காந்தம்


 
சென்ற வாரத்தில் ஒருநாள் முன்பாக அசோக்பில்லர் சாலையில் ஒரு ஆளைக் கண்டேன். வயது ஐம்பதை கடந்திருக்கும். மெலிந்து கண்கள் ஒடுங்கி போனவளாகயிருந்தார். முதுகில் ஒரு பாலிதீன் பை ஒன்று தொங்கி கொண்டிருந்தது. கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு சாலையோரம் எதையோ தேடுவது போல சுற்றிக் கொண்டேயிருந்தார் 

அப்போது தான் கவனித்தேன். அவரது கையில் இருந்த குச்சி முனையில் ஒரு வட்டு போலிருந்தது. அந்த வட்டில் தரையில் கிடந்த ஆணிகள், துருப்பிடித்த சாவிகள், நட்டுகள் மற்றும் சிறு இரும்பு துண்டுகள் யாவும் ஒட்டிக் கொண்டிருந்தன. அந்த வட்டு ஒரு பெரிய காந்தம் என்பதை தெரிந்து கொண்ட போது வியப்பாகயிருந்தது. ஒரு ஆள் மிகப்பெரிய காந்தத்தை கையில் வைத்தபடி அலைவதை முதன்முறையாக அப்போது தான் பார்க்கிறேன், அவர் தரையை நோக்கி காந்தத்தை கொண்டு செல்லும் போதே ஆணிகள் விறைத்தபடிய நிமிர்ந்து கொண்டன. 

இது என்ன வேலை. தரையில் கிடந்த தூக்கி எறியப்பட்ட பல இரும்பு துண்டுகளை அவர் தேடி சேகரித்து கொண்டிருந்தார். எதற்காக இதை சேகரிக்கிறார் என்று தோணியது. அவர் கர்ம சிரத்தையாக சாலையோரமாகவே நடந்தபடி காந்தத்தை மணலில் புழுதியில் சாலையோர மரங்களின் அடியில் நகர்த்தியபடியே சேகரித்தபடியே சென்று கொண்டிருந்தார்.

ஒரு மரத்தடியில் அவரிடம் இதை எல்லாம் எதற்காக சேகரிக்கிறார் என்று கேட்டேர். அவர் இது ஒரு வேலை. குப்பையில் போடப்பட்ட இரும்பு பொருட்களை சேகரித்து காயலான் கடையில் போட்டால் பணம் தருவார்கள் என்று சொன்னார். இந்த காந்தம் எங்கே வாங்கியது என்று கேட்டதும் தி.நகரில்வாங்கி வந்ததாக சொன்னார் 


அவர் கையில் வைத்திருந்த பையை பார்த்தேன். நட்டு போல்டு, சைக்கிள் பால்ரஸ், படிக்கல் என எண்ணிக்கையற்ற இரும்பு பொருட்கள் அதிலிருந்தன. அவரது தோளில் ஒரு பை தொங்கிக் கொண்டிருப்பதை அப்போது தான் கண்டேன். அதில் என்ன வைத்திருக்கிறார் என்று கேட்டேன். அவர் சிரித்தபடியே எடுத்து காட்டினார். அத்தனையும் சாவிகள். 100க்கணக்கில் சிறியதும் பெரியதுமாக பழைய துருப்பிடித்த சாவிகள். ஒரு நாளைக்கு எப்படியும்

இருநுôறு சாவிகளாவது கிடைத்துவிடும் என்றபடியே அதை தனியாக விற்பதாக சொன்னார். அது இன்னும் ஆச்சரியம் தந்தது. என்றால் தினமும் எத்தனையோ பேர் தங்கள் பைக்சாவி, வீட்டுசாவி, மேஜை டிராயரின் சாவி என்று ஏதோ ஒரு சாவியை தொலைத்து கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை புலப்பட்டது. சாவிகளுக்கு பூட்டு இல்லாமல் தனி வாழ்க்கை இருக்க முடியாது இல்லையா? என்று யோசனை நீண்டது.  


எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று கேட்டேன். ஒரு நாளைக்கு இருநூறு ரூபா கிடைக்கும் என்றபடி தன்னை போலவே ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இதே தொழிலை செய்வதாக சொன்னார். 

வாழ்க்கை நிர்பந்தம் என்னென்ன வேலைகளை எல்லாம் உருவாக்கி விட்டிருக்கிறது. மார்க்வெஸ் நாவலில் மெல்குயூடிஸ் என்ற நாடோடி பெரிய காந்தம் ஒன்றை ஊருக்கு கொண்டு வந்த போது வீட்டில் இருந்த சமையற்சாமான்கள் உள்ளிட்ட பெண்கள் வீதிக்கு வந்து இழுத்து செல்லபட்டதாக ஒரு நிகழ்வு உள்ளது. அது நினைவிற்கு வந்தது. அந்த ஆள் இரும்பை தேடி அலைந்து கொண்டிருந்தான்

இரும்பை ஒரு சமூகம் எப்படி பயன்படுத்துகிறது என்பது மிக விநோதமானது. ஒவ்வொரு சாதியும் இரும்பை ஒருவிதமாக பயன்படுத்துகிறது. இரும்பின் வளர்ச்சியே நாகரீகத்தின் வளர்ச்சி. கண்ணுக்கு தெரியாமல் நமது வீடுகளுக்குள் இரும்பு கம்பிகள் உறைந்து போயிருக்கின்றன . நம்மை சுற்றிய எல்லா வடிவங்களிலும் இரும்பு நிரம்பியுள்ளது.

இரும்பின் பயன்பாடு இன்றும் புதிது புதிதாக வளர்ந்து கொண்டேயிருக்கிறது.

இரும்பை இன்னமும் நாம் முழுமையாக புரிந்து கொள்ளவேயில்லை

அந்த ஆள் இரும்பை சேகரிப்பதை நம்பி வாழ்கிறான்.

விநோதமாக இருக்கிறது நகர வாழ்வு




0Shares
0