சொற்களை விடவும் கோடுகள் மூலம் தன்னை எளிதாக வெளிப்படுத்த முடியும் என்று சிலர் நம்புகிறார்கள். அப்படித் தான் இயக்குநர் பெலினி செயல்பட்டார். அவர் பேச நினைத்தவற்றை ஒவியங்களாக வரைந்தார். அசையும் ஓவியங்களாகவே அவர் திரைப்படங்களை உருவாக்கினார்.

பெலினியின் வாழ்க்கையை விவரிக்கும் I, Fellini என்ற Charlotte Chandler புத்தகத்தை வாசித்தேன். அதில் “Dreams are the only reality.” என பெலினி குறிப்பிடுகிறார். அவரது திரைப்படங்கள் அவரது கனவுகளின் வெளிப்பாடு போலவே உருவாக்கப்பட்டன. தன் வாழ்வில் உண்மையாக நடந்த விஷயங்களை விடவும் அதைத் தான் எவ்வாறு நினைவு வைத்துள்ளேன் என்பதைத் தான் முக்கியமாக நினைப்பதாகக் கூறும் பெலினி பால்ய வயதின் நினைவுகள் முழுக்கனவு போலவே இருக்கின்றன. அதன் விசித்திரங்களை ஒரு போதும் மறக்கமுடியவில்லை என்கிறார்.
பருத்த உடல் கொண்ட பெண்களை, உயரமான குள்ளமான ஆண்களைப் பெலினி தனது படங்களில் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். உலகம் அவர்களைக் கேலி செய்வதற்கு மாற்றாக இது போன்ற உடல் கொண்டவர்களின் தனித்துவத்தைத் தான் படத்தில் வெளிப்படுத்துவதாகக் கூறுகிறார்.

தன் வாழ்க்கை நினைவுகளை எவராலும் வரிசை மாறாமல் நினைவு வைத்துக் கொள்ள முடியாது. முன்பின்னாகவும் நிறைய விடுபடல்களுடனும் மட்டுமே நினைவு கொள்ள முடியும். அந்த வகையில் ஒரு ஒவியம் போலச் சித்தரிக்கப்படுவதும் விடுபட்டதும் இணைந்தே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
சிறுவயதின் வசீகரம் பொய்களே. ஒரு சிறுவனோ, சிறுமியைப் பொய் சொல்லவே ஆசைப்படுகிறார். அந்தப் பொய்யை அவர் உருவாக்கும் அழகு தனித்துவமானது. எவர் தான் சொல்லும் பொய்யை முழுமையாக நம்பிவிடுகிறார்களோ அவர்களிடம் பொய் சொல்லச் சிறுவர்கள் தயங்குகிறார்கள். காரணம் பொய்யை ஒருவர் சந்தேகிக்க வேண்டும். அதைத் தன் பேச்சின் மூலம் உறுதியான உண்மையைப் போல நம்ப வைக்க வேண்டும் எனச் சிறார்கள் விரும்புகிறார்கள்.
பெரியவர்களால் தான் சிறுவர்கள் பொய் சொல்வதற்குத் தூண்டப்படுகிறார்கள். உண்மையில் பெரியவர்களுக்குச் சிறுவர்கள் சொல்லும் உண்மையான காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. ஒரு சிறுவன் தெருவில் நின்று நாயை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் என்று உண்மையைச் சொன்னால் அவனது அம்மா கோவித்துக் கொள்கிறார். ஆகவே அந்தச் சிறுவன் தெருவில் ஒரு விசித்திரமான பிச்சைக்காரனைப் பார்த்ததாகப் பொய் சொல்கிறான். உண்மையில் தனது மறுப்பை வெளிப்படுத்தும் விதமாகவே சிறார்கள் பொய் சொல்கிறார்கள். அதைப் பெரியவர்கள் புரிந்து கொள்வதில்லை.
தான் சொல்வதைப் பொறுமையாகப் பெரியவர்கள் கேட்பதில்லை என்பதைச் சிறார்கள் உணர்ந்துவிடுகிறார்கள். ஆகவே அவர்கள் பொய்யின் மூலம் கவனத்தைக் கவர முயல்கிறார்கள்.

