
சில நாட்களுக்கு அமெரிக்காவில் இருந்து வந்திருந்த ஒரு நண்பர் நான் படிப்பதற்காக ஜோகன் ஸ்பாரின் தி ராபிஸ் கேட் ( Joann Sfar -The Rabbi`s Cat ) என்ற கிராபிக்நாவலை வாங்கிவந்திருந்தார்.
இதை சில மாதங்களாகவே தேடிக் கொண்டிருந்தேன். தற்செயலாக அவர் வரும்போது நினைவூட்டவே மறக்காமல் வாங்கி வந்திருந்தார்.
காமிக்ஸ் புத்தகங்களின் மீதான விருப்பம் சிறுவயது முதல் என்னோடு சேர்ந்து வளர்ந்து வரக்கூடியது. இப்போதும் புதிதாக ஏதாவது காமிக்ஸ் கண்ணில் பட்டால் வாங்கி வாசிப்பதுண்டு.
காமிக்ஸ் என்ற மரபான சித்திரக்கதைவடிவிலிருந்து இன்று அபரிமிதமான வளர்ச்சி பெற்று கிராபிக் நாவல்கள் என்ற புதிய வடிவம் உருவாகி மிகுந்த கவனத்தையும் பாராட்டையும் பெற்றுவருகிறது. நான் அறிந்த வரை தமிழில் கிராபிக் நாவல்கள் நேரடியாக எழுதப்படவில்லை. ஈரானை சேர்ந்த மார்ஜனா சத்ரபியின் இரண்டு சித்திரநாவல்கள் தமிழில் மொழிபெயர்க்கபட்டிருக்கின்றன. அதை விடியல் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
ஆனால் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் ஜப்பானிலும் வெளியாகும் கிராபிக் நாவல்களை பார்க்கும் போது ஆச்சரியமும் பொறாமையும் ஒரு சேர உண்டாகிறது.
நான் சில ஆண்டுகளாகவே ஒரு கிராபிக் நாவலை வெளியிட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அதற்கான கதை தயராக உள்ளது. ஆனால் சித்திரங்களை வரைவதற்காக நவீன ஒவியம் அறிந்தவர்கள் எவரும் முன்வரவில்லை.
குறிப்பாக கிராபிக் நாவல்களுக்கு சித்திரம் வரைவது பெரிய சவால். தொடர்ச்சியான காமிக்ஸ் வாசிப்பும் உயர்கற்பனையும் அசலான வெளிப்பாட்டு முறையும் இல்லாதவர்களால் இதை செய்ய இயலாது. அத்தோடு பொறுமையும், விடாப்பிடியான உழைப்பும் கூடுதல் தேவை. அப்படி யாராவது தேர்ந்த சித்திரக்காரர்கள் முன்வந்தால் இணைந்து கிராபிக் நாவலை உருவாக்கலாம்.
இந்த முயற்சி ஆரம்ப கட்டத்திலே இரண்டு ஆண்டுகளாக நிற்கிறது. ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் இது மிக பெரிய வளர்ச்சியை இங்கும் அடையப்போகிறது என்று உள்ளுணர்வில் தோன்றிக் கொண்டிருக்கிறது.
பிரம்மாண்டமான பல ஹாலிவுட் படங்கள் இப்படியான கிராபிக் நாவலில் இருந்து உருவாக்கபட்டதே. குறிப்பாக 300 என்ற பிராங் மில்லரின் கிராபிக் நாவல் பல லட்சம் பிரதிகள் விற்பனையானதோடு அவரது நேரடியான பங்களிப்பில் திரைப்படமாகவும் வெளிவந்து வெற்றி பெற்றது. ஜப்பானில் கிராபிக் நாவல்களுக்கு என்று தனிகடைகள் இருக்கின்றன.
காமிக்ஸ் சிறுவர்கள் மட்டுமே படிக்க கூடிய புத்தகம் என்ற தவறான எண்ணம் நமக்கிருக்கிறது. உண்மையில் ஒவ்வொரு வயதினரும் படிக்க கூடிய காமிக்ஸ் புத்தகங்கள் இன்று கிடைக்கின்றன. சில காமிக்ஸ் புத்தங்களை எல்லா வயதினரும் படிக்கலாம். தத்துவம் மற்றும் மெய்தேடல் குறித்த காமிக்ஸ் புத்தகங்கள் கூட இன்று வெளிவர துவங்கிவிட்டன. ஷேக்ஸ்பியர், தஸ்தாயெவ்ஸ்கி, காப்கா என்று புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் கூட இன்று காமிக்ஸ் புத்தங்களாக வாசிக்க கிடைக்கின்றன.
