குறுங்கதை -18 சிறைச்சாலை மலர்கள்

அவனைத் திருடன் என்று குற்றம்சாட்டி சிறையில் அடைத்தார்கள். ஆனால் அவனது தோற்றம் சாதுவைப் போலிருந்தது. மெலிந்த உருவம் கொண்டிருந்தான். யானையின் கண்களைப் போன்ற கூர்மையான பார்வை. சுவருடன் ரகசியம் பேசுகிறவன் போல சிறைச்சாலையின் சுவரைப் பார்த்து பகலெல்லாம் அமர்ந்திருந்தான். காவலாளிகள் சில நேரம் அவனிடம் கேள்வி கேட்கும் போது கூட விரல்களால் காற்றில் எழுதியே பதில் தருவான்.

அந்தச் சிறைச்சாலை ஒரு தீவிலிருந்தது. சவப்பெட்டியைப் போலச் சிறியதாக இருந்த அவனது சிறையில் எலி செத்துக்கிடப்பது போல ஒரு நாற்றம் எப்போதும் அடித்துக் கொண்டிருந்தது. கற்சுவர்களில் அழுக்கு படிந்து பிசுபிசுப்பாக இருந்தது. சூரிய வெளிச்சம் நுழைய முடியாதபடி அந்தச் சிறை அமைக்கப்பட்டிருந்தது.. அங்கே அடைக்கப்பட்டவர்கள் சாகும் வரை வெளியே வர முடியாது, செத்தாலும் உடலைக் கடலில் வீசி எறிந்துவிடுவார்கள்.

ஒரு நாள் சிறைக்காவலாளிகளில் ஒருவன் திருடனின் வலது கண் ஒரு நிறத்திலும், இடது கண் வேறு நிறத்திலும் இருப்பதாகச் சொன்னான். அது திருடனின் தந்திரம் என்றான் இன்னொரு காவலாளி.

ஒரு நாளிரவு அந்தக் காவலாளிகளில் ஒருவன் சிறைச்சாலையில் விநோதமான வாசனை வருவதை உணர்ந்து எங்கிருந்து வருகிறது எனத் தேடினான். அது திருடனை அடைத்திருந்த சிறையிலிருந்தே வந்தது.

சிறைக்கதவைத் திறந்து உள்ளே போன போது சிறைச்சாலை சுவரில் ஒரு செடி வளர்ந்திருந்தது. அதில் பூத்திருந்த நீல மலரிலிருந்து தான் அந்த வாசனை வந்து கொண்டிருந்தது. இது என்ன பூ. இந்தச் செடி எப்படிச் சிறைச்சுவரில் முளைத்தது எனக்கேட்டான் காவலாளி. திருடன் பதில் பேசவில்லை.

அந்த மலரைக் காவலாளி பறிக்க முயன்றான். எவ்வளவு முயன்றும் பறிக்க முடியவில்லை. இருந்து தொலையட்டும் என அவன் அப்படியே விட்டுப் போனான். மறுநாள் அந்தச் சிறைச்சுவரில் நாலைந்து செடிகள் முளைத்திருந்தன. அதில் நாலைந்து நீலமலர்கள் அரும்பியிருந்தன. இது என்ன விசித்திரம் எனக் காவலாளி அந்தச் சிறைச்சாலை ஆராய்ந்தார்கள்

பகலிரவு கடந்தாலும் அந்த நீல மலர்களில் ஒன்று கூட வாடிப்போகவில்லை. அவர்களால் அந்தப் புதிருக்கு விடை காணமுடியவில்லை.

அடுத்த சில நாட்களில் திருடன் இருந்த சிறை முழுவதும் நீல மலர்கள் அரும்பியிருந்தன. மொத்த சிறைச்சாலையும் விநோத வாசனையால் நிரம்பியது. சிறையிலிருந்த மற்ற கைதிகள் சந்தோஷம் கொண்டார்கள்.

எந்தச் சிறை அதிகாரியாலும் வாசனையைத் தடுக்க முடியாது என்று சொல்லிச் சிரித்தார்கள்.

காவலாளிகளுக்கு இந்த நிகழ்வை உயரதிகாரிகளுக்குச் சொல்ல வேண்டுமா, வேண்டாமா எனத்தெரியவில்லை. சிறையில் மலர்கள் பூப்பது சட்ட விரோதமா எனக் குழம்பிப் போனார்கள்.

திருடன் இருந்த சிறைச்சாலை முழுவதும் ஒரு கானகம் போலாகியது. நீலமலர்களைத் தேடி நூற்றுக்கணக்கில் வண்ணத்துப்பூச்சிகள் வரத்துவங்கின. காட்டில் கேட்பது போல இடைவிடாத பூச்சிகள் சப்தம் கேட்க ஆரம்பித்தது. திருடன் அந்த மலர்களுக்கு நடுவே தியானம் செய்பவன் போல அமர்ந்திருந்தான்.

அடுத்த சில நாட்களில் சிறைக்கம்பிகளில் தாவரங்கள் சுற்றி வளர ஆரம்பித்தன. உள்ளே கால் வைக்க முடியாதபடி சிறையெங்கும் தாவரங்கள். அடர்ந்த பச்சை இலைகள். பறிக்க முடியாத நீலமலர்கள். காவலாளிகளுக்கு அவனைக் கண்டு பயம் வந்தது. சிறையில் நடப்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு நாள் காவலாளி உணவு கொண்டு வந்த போது திருடன் எங்கேயிருக்கிறான் எனத் தெரிந்து கொள்ள முடியாதபடி தாவரங்கள் உயர்ந்து வளர்ந்திருந்தன. சிறைக்கதவைக் கூடத் திறக்க முடியவில்லை

காவலாளி அவன் பெயரைச் சொல்லி சப்தமாக அழைத்தான். திருடனைக் காணவில்லை. எங்கே போனான். எப்படிப் போனான் எதுவும் தெரியவில்லை. காவலாளிகள் வெட்டுக்கத்தியால் தாவரங்களைத் துண்டித்துச் சிறையினுள் சென்று திருடனைத் தேடினார்கள். திருடன் அங்கேயில்லை.

தலைமைக் காவலாளி சொன்னான்.

“அவன் ஒரு மாயாவி, வாசனையின் வழியே தப்பிப் போயிருப்பான். இந்த நீல மலர்களைப் பாருங்கள். இப்போது அதில் வாசனையேயில்லை“

அதை நம்பமுடியாத சக காவலாளி ஒருவன் நீலமரை முகர்ந்து பார்த்தான். அதில் வாசனையில்லை.

வாசனை வெளியேறிப் போவது போலத் திருடனால் வெளியேற முடியுமா. இது என்ன விந்தை என அவர்கள் குழப்பமடைந்தார்கள்.

நோயால் இறந்து போனான் , உடலைக் கடலில் வீசி எறிந்துவிட்டோம் எனப் பதிவேட்டில் எழுதி திருடன் கதையை முடித்து வைத்தார்கள் சிறைக்காவலர்கள்.

ஆனால் இன்றும் அந்தச் சிறைச்சாலையில் வாடிப்போகாத நீலமலர்கள் அரும்பியபடியே இருக்கின்றன.

திருடன் எங்கே போனான் என்று மட்டும் எவருக்கும் தெரியவேயில்லை.

•••

27.2.20

0Shares
0