“சிரமம் வேண்டாம் வெளியிலே சாப்பிட்டுக் கொள்கிறேன்“ என்றான் நாதன். ஆனால் பழனி கேட்கவேயில்லை. “எப்போதும் வெளியே தானே சாப்பிடுகிறீர்கள். இன்றைக்கு என் வீட்டிற்கு மதியம் சாப்பிட வாருங்கள்“ என்றார். எவ்வளவோ மறுத்தும் பழனி கேட்கவில்லை.
மதியம் ஒரு மணிக்குச் சாப்பிட வருவதாக ஒத்துக் கொண்டான். இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்தார்கள். முப்பத்தியெட்டு வயதாகியும் நாதன் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனியறை எடுத்துத் தங்கியிருந்தான். பழனி புறநகரில் குடியிருந்தார்.
தெரிந்தவர் வீட்டில் போய்ச் சாப்பிடுவது கூச்சமானது. எதைச் சாப்பிடுகிறோம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று கவனமாக இருக்க வேண்டும். எதையாவது பிடிக்கவில்லை என்று ஒதுக்கினால் மனக்கஷ்டம் உண்டாகிவிடும். ஹோட்டலில் அந்த நெருக்கடி கிடையாது.
நாதன் வழக்கமாக ஒரு மெஸ்ஸில் தான் சாப்பிட்டான். ஞாயிற்றுக்கிழமை காலையில் எப்போதும் சாப்பிடுவது கிடையாது. ஆகவே பனிரெண்டு மணிக்கெல்லாம் மதியச்சாப்பாட்டினை முடித்துவிடுவான். ஆனால் அடுத்த வீட்டில் பனிரெண்டு மணிக்குச் சாப்பாடு எதிர்பார்க்க முடியாது தானே.
ஒரு மணிக்குச் சாப்பிட வருவதாகச் சொன்ன போதும் நாதன் போன போது மணி ஒன்றரை ஆகியிருந்தது. வீட்டின் காலிங்பெல்லை அடிக்கும் போது உள்ளே ஏதோ உரத்த சப்தம் கேட்டது.
“யாருனு பாருங்க“ என்று ஒரு பெண் குரல் கேட்டது. “ஏன் கத்துறே“ எனச் சொல்லியபடியே பழனி கதவைத் திறந்தார்.
நாதனைக் கண்டதும் பொய் சிரிப்புடன் உள்ளே அழைத்துப் பிரம்பு நாற்காலியில் உட்கார வைத்தார். சமையல் அறையினுள் எழுந்த புகை ஹால் வரை பரவியிருந்தது.
“அப்பளம் பொறிச்சிட்டா சாப்பிடலாம்“ என்றார் பழனி. டீப்பாயில் கிடந்த வார இதழைப் புரட்டிக் கொண்டிருந்தான். பழனி உள்ளே போய் ஏதோ கேட்பது தெரிந்தது. மணி இரண்டைக் கடந்த பிறகும் சாப்பாடு தயாராகி முடியவில்லை. நாதன் பொறுமையாகக் காத்திருந்தான்.
இலை போட்டு உப்பு வைத்து அந்தப் பெண் சோறு பரிமாறினாள். அப்போது தான் அவளை முதன்முறையாகப் பார்த்தான். நெற்றியில் நீளமான தழும்பு, களைத்துப் போன முகம். அந்தப் பெண் சோற்றுக் கரண்டியினை உயர்த்தும் போது தன்னை அறியாமல் அவள் கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் உதிர்ந்து சோற்றில் விழுந்தது. பழனி அதைக் கவனித்தானா எனத் தெரியவில்லை.
அந்தப் பெண் சோற்றில் விழுந்த கண்ணீரைப் பார்த்தபடியே சேலையால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். கண்ணீர் துளி விழுந்த சோற்றை எப்படிச் சாப்பிடுவது என நாதன் கவலை கொண்டான்.
அவர்களுக்குள் என்ன சண்டை. எதற்காக அழுகிறாள். தன் பொருட்டுத் தான் சண்டையா, எதுவும் விளங்கவில்லை. அவன் சோற்றில் கைவைக்காமல் அமர்ந்திருந்தான். அந்தப் பெண் எதுவும் நடக்காதவள் போலச் சோற்றில் சாம்பார் ஊற்றினாள். கண்ணீர் அதில் கரைந்து போனது. மெல்லிய குரலில் சாப்பிடுங்கள் என்று சொன்னாள்
கண்ணீர் துளி கலந்த சோற்றைச் சாப்பிடுவது மனதைக் கனக்கச் செய்தது. பழனி அவளை நோக்கி “சாருக்கு நெய் போடு“ என்றார். நாதன் வேண்டாம் என்றபோதும் அவள் நெய் போட்டாள். அவள் முகத்தில் விவரிக்க முடியாத வேதனை படிந்திருந்ததைக் காண முடிந்தது.
சோற்றைப் பிசைந்து சாப்பிட்டான். ஒரு துளி கண்ணீர் சாப்பாட்டின் ருசியை மாற்றிவிடுகிறது. அவனால் அச் சோற்றைச் சாப்பிட முடியவில்லை. ஆனால் சாப்பிடாமல் போனால் நிச்சயம் அந்தப் பெண்ணைப் பழனி திட்டுவார். சண்டை போடுவார். அது அப்பெண்ணிற்கு மேலும் துயரம் என்பதால் விருப்பமேயில்லாமல் சாப்பிட்டான்.
இனி ஒரு போதும் யார் வீட்டிற்கும் சாப்பிடப் போகக்கூடாது என்று மனதில் ஒரு குரல் எழுந்து கொண்டேயிருந்தது.
சாப்பிட்டு முடித்து இலையை மடக்கிய போது பழனி கேட்டார்
“சாப்பாடு பிடிக்கலையா . சரியாவே சாப்பிடலை“
“அப்படியெல்லாம் இல்லை நல்லா சாப்பிட்டேன்“ என்றான்
கைகழுவுவதற்காக அவர்கள் பின்கட்டிற்குப் போனார்கள்
அந்தப் பெண் எச்சில் இலையைப் பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டிருப்பது கேட்டது. கையைத் துடைத்தபடியே வந்த பழனி என்ன என்று கோபமாக அவளிடம் கேட்டார். அவள் பதில் சொல்லவில்லை. சில நிமிடங்களில் கிச்சனில் இருந்த ரேடியோ பாட ஆரம்பித்தது. பழனியிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு நாதன் தன் அறைக்கு வந்தான். பெருங்குற்றவுணர்ச்சி அவனை ஆக்கிரமித்துக் கொண்டது.
அதன் சில நாட்களில் நாதன் மாற்றல் வாங்கிக் கொண்டு வேறு ஊருக்குப் போய்விட்டான். ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் சோற்றைக் காணும் போதெல்லாம் ஒரு துளி கண்ணீரின் நினைவு வருவதை மட்டும் அவனால் தவிர்க்க முடியவேயில்லை
••
