டிக் கொண்டேயிருந்தார்கள். அவனாலும் நாட்டிற்கு ஒரு பிரயோசனமும் இல்லை. இது என்ன நாட்டைப் பிடித்த சாபமா என்று மக்கள் திரண்டு ஒரு ஞானியை சந்தித்து கேட்டார்கள். அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்
இந்த நாட்டில் மட்டுமில்லை, உலகில் எந்த நாட்டிலும் அதிகாரத்தில் இருப்பவனுக்கு காது இருப்பதில்லை. அவன் ஒருவேளை மூன்று காதுள்ளவனாக இருந்தாலும் புகழ்ச்சி மட்டுமே அந்த காதில் ஒலிக்கும். இதற்கு பெயர் அரசவியாதி. அதற்கு வைத்தியமேயில்லை.
எவன் காதுகள் உறக்கத்திலும் விழித்திருக்கிறதோ, எவன் காதுகள் அவலக் குரலுக்கு உண்மையாக செவிமடுக்கிறதோ , அவனைத் தேடி கண்டு அடையுங்கள். அவன் உங்களுக்குள் தான் இருப்பான் என்றார்.
மக்கள் தங்களை தானே அரசாளத் துவங்கியது அப்படிதான் ஆரம்பமானது.
****