நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் கடைசி நாட்களையும், அவர் விமான விபத்தில் இறந்து போனது உண்மை தானா என்பதையும் ஆராயும் விதமாகப் பெங்காலியில் கும்னாமி (Gumnaami) என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பாக அப்படத்தைப் பார்த்தேன்.
ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கிய இப்படம் நேதாஜியின் மரணம் குறித்து ஆராய உருவாக்கப்பட்ட முகர்ஜி கமிஷன் விசாரணையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் முதல் அரைமணி நேரம் கறுப்பு வெள்ளையில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதை மிகச் சிறப்பாகப் படமாக்கியிருக்கிறார்கள். இந்திய தேசிய ராணுவம் சரணடைய வேண்டிய நிலையில் அதை எவ்வாறு நேதாஜி கையாளுகிறார் என்பது உணர்வுப்பூர்வமாக விவரிக்கப்பட்டுள்ளது.
1945 ஆகஸ்ட் 18, தைவானின் தபே விமான நிலையத்தில், நேதாஜி ஒரு போர் விமானத்தில் ஏறினார். வானில் பறந்த அந்த விமானம் மர்மமாகக் காணாமல் போனது. பின்பு விமானம் விபத்திற்குள்ளாகி போஸ் இறந்து போனதாக அறிவிக்கப்பட்டது.
இப்படத்தில் நேதாஜி சென்ற விமானம் ஓடுதளத்திலே விபத்திற்குள்ளாகிறது. தீப்பற்றி எரிந்த நிலையில் அதிலிருந்து நேதாஜி தப்பி வெளியே வருகிறார். பலத்த தீக்காயத்துடன் உயிருக்கும் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கே சிகிச்சை பலனற்று இறந்து போகிறார். அவருடன் சென்ற கர்னல் ஹபிபுர் ரஹ்மான் இதற்குச் சாட்சி. தைவானிலே அவரது இறுதிச்சடங்கு நடப்பதாகக் காட்டுகிறார்கள்
அறுபதாண்டுக்குப் பிறகும் நேதாஜி இறப்பின் மீதான மர்மம் விலகவில்லை. அவர் விமான விபத்தில் இறக்கவில்லை என இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த பலரும் நம்புகிறார்கள்.
போஸின் மரணம் அல்லது காணாமல் போனதை விளக்க முயற்சிக்கும் மூன்று கோணங்களைப் படம் விவரிக்கிறது.
விமான விபத்தில் நேதாஜி இறந்தாரா என்பதை ஆய்வு செய்ய இந்திய அரசால் ஷாநவாஸ் கமிட்டி 1956- ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டது. அந்தக் கமிட்டி விபத்து நடந்த இடமான தைவானுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் ஜப்பானுக்குச் சென்று மட்டுமே ஆய்வு செய்தார்கள்.
ஷாநவாஸ் கமிட்டி ஜப்பானிய மருத்துவர்களைச் சந்தித்து உரையாடியது. அவர்கள் தீக்காயம் பட்ட நேதாஜிக்கு இரத்தம் ஏற்றப்பட்டது உண்மை. உடல் முழுவதும் இருந்த தீக்காயங்கள் காரணமாகவே அவர் இறந்து போனார் என்று சாட்சியம் அளித்தார்கள். இதையே ஷாநவாஸ் கமிட்டி அறிக்கையாகச் சமர்ப்பித்தது. ஆனால் இந்த முடிவினை நேதாஜியின் மூத்த சகோதரர் ஏற்க மறுத்துவிட்டார்.
