காலைக்குறிப்புகள் 24 நாவலாசிரியனின் ஜன்னல்

ஆர்தர் கோய்ஸ்லர் எழுதிய சந்நியாசியும் சர்வாதிகாரியும் என்ற கட்டுரைத் தொகுப்பினை ச.து.சு.யோகியார் மொழியாக்கம் செய்திருக்கிறார். நான் அறிந்தவரை ஆர்தர் கோய்ஸ்லரின் இந்த ஒரு புத்தகம் தான் தமிழில் வெளியாகியுள்ளது.

பியர்ல் பப்ளிகேஷன் வெளியீடாக வந்த இந்த நூலில் நாவலாசிரியனின் மயக்கம் என்றொரு கட்டுரை உள்ளது. அந்தக் கட்டுரை எழுத்தாளன் எப்படி ஒரு நாவலை எழுத வேண்டும் என்பது குறித்துப் பேசுகிறது.

தனி மனிதன் ஒரு அறைக்குள்ளிருக்கிறான். சமூகம் வெளியே இருக்கிறது. மூடப்பட்டிருந்த ஒரு ஜன்னலைத் திறந்து வெளியுலகைப் பார்த்து எழுதுவது ஒரு வகை. ஜன்னலை மூடிவிட்டு அறைக்குள் இருந்தபடியே உலகைக் கற்பனை செய்வது இன்னொரு வகை. ஜன்னல் எப்போதும் திறந்தேயிருக்கிறது. அங்கே நுண்ணோக்கி உதவியோடு உலகின் சிறிய விஷயம் ஒன்றை ஆழமாக அறிந்து எழுதுவது இன்னொரு வகை

இப்படிப் பல்வேறு வகைப்பட்ட எழுத்துமுறைகள் இருக்கிறது . செய்திக்கோவைகளைத் தொகுத்துத் தருவது நாவலாசிரியனின் வேலையில்லை. எப்போது எழுத்தாளன் ஒரு செய்தியாளராக மட்டுமே சுருங்கிப் போகிறானோ அப்போது நாவல் தோல்வி அடைந்துவிடுகிறது என்கிறார்.

ஆர்தர் கோய்ஸ்லரின் இந்தக் கட்டுரைத் தொகுப்பில் பெரும்பான்மை கட்டுரைகள் சோவியத் ரஷ்யாவிற்கு எதிராக எழுதப்பட்டவை.

ஆர்தர் கோய்ஸ்லரின் Darkness at Noon நாவலை வாசித்திருக்கிறேன். அதுவும் இவ்வகையைச் சார்ந்த ஒன்றே.

அமெரிக்க நிதி உதவியோடு நடத்தப்பட்ட பியர்ல் பப்ளிகேஷன் எடிட்டராக இருந்தவர் ச.து.சு.யோகியார். அவரது மொழியாக்கத்தில் தான் ஹெமிங்வேயின் கடலும் கிழவனும் வெளியானது. காதரின் ஆன் போட்டர், இர்வின் ஸ்டோன். ஸ்டீபன் கிரேன். என முக்கிய எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பியர்ல் பப்ளிகேஷன் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்து வெளியிட்டிருக்கிறது.

விக்டர் கியூகோவின் ஏழை படும்பாடு, உமர் கய்யாமின் கவிதைகள், அமெரிக்கக் கவி வால்ட் விட்மனின் கவிதைகள் என யோகியார் நிறைய நல்ல நூல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார்.

சங்ககிரி துரைசாமி சுப்பிரமணிய யோகியார் என்ற ச.து.சு யோகியார் திருமூலர் மரபில் 49வது தலைமுறையினனாக வந்த சித்தராக அறிவித்துக் கொண்டவர். யோகியார் என்ற பெயர் அவர் ஒரு துறவி என்ற பிம்பத்தையே நமக்குள் ஏற்படுத்துகிறது. ஆனால் இவர் காவல்துறையில் வேலை செய்தவர். சுதந்திரப் போராட்டம் காரணமாக வேலையை விட்டவர்.

பட்டு ஜிப்பா, பட்டுவேட்டி சகிதமாக வருவார். கையில் எப்போதும் சிகரெட் புகைந்தபடியே இருக்கும். ஒரு சிகரெட் முடிவதற்கு அடுத்தச் சிகரெட்டை பற்ற வைத்துவிடுவார். என்கிறார்கள்

சரளமாக ஆங்கிலம் பேசுவார், சினிமாவில் தீவிர ஈடுபாடு உண்டு. கதைவசனம் எழுதியிருக்கிறார். சினிமா இயக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் கே.வி. மகாதேவனைத் தனது ஆனந்தன் என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தவர் யோகியார் தான்.

