புத்தரின் கண்கள்

ஹங்கேரியின் புகழ்பெற்ற எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய்.( László Krasznahorkai.) இவரது நாவல்களை ஒப்பற்ற திரைப்படங்களாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பெலா டார்

லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய் எழுதிய Seiobo There Below நாவல் 2015ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசு பெற்றது. பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த கலைஞர்களின் கலைத்திறன் பற்றியது இந்நாவல். பல்வேறு துண்டுகளால் ஒன்றிணைந்த வடிவத்தைக் கொண்டிருக்கிறது.

இந்நாவலில் ஜப்பானிலுள்ள புத்த கோவில் ஒன்றில் பழங்காலப் புத்தரின் சிலையை எப்படி மறுசீரமைப்பு செய்கிறார்கள் என்பதைப் பற்றி ஒரு பகுதி எழுதியிருக்கிறார்.

ஜப்பானின் ஜெங்கன்-ஜி கோயிலில் உள்ள அமிதா புத்தரின் மரச் சிலை 14 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. இந்தச் சிலையின் சிறப்புப் பாதித் திறந்த விழிகளுடன் உள்ள புத்தரின் தோற்றம். கால ஒட்டத்தில் இந்தச் சிலை சிதைந்து வருவதை உணர்ந்த மடாதிபதி சிலையை அங்கிருந்து அகற்றி முறையாக மறுசீரமைப்புச் செய்ய முற்படுகிறார்.

இதற்காகப் பீடத்திலிருந்து புத்தர் சிலையை அகற்றும் சடங்கு நான்கு துறவிகளால் ரகசியமாகச் செய்யப்படுகிறது,

புஜிமோரி என்பவரால் நடத்தப்படும் மறுசீரமைப்பு பட்டறைக்குச் சிலையைக் கொண்டு போகிறார்கள். அங்கே மறுபடியும் உரிய சடங்குகள் செய்யப்பட்டுச் சிலை சுத்தம் செய்யப்படுகிறது.

பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒன்று சேர்ந்து மறுசீரமைப்பு செய்கிறார்கள்.

சிலையின் பாதி மூடிய கண்களை மறுசீரமைப்பு செய்யும் வேலை கொய்னோமி ஷுன்சோ என்பவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் கண்களைச் சரிசெய்வதற்குக் கவனமாக வேலை செய்கிறார். சிலையின் சிறப்பு அந்தக் கண்கள் தான் என்பதால் புஜிமோரி அடிக்கடி அந்தப் பணியைப் பார்வையிட்டுக் கவனமாக வேலை செய்யும்படி கடிந்து கொள்கிறார்

முடிவில் ஒரு நாள் கண்கள் சீரமைப்பு செய்யப்பட்டு விட்டதாகக் கொய்னோமி ஒப்படைக்கிறார். புஜிமோரி அவரது கலைத்திறன் கண்டு வியந்து போகிறார்.

மற்ற பணிகள் முடிந்து சிலை மீண்டும் மடாலயத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. இப்போது. புத்தர் சிலையை லாரி ஒன்றில் ஏற்றி புத்த கோவிலுக்குக் கொண்டு வருகிறார்கள். அங்கே புத்தர் சிலையை வரவேற்க பொதுச் சடங்கு நடைபெறுகிறது

மக்கள் ஒன்று கூடி சடங்குகளை நிகழ்த்துகிறார்கள். சடங்கின் உச்சக்கட்டத்தில், நின்று, மண்டியிட்டு, கோஷமிட்டு, பிரார்த்தனை செய்தபின், அமிதா புத்தர் மீண்டும் தெய்வச்சிலையாகிறார்.. கடைசியாக,கூட்டம் கலைந்துபோகிறது, யாருமில்லாத கோவிலில் மடாதிபதி தனியாகச் சோர்ந்து போய்ப் படிகளில் அமர்ந்தபடியே, வலம் வரும் ஒரு எறும்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

புத்தர் சிலை வெளியேறிச் செல்வதும் மடாலயம் திரும்புவதுமான நிகழ்வு காலமாற்றத்தில் ஜப்பான் அடைந்துள்ள நிலையின் குறியீடு போலவே உள்ளது

புத்தரின் கண்களை மறுசீரமைப்பு செய்யும் கொய்னோமி அடையும் உணர்வுகளும் மடாதிபதி யாருமற்ற மடாலயத்தில் எறும்பைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பதும் ஒரே மனநிலை தான். வேறுவேறு விதமாக வெளிப்படுகிறது.