கிராபிக் நாவல்கள் பெரிதும் சாகசகதைகளுக்கே முக்கியத்துவம் தருகின்றன. அதே வேளை பரிசோதனை முயற்சிகள் வேறு எந்தவடிவத்தை விடவும் இதில் அதிகமாக மேற்கொள்ளபடுகின்றன. மதம், அரசு, சமூகம் கலாச்சாரம் என்று சகலதளங்களையும் கேள்விக்கு உள்ளாக்கும், புதிய கதைகளை சொல்லும் கிராபிக் நாவல்கள் கொண்டாடப்படுகின்றன. அதன் வெற்றி பல நாவல்கள் வெளியான ஒன்றிரண்டு வருடங்களில் படமாக்கபட்டுவிடுகின்றன
சென்ற ஆண்டு கான்ஸ் திரைப்பட விழாவில் மார்ஜனா சத்ரபியின் கிராபிக் நாவல் Persepolis கறுப்பு வெள்ளையில் உருவாக்கபட்ட அனிமேஷன் திரைப்படமாக வெளியிடப்பட்டு மிகுந்த பாராட்டை பெற்றது.
இப்படி கிராபிக் நாவல்களின் உலகம் முடிவற்ற கிளைப்பாதைகள் கொண்ட ஒரு அதிசய உலகம். ஆலீஸ் முயலை துரத்திச் சென்று ஒரு துளையில் விழுந்து பூமியின் அடியாழங்களுக்குள் பயணம் செய்வது போல ஒரு கிராபிக் நாவலை வாசிக்க துவங்கி அதிலிருந்து இன்னொரு நாவல், அதிலிருந்து வேறு ஒரு கதை என்று முடிவற்று போய்க்கொண்டேயிருக்கிறது எனது வாசிப்பு பயணம்.
ஜோகன் ஸ்பாரின் சித்திரநாவல் ஒன்றினை தற்செயலாக ஒரு முறை வாங்கினேன். அதுவரை அவரைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அவரது சித்திரங்களின் தனித்தன்மையும், கதை சொல்லும் முறையும் அலாதியாக இருந்தது. இங்கே கிராபிக் நாவல்களின் விலை மிக அதிகம். முந்நூறு பக்கம் உள்ள ஒரு புத்தகம் ஏழுநூறு ரூபாயிலிருந்து ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரை விலை கொண்டது. ஆகவே அது பரவலான வாசக கவனத்திற்கு போய் சேர முடியவில்லை.
ஜோகன் ஸ்பாரின் சித்திரநாவல்களில் மிக முக்கியமானது The Rabbi`s Cat. . நான் இதுவரை வாசித்த சித்திரக்கதைகளில் இதை போல எள்ளலும் உயர் தத்துவ கருத்துக்களும் கவித்துவமும் நிரம்பிய நாவல் எதையும் வாசித்தது இல்லை. மிக அற்புதமான புத்தகம். ஒவ்வொரு பக்கத்தை புரட்டும் போது பீறிடும் சிரிப்பை அடக்க முடியாமல் தான் கடந்து போக வேண்டியதிருக்கும்
ஜோகன் ஸ்பாரின் இந்த நாவல் மூன்று சிறிய சித்திரகதைகளின் தொகுப்பு. பிரெஞ்சில் வெளியானது. நூற்றுக்கும் மேற்பட்ட சித்திரகதைகளை எழுதியவர். ஒவியம் வரைந்தவர் ஜோகன்ஸ்பார். அவர் தேர்வு செய்யும் வண்ணங்களும் படசட்டக அமைப்பும், நெகிழ்வான நிலையில் உருவங்கள் அலைந்து திரிவதும் கனவு நிலைப்பட்டது போல தோன்றுகிறது. குறிப்பாக அவர் புள்ளிகளையும் . வட்டங்களையும் வளைகோடுகளையும் உபயோகிக்கும் விதம் தனித்துவமானது.
அவரது நேர்காணல் ஒன்றில் பிரெஞ்சில் உள்ள அவரது புத்தகங்கள் பல ஆங்கிலத்தில் வெளியாகவில்லையே என்று ஒருவர் கேட்டதற்கு தன் நாவல்களை படிப்பதற்கு சித்திரங்களே போதுமானது. பிரெஞ்சு தெரியவில்லை என்பது பெரிய விஷயமில்லை. பாரீஸில் உள்ள பிரெஞ்சு தெரிந்த மக்களும் கூட தன் சித்திரகதைகளை வெறுமனே படமாக தானே பார்க்கிறார்கள். காமிக்ஸ் புத்தகங்களுக்கு மொழி ஒரு தடையில்லை.
என் நாவல்களை நிச்சயம் இறந்து போனவர்கள் படிப்பதற்காக அல்ல. இறந்து போனவர்கள் எந்த மொழியையும் பற்றி கவலைபடுகின்றவர்கள் அல்ல. உபயோகிப்பவர்களும் அல்ல. என்று வேடிக்கையாக குறிப்பிடுகிறார்
ஜோகன் ஸ்பாரின் இந்த சித்திரக்கதை ஒரு பூனையைப் பற்றியது. 1930 களில் அல்ஜீரியாவில் வாழும் யூத மதகுருவின் குடும்பத்தில் வசிக்கும் பூனையது. அந்த மதகுருவிற்கு ஜிலாபியா என்ற அழகான மகள் இருக்கிறாள்.
மனைவியை இழந்த மதகுரு மிகுந்த ஆசாரமானவர். மதநூல்களை படிப்பதிலும் புதிதாக விளக்கம் தருவதிலும் ஈடுபாடு கொண்டவர். யூத மரபை எந்த நிலையிலும் கைவிடாதவர்.
அவரது வீட்டில் இருந்த பூனை மதகுருவோடு சேர்ந்து பழகி தானும் ஒரு கடவுளுக்கு பயந்த விலங்காக நடந்து கொள்கிறது. தன்னால் பேச முடியாது என்ற போதும் தன்னால் கேட்க முடியும். உலகில் பல மதங்களை சேர்ந்தவர்கள் இப்படி தானே வாழ்கிறார்கள் என்று சொல்லும் பூனை புனிதக் கருத்துகளை எப்போதுமே காதை திறந்து வைத்து கேட்டு கொண்டிருப்பதே மேலானது. வாய் பேசத் துவங்கினால் தலை போய்விடும் என்று சொல்கிறது. அந்தப் பூனையை மதகுருவின் மகள் மிகவும் நேசிக்கிறாள். அவளுடன் பூனை நெருக்கமாக பழகுகிறது. அவள் தனக்கு மட்டுமே சொந்தமானவள் என்று பூனை கற்பனை செய்து கொள்கிறது.
அந்த மதகுருவின் வீட்டில் ஒரு பேசும்கிளி இருக்கிறது. அதை ஒரு நாள் பூனை அடித்து சாப்பிட்டுவிடுகிறது. அன்றிலிருந்து பூனைக்கு பேசும் சக்தி வந்துவிடுகிறது. ஆச்சரியம் அடைந்த மதகுரு தன்மகளிடம் நமது பூனை பேசுகிறது என்று வியப்போடு சொல்கிறார்.
மகள் உற்சாகமாகி என்ன பேசுகிறது என்று கேட்கிறாள் வருத்தத்துடன் மதகுரு அது வாயை திறந்தால் ஒரே பொய்யாகக் கொட்டுகிறது என்கிறார். உடனே பூனை அது பொய் என்று மறுத்து சொல்கிறது. மகளோ பொய் சொல்லத் தெரிவது எளிதானதில்லை என்று பூனையை கட்டிக் கொள்கிறாள். கொஞ்சுகிறாள். பெண்களுக்கு பொய்யின் மகத்துவம் புரியும் என்கிறது பூனை.
மதகுருவிடம் பூனை தான் ஒன்றும் கிளியை கொல்லவில்லை என்று அடுத்த பொய்யை சொல்கிறது. அவர் இப்படி துஷ்ட சிந்தனை கொண்ட பூனையை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதை தனது தலையான செயலாக முடிவு செய்கிறார்.
தன் மகளோடு பூனை சேர்ந்திருக்க அனுமதித்தால் அது அவளைக் கெடுத்துவிடும் என்று நம்பி மகளை விட்டு பிரிக்கிறார். தன்னோடு கூட வைத்து கொண்டு மத நூல்களைக் கற்றுத் தருகிறார். இந்த பகுதி தான் நாவலின் உச்சபட்ச வேடிக்கையானது.
பூனைக்கு அவர் யூதமரபை போதிக்க துவங்கும் போது பூனை அலுப்போடு சொல்கிறது. பூனைகளால் ஒரு போதும் யூதராக முடியாது. நான் வெறும்பூனையாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.
அதற்கு மதகுரு ஒரு யூதனின் வீட்டில் வளர்க்கபடும் பூனை யூதபூனையாகவே கருதப்படும் என்று சொல்லி நீதிநூலை கற்பிக்கிறார். உடனே பூனை ஆத்திரப்பட்டு கேட்கிறது.
