குற்றத்தின் பாதை

The Delinquents 2023ல் வெளியான ரோட்ரிகோ மோரேனோ இயக்கிய அர்ஜென்டினா திரைப்படம். வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட கதையை முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையின் மூலம் கவித்துவமாக, செறிவாக எடுத்திருக்கிறார்கள். கிளைவிடும்கதைகள். இருவேறு நிலவெளிகள். இரண்டு முக்கியக் கதாபாத்திரங்கள். காதலும் குற்றமும் இணைந்தும் விலகியும் செல்லும் திரைக்கதை.

இப்படத்தின் ஒரு காட்சியில் அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற கவிஞரான Ricardo Zelarayán எழுதிய The Great Salt Flats என்ற கவிதையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சிறைச்சாலையில் அந்தக் கவிதை வாசிக்கப்படுகிறது. உண்மையில் அது கதாபாத்திரத்தின் உருமாற்றத்தை, காலநகர்வை வெளிப்படுத்தவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மொத்த படத்தின் மையக்குரல் போலவே அக் கவிதை ஒலிக்கிறது

புகழ்பெற்ற கவிதை ஒன்றை இப்படித் திரைப்படத்தில் யாரும் பயன்படுத்தியதில்லை. சினிமாவின் காட்சிமொழியும் திரைவடிவமும் மாறியிருப்பதற்கு இதுவே சான்று.

படம் பார்த்து முடித்தவுடன் இணையத்தில் தேடி The Great Salt Flats கவிதையைப் படித்தேன். அபாரம். குறிப்பாகத் தண்ணீர் துளியை கத்தரிக்கோல் துண்டிக்க முயன்ற வரியும், மர்மம் என்ற சொல்லை நசுக்க வேண்டும் என்ற வரியும் அற்புதம். கவிதையின் வேகம். சொற்கள் தாவிச் செல்லும் பாங்கு, அபாரமான கவித்துவப் பார்வை, சர்ரியலிச பாணியிலான காட்சியடுக்குகள் என இக்கவிதை ஆச்சரியமளிக்கிறது. இதை வாசிக்கும் போது மனதில் I AM CUBA படத்தின் காட்சிகள் வந்துபோயின

மோரன் துல்லியமாகத் திட்டமிட்டுத் தான் வேலை செய்யும் வங்கியிலிருந்து பணம் திருடுகிறான். திருடிய பணத்தைத் தன்னோடு வேலை செய்யும் நண்பன் ரோமனிடம் ஒப்படைத்துவிட்டுத் தானே போலீஸில் சரண் அடைந்து சிறை சென்றுவிடுகிறான். மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு வெளியே வந்து பணத்தைப் பெற்றுக் கொள்வதாக ஏற்பாடு.

கொள்ளையடித்த பணத்தைத் தனது வீட்டில் ரகசியமாக வைத்துள்ள ரோமன் எங்கே தான் கண்டுபிடிக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் வாழுகிறான். வங்கியில் விசாரணை நடைபெறுகிறது. அவன் மீதும் சந்தேகத்தின் நிழல் விழுகிறது. ஆகவே ரோமன் உறக்கமற்றுப் போகிறான். எப்படியாவது அந்தப் பணத்தைத் தனது வீட்டைவிட்டு அப்புறப்படுத்திவிட வேண்டும் என்று நினைக்கிறான். இந்தக் குழப்பம், தடுமாற்றம் அவனது தினசரி வாழ்க்கையைக் கலைத்துப் போடுகிறது.

இந்த நெருக்கடிவாழ்வின் மறுபக்கம் போல ரோமனுக்கு ஏற்படும் புதிய காதல். மற்றும் மோரனின் காதல் இரண்டும் விவரிக்கப்படுகிறது. இரண்டும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. சிறையில் மோரன் எதிர்கொள்ளும் நெருக்கடிகள். மற்றும் வீட்டில் ரோமன் சந்திக்கும் பிரச்சனைகள் அழகாகக் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. குறிப்பாக ரோமன் வீட்டில் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்கும் சிறுவனின் காட்சி

Money Heist போன்ற தொடர்கள் வங்கிக் கொள்ளையைப் பெரும் சாகசமாக அடையாளம் காட்டியுள்ள காலகட்டத்தில் அதே வங்கி கொள்ளை தனிமனிதனுக்கு ஏற்படுத்தும் நெருக்கடிகளை, உளவியல் சிக்கல்களைப் படம் வெளிப்படுத்துகிறது. அந்த வகையில் மிக முக்கியமான திரைப்படமிது.

படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களின் பெயர்கள் ஒன்றையொன்று பிரதிபலிப்பது போலவே வைக்கப்பட்டிருக்கின்றன. ரோமன், நார்மா காதல் காட்சிகள் அழகானவை. குறிப்பாக ரோமன் செல்லும் பேருந்தை நார்மா துரத்தி வரும் நீண்ட காட்சி  கவித்துமானது.

சிறைச்சாலையில் மோரன் புத்தகங்களில் தஞ்சம் அடைகிறான் அவனுக்குப் புதிய உலகின் கதவுகள் திறக்கின்றன. அதன் தொடர்ச்சியாகவே The Great Salt Flats கவிதையை வாசிக்கிறான். இதனைக் காட்சிப்படுத்தியுள்ளவிதமும் கேமிராக் கோணங்களும் அபாரமானவை.

தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலின் நாயகன் போலவே மோரன் நடந்து கொள்கிறான். எதிர்காலம் பற்றிய அவனது கனவுகளும் அதைச் சார்ந்த திட்டமிடலும் துல்லியமாகச் சித்தரிக்கப்படுகின்றன. தன் வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழப் போதுமான அளவிற்கு மட்டுமே அவன் பணம் திருடுகிறான். சிறைவாசம் பற்றிய அவனது கணிப்பு மட்டுமே மாறுகின்றது.

ரோமன் கட்டாயத்தின் பெயரால் தான் கொள்ளையில் இணைகிறான். அதனால் அவனது நிகழ்கால வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக சிக்கலாகிக் கலைந்து போகிறது. இரவில் உறக்கமற்றுப் போகும் ரோமன் ஷேக்ஸ்பியரின் மெக்பெத்தை போலாகிவிடுகிறான். மீட்சியைத் தேடி அலைகிறான். சிறையில் அவன் மோரனை சந்திக்கும் காட்சியும் அதைத் தொடர்ந்த உரையாடலும் அவனது மனநிலையின் தடுமாற்றத்தை வெளிப்படுத்துகின்றன. இருவரும் நகரில் அடைந்திராத மகிழ்ச்சியைச் சுதந்திரத்தை வனவாழ்க்கையில் அடைகிறார்கள். குறிப்பாக மோரனின் இரவுக்காட்சிகள் அவனது முழுமையான மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன.

மோரனின் கடந்தகாலம் பற்றி படம் விவரிப்பதில்லை. ஆனால் அவன் வங்கிவேலையை சலிப்போடு மேற்கொள்கிறான். நிம்மதியான எதிர்காலம் தனக்கு தேவை என்று நினைக்கிறான். குற்றம் அவனது மனதில் வேர்விட்டு வளர்கிறது. அதை நிறைவேற்ற அவன் பெரிய சாகசங்கள் செய்வதில்லை. எளிதாகவே செய்து முடிக்கிறான். வெற்றிகரமாக கொள்ளை அடித்தபிறகே அவனது பதற்றம் துவங்குகிறது. தனது பணப்பையை அவன் ரோமனிடம் கையால் கொடுப்பதில்லை. காலால் தள்ளிவிடுகிறான். காவலர்களிடம் தன்னை ஒப்படைத்துக் கொள்ளும் போதும் அவன் திட்டமிட்டபடியே நடந்து கொள்கிறான்.

மோரனின் எண்ணங்களும் செயல்களும் துல்லியமானவை. ஆனால் அவனால் ரோமனின் வாழ்க்கை திசைமாறுவது தான் படத்தின் முக்கியச் சரடு. ரோமனின் மனைவி அவனைச் சந்தேகப்படுவதில்லை. ஆனால் ஏதோ தவறாக நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்கிறாள். அவனை வீட்டைவிட்டு வெளியேறிப் போக வைக்கிறாள். நார்மாவோ அவனது குற்றமனப்பாங்கிலிருந்து விடுவிக்கிறாள். அவர்கள் ஒன்றாக சினிமா பார்க்கிறார்கள். ஊர் சுற்றுகிறார்கள். மோரன் தனது கட்டுப்பாட்டில் ரோமனை மாற்றியது போன்றதே நார்மாவை தனது கட்டுப்பாட்டிற்குள் ரோமன் கொண்டுவந்ததும்.

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஓடும் இப்படம் தேர்ந்த ஒளிப்பதிவும் சிறந்த இசையும் கொண்டிருக்கிறது. குற்றத்தின் விளைவுகளை விடவும் குற்றம் ஏற்படுத்தும் அதிர்வுகளை ஆராய்வதன் மூலம் படம் புதிய அழகியலை உருவாக்கியுள்ளது.

••

0Shares
0