இப்போது அது பழைய புத்தர் சிலை தான். ஆனால் அது புதுப்பிறவி எடுத்துள்ளது. ஜப்பானியப் பண்பாட்டின் அடையாளமாகவே அந்தச் சிலை முன்வைக்கப்படுகிறது.

கலையின் வழியாக அபூர்வமான தருணங்கள், நிகழ்வுகள் உருவாவதையே லாஸ்லோ இந்நாவலில் முதன்மைப்படுத்தியிருக்கிறார்

லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய். யூத குடும்பத்தில் பிறந்தவர் அவரது தந்தை ஒரு வழக்கறிஞர், கல்லூரியில் சட்டம் பயின்ற பின்பு ஹங்கேரிய மொழி மற்றும் இலக்கியத்தில் பட்டம் பெற்றார்.

ஃபிரான்ஸ் காப்கா, மற்றும் மால்கம் லோரி இருவரது படைப்புகளுமே தன்னை எழுத்தாளராகத் தூண்டியது. உண்மையில் நான் ஒரேயொரு புத்தகத்தை மட்டுமே எழுத விரும்பினேன். அதன்பிறகு இசையில் கவனம் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் முதல் புத்தகம் வெளியான தருணத்தில் அது சமகால அரசியலை விமர்சித்து எழுதப்பட்ட நாவல் என நினைத்து விசாரணைக்காக என்ன போலீஸ் நிலையத்திற்கு அழைத்திருந்தார்கள். அந்த நாவல் சமகால அரசியலைப் பற்றியதில்லை என்று . நான் எவ்வளவு சொல்லியும் அவர்கள் நம்பவில்லை. அது என் கோபத்தை அதிகமாக்கியது. அவர்கள் என் பாஸ்போர்டினை பறிமுதல் செய்தார்கள். அது தான் தொடர்ந்து என்னை எழுத வைத்தது என்கிறார் லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய்

ஏழை மக்களுடன் தான் வாழ்வினை கழித்த லாஸ்லோ சிறிது காலம் சுரங்கத் தொழிலாளியாக இருந்தார். அந்த நாட்களில் சுரங்க தொழிலாளிகள் ரகசியமாக ஒரு வீட்டில் ஒன்று கூடிச் சிறந்த நூல்களைப் படிப்பார்கள். விவாதிப்பார்கள். இசை கேட்பார்கள். அப்படியான ஒரு கலாச்சார இல்லத்தின் பொறுப்பாளராக இருந்தார் லாஸ்லோ

சில காலம் மாட்டுப்பண்ணையின் இரவுக்காவலாளியாக வேலை செய்தார். முந்நூறு மாடுகளுக்கான பாதுகாப்புப் பணியது.இரவில் மாட்டுத் தொழுவத்தில் அமர்ந்தபடியே தஸ்தாயெவ்ஸ்கியை படிப்பது அவரது வழக்கம். அந்த நாட்களில் அவருக்குக் குடிப்பழக்கம் ஆரம்பமானது. பின்பு வெறித்தனமான குடிகாரனாக மாறினார். திடீரென ஒரு நாள் தனது குடியை நிறுத்திக் கொண்டு விட்டார்

தஸ்தாயெவ்ஸ்கி மற்றும் காப்கா இருவரையும் வழிகாட்டிகளாகக் கருதும் லாஸ்லோ தன்னைத் தஸ்தாயெவ்ஸ்கியின் கதாபாத்திரமாகவே கருதுகிறார்.. லாஸ்லோ நாவல்களில் தஸ்தாயெவ்ஸ்கியின் சாயலை அதிகம் காணமுடிகிறது.

Seiobo There Below நாவல் எழுதப்பட்ட விதமும் அதன் மாறுபட்ட அத்தியாய அமைப்பும் கதை சொல்லும் முறையும் மிகவும் தனித்துவமானது. ஐரோப்பாவிலிருந்து நீண்ட காலத்தின் பின்பு ஒரு அசலான எழுத்தாளரைக் கண்டுபிடித்தோம் என்கிறார்கள் புக்கர் கமிட்டி தேர்வாளர்கள்.

அது உண்மையே. மரபான நாவல்களிலிருந்து முற்றிலும் புதிய வகைக் கதை சொல்லும் முறையை உருவாக்கியிருப்பது லாஸ்லோவின் சாதனையே

••

0Shares
0