குறுங்கதை 49 சாப்ளினின் கண்ணாடி

சார்லி சாப்ளின் ஒரு அதிசயமான கண்ணாடியை வைத்திருந்தார் என்கிறார்கள். சாப்ளினைத் தவிர வேறு யாரும் அந்தக் கண்ணாடியைப் பார்க்க அனுமதிக்கபடவில்லை.

இந்த உலகில் ஒரேயொரு மனிதன் பார்க்கும் கண்ணாடி ஒன்று இருப்பது எத்தனை சந்தோஷமாக இருக்கிறது.

எத்தனை ஆயிரம் பேர் பார்த்தாலும் கண்ணாடியில் எந்தச் சுவடுமிருப்பதில்லை.

சாப்ளின் அந்தக் கண்ணாடியை அவரே உருவாக்கிக் கொண்டார். அவரது படுக்கை அறையில் அந்தக் கண்ணாடி இருந்தது. படப்பிடிப்பிற்குச் செல்லும் முன்பு அதன் முன்னால் வந்து நின்று பார்ப்பார்.

கண்ணாடி மௌனமாக எதையோ சொல்கிறது. நடிகராக அவர் படப்பிடிப்புத் தளத்தில் விதவிதமான கண்ணாடிகளைக் கண்டிருந்த போதும் தனது சொந்த கண்ணாடி தரும் நெருக்கத்தை எதுவும் தருவதில்லை என்று உணர்ந்திருந்தார்.

சில நேரம் அந்தக் கண்ணாடி முன்பாக அவர் நிற்கையில் அவரை அறியாமல் கண்ணீர் வரத்துவங்கும்.

கண்ணாடி தான் எப்போதும் வயதை நினைவுபடுத்துகிறது. தனது வெற்றியைத் தோல்வியைப் பெருமைகளை அவர் கண்ணாடி முன்பாக நின்று சொல்லியபடியே இருப்பார். உலகைச் சிரிக்க வைக்க முடிந்த கலைஞர்களுக்கு ஏன் சொந்த வாழ்க்கை இத்தனை துயர மிக்கதாக இருக்கிறது.

சாப்ளின் தனித்திருக்கையில் யாராவது தன்னைச் சந்தோஷப்படுத்த மாட்டார்களா என ஏங்குவார். காதலிக்கும் பெண்கள் அவரது கண்களில் தீர்க்கமுடியாத வேதனையிருப்பதை அறிவார்கள். அது வறுமையில் வாடிய அவரது அம்மாவின் கண்களிலிருந்து அவருக்குத் தாவிக் கொண்ட துயரம் என்பதை அறிந்திருந்தார்கள்.

தண்ணீரில் நீந்துவதைப் போல தற்காலிகமாகத் தன்னை மறக்கவே அவர் காதலித்தார்.

சாப்ளினின் வைத்திருந்த கண்ணாடியென்பது உண்மையில் ஒரு கண்ணாடியில்லை. அது ஒரு புகைப்படம். அநாதை காப்பகத்தில் மெலிந்த சிறுவனாகக் கறுப்பு உடை அணிந்த புகைப்படம். அந்தச் சிறுவனின் கண்களில் இந்த உலகில் தன்னை நேசிக்க ஒருவருமில்லை என்ற உண்மை வெளிப்பட்டது.

அந்தப் புகைப்படத்தைக் காணும் போதெல்லாம் தன்னைக் கண்ணீர் விடச் செய்த இந்த உலகை தான் சிரிக்க வைப்பேன் என்ற ஆவேசம் மேலிடும்.

நம் எல்லோரின் மனதிலும் பால்ய வயதின் ஏதோவொரு புகைப்படம் அழிவற்று தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்துடன் ரகசியமாக உரையாடுகிறோம். எதிர்காலக் கனவுகளைப் பகிர்ந்து கொள்கிறோம். சோர்வடையும் போது உத்வேகம் கொள்கிறோம்.

சிரிப்பை மறந்த சிறார்களின் புகைப்படங்கள் இந்த உலகிற்கு எதையோ சொல்கின்றன.  புகைப்படத்தின் எடை  என்பது அதிலிருக்கும் சந்தோஷத்தின் பொருட்டே அமைகிறது என்கிறார்கள்.

புகைப்படம் நம்மோடு பேசும் மொழி நாம் மட்டுமே அறிந்தது. ரகசியமானது. ஆறுதல் தரக்கூடியது.

உலகம் அதைப் பொருட்படுத்துவதேயில்லை.

••

0Shares
0