குறுங்கதை 28 மொசார்ட்டின் வயலின்

பனிப்பிரதேசமொன்றில் அந்த மேபிள் மரம் ஒற்றையாக நின்று கொண்டிருந்தது.

“எனக்கென யாருமில்லை. நான் யாருக்கும் பிரயோசனமாகவும் இல்லை. வாழ்வதே வீண்“ என்று அந்த மரம் சொல்லிக் கொண்டிருந்தது

காற்று அம் மரத்தைக் கடக்கும்போது சொன்னது

“அப்படி நினைக்காதே. உனக்கொரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது“

இரவில் வான் நிறைந்த நட்சத்திரங்களைக் காணும் போது மேபிள் மரம் சொன்னது.

“இத்தனை அழகை நான் கண்ட போதும் அதைப் பகிர்ந்து கொள்ள ஒருவருமில்லை.“

அப்போதும் காற்றுச் சொன்னது.

“அப்படி நினைக்காதே. உன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமிருக்கிறது.“

பின்னொரு நாள் ஒரு மரம்வெட்டி பனிப்பிரதேசத்திற்கு வந்தான். அந்த மேபிள் மரத்தை வெட்டிச் சென்றான்.

“அவ்வளவு தான் நம்முடைய வாழ்க்கை , கணப்பு அடுப்பின் விறகாகப்போகிறோம்“ என வருந்தியது அம்மரம்

ஆனால் அந்த மரம் ஒரு இசைக்கருவி செய்பவன் வீட்டிற்குச் சென்றது. அவன் அதை வயலின் செய்வதற்குப் பயன்படுத்திக் கொண்டான்

“நான் ஒரு இசைக்கருவியானது மகிழ்ச்சியே. எவருக்கோ பயன்படப்போகிறேன்“ என்றது அம்மரம்

அவன் வயலினை லியோபோல்ட் என்ற இசை ஆசிரியருக்கு விற்பனை செய்தான். லியோபோல்ட் அந்த வயலினை தன் வீட்டிற்குக் கொண்டு சென்றார். அவரது ஐந்து வயது மகன் அந்த வயலினைக் கையில் எடுத்து வாசிக்க ஆரம்பித்தான்.  இன்னிசை பெருகியது

அந்தப் பையனின் பெயர் வுல்ப்காங் அமேடியஸ் மொசார்ட்.

இப்போது அது  இசைமேதை  மொசார்ட்டின் வயலின்

மொசார்ட் அந்த வயலினைக் கொண்டு எண்ணிக்கையற்ற இசைக்கோர்வைகளை உருவாக்கினான். அற்புதமான சங்கீதத்தை உலகிற்கு வழங்கினான்.

இதுநாள் வரை அனுபவித்து வந்த மரத்தின் தனிமையை, பனிக்காற்றின் ஈரத்தை, வானெங்கும் பூத்திருந்த நட்சத்திரங்களை, தூரத்து நதியின் சலசலப்பை, கடந்து சென்ற பறவைகளின் சிறகசைப்பை என மரத்தின் எல்லா நினைவுகளையும் அவன் இசையாக்கினான்.

மொசார்ட்டோடு அந்த வயலின் மாமன்னரின் அரண்மனைக்கும் இசை அரங்கிற்குமாகப் பயணித்துக் கொண்டேயிருந்தது.

மேபிள் மரம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அது பெருமிதமாகச் சொன்னது

“முற்பகுதி வாழ்க்கையை வைத்துக் கொண்டு பிற்பகுதி வாழ்க்கையை முடிவு செய்து விட முடியாது. காற்றுச் சொன்னது சரியே. என் வாழ்க்கையின் அர்த்தம் இதுவே“

•••

0Shares
0