மாஸ்கோவில் பிச்சைக்காரர்களைச் சந்திக்காமல் ஒரு தெருவைக் கடந்து செல்ல முடியாது, நகரத்துப் பிச்சைக்காரர்கள் கிராமப்புற பிச்சைக்காரர்களைப் போல இயேசு உருவம் பதித்த துணிப்பை வைத்திருப்பதில்லை. தனது தொப்பியைக் கழற்றி நம்முன்னால் நீட்டி பிச்சை கேட்கிறார்கள். நாம் காசு தரவில்லை என்றால் அலட்சியமாகப் பார்த்தபடியே கடந்து போய்விடுகிறார்கள் என்கிறார் லியோ டால்ஸ்டாய்.
நாட்டுப்புறத்திலிருக்கும் பிச்சைக்காரனுக்கும் நகரத்திலிருக்கும் பிச்சைக்காரனுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை லியோ டால்ஸ்டாய் விரிவாக எழுதியிருக்கிறார்.
இனி நாம் செய்ய வேண்டியது என்ன? என்ற அவரது கட்டுரைத் தொகுப்பில் மாஸ்கோ நகர வாழ்க்கையில் அவர் கண்ட பிச்சைக்காரர்கள். சாலையில் வசிப்பவர்கள். மோசடிப் பேர்வழிகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். சமூகக் குற்றங்களுக்கு யார் காரணம் என்பதை ஆராயும் இந்த நூல் படிக்க மிகவும் சுவாரஸ்யமானது
பெருநகரங்களில் காணப்படும் பிச்சைக்காரர்கள் ஆளைப் பார்த்த பிறகு தான் யாசகம் கேட்பதா, வேண்டாமா என முடிவு செய்கிறார்கள். அதுவும் குரல் எழுப்புவதில்லை. வெறுமனே தொப்பியை நீட்டுகிறார்கள். சில நேரம் அதையும் முழுமையாக நீட்டுவதில்லை. பார்வையிலே யாசகம் போடுகிறவரா இல்லையா என்பதைத் தெரிந்து கொண்டு விடுகிறார்கள்.
நாட்டுப்புறத்திலிருக்கும் பிச்சைக்காரன் உரத்த குரலில் யாசகம் கேட்பதே வழக்கம். சாரட் வண்டியில் யாராவது ஆள் வருவது தெரிந்தால் அதிகமாகக் கத்துவான். ஆனால் நகரத்துப் பிச்சைக்காரன் அப்படித் தனது சக்தியை வீணடிப்பதில்லை. அவன் ஏதோ யோசனையில் நடப்பவன் போலவே செல்கிறான். சில நேரம் உதவி கேட்பது போல மெல்லிய குரலில் யாசகம் கேட்கிறான். நகரத்துப் பிச்சைக்காரர்கள் எப்படி உருவானார்கள்.. எவ்வாறு பிச்சைக்கார வாழ்க்கைக்கு மாறினார்கள் என்பதை டால்ஸ்டாய் விசாரித்து அறிந்து கொண்டிருக்கிறார்.
மாஸ்கோவில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். இதில் நல்லவர் பாதி, கெட்டவர் பாதி. மூன்று வகையான பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள் என்று அவர்களை டால்ஸ்டாய் வகைப்படுத்துகிறார்.
இது போலவே வீடற்ற மனிதர்கள் வசிக்கும் கிட்ரோவ் சந்தைப் பகுதிக்குச் சென்று அவர்கள் வாழ்க்கைப் போராட்டத்தை நேரடியாக அறிந்து கொள்கிறார். அதில் ஒருவன் பசிக்கிறது எனச் சொன்னதும் அவனுக்குச் சாப்பாடு வாங்கித் தருகிறார். அதை அறிந்து மக்கள் மொய்த்துக் கொண்டுவிடுகிறார்கள். சிலர் டால்ஸ்டாயை ஏமாற்றிக் காசு வாங்கிக் கொண்டுவிடுகிறார்கள்
பிச்சைக்காரர்களைக் காணும் போது தனது பணக்கார வாழ்க்கை மிகவும் ஆடம்பரமானது என்ற குற்றவுணர்ச்சி கொள்கிறார் டால்ஸ்டாய்.
ஒரு பிச்சைக்காரன் தனக்கு வேலை கிடைப்பதாக இருந்தால் பிச்சை எடுப்பதை விட்டுவிடுகிறேன் என்று டால்ஸ்டாயிடம் சொல்கிறான். மர அறுவை நடக்கும் இடத்தில் வேலை கிடைக்கிறது என்கிறார் டால்ஸ்டாய். தன்னிடம் ரம்பம் இல்லை என்று அந்த மனிதன் வருந்துகிறான். அதை வாங்குவதற்கு அவனுக்குப் பணம் தருகிறார். அதைப் பெற்றுக் கொண்டு அவன் போய்விடுகிறான். ஆனால் அவர் நினைத்தது போல அவன் வேலைக்குப் போகவில்லை. குடித்துவிட்டு வேறு பகுதியில் பிச்சை எடுக்கப் போய்விடுகிறான்.
தன்னை ஏமாற்றியிருக்கிறான் என்று தெரிந்த போதும் ஏன் இப்படி வறுமையில் வாழுகிறான் என்று அவனது நிலையை நினைத்துக் கவலை கொள்கிறார்.
மாஸ்கோவில் பிச்சை எடுப்பது சட்டப்படிக் குற்றம். இதனால் பிச்சைக்காரர்களைக் கைது செய்து அழைத்துக் கொண்டு போவது வழக்கம். அப்படிக் கைது செய்யப்பட்ட பிச்சைக்காரர்களைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்குப் போய் ஏன் இவர்களைக் கைது செய்திருக்கிறீர்கள் என்று டால்ஸ்டாய் வாக்குவாதம் செய்கிறார். சட்டத்தின் படியே நடப்பதாகச் சொல்கிறார் இன்ஸ்பெக்டர். ஒரு மனிதன் பிச்சை கேட்பது சட்டத்திற்கு எதிரானதில்லை என்று டால்ஸ்டாய் வாதிடுகிறார்.
மாஸ்கோவில் மட்டுமின்றி அன்றைய லண்டனிலும் இப்படி ஆயிரக்கணக்கான பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். அது ஒரு சமூக குற்றம் என்று நண்பர் ஒருவர் டால்ஸ்டாயிடம் வாதிடுகிறார். பிச்சைக்காரர்கள் சமூகத்தால் உருவாக்கப்படுகிறார்கள் என்று அந்த நண்பருடன் கடுமையாக வாதம் செய்கிறார் டால்ஸ்டாய்.
சமுதாயத்தில் பரவியுள்ள எல்லாத் தீமைகளுக்கும் காரணம் பணம் தான் என்று உறுதியான நம்புகிறார் டால்ஸ்டாய்.
பணம் உள்ள ஒரு மனிதன் மொத்த தானியத்தையும் வாங்கி வைத்துக் கொண்டு இன்னொருவனைப் பட்டினி போட முடிகிறது. பட்டினி கிடப்பவன் மெல்ல அடிமையாக்கப்படுவான். அல்லது பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவான். பணக்காரன் பலரது வாழ்க்கையைச் சூறையாடுகிறான் என்பது ஒரு குற்றமாக எவர் கண்ணுக்கும் தெரிவதில்லை. சாலையிலிருந்து பிச்சைக்காரர்களைத் துரத்த முற்படும் நாம் அவர்களை உருவாக்கிய மனிதர்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதேயில்லை என்கிறார் டால்ஸ்டாய்.
பிறர் துயரங்களுக்காகத் தன்னை வருந்திக் கொள்ளும் டால்ஸ்டாய் இந்தத் துயரங்களின் மூலகாரணம் எதுவென்று ஆராய்கிறார். டால்ஸ்டாய் எழுப்பிய கேள்விகள் அவரது காலத்திற்கு மட்டுமில்லை இன்றும் பொருந்தக்கூடியதாகவே இருக்கிறது.
••
14/4/20
