அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகள் கல்வி பயிலுவதற்காக ரகு போயிருந்த நாட்களில் சென்னையிலுள்ள அவனது வீட்டிற்கு ஒரு இளம் பெண் வந்திருக்கிறாள். அவனது அறையிலே தங்கியிருக்கிறாள். அவனது கட்டிலில் படுத்து உறங்கியிருக்கிறாள். புத்தக அடுக்கினைப் புரட்டியிருக்கிறாள். அவனது சிறுவயது புகைப்படங்களை ஆசையாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இதை எல்லாம் அம்மா சொல்லிக் கேட்டபோது ரகுவிற்குக் கூச்சமாக இருந்தது.
“ஏன் அந்தப் பெண்ணை அனுமதித்தீர்கள்“ என்று கோவித்துக் கொண்டான்
“மோகன் மாமா அழைத்துக் கொண்டு வந்திருந்தார். ஏதோ விளையாட்டுப் போட்டிக்கு வந்தவள்“ என்றாள் அம்மா.
மோகன் மாமா அப்பாவின் நெருக்கமான நண்பர். ஒரு கல்லூரியில் விளையாட்டு பயிற்சியாளராக வேலை செய்தார். ஆகவே டேபிள் டென்னிஸ் போட்டிக்காகக் கல்லூரி மாணவிகளில் எவரையேனும் சென்னைக்கு அழைத்து வருவது வழக்கம். அப்படித்தான் அவளையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்.
“எத்தனை நாள் தங்கியிருந்தாள்“ என்று ரகு அம்மாவிடம் கேட்டான்.
“மூன்று நாட்கள். உன்னைப் போலவே கீர்த்தனாவும் சதா காதில் இயர்போனை மாட்டிக் கொண்டேயிருந்தாள். யாரோடும் பேசவில்லை“, என்றாள் அம்மா.
ரகு வீட்டின் ஒரே பையன். அவனது அறையை யாரும் திறக்கமாட்டார்கள் என்பதால் பீரோவைக் கூடப் பூட்டிப் போகவில்லை. அவனது கணினியில் அம்மா ஏதாவது கேம் விளையாடுவாள் என்பதால் அதையும் கடவுச்சொல் இல்லாமல் வைத்திருந்தான்.
கீர்த்தனா எப்படியிருப்பாள் என்று கூட ரகுவிற்குத் தெரியாது. ஆனால் அவள் நினைவிலே இருந்தாள். அறையில் அவள் எதையாவது விட்டுச் சென்றிருக்கிறாளா எனத் தேடினான். அவள் என்ன புத்தகங்களை எடுத்துப் படித்திருக்கிறாள் எனச் சோதனை செய்தான். ஒன்றும் கிடைக்கவில்லை.
அம்மா அவனைக் கேலி செய்தபடியே “உன் பொருளை ஒண்ணும் அவ எடுக்கலை. அவ தான் காபி கப்பை விட்டுப் போய்விட்டாள்“ என்றாள்.
“என்ன கப்“ என அறியாதவன் போலக் கேட்டான் ரகு
அம்மா கிச்சனில் இருந்து கறுப்பு நிற காபி கப் ஒன்றை எடுத்து வந்தாள். அதில் கீர்த்தனா என எழுதியிருந்தது. பிறந்த நாள் பரிசாக யாரோ கொடுத்த கப். அம்மா சிரித்தபடியே சொன்னாள்
“வீட்டிலிருந்து அவளே காபி கப் கொண்டு வந்திருந்தாள். இந்த கப்பில் தான் தினமும் காபி குடித்தாள்“
அதைக் கையில் வாங்கிப் பார்த்தான் ரகு. ஏனோ நெருக்கமாக உணர்ந்தான்.
“அந்த பொண்ணு ஊரு சிவகங்கை. டாக்டர் மகளாம்“ என்றாள் அம்மா
இதை எல்லாம் ஏன் சொல்லுகிறாள் என்று புரியாமல் சிரித்தபடியே அந்தக் காபி கப்பை தனது அறைக்கு எடுத்துக் கொண்டு போய் வைத்துக் கொண்டான். அவனது அறைக்கு வந்து தங்கிய முதல் பெண் அவள் தான் என்பதாலே அவளைப் பற்றியே கனவு கண்டு கொண்டிருந்தான்.
ஒரு முறை மோகன் மாமாவுடன் பேசும் போது, “ரகு உன்னைக் கீர்த்தனா பெரிய அறிவாளினு சொன்னா “என்று சொன்னதைக் கேட்டு எதை வைத்து அப்படிச் சொன்னாள் என்று சிரித்துக் கொண்டான்.
முகம் காணாமலே கீர்த்தனா அவன் மனதிற்கு மிகவும் நெருக்கமாகியிருந்தாள். சில நேரம் அம்மாவிற்குத் தெரியாமல் அவளது பெயர் பொறித்த கப்பில் காபி குடிப்பான். அவள் பெயரை காகிதத்தில் எழுதி கிழித்துப் போடுவான். சிவகங்கைக்குப் போய் அவளைப் பார்த்து வரலாமா என்று கூட யோசிப்பான். ஆனால் மூன்று ஆண்டுகள் மனதிலிருந்த ஆசையை வெளிக்காட்டிக் கொள்ளவேயில்லை
பின்பு அம்மாவிடம் கீர்த்தனாவைத் திருமணம் செய்ய வேண்டும் என்றான். அவள் மோகன் அங்கிளிடம் பேசினாள். அடுத்த வாரமே அவர்கள் சிவகங்கை போனார்கள். முதன்முறையாகக் கீர்த்தனாவைப் பார்த்த போது நீண்ட நாள் பழகியது போலிருந்தது. அவள் சிரித்தபடியே “சின்ன வயசு போட்டோவுல இன்னும் அழகா இருந்தீங்க“ என்றாள். ரகு அதை மிகவும் ரசித்தான்.
அவர்கள் திருமணம் உறுதியானது. திருமணமாகி ரகுவின் வீட்டிற்குப் புதுப்பெண்ணாக வந்தவளிடம் ரகு சொன்னான்
“நீ காபி கப்பை விட்டுவிட்டுப் போனது தான் நம்ம கல்யாணத்துக்கே காரணம்“
“நானும் அப்படி ஏதாவது நடக்காதானு நினைச்சி தான் கப்பை விட்டுட்டு போனேன்“ என்று வெட்கத்துடன் சொன்னாள்
“என்னை பார்க்காமலே பிடித்துவிட்டதா“ எனக்கேட்டான் ரகு
“உங்க ரூம்க்கு வந்தப்போ இது என்னோட இடம். நான் இங்க தான் வாழப்போறேனு மனசுல தோணுச்சி. ஏன் அப்படினு தெரியலை. ஆனா இங்க இருந்தப்போ ரொம்பச் சந்தோஷமா இருந்தேன். ஆனா உங்களுக்கு என்னைப் பிடிக்குமானு தெரியாது. அதான் இந்தக் காபி கப்பை விட்டுட்டு வந்தேன். ஒருவேளை உங்களுக்கு என்னைப் பிடிச்சி இருந்தா. நிச்சயம் தேடி வருவீங்கன்னு நம்பினேன். அப்படியே நடந்துருச்சி“ என்றாள்
வியப்பாகத் தானிருந்தது. ஆனால் காதலில் வியப்பான விஷயங்கள் எளிதாக நடந்தேறிவிடும் தானே.
••