பெலினியை மிகவும் கவர்ந்தது சர்க்கஸ். குறிப்பாகச் சர்க்கஸின் வரும் கோமாளி. சர்க்கஸை அவர் ஒரு கனவு வெளியாகக் கருதினார். சர்க்கஸில் அடுத்து என்ன நடக்கும் என்று எவராலும் கண்டறிய முடியாது. வியப்பூட்டும் நிகழ்வுகள் அடுத்தடுத்து நடக்கின்றன. பார்வையாளர்கள் அந்த நிகழ்வுகளால் சந்தோஷம் அடைகிறார்கள். ஆனால் சர்க்கஸ் கலைஞர்களின் வாழ்க்கை. பொருளாதாரக் கஷ்டங்களும் போட்டி பொறாமையும் கொண்டதாகவே இருக்கிறது. சர்க்கஸை பற்றிச் சிறுவயதில் தொடர்ந்து கனவு கண்டு வந்ததாகவும் அந்தக் கனவில் தவறாமல் ஒரு யானை இடம்பெற்றது என்றும் பெலினி நேர்காணலில் தெரிவிக்கிறார்.

சினிமாவையும் அவர் ஒரு சர்க்கஸ் போலவே கருதினார். ஒருவகையில் அது உண்மையும் கூடத்தான். சர்க்கஸில் சேருவதற்காக வீட்டை விட்டு ஓடிப்போக முயன்றார். எட்டு வயதில் சர்க்கஸ்காரர்களுடன் செல்வதற்காக முயன்றபோது சர்க்கஸ் ஒரு பெரிய குடும்பம் என்பதைக் கண்டுகொண்டார். சர்க்கஸில் அவரால் சேர இயலவில்லை. ஆனால் தான் அந்தக் குடும்பத்தின் உறுப்பினர் என்ற எண்ணம் மனதில் ஆழமாகப் பதிந்து போனது.
கோமாளிகள் எல்லோரும் சந்தோஷமாக இருப்பதில்லை. கூட்டத்தைச் சிரிக்க வைப்பது என்பது தீவிரமான விஷயம். கோமாளிகளின் துயரத்தை உலகம் அறிவதுமில்லை. புரிந்து கொள்வதுமில்லை. கோமாளிகள் கௌரவமாக இருப்பது போல நடிக்கிறார்கள். உண்மையில் அவர்கள் மோசமாகவே நடத்தப்பட்டார்கள்
சர்க்கஸ் பற்றிய தனது ஆர்வத்தை வீட்டில் எவரும் புரிந்து கொள்ளவேயில்லை. அதைப்பற்றிப் பேசத்துவங்கினாலே திட்டும் அடியும் கிடைத்தது. வீட்டில் மற்றவர்கள் எழுந்து கொள்ளும் முன்பு நான் தூங்கி எழுந்துவிடுவேன். படுக்கையில் கிடந்தபடியே அன்று கண்ட கனவை நினைத்துக் கொண்டிருப்பேன். முகம் கழுவினால் கனவு மறந்துபோய்விடும் என்று நம்பினேன் என்கிறார் பெலினி.
பெலினியின் Variety Lights திரைப்படத்தில் நாடகமேடையில் கிடைக்கும் கைதட்டுகள் மற்றும் புகழுக்காக ஏங்கும் ஒருபெண் அந்த நாடக்குழுவினர்களுடன் இணைந்து பயணிக்கிறாள். எப்படியாவது தன்னையும் ஒரு நடிகையாகச் சேர்த்துக் கொள்ளும்படி மன்றாடுகிறாள். நாடக மேடைக்குள் வந்தபிறகு அதன் போட்டி பொறாமைகளை அறிந்து கொள்கிறாள். தனக்குக் கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவள் அடுத்த நிலைக்குப் போய்க் கொண்டேயிருக்கிறாள். இந்தப் பெண்ணைப் போலக் கலையின் வழியே தன்னை உயர்த்திக் கொண்டே செல்பவர்கள் சிலரே. பெரும்பான்மையினர் இந்த மாயவெளிச்சத்திற்குள் மூழ்கியபடியே தன் வாழ்க்கையைக் கரைத்துக் கொண்டுவிடுகிறார்கள்.
உண்மையில் ஒவ்வொருவரும் ஒரு கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலரே அதை உணர்ந்து கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு அது ஒரு ரகசிய சஞ்சாரம். தனக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கை போதும் என ஒருவரும் நினைப்பதில்லை. மாறாக அதிலிருந்து விடுபட்டு ரகசியமாக மனதிற்குள் வேறு வாழ்க்கையை , வேறு நிலைகளை வாழ்ந்து பார்க்கிறார்கள். இந்தக் கற்பனை தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம். உலகம் தராத அங்கீகாரத்தைத் தனக்குத் தானே வழங்கிக் கொள்கிறார்கள்.
அதிலும் தனிமையை உணரும் மனிதர்கள் அதிலிருந்து விடுபடுவதற்காகக் கற்பனையின் நீரூற்றை உருவாக்கிக் கொள்கிறார்கள். அந்த நீரூற்று பொங்கி வழியும் போது அவர்கள் தன்னை மறந்து சந்தோஷம் அடைகிறார்கள். தனிமையை ஆழ்ந்து உணர்கிறவர்களே படைப்பாளியாக மாறுகிறார்கள். தனிமையைப் புரிந்து கொள்ளாதவர்கள் ஏதாவது ஒரு செயலை வரிந்து ஏற்றுக் கொண்டு வாழப்பழகிவிடுகிறார்கள்.

