நினைத்த மாத்திரத்தில் தண்ணீராக மாறக்கூடிய நான்கு குள்ளர்கள் இருந்தார்கள். அவர்களின் வேலை வாசனையற்ற மலர்களைக் கண்டறிந்து தனது விரல்தொடலின் மூலம் அந்த மலருக்கு வாசனை தருவது.
வாசனையில்லாத மலரின் ஏக்கம் விவரிக்கமுடியாதது. இருட்டில் பறக்கும் பறவையின் கேவலைப் போல உலகம் அறியாதது. குள்ளர்கள் உலகின் அத்தனை மலர்களும் மணம் கொண்டிருக்க வேண்டும் என நினைத்தார்கள்.
இதற்காகக் காடு மலைசுற்றி அறியப்படாத சிறு மலரை அடையாளம் கண்டு அதற்கொரு வாசனையைக் கொடுத்தார்கள். புதிய வாசனையைப் பெற்றுக் கொண்ட மலர்கள் சந்தோஷத்தில் நடனமாடின.
பசித்த வேளைகளில் குள்ளர்கள் கிராமங்களைத் தேடிச் சென்றார்கள். மலர்களுக்கு வாசனையை உண்டுபண்ணத் தெரிந்த குள்ளர்களால் தங்கள் பசியைப் போக்கிக் கொள்ளத் தெரியவில்லை. ஆகவே அவர்கள் உணவை யாசித்தார்கள். போகுமிடெல்லாம் கேலியும் கிண்டலும் அவமானமும் அவர்களைத் துரத்தின. உருவத்தைக் கண்டு கேலி செய்வது எத்தனை குரூரமானது. உலகில் மனித இனத்தைத் தவிர வேறு எந்த உயிரினமும் இந்தப் பேதம் காட்டாது.
மனத்துயர் அடையும் நேரங்களில் அவர்கள் சட்டெனத் தண்ணீராக மாறிவிடுவார்கள். தண்ணீராக மாறியதும் நால்வரும் ஒன்று கலந்துவிடுவார்கள். அந்த நெருக்கமும் குளிர்ச்சியும் அவர்களை ஆற்றுப்படுத்தப் போதுமானதாகயிருந்தது. துயரம் தீர்ந்தவுடன் அவர்கள் மறுபடி குள்ளர்களாகிவிடுவார்கள். இப்படித்தான் அவர்கள் பல ஆண்டுகளாகச் சுற்றியலைந்தார்கள்.
வடக்கில் ஒருமுறை அவர்கள் பயணித்த போது வழியில் பாழ்நிலமாக இருந்தது. என்ன நடந்தது என அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. எரிக்கப்பட்ட கிராமங்கள். இறந்து கிடந்த உடல்கள். வாசனைமிக்கப் பூக்கள் கூட வாசனையற்றே இருந்தன. பிழைத்துக்கிடந்த சிலருக்குக் கைகால்கள் இல்லை. “என்ன ஆனது“ என்று குள்ளர்கள் அவர்களிடம் கேட்டபோது நடுங்கும் குரலில் “யுத்தம். யுத்தம்“ என்றார்கள்.
குள்ளர்கள் யுத்தத்தால் அழிக்கப்பட்ட நிலத்தினைக் கடந்த போது தாங்க முடியாத வேதனை கொண்டார்கள். வழியில் கண்ட ஒரு நத்தை சொன்னது.
“என் கூடு சிறியது. அதைக் கூட யுத்தம் உடைத்துவிட்டது. உடைந்த கூட்டோடு நிற்கிறேன். யுத்தம் கொடியது.“
அதைக் கேட்ட ஒரு குள்ளன் “அய்யோ பாவம்“ என்றான். வேறு ஒரு இடத்தில் ஒரு காலை இழந்த கிழவன் சொன்னான்.
“எங்கே போகிறீர்கள் குள்ளர்களே. வயல்கள் எரிக்கப்பட்டுவிட்டன. ஆற்றில் பிணங்கள் மிதக்கின்றன. கிராமங்களில் மனித நாட்டமேயில்லை. திரும்பிப் போய்விடுங்கள். தன் இனத்தை அழித்து தானே முடிசூடிக் கொள்கிறான் மனிதன். போருக்கு காரணங்கள் தேவையில்லை. “
குள்ளர்கள் துயரமான குரலில் கேட்டார்கள்
“இனி நாங்கள் என்ன செய்வது. “
கிழவன் சொன்னான்.
“சந்தோஷம் தான் வாசனையாக மாறுகிறது. யுத்தம் உலகின் சந்தோஷத்தைப் பறித்துக் கொண்டுவிட்டது. என்று சந்தோஷம் மீளுகிறதோ அன்று திரும்பிவாருங்கள். “
அந்தக் குள்ளர்கள் நால்வரும் நிமிஷத்தில் தண்ணீராக உருமாறினார்கள். ஒன்று கலந்து ஒடி சிறு குளத்தில் நீரோடு ஒன்றாகினார்கள். பின் அவர்கள் குள்ளர்களாக உருக்கொள்ளவேயில்லை. இன்றும் நீராகக் காத்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.
**