இதன்பிறகு 1974ம் வருஷம் கோஸ்லா கமிஷன் அமைக்கபட்டது. அதுவும் ஷாநவாஸ் கமிட்டி முடிவினையே உறுதி செய்தது. இதன்பிறகு 2005ல் ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷன் உருவாக்கப்பட்டது. இந்தக் குழுவின் விசாரணையில் நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை,அவர் உயிருடன் தப்பிப்போயிருக்கக் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. முகர்ஜி கமிஷன் முடிவினை அன்றைய காங்கிரஸ் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் ஹபிபுர் ரஹ்மான் மட்டுமே நேதாஜியோடு அந்த விமானத்தில் பயணம் செய்தார். விமான விபத்தை நேரில் கண்டதற்கு அவர் ஒருவரே சாட்சி. விபத்தில் உயிர்தப்பிப் பிழைத்த ரஹ்மான் விமான விபத்தில் நேதாஜி இறந்து போனது உண்மை என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
••
படம் காங்கிரஸ் மாநாட்டில் சுபாஷ் சந்திரபோஸ் காந்தியுடன் உரையாடுவதில் தொடங்குகிறது. காந்தியின் அகிம்சை முறைகளைப் பின்பற்ற மறுத்துப் பதவி விலகுகிறார் நேதாஜி. நேரு அவரைச் சமாதானப்படுத்த முயன்று தோல்வியடைகிறார். அதன்பின்பு இந்தியாவிலிருந்து வெளியேறி காபூல் வழியாக மாஸ்கோ சென்று அங்கிருந்து பெர்லின் செல்கிறார். ஹிட்லரின் உதவியோடு பிரிட்டீஷ் ராஜ்ஜியத்திற்கு எதிரான ஆயுதப் போராட்டத்திற்குக் களம் அமைத்து சிங்கப்பூர், ஜப்பான் எனப் பயணித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்குகிறார் எனப் படம் அவரது ஆயுதப்போராட்ட வாழ்க்கையை விவரிக்கிறது.
2005ல் சந்திரசூர் என்ற இளம் பத்திரிகையாளர் சுபாஷின் மரணத்தின் பின்னுள்ள மர்மம் குறித்த ஆய்வினை மேற்கொள்ளத்துவங்குகிறார். அவரது தேடல்களின் வழியே இரண்டு கோணங்களை உருவாக்குகிறார். இதற்கான ஆதாரங்களைத் திரட்டுகிறார். தனது முடிவுகளை உலகறியச் செய்ய முகர்ஜி கமிஷன் முன்பாக ஆஜராகி அவர் உரையாற்றுகிறார்.
சந்திர சூரைப் பொறுத்தவரை, 1945 இல் விமான விபத்து எதுவும் ஏற்படவில்லை. அது ஒரு நாடகம். நேதாஜியே தனது மரணத்தை உலகம் நம்ப வேண்டும் என்பதற்காகப் போட்ட நாடகம். இதற்கு ஆதாரமாகப் போஸ் 12 இருக்கைகள் கொண்ட விமானம் இருந்தபோது ஏன் ஆறு இருக்கைகள் கொண்ட போர் விமானத்திற்கு சென்றார் என்ற கேள்வியை சந்திரசூர் எழுப்புகிறார். அத்துடன் அந்த ஆண்டுத் தைவானில் விமான விபத்து எதுவும் பதிவுசெய்யப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்
தைவானிலிருந்து தப்பி நேதாஜி சைபீரியாவில் வாழ்ந்து வந்தார் என்பதை ஒரு கண்ணோட்டமாகவும், அவரது அடையாளத்தை மறைத்துக் கொண்டு உத்தரப்பிரதேசத்தில் கும்னாமி என்ற துறவியாக வாழ்ந்தார் என்பதை இன்னொரு கண்ணோட்டமாகவும் எடுத்துச் சொல்கிறார். முகர்ஜி கமிஷன் முன்பாகச் சந்திரசூர் விவரிக்கும் உண்மைகளே படத்தின் பிற்பகுதியாக விரிகிறது.
காந்தி மற்றும் நேருவாக நடித்தவர்கள் பொருத்தமாகயில்லை. மேலும் சந்திரசூரின் குடும்ப விவகாரம் தனிப் பகுதியாக நீண்டு கொண்டிருப்பது படத்தின் போக்கிற்கு தடையாகவே உள்ளது. கும்னாமி பாபா தான் நேதாஜி என்பது போன்ற தோற்றத்தைப் படம் உருவாக்குகிறது. இதை படத்தின் பலவீனமாகவே கருதுகிறேன்.
நேதாஜியாக நடித்திருக்கும் Prosenjit Chatterjee மற்றும் Soumik Haldar ஒளிப்பதிவும் indraadip Dasguptaவின் இசையும் மிகுந்த பாராட்டிற்குரியது.
நாடகக் கலைஞரான ஸ்ரீஜித் முகர்ஜி சத்யஜித்ரேயின் கதைகளை நாடகமாக்கியிருக்கிறார். அபர்ணா சென்னின் உதவியாளராக பணியாற்றிய இவர் வங்காளத்தின் நம்பிக்கையூட்டும் இளம் இயக்குனராக கொண்டாடப்படுகிறார்.
22/11/2019
