குற்றமுகங்கள் 18 திருத்தேரி

சந்திரகிரி கொலை வழக்கு என்ற துப்பறியும் நாவல் வெளியான ஆண்டு 1937 ஆக இருக்கலாம். அதை எழுதியவர் சோம.வெங்கடலட்சுமி. எட்டணா விலையில் அந்த நாவல் விற்கபட்டது.

யாரோ ஒரு வழக்கறிஞர் தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு பெண் பெயரில் கதை எழுதி வெளியிட்டிருக்கிறார் என்று பேசிக்கொண்டார்கள்.

பாண்டுரங்கன் அந்த நாவலை விலை கொடுத்து வாங்கவில்லை. அது போல நாவல் ஒன்றை தான் எழுதியிருப்பதாகவும், அதை அச்சிட வேண்டும் என்றும் கோபால்ராவ் அச்சகத்திற்கு வந்த திருத்தேரி கொடுத்த புத்தகத்தைத் தான் படித்தான்.

திருத்தேரிக்கு நாற்பது வயதிருக்கும். வட இந்தியர்கள் அணிவது போன்ற பைஜாமா ஜிப்பா உடையை அணிந்திருந்தார். வெற்றிலைக்காவி படிந்த பற்கள். இரண்டு கைகளிலும் ஒரே போன்ற பச்சைக்கல் மோதிரம் அணிந்திருந்தார்.

பாண்டுரங்கனுக்கு அவனது அத்தையின் வழியாகவே புத்தகம் படிக்கும் ஏற்பட்டது. வள்ளல் குருநாதன் இலவச நூலகத்தில் நிறையப் புத்தகங்களை எடுத்துப் படித்திருக்கிறான். அந்த ஆசையில் தான் அச்சகத்தில் அச்சுக்கோர்க்கும் பணியில் சேர்ந்தான்.

அவனது அச்சகத்தில் திருமண அழைப்பிதழ்கள், மருந்துக்கம்பெனி மற்றும் ஏலக்கடை நோட்டீஸ்கள், நாடக விளம்பரங்களை அச்சிட்டார்கள். ஒன்றிரண்டு பக்திபாடல் புத்தகங்களையும் அச்சிட்டுக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இப்படி ஒரு துப்பறியும் நாவலை அச்சிட வேண்டும் என ஒருவர் கேட்டு வந்த போது முதலாளிக்கு கொலை, திருட்டு போன்ற புத்தகங்களை அச்சிட்டால் தெய்வகுற்றமாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

திருத்தேரி தனது நாவலை அவசரமாக அச்சிட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் அச்சுக்கூலி இரண்டு மடங்கு அதிகம் தருவதாகவும் சொன்னதால் உடனடியாக அச்சுக்கோர்க்கும்படி பாண்டுரங்கத்திடம் ஒப்படைத்தார்.

அச்சிடக் கொடுத்துள்ள நாவலை விடவும் சந்திரகிரி கொலை வழக்கை படிப்பதில் தான் பாண்டுரங்கனுக்கு ஆர்வம் அதிகமிருந்தது. ஆகவே அதனை முதலில் படிக்க ஆரம்பித்தான்.

முதல் பக்கத்திலே அங்குராஜின் கொலை நடந்துவிடுகிறது. அவரைக் கொன்றவர் யார் எனக் கண்டறிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வருகிறார். விசாரணை செய்கிறார். சந்தேகத்திற்குரிய நபர்களைப் பின்தொடருகிறார். கடைசியில் குற்றவாளி ஒரு பெண்ணாக இருக்கிறாள். கனகம்மாள் எப்படி அந்தக் கொலையைச் செய்தாள் என்பதை இன்ஸ்பெக்டர் நாவலின் இறுதியில் விவரிக்கிறார்.

நாவலை படித்து முடித்தவுடன் அத்தனையும் கண்முன்னே நடந்தது போல வியப்பாக இருந்தது. எப்படி சோம.வெங்கடலட்சுமியால் இப்படி ஒரு நாவலை எழுத முடிந்தது. இது அவரது கற்பனையா, உண்மைக்கதையா,. அல்லது யாராவது எழுதி அவள் பெயரில் வெளியிட்டு விட்டார்களா எனக் குழப்பமாக இருந்தது.

சோம. வெங்கடலட்சுமி பற்றி தெரிந்து கொள்ள தங்கள் அச்சகத்தின் வாடிக்கையாளரும் ஜோதிடருமான ரங்கம்பிள்ளையைச் சந்தித்தான். அவரும் இந்த நாவலைப் படித்திருந்தார்.

“அந்தம்மா குடியாத்ததுல இருக்காங்க. ராவ்பகதூர் சோமசுந்தரத்தோட மகள். இந்தக் கதையில வர்றது எல்லாம் அவங்க குடும்பத்துல நடந்தது. அங்குராஜ் அந்தம்மாவோட சொந்த அண்ணன்“.

“அப்போ கொலை செய்த கனகம்மா யாரு“ என்று கேட்டான் பாண்டுரங்கன்.

“அது கற்பனை. இன்னைக்கு வரைக்கும் அந்தக் கொலையை யார் செய்ததுனு கண்டுபிடிக்க முடியலை“

“கதையில வர்றது எல்லாம் நிஜமில்லையா“

“அட முட்டாளே. கதையில எது நிஜம் எது பொய்யுனு கண்டுபிடிக்க முடியாது. ஒரு வேளை வெங்கடலட்சுமியே அந்தக் கொலையைச் செய்திருக்கலாம்“

“தானே ஒரு கொலை செய்துட்டு அதை யாராவது கதையா எழுதுவாங்களா“.

“அப்படியும் நடக்கலாம். மனுச மனசை யாராலும் புரிஞ்சிகிட முடியாது. எத்தனை கேஸ்ல இப்படிப் பாத்துருக்கேன் தெரியுமா“

அதைக் கேட்டதும் பாண்டுரங்கனுக்குச் சோம.வெங்கடலட்சுமியை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமானது. ஆனால். குடியாத்தம் வரை போய் வருவதற்கான பணம் அவன் கையில் இல்லை. லீவும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் திருத்தேரி அச்சிடுவதற்காகக் கொடுத்த துப்பறியும் நாவலின் கையெழுத்துப் பிரதியைப் படிக்க ஆரம்பித்தான்.

ஆச்சரியம் அதுவும் சந்திரகிரி கொலை வழக்கினைப் பற்றியதே. இந்தக் கதையிலும் அங்குராஜ் கொல்லப்படுகிறான். இன்ஸ்பெக்டர் வருகிறார். கதையின் ஆரம்பத்திலே கனகம்மா மீது சந்தேகம் