குறுங்கதை 52 சிற்பியான எலி

அந்த நகரில் ஒரு எலி சிற்பியாக வாழ்ந்து வந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒருநாள் பேக்கரி ஒன்றின் உள்ளே இரவில் திருடப் போகையில் அங்கே செய்து வைக்கப்பட்டிருந்த விதவிதமான கேக்குகளையும் அதன் அலங்கார வடிவத்தையும் கண்ட அந்த எலி அவற்றை உண்ணும் சிற்பங்களாகவே கருதியது. ஆகவே தானும் அப்படியான சிற்பங்களைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டது.

திருடி வந்த கேக்துண்டினை வைத்துக் கொண்டு சிற்பம் செய்து பார்த்தது. ஆரம்பத்தில் அந்த எலி நினைத்தது போலச் சிறிய உருவத்தைக் கூடச் செய்ய முடியவில்லை. ஆகவே அது பகலில் பேக்கரியினுள் ஒளிந்து கொண்டு கேக் செய்கிற பெண்ணின் நடவடிக்கைகளை ஆழ்ந்து கவனித்தது. சில வாரங்களில் அந்த எலி நினைத்த உருவத்தைச் செய்வதற்குக் கற்றுத் தேர்ந்தது.

அதன்பிறகு திருடி வந்த கேரட் துண்டில் அது ஒரு முகத்தைச் செதுக்கியது. குடைமிளகாயில் முகமூடி செய்தது. ரொட்டித்துண்டுகளைக் கொண்டு நடனமாடும் பெண்ணைச் செய்தது. இப்படி விதவிதமான சிற்பங்களைச் செய்து காட்டியது.

இதை மற்ற எலிகள் கேலி செய்தன. சிற்பமாகச் செய்து வைக்கப்பட்ட ரொட்டித்துண்டினை கடித்துத் தின்றன. அந்த எலி மற்றவர்களின் ஏளனத்தைப் பொருட்படுத்தவேயில்லை.

ஒரு நாள் அந்த எலி சாக்லேட் துண்டில் சிறிய சிற்பம் ஒன்றைச் செய்து கொண்டிருக்கும் போது பூனை வரும் சப்தம் கேட்டது. பேக்கரியில் திருடிக் கொண்டிருந்த எலிகள் ஒட்டம் பிடித்தன. ஆனால் சிற்பி எலி ஓடவில்லை. அது கையில் சிறிய கத்தியை ஏந்தியபடியே பூனையைப் பார்த்துக் கம்பீரமாக “நான் ஒரு சிற்பி“ என்றது.

கையில் கத்தியோடு நிற்கும் எலியைக் கண்ட பூனை குழப்பத்துடன் “அதனால் என்ன நீ எலிதானே“ என்றது.

“மற்ற எலிகளும் நானும் ஒன்றல்ல. நானொரு கலைஞன்“. என்றது சிற்பி எலி.

“கலைஞன் என்றால் என்ன“ எனக்குழப்பத்துடன் கேட்டது பூனை

“சிருஷ்டிப்பது. புதியன செய்வது“. என்றது எலி

“என்னைக் கண்டு உனக்குப் பயம் வரவில்லையா“ எனக்கேட்டது பூனை

“கலைஞனுக்குப் பயம் கிடையாது. கலையால் எந்தப் பயத்தையும் வெல்ல முடியும்“. என்றது எலி

“நான் உன்னைக் கொல்லப்போகிறேன்“ என்று கோபமாகச் சொன்னது பூனை

அதைக் கேட்ட எலி சொன்னது

“நான் இன்னும் சிற்பத்தை முடிக்கவில்லை. அது வரை பொறுத்திரு“

இது என்ன புது உத்தரவாக இருக்கிறதே எனப் பூனை யோசித்தபடியே எலி சாக்லேட் சிற்பம் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தது. எலியோ கவனத்தை வேறுபக்கம் திருப்பாமல் சிற்பம் செய்வதிலே மூழ்கியிருந்தது. காத்திருப்பின் எரிச்சல் தாங்காமல் பூனை சொன்னது

“உன்னைக் கொல்லப்போகிறேன்“

அதைக்கேட்ட எலி முறைத்தபடியே சொன்னது

“சரி உன் இஷ்டம். அதற்கு முன்பு ஒரு சிறிய போட்டி உன்னால் ஒரு சிறிய வேலையைச் செய்ய முடியுமா. அதில் ஜெயித்துவிட்டால் நீ என்னைக் கொன்று தின்னலாம்“

“சொல், எதுவாக இருந்தாலும் நிமிஷத்தில் ஜெயித்துக்காட்டுகிறேன்“ என்றது பூனை

உடனே எலி ஒரு சாக்பீஸை எடுத்துத் தரையில் சாய்வாக ஒரு கோடு போட்டது. பின்பு பூனையைப் பார்த்துச் சொன்னது

“இந்த கோட்டினை நேராக நிற்கச் செய்“

பூனைக்குப் புரியவில்லை. சாய்கோட்டினை எப்படி நேராக நிற்க வைக்க முடியும் எனக் குழம்பியது. வேறு ஒரு கோடு போட முயன்றது. ஆனால் எலி அதை ஒத்துக் கொள்ளவில்லை. எவ்வளவு முயன்றும் சாய்வான கோட்டினை நேராக்க முடியவில்லை

உடனே எலி சொன்னது

“நீ தோற்றுவிட்டாய். உன்னைப் போன்ற முட்டாளை வெல்ல ஆயுதம் தேவையில்லை. மதியே போதும். கலைஞனின் ஆயுதம் அவனது எண்ணங்கள் தான். எதிரியைக் கண்டு கலைஞன் பயம் கொள்வதுமில்லை. எதிரிக்கு எதிராக ஆயுதம் எடுப்பதுமில்லை. கலை தான் அவனது ஒரே ஆயுதம். புரிகிறதா. போ. “ என்று விரட்டியது

தோற்றுப்போன பூனை செய்வதறியாமல் விலகிப் போனது

••

0Shares
0