ஒரு பக்கம் அவரது தீவிரமான தமிழ் ஆர்வம் மறுபக்கம் இது போன்று சினிமா மற்றும் சர்வதேச இலக்கியங்களின் மீது ஈடுபாடு என வித்தியாசமான ஆளுமையாக இருந்தவர் யோகியார்

க.நா.சு இவரைப் பற்றி எழுதிய குறிப்பு ஒன்றில் புதுமைப்பித்தன் அறையில் நானும் யோகியாரும் நிறைய நாட்கள் சந்தித்து உரையாடியிருக்கிறோம். சர்வதேச இலக்கியங்களைப் பற்றிச் சுவாரஸ்யமாகப் பேசுவார். ஆசுகவி என்பதால் எந்தத் தலைப்பில் கவிதை பாடச்சொன்னாலும் உடனே பாடிவிடுவார். அவரை இப்படிப் பாடவைத்துக் கேட்பது புதுமைப்பித்தனின் வழக்கம் என்று குறிப்பிடுகிறார்.

பிரபல இயக்குநரான எல்லீஸ் ஆர் டங்கன் தனது திரைப்படங்களுக்கு ஆலோசகராகச் ச.து.சு.யோகியாரை நியமித்திருந்தார். ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் தெரிந்தவர். நிறைய வாசிப்பு அனுபவம் கொண்டவர் என்பதால் அவர் டங்கனுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார்.

இரு சகோதரர்கள் என்ற யோகியாரின் கதையை டங்கன் திரைப்படமாக இயக்கியிருக்கிறார். ஒன்றாக வாழும் இரண்டு சகோதரர்கள் கருத்து வேறுபாடு காரணமாக வீட்டின் நடுவே ஒரு கோடு கிழித்து வீட்டினை இரண்டாகப் பிரித்துவிடுகிறார்கள். பிரிந்த குடும்பங்களுக்குள் ஏற்படும் பிரச்சனையே படத்தின் மையக்கதை. படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

ச.து.சு யோகியார் பற்றிய இந்திய இலக்கியச்சிற்பிகள் வரிசை நூலில் அவரது வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்வு குறிப்பிடப்படுகிறது. சாத்தனாரின் கூத்த நூலுக்குச் ச.து.சு. யோகியார் விளக்கக் குறிப்புகளும் பொழிப்புரையும் எழுதி அதைத் தட்டச்சு செய்வதற்காக ஒருவரிடம் கொடுக்கிறார். அந்த நண்பர் கைமறதியாக அந்தக் கையெழுத்துப்பிரதியை மேஜையோரம் வைத்துவிடுகிறார். தேவையற்ற காகிதங்கள் என நினைத்த அவரது மனைவி அந்தக் கையெழுத்துப்பிரதியை அடுப்பில் போட்டு எரித்துவிடுகிறார். வயதான ச.து.சு. யோகியார் நோயுற்ற நிலையிருந்த நாட்கள். ஆகவே இந்தத் தகவலை எப்படி யோகியாரிடம் சொல்வது எனத் தெரியாமல் தட்டச்சுச் செய்பவர் பயந்து போகிறார்.

வேறுவழியின்றி யோகியாரின் மருத்துவரிடம் தகவலைச் சொல்லி உண்மையைத் தெரிவிக்கும்படி சொல்கிறார்கள். அவரும் பக்குவமாக நடந்த தவற்றை எடுத்துச் சொல்கிறார். இந்தத் தகவலைக் கேட்ட யோகியார் மனம் நொந்துபோகிறார். இனி எவ்வாறு அதை மறுமுறை எழுதுவது என்று கவலைப்பட்டுப் படுத்த படுக்கையாகி விடுகிறார். அந்த இழப்பை அவரால் தாங்க முடியவில்லை. ஆனால் சில நாட்களிலே மறுபடியும் அதே கூத்தநூலுக்கு விளக்கவுரை எழுத ஆரம்பித்து அதைத் தனி நூலாக வெளியிட்டிருக்கிறார். நாட்டிய சாத்திரத்தை மையமாகக் கொண்ட கூத்தநூலின் பொழிப்புரை தங்கப்பதக்கம் பரிசு பெற்றிருக்கிறது

யோகியாருக்கு நடந்த விஷயம் யாரோ ஒருவருக்கு நடந்த ஒன்றில்லை. அநேகமாக எல்லா எழுத்தாளர்களுக்கும் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்திருக்கும்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு புதிய நாவல் ஒன்றை ஒரு ஆண்டுகாலம் எழுதிவந்தேன். 96 முதலே கணினியில் நேரடியாக எழுதி வருபவன் என்பதால் என்னால் வேகமாக எழுத முடியும்.

நாவல் எழுதி முடித்துத் திருத்தம் செய்யும் நேரத்தில் திடீரெனக் கணினியில் ஏதோ கோளாறு ஏற்பட்டுவிட்டது. அதைச் சரிசெய்ய வந்தவர் ஹார்ட் டிஸ்க் பழுதாகிவிட்டது. அதைச் சரி செய்ய முடியாது என்றார்.