அப்படியானல் மத சம்பிரதாயப்படி பூனைக்கும் ஆண் உறுப்பின் தோல் நீக்கும் சடங்கை செய்வீர்களா என்று கேட்கிறது. அவர் பூனைகளும் அதில் விலக்கு அளிக்கபடுகிறது என்று சொல்கிறார்.
பூனை யூத சம்பிரதாயங்களுக்கு நான் எதிரானவன் என்று முரண்டுபிடிக்கிறது. மதகுரு அதை விடுவதில்லை. இதற்கிடையில் பூனை ஜிலாபியாவை அடிக்கடி சந்தித்து அது வரை யூதமத நூலில் எதை எல்லாம் பெண்கள் அறிந்து கொள்ள கூடாது என்று விலக்கபட்டிருக்கிறதோ அதை எல்லாவற்றையும் பற்றி பேசுகிறது. அவளிடம் கேள்வி கேட்கிறது. முக்கியமான யூத நூல் விலக்கி வைத்திருந்த காதல் காமம் பற்றி அவளுடன் தொடர்ந்து பேசுகிறது. அவள் மனமாற்றம் கொள்ளக் ஆரம்பிக்கிறார்
மதகுரு தன் பூனையை தன்னால் முறைப்படுத்த முடியவில்லையே என்று மூத்த மதகுருவை அணுகுகிறார். அவரோ பூனைகள் மனிதர்களுடன் சேர்ந்தே வசித்தாலும் மனிதர்களை போல எதையும் எளிதாக நம்பிவிடுவதில்லை என்கிறார்
பூனை பலமொழிகளிலும் பேசுகிறது. கபாலா என்ற ரகசிய மார்க்கம் பற்றி ஆழமாக விவாதிக்கிறது. மதநூல்களை புரிந்து கொள்ளும் போது கேள்விகேட்க வேண்டும் என்று சண்டை போடுகிறது. இப்படியான சிந்திக்க தெரிந்த அந்த பூனையும் மதகுருவும் நாவல் முழுவதும் வாழ்க்கை குறித்த ஆதாரமான கேள்விகளை பகிர்ந்து கொள்கிறார்
ஒரு நாள் மதகுருவின் மகள் தான் ஒருவரை காதலிப்பதாக சொல்லி அறிமுகப்படுத்துகிறார். மதகுரு பூனை இருவருமே இதனால் சோகமடைகிறார்கள். வருத்தம் இருவரையும் ஒன்று சேர்கிறது. மகள் அந்த ஆளையே மணந்து பாரீஸ் நகரம் செல்கிறாள். தன் மகள் திருமணமாகி செல்லும் வீட்டிற்கு பூனையும் மதகுருவும் செல்கிறார்கள். அங்கே காணப்படும் பகட்டான பாவனைகளையும் அந்த வீட்டு மனிதர்கள் பூனையை விடவும் அதிகமாக பொய் சொல்வதையும் கண்டு கொள்கிறார்கள்.
இப்போது பூனையும் மதகுருவும் ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள். ஒருவர் மற்றவரை தனது மறைமுக ஆசான் போல கொள்கிறார்கள். இவர்களது தனிமையும் பயணமும் அக உலகமும் தான் இந்த கிராபிக் நாவல். இதன் தொடர்ச்சி இரண்டாம் பாகமாக வெளிவந்திருக்கிறது.
இதை வாசிக்கும் போது அடிக்கடி வைக்கம் முகமது பஷீரின் கதையான மாயப்பூனை நினைவிற்கு வந்தது. வேறுவேறு தேசங்களில் வேறு காலங்களில் வாழ்ந்த போதும் இருவரது மனதும் கொள்ளும் கற்பனையும் நெருக்கமாக இருப்பதாகவே தோன்றியது
பொய் சொல்ல தெரிந்த இந்த பூனை தன்னை அறிய துவங்குவதோடு உலகின் முரண்களையும், அபத்தங்களையும் கேள்விகேட்கிறது. விமர்சனம் செய்கிறது. பூனை தனது அடிப்படை உரிமையாக Freedom to lie என்று குறிப்பிடுகிறது.
இந்த பொய்கள் உலகிற்கு மிக தேவையானவை. இந்த புத்தகம் தந்த உற்சாகம் ஜோகன் ஸ்பாரின் மற்ற புத்தகங்களையும் தேடி வாசிக்க வேண்டும் என்று மனது அலைபாய்கிறது.
***