
தற்செயலாகவே அந்த புத்தகத்தை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். பத்து பக்கங்கள் படிப்பதற்கு நான் படித்து கொண்டிருப்பது இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான எழுத்து என்பதை உணர முடிந்தது.
அப்படி தான் Fernando Pessoa`s The Book of Disquiet புத்தகத்தை கண்டுபிடித்தேன். பெசோவின் எழுத்து தனித்துவமானது. ஒருவகையில் அது காப்காவை போன்றது. வாழ்க்கையும் காப்காவின் வாழ்வையே அதிகம் ஒத்திருக்கிறது.
பெசோவின் புத்தகம் அவரது மறைவிற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியிருக்கிறது. தன் வாழ்நாளில் அதிகம் கவனிக்கபடாத கவிஞராக இருந்த பெர்னான்டோ பெசோ இன்று ஐரோப்பிய இலக்கியத்தின் தலைசிறந்த கவிஞராக கொண்டாடப்படுகிறார். செக் நாட்டின் பிராக் நகரை காப்கா தனது படைப்பெங்கும் பதிவு செய்துள்ளது போல பெசோ போர்த்துகீசிய தலைநகரான லிஸ்பனை தனது எழுத்தின் மையமாக கொண்டிருக்கிறார்.
பெசோவின் வாழ்நாளில் ஒரேயொரு புத்தகம் மட்டுமேவெளியாகி இருக்கிறது. கவிஞர் விமர்சகர். மொழிபெயர்ப்பாளர். தத்துவவாதி, நாடக ஆசிரியர். அரசியல் விமர்சகர் ஜோசியக்காரன் என்று பல்வேறு முகங்கள் கொண்ட பெசோ நவீன போர்த்துகீசிய இலக்கியத்தின் முன்னோடி சாதனையாளராக இன்று சிறப்பிக்கபடுகிறார். அவரது மறைவிற்கு பிறகு அவர் வீட்டில் இருந்து சேகரிக்கபட்ட இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்து பிரதிகளில் இருந்து அவரதுபடைப்புகள் மீள்உருக் கொண்டிருக்கின்றன.
பெசோவின் இன்னொரு முக்கியத்துவம். அவர் ஒரே நேரத்தில் நாலைந்துபெயர்களில் வேறு வேறு ஆட்களை போல எழுதி வந்தது. அதை அவர் Heteronyms என்று குறிப்பிடுகிறார் .புதிய புதிய புனைப்பெயர்களுடன் அவர் கவிதைகள் கட்டுரைகள் எழுதிவந்தார். அத்துடன் அவரே புனைப்பெயரில் வெளியான புத்தகங்களுக்கு விமர்சனமும் கண்டன கடிதங்களும் எழுதியிருக்கிறார். தனது புனைஉருவங்களை நம்ப வைப்பதற்காக அவர் அவர்களுக்காக ஒரு சுயசரிதையை உருவாக்கியதோடு அவர்களின் ஜாதகத்தை கூட உருவாக்கியிருக்கிறார்.
ஒரு மனிதனுக்குள் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது தான் அவரது முக்கிய வாதம். அதையே தனது படைப்புகளின் வழியே அடையாளம் காட்டியிருக்கிறார். இன்று அவரது விமர்சகர்கள். எந்தெந்த பெயர்களில் பெசோ எதை எழுதியிருக்கிறார் என்று கண்டறிந்து அதை ஒருமித்து தொகுக்கும் பணியில் இருக்கிறார்கள்.
பெசோவின் The Book of Disquiet சுந்தர ராமசாமியின் ஜேஜே சில குறிப்புகள் போன்ற ஒரு நாவல்வகையை சேர்ந்தது. கற்பனையான ஒரு எழுத்தாளன். அவன் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்கள், அவனது எண்ணங்கள் மற்றும் அவனது நண்பர்கள், சந்திப்புகள் பற்றியது. உரைநடை ஆசிரியரான அவன் தன்னை ஒரு கவிஞராக எண்ணிக் கொள்கிறான். அவன் ஒருவகையில் பெசோவின் நகல்உருவமே. தன்னை தான் பெசோ இப்படியான ஒரு புனைவு தோற்றத்தில் வைத்து எழுதியிருக்கிறார்.