எப்படியாவது சரி செய்து கொடுங்கள் அதில் எனது புதிய நாவல் இருக்கிறது என்றேன். அவரும் அதைக் கழட்டி எடுத்துக் கொண்டு போய்த் தன்னால் முயன்ற முயற்சிகளைச் செய்து பார்த்தார். ஆனால் பலனில்லை. நாவலை மீட்க முடியவில்லை. திரும்ப அதே நாவலை எழுத முடியவேயில்லை. எழுதி முடித்த நாவல் அழிந்து போனதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கையெழுத்துப் பிரதியில் எழுதியிருந்தால் இப்படிப் போயிருக்காதோ என்று கூடத் தோன்றியது.

ஆனால் கையெழுத்துப் பிரதியாக நான் கொடுத்த சிறுகதைகளைப் பதிப்பகம் ஒன்று அப்படியே தொலைத்த அனுபவம் எனக்கிருக்கிறது என்பதால் அதுவும் சரியான விஷயமில்லை என்றே மனம் சொன்னது. இப்போது அன்றாடம் எழுதியவற்றைப் பேக்கப் செய்து கொள்கிறேன். மின்னஞ்சல் மூலம் அதைப் பாதுகாக்கவும் செய்கிறேன். தனியே ஒரு ஹார்ட் டிஸ்கில் சேமிக்கவும் செய்கிறேன். ஆனாலும் ஏதாவது சில கட்டுரைகள் அழிந்துபோய்விடுவதைத் தவிர்க்க முடியவில்லை.

தான் அரும்பாடு பட்டு எழுதிய ஒரு நூலை யாரோ அறியாமல் அடுப்பில் போட்டு எரித்துவிட்டார்கள் என்பது தாங்க முடியாத வேதனை. ச.து.சு.யோகியாரால் நிச்சயம் கடும்வேதனை அடைந்திருப்பார். ஆனால் மனவுறுதியோடு திரும்ப எழுதி அதை வெளியிட்டது அவரது ஆளுமையின் அடையாளம்

ச.து.சு யோகியார் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று வீட்டை விட்டு வெளியேறி ஓடுகிறார். ஒரு சாமியாரிடம் சீடராகச் சேருகிறார். ஆனால் குடும்பத்தினர் தேடிப்பிடித்து அவருக்குத் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். ஐந்து குழந்தைகள் பிறந்து இறந்து போகின்றன. ஆறாவது பெண் குழந்தை. ராஜம் என்று பெயர் வைக்கிறார். அந்தப் பெண் குழந்தையும் ஒன்றரை வயதில் இறந்து போகிறது. அந்தப் பெண் குழந்தையின் நினைவில் கண்மணி ராஜம் என்ற துயரப்படலை எழுதியிருக்கிறார். சொந்த வாழ்வில் இத்தனை துயரங்களைக் கொண்டிருந்த மனிதர் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாழ்க்கையை முன்னெடுத்ததிற்கு இலக்கியமே முக்கியக் காரணம் என்பேன்.

யோகியார் விடுதலைப் போராட்டத்திலும் வைக்கம் போராட்டத்திலும் கலந்து கொண்டவர். 1931இல் தடையுத்தரவை மீறியதற்காக எட்டு மாதம் சிறையிலிடப்பட்டார். தந்தை பெரியாரின் நெருக்கமான நண்பராக இருந்தவர்.

யோகியாருக்கு மேஜிக் மீது தீவிர ஈடுபாடு உண்டு. சர்வதேச மாயாஜால கலைஞர்கள் அமைப்பில் உறுப்பினராக இருந்திருக்கிறார். அவரே பல்வேறு மேஜிக் வித்தைகளைக் கற்றுச் செய்து காட்டியிருக்கிறார். சென்னையில் எங்கே மாயாஜால நிகழ்ச்சிகள் நடந்தாலும் சென்று பார்த்துவிடுவார் என்கிறார்கள்.

இறந்த நண்பரை பற்றி எழுதுவது என்பது காலத்தை எதிர்த்து எழுதுவதென்பதாகும் என்று ஆர்தர் கோய்ஸ்லர் தனது கட்டுரையில் கூறுகிறார். அது உண்மையே. யோகியாரின் கவிதைகள் இந்தத் தலைமுறையால் வாசிக்கப்படவில்லை.

ஆனால் அவரது மொழியாக்கங்கள் இன்றும் தேடி வாசிக்கப்படுகின்றன. கடலும் கிழவனை வாசிக்கும் போது யோகியாரின் சரளமான மொழியாக்கம் வசீகரமாகவேயிருக்கிறது. எழுத்தாளன் விரும்பும் விதமாகவே அவன் நினைவு வைத்துக் கொள்ளப்படுவதில்லை. காலமே அவனது அடையாளத்தைத் தீர்மானிக்கிறது

••

0Shares
0