யானை கொட்டடிக்குள் சிறுவர்களை அனுமதிக்கமாட்டார்கள். தகரக்கூரை வேய்ந்த பழைய கொட்டடியது. சுப்ரமணிய சுவாமி கோவிலுக்குச் சொந்தமான யானை அங்கேயிருந்தது. ஒரு ஊரில் ஒரேயொரு யானை மட்டும் தனியே வாழ்வது விசித்திரமானது. அதற்குத் துணையே கிடையாதா என்று சிறுவர்கள் பேசிக் கொள்வார்கள்.
அந்த யானையை வாரம் வெள்ளிக்கிழமை மட்டும் கோவிலுக்கு அழைத்து வருவார்கள். மற்ற நாட்களில் அது கொட்டடியிலே தானிருக்கும்.
யானைப்பாகன் அழுக்கான வேஷ்டி கட்டியிருப்பான். சதா யானையின் அருகில் உட்கார்ந்து பீடி பிடித்துக் கொண்டிருப்பான். யானையின் கண்கள் அவனையே பார்த்துக் கொண்டிருக்கும்.
யானைப்பாகனின் வீடு எங்கேயிருக்கிறது என யாருக்கும் தெரியாது. யானைக்குத் தெரியாமல் அதை ரகசியமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்பார்கள். இதற்காகவே யானைப்பாகன் சைக்கிளில் போய் ரயில்வே ஸ்டேண்டில் நிறுத்தி விட்டு பாசஞ்சர் ரயில் பிடித்து அவன் ஊருக்குப் போய் வருவான்.
யானையை வேடிக்கை பார்ப்பதற்காகப் பள்ளிச்சிறுவர்கள் வரும் போது அவர்களிடம் பாகன் சில்லறைகளை வாங்கிக் கொள்வான். அப்படியும் அருகில் போய் யானையைப் பார்க்க முடியாது. தூரத்தில் நின்று பார்த்துக் கொள்ள வேண்டியது தான்.
யானை எப்போதும் நின்று கொண்டேதானிருக்கும். அது நின்றபடியே தூங்கும் என்றான் ஒரு சிறுவன். இல்லை படுத்துக் கொண்டு தான் தூங்கும் என்றான் மற்றவன். அதைக் கேட்ட ஒருவன் ஆமாம். போர்வை போர்த்திகிட்டு தூங்கும் என்றான். இதைக் கேட்ட மற்ற மாணவர்கள் சிரித்தார்கள். யானை அவர்களைத் திரும்பிப் பார்த்தது.
யானையைப் பற்றித் தான் எத்தனை எத்தனை கதைகள். எவ்வளவு முறை பார்த்தாலும் யானையின் அழகு சலிப்பதேயில்லை.
பாகன் இல்லாத நேரம் பார்த்து அழகர் ரகசியமாக வந்து கதவின் ஒட்டை வழியாக யானையைப் பார்ப்பான். அகலமான காதுகளையும் வாலையும் அசைத்தபடியே யானை நின்றிருக்கும். சில நேரம் விசில் அடித்து யானையின் கவனத்தைத் திருப்ப பார்ப்பான். யானை கண்டுகொள்ளாது
ஒரு நாள் யானைக் கொட்டடிக்குக் கால்நடை மருத்துவரை அழைத்துக் கொண்டு போனான் யானைப்பாகன். யானையின் வலதுகாலில் புண் ஏற்பட்டுச் சீழ் வடிவதாகப் பேசிக் கொண்டார்கள். மருத்துவர் யானையின் காலை பரிசோதனை செய்து விட்டு மருந்து கொடுத்துப் போனார். ஆனால் அப்படியும் புண் ஆறவில்லை. யானையால் நடக்க முடியவில்லை. அதைக் கேரளாவிலிருந்த யானைகளுக்கான வைத்தியசாலைக்கு அழைத்துப் போவது என ஒரு லாரியை ஏற்பாடு செய்தார்கள்
ஒரு யானை லாரியில் ஏற்றப்படுவதைச் சிறுவர்கள் திரளாகக் கூடி வேடிக்கை பார்த்தார்கள். யானையால் லாரியில் ஏற முடியவில்லை. கயிறு கட்டி இழுத்தார்கள். யானை புறப்பட்டுப் போனபிறகு கொட்டடி வெறுமையானது. யானைப்பாகனும் இல்லை என்பதால் பள்ளிவிட்டதும் அழகரும் அவன் நண்பர்களும் யானைக் கொட்டடிக்குச் சென்றார்கள்.
யானை இல்லாத போது கொட்டடியைப் பார்க்க மிகப் பிரம்மாண்டமாக இருந்தது. யானை நிற்கும் இடத்தில் போய் நின்ற போது தான் எவ்வளவு சிறிய உருவம் என்று அழகருக்குப் புரிந்தது. யானை கட்டிப்போடப்பட்டிருந்த இரும்புச் சங்கிலியை அசைக்க முடியவில்லை. யானையின் அலங்காரப் பொருட்கள் ஒரு மரப்பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தன
அழகரும் அவன் நண்பனும் யானை போலவே கைகளை வைத்துக் கொண்டு ஆடினார்கள். யானை விட்டை போடுவது போலப் புட்டத்தைத் தூக்கி ஆட்டினான் நண்பன். யானையின் கால்களுக்குள் போய்வருவது போலப் பாவனைச் செய்தார்கள். அங்கே அரூபமாக யானை இருப்பது போலவே அவர்கள் உணர்ந்தார்கள்.
யானைப்பாகன் சுவரில் ஏதோ கணக்கு எழுதி வைத்திருந்தான்.. என்ன கணக்கு என்று அவர்களுக்குப் புரியவில்லை.
“யானை ஒரு குட்டிக்கரணம் போடு“ என்று கைகளை உயர்த்தி யானையாக நடித்த அழகரை மிரட்டினான் அவனது நண்பன். அழகரும் குட்டிக்கரணம் போட்டான். அதைக் கண்டு நண்பன் சப்தமாகச் சிரித்தான். யாரோ வெளியே ஆள் வரும் சப்தம் கேட்டது. அவர்கள் வெளியே ஓடினார்கள்.
கோவில் திடலுக்கு வந்தவுடன் இருவரும் யானை போலவே கைகளை வைத்துக் கொண்டு கம்பீரமாக நடந்து போனார்கள். அதைக் கண்டு யாரோ ஒரு சிறுமி சிரித்தாள். அவளுக்கு ஆசி தருவது போலவே அழகர் நடித்தான். அவளும் குனிந்து ஏற்றுக் கொண்டாள்.
யானையைப் போலவே யானை உருக் கொள்வதும் சந்தோஷம் தரக்கூடியதே என்பதை அப்போது அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.
**
10/5/20
