விற்பனை பிரதிநிதியாக வேலை செய்த அவனுக்கு மாதத்தில் இருபது நாள் வெளியூர் செல்ல வேண்டியதாகியிருந்தது. ஆரம்பத்தில் புதுப்புது தங்கும் விடுதியினைத் தேடிப் போய்த் தங்குவான். ஆனால் நான்கு ஆண்டுகள் அனுபவத்தின் முடிவில் எந்த ஊரில் எந்த லாட்ஜ் சிறந்தது. என்ன உணவகத்தில் சாப்பிடலாம் என்று நன்றாகத் தெரிந்து வைத்திருந்தான்.
பெரும்பாலும் அவனது வேலை காலை பத்து மணிக்குத் துவங்கி மதியம் இரண்டு மணியோடு முடிந்துவிடும். மாலை ஆறுமணிக்குப் பிறகே அடுத்த ஊருக்குக் கிளம்புவான். மதியம் சாப்பிட்டு விட்டு ஒரு தூக்கம் போட்டால் எழுந்து டீ குடித்துவிட்டுக் கிளம்பத் தயாராகயிருக்கும். அவனைப் போல வேறுவேறு விற்பனை பிரதிகள் பலரும் ஒரே தங்கும் விடுதியில் தான் தங்கினார்கள். சிலருடன் நெருக்கமான பழக்கமும் இருந்தது.
எந்த லாட்ஜிற்குப் போனாலும் அவன் தான் கொண்டு வந்திருந்த சந்தன ஊதுபத்தியைக் கொளுத்தி வைத்துவிடுவான். அந்த வாசனை வந்தவுடன் அறை அவனது வீடு போலாகிவிடும்.
அது போலவே அவனிடம் இன்னொரு பழக்கமிருந்தது.
லாட்ஜில் குளிப்பதற்காக வைத்திருக்கும் சோப்பில் சிறிய பொம்மை செய்வான். பெரும்பாலும் பச்சை நிறத்திலோ வெண்மையாகவோ தான் சாம்பிள் சோப்புகள் இருக்கின்றன. குளிப்பதற்கு முன்பு அந்தச் சோப்பினை கையில் எடுத்து பிளேடால் முயல் போலச் செதுக்குவான். அரை மணி நேரத்தில் அழகான முயல் பொம்மை செய்துவிடுவான். பின்பு சோப்பில் செய்த முயலை முகர்ந்து பார்த்துச் சந்தோஷப்பட்டுக் கொள்வான்.
அதை டிவியின் மீதோ, அல்லது ஜன்னல் ஓரமாகவோ வைத்துவிட்டுக் குளிக்கப் போவான். அந்த அறையில் தான் தங்கியிருந்த நினைவாக அந்த முயலை அங்கேயே விட்டுப் போவான். அடுத்துத் தங்க வருகிறவர்களில் எவராவது அந்தச் சோப்பு முயலைக் கண்டு சந்தோஷப்படுவார்கள் என்று நம்பினான். அல்லது அறையைச் சுத்தப்படுத்த வரும் பெண்களில் எவராவது அதைக் கையில் எடுத்து மகிழ்ச்சி அடையக் கூடும்.
இது வரை அப்படி ஐநூறுக்கும் மேலான பொம்மைகள் செய்து வைத்திருப்பான். எந்த தங்கும் விடுதியிலும் யாரும் அதைப்பற்றி அவனிடம் விசாரித்ததேயில்லை.
ஐந்தாம் ஆண்டில் அவனுக்குப் பதவி உயர்வு கிடைத்தது. அது அலுவலக வேலை. ஆகவே வெளியூர் பயணம் போவதை நிறுத்திக் கொண்டான். வீட்டில் திருமணப் பேச்சைத் துவங்கினார்கள். நல்ல வேலையும் சம்பளமும் கிடைக்கிறதே எனத் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டான். இரண்டு மாதங்களில் பெண் பார்த்து திருமணமும் செய்து விட்டார்கள்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக நீண்டது. ஒரு நாள் அவன் மனைவியின் சான்றிதழைத் தேடுவதற்காக அவளது பெட்டியைத் திறந்த போது அதற்குள் பச்சை நிற முயல் பொம்மை ஒன்றிருந்தது. ஆச்சரியமாக அதைக் கையில் எடுத்துப் பார்த்தபடியே மனைவியை அழைத்தான்.
அவள் வெட்கத்துடன் “பேங்க் எக்ஸாம் எழுதுவதற்காகச் சேலம் போயிருந்தப்போ லாட்ஜில் கிடைச்சது. யாரோ செஞ்சு வச்சிட்டு போயிருக்காங்க. அழகாக இருந்துச்சா. அதான் எடுத்துட்டு வந்துட்டேன். ரொம்ப நல்லாயிருக்குல்லே“ என்றாள்
“ஆமாம்“ என்றபடியே அந்த முயல் பொம்மையை அவளது பெட்டிக்குள் போட்டுவிட்டு அவளது சான்றிதழை மட்டும் எடுத்துக் கொண்டான். சோப்பில் முயல் பொம்மையைச் செய்தது நான் தான் என அவளிடம் சொல்லவேயில்லை.
சில விஷயங்களைச் சொல்வதை விடவும் மறைத்துக் கொள்வதில் தான் சந்தோஷமிருக்கிறது என்று அவன் நன்றாக உணர்ந்திருந்தான்.
••