நீண்ட தனிமையை உணருகிறவர்கள் தனக்குள்ளாக அழுகிறார்கள். சிலர் தனிமையின் உச்சத்தில் களிப்பெய்துகிறார்கள். தனக்குள் சிரிப்பதும் தனக்குள் அழுவதும் இயல்பானது தான். அதைத் தவறான செயல் என ஏன் நினைக்கிறார்கள் என்று தான் புரிவதில்லை.
சப்தத்தைக் கண்டு சிறுவர்கள் பயப்படுவதில்லை. ஆனால் நிசப்தத்தைக் கண்டு பயப்படுகிறார்கள். அதுவும் ஆழ்ந்த நிசப்தம் அவர்களை அதிகம் பயமுறுத்துகிறது. குரல் கொடுப்பதும் குரலைக் கேட்பதும் உறுதுணையாக உணருகிறார்கள். நிசப்தம் நீர்நிலையின் மேற்பரப்பு போலச் சலனமற்றிருக்கிறது. ஆனால் அதன் ஆழம் எவராலும் கண்டறிய முடியாதது.
பதின் வயதில் நிசப்தத்தை விரும்பத் துவங்கும் ஆணோ பெண்ணோ அதற்குள்ளாகவே மூழ்கிக் கிடக்க விரும்புகிறார்கள். நிறைய இளம்பெண்கள் பதின்வயதில் விசித்திர கனவுகளில் சஞ்சரிக்கிறார்கள். அப்போது ஒரு நிஜ உலகிற்கும் கனவிற்கும் இடையில் ஊஞ்சலாடுகிறார்கள்.
சிறுவயதிலே பொம்மைகளைச் செய்து பொம்மலாட்டம் நிகழ்த்துவதில் பெலினிக்கு மிகுந்த விருப்பமிருந்தது. பொம்மைகள் எந்த எதிர்ப்பினையும் தெரிவிப்பதில்லை என்று பெலினி குறிப்பிடுகிறார். தன்னை உலகம் கையாளுவதைப் போலத் தான் பொம்மைகளைக் கையாண்டதாகவும் குறிப்பிடுகிறார்.
இது போலவே காமிக்ஸ் புத்தகங்களில் வரையப்பட்டிருந்த மனிதர்களுடன் விலங்குகளுடன் தான் பேசத்துவங்கியதாகவும் அவர்கள் தன்னைப் புரிந்து கொள்கிறார்கள் என்று உணர்ந்ததாகவும் கூறுகிறார்.

எளிதில் புரிந்து கொள்ள முடியாத பால்யத்தின் குழப்பங்கள். கனவுகள் தான் ஒருவரை பெருங்கலைஞனாக மாற்றுகிறது. பெலினிக்குள் சர்க்கஸ் சார்ந்த நினைவுகள் மறையவேயில்லை. அவர் சினிமாவை மிகப்பெரிய சர்க்கஸ் நிகழ்ச்சியைப் போல மாற்றிக் காட்டினார்.
பெலினிக்குள் இருந்த சிறுவன் தான் அவரை வழிநடத்தியிருக்கிறான். அவனது விருப்பங்களைத் தான் பெலினி கலையின் வழியே பூர்த்தி செய்திருக்கிறார்.
நடந்ததை விவரிக்கும் போது நடக்காத விஷயங்களையும் சேர்த்துச் சொல்வது எனது பழக்கம் என்கிறார் பெலினி. இது தான் எழுத்தின் சூத்திரம். அதைப் பெலினி எளிதாகக் கையாண்டிருக்கிறார். அதுவே அவரது வெற்றிக்குக் காரணமாகயிருந்தது.
••