Bernardo Soares, என்பவரை தான் தற்செயலாக சந்தித்து நட்பு கொண்டதாகவும். துணை யாருமே இல்லாமல் தனியே வாழ்ந்து வந்த அவன் தனது வாழ்க்கை குறிப்புகளை தன்னிடம் ஒப்படைத்தாகவும் அதை தான் வெளியிடுவதாக புத்தக அறிமுகம் குறிப்பிடுகிறது.
தனது எழுத்துகள் யாவும் எழுதி முடிக்கபட்டவுடன் அதிருப்தியை தந்துவிடுகின்றன. அவற்றை தான் ஏன் எழுதினேன் என்ற குற்றவுணர்ச்சியும் நிராசையுமே எழுகின்றன. அதை தவிர்க்கவே முடியவில்லை. ஒவ்வொரு எழுத்தும் தனது பாவமன்னிப்பு குரலே. அது வெறுமையை தான் வெளிப்படுத்துகிறது என்று அர்மான்டோ குறிப்பிடுவதாக புத்தக முகப்பு சுட்டிக் காட்டுகிறது.
தத்துவத்திலும் மெய்யியலிலும் அதிக ஈடுபாடு கொண்ட பெசோ தீவிர ஆன்மீக பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். அதன் வழியே உயர்சக்தியை அடைந்துவிட முடியும் என்று நம்பினார். கனவும் நனவுமாக அவரது தேடல்கள் வளர்ந்தன. இதற்காக திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வந்தார். இறுதிவரை ஒரு பிரம்மசாரியாகவே வாழ்ந்த அவர் பாலுறவின் வழியே தனது உள்ளார்ந்த சக்திகளை இழுந்துபோய்விடக்கூடும் என்று நம்பினார்.
அந்த வெறுப்பு அவரை பாலுறவு நாட்டத்தையும் பெண்களையும் கேலி செய்ய வைத்தது. ஒருவகையில் அவர் பாலுறவை சுய ஏமாற்றத்தின் வடிவமாகவே கருதினார். ஆகவே பெண்களிடமிருந்து விலகி இருப்பதையே தனது இருப்பின் முக்கிய அம்சமாக வெளிப்படுத்திக் கொள்கிறார். காப்காவிடம் இருந்தது போன்று உள்ளார்ந்த பாலுறவு நாட்டமும் வெளியே அதைவிலக்கிய சிக்கலும் பெசோவிடமும் காணப்படுகிறது.
பெசோ The Book of Disquiet பற்றி குறிப்பிடும் போது இந்த புத்தகம் Life history இல்லை மாறாக Lifeless history என்றே குறிப்பிடுகிறார். தன் வாழ்வில் தான் எதையும் அடையவில்லை. ஒன்று செய்ய இயலாமல் போனதை தனது தனிச்சிறப்பு என்று அடையாளம் சொல்லும் அவர் தன்னை மாற்றிக் கொள்ள ஒரு போதும் முயற்சிக்கவே இல்லை. அப்படியான நினைப்பு கூட தன்னிடம் இல்லை என்று துவக்குகிறார்
புத்தகம் ஆதாரமில்லாத சுயசரிதை குறிப்புகள் என்ற முதல்பகுதியோடு துவங்குகின்றன. நான் பிறந்த காலத்தில் பெரியவர்கள் கடவுளின் மீது நம்பிக்கை இழக்க துவங்கிய காலத்தில் நான் பிறந்தேன். ஏன் கடவுள் மீது நம்பிக்கையற்று போனார்கள் என்று எவருக்கும் தெரியாது. ஆனால் என்னால் அப்படியிருக்க முடியவில்லை. எனக்கு கடவுள் தேவையானவராக இருந்தார். ஆனால் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை என்று அர்மன்டோ குறிப்பிடுகிறார்
பெசோவின் குறிப்புகள் ஒன்றிரண்டு பத்தி போன்று சிறுதுண்டுகளாகவே உள்ளன.வெவ்வேறு காலத்தில் அவை எழுதப்பட்டிருக்க வேண்டும். அவர் இதை ஒரு முழுமையாக தனிநூலாக கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கவில்லை போலும். ஆனால் சில இடங்களில் இது ஒரு நாவலை போல சரளமாகவும் நீள்கிறது.
பெசோ சிறுவயதில் ஆப்ரிக்காவில் வளர்க்கபட்டவர். அவரது மூன்று வயதில் அப்பா காசநோயால் இறந்து போய்விடவே வளர்ப்பு தந்தையின் கட்டுபாடில் வளர்ந்திருக்கிறார். அந்த நினைவுகள் இந்த பத்திகளில் அதிகம் வெளிப்படுகின்றன.
பெசோவின் உன்னதமான கவித்துவமும் கேலியும் ஆழ்ந்த தத்துவபரிச்சயமும் ஒவ்வொரு வரிகளிலும் காணமுடிகிறது. பெசோவின் கவிதைகள் அன்றாட வாழ்வை மிக உன்னிப்பாக அவதானித்து எழுதப்பட்டவை. அவை ஒருவகையில் நீட்சேயின் எழுத்துக்களை போலவே இருக்கின்றன. வாழ்க்கை குறித்த தனது இலக்கற்ற எண்ணங்களை தொகுத்து எழுதியிருப்பதாகவே பெசோ இதை அடையாளம் காட்டுகிறார்
சுயசரிதை, டயரி மற்றும் உரைநடைக்கவிதை என்று மூன்று வடிவங்கள் கொண்ட இந்த புத்தகம் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ஜேர்னல்களை போன்று தனித்துவமான சிந்தனைகளை கொண்டிருக்கிறது.
வாழ்க்கை என்பது சிறைச்சாலையில்லை. அது ஒரு சாலையோர விடுதி. நமது வாகனம் வரும்வரை அங்கே தங்கி ஒய்வு எடுத்து கொள்ளலாம் என்று பெசோ தனது வாழ்வு பற்றிய பார்வையை வெளிப்படுத்துகிறார்
ஒரு முறை அவரது வேலையாள் சூடான தேநீர் கோப்பையை கிழே போட்டு உடைத்துவிடுகிறார். அதை வெறும் தற்செயல் நிகழ்வு என்று கொள்ளாமல் அந்த தேநீர் கோப்பையில் ஒரு ஜோடி ஆண்பெண் உருவங்கள் சித்திரமாக தீட்டப்பட்டிருந்தன. அவை வாழ்வின் வெறுமையை தாளமுடியாமல் தற்கொலை செய்துகொள்ள எண்ணியிருக்கின்றன. அதற்கு உபகரணமாகவே வேலையாளை பயன்படுத்திக் கொண்டன. ஒரு மனதின் துப்பாக்கியை பயன்படுத்திக் கொள்வதை போல வேலைக்காரனை பயன்படுத்தி அவை உடைந்து சிதறிவிட்டன என்று ஒரு குறிப்பை பெசோ எழுதியிருக்கிறார்
புனைப்பெயர்களை பயன்படுத்தி எழுதும் பெசோ கவிஞனுக்கு ஒரு பெயர் , பயணக்கட்டுரை எழுதுவதற்கு இன்னொரு பெயர், கவிதைகளுக்கு புதிய பெயர் என்று வேறுவேறு ஆட்கள் எழுவது போன்ற எழுதிவந்திருக்கிறார். அந்த மூன்றின் சாயல்களும் பெசோவின் புத்தகத்தில் காணப்படுகின்றன.
ஜோதிடம் வானவியல் மெய்தேடல் போன்றவற்றில் தீவிர அக்கறை கொண்டதால் அவர் தனது கற்பனை மனிதர்களுக்கு உண்மையான பிறப்பு சான்றிதழ்கள் கூட தயாரித்திருக்கிறார்.
தனது வீட்டில் வேலை செய்து வந்த இரண்டு வேலைக்கார்களை பற்றிய அவரது குறிப்பு தனித்த சிறுகதை போன்றது. அந்த வேலைக்காரர்களில் ஒருவன் நாற்பது வருசங்களாக சமையல் அறையிலே இருக்கிறான். காலை ஆறுமணிக்கு துவங்கி இரவு பனிரெண்டுவரை வேலை செய்கிறான். லிஸ்பனில் வசித்தபோதும் அவன் நகரின் துறைமுகம் தாண்டி வேறு எங்கும் சென்றதேயில்லை. ஒரு நாள் கூட நாடகம் இசை எதையும் பார்க்க போனதில்லை. யாரையும் காதலித்ததில்லை.
ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறான். எதற்கு என்று இன்றுவரை புரியவேயில்லை. அவனுக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். அது எப்பிடி என்றும் வியப்பாகவே உள்ளது. சூப் சரியாக உள்ளதாக, இறைச்சி முழுவதும் வேகவைக்கபட்டிருப்பதா என்பது மட்டுமே அவனது கவலை. இந்த உலகில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களே. விஞ்ஞான கண்டுபிடிப்புகளோ, மதப்புரட்சிகளோ எதுவும் அவனை போய் சேரவேயில்லை.
ஆனால் அந்த மனிதன் சந்தோஷமாக இருக்கிறான். மிக சந்தோஷமாக இருக்கிறான். அந்த புன்னகை வெறும் நடிப்பில்லை. நிஜம். தன்னை மறைத்து கொண்டு நடிக்க அவனுக்கு தெரியாது. அது எப்படி சாத்தியமாகிறது. படித்து உலகை அறிந்து மனிதர்கள் படும் பாடுகளை விட இது மேலானது தானா.. குழப்பமாகவே உள்ளது.
என்று அந்த குறிப்பு விவரிக்கிறது. வாழ்வை எப்படி புரிந்து கொள்வது என்பதின் மீது கூடுதல் கவனம் கொண்டிருந்த பெசோ அதைபற்றிய மிக உண்மையான பதிவுகளை, அபிப்ராயங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.
லிஸ்பன் நகரில் தொழில்முறை மொழிபெயர்ப்பாளராக வாழ்ந்து ஒரு அறைக்குள்ளாகவே அடைந்து கிடந்த பெசோ தினமும் மாலை வேளைகளில் மட்டும் ஒரு கபேயின் முன்னால் வந்து உட்கார்ந்து நண்பர்களை சந்திப்பது வழக்கம். அந்த காபி ஷாப்பின் முன்னால் இன்றைக்கு பெசோவிற்கு சிலை வைக்கபட்டிருக்கிறது. போர்த்துகீசிய அரசு அவரது இலக்கிய பெருமையை சிறப்பிக்கும் விதமாக அவரது உருவம் பொறித்த பணத்தை வெளியிட்டுள்ளது.
இயல்புலகை கற்பனையில்லாமல் புரிந்து கொள்ளவே முடியாது. கனவு காண்பது ஒருகலை. கனவு காண தெரிந்தவனால் மட்டுமே வாழ முடியும். அதை கற்றுக் கொள்வது எளிதானதில்லை. கடவுளை மறுப்பது எளிது. ஆனால் விடுபடுவது கடினமானது. ஒரு மனிதமனதிற்குள் ஒராயிரம் மனிதர்களின் சாயல்கள் உள்ளன என்று அவரது புத்தகம் முழுவதும் அடிக்கோடிட்டு படிக்க வேண்டிய வரிகள் நிறைய உள்ளன.
நிறைய இடங்களில் ஒரு ஜென் குருவின் புத்தகத்தை படிப்பது போன்றே உள்ளது. 1982ல் வெளியான இந்த புத்தகம் இன்று வரை பல லட்சம் பிரதிகள் விற்றிருக்கின்றது.
இவரது புனைப்பெயர்களில் ஒன்றாக ரிக்கார்டோ ரியஸ் என்பதை முன்வைத்து பெசோவின் கற்பனை கவிஞனை பற்றி போர்த்துகீசிய நாவலாசிரியரும் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளருமான ஜோஸ் சரமாகோ The Year of the Death of Ricardo Reis என்ற நாவலை எழுதியிருக்கிறார். அது புனைவிற்கும் நிகழ்உலகிற்குமான இடைவெளிகளை நெருக்கத்தை ஆராய்கிறது.
பெசோ நாம் தேடி வாசிக்க வேண்டிய முக்கிய ஆளுமையாகும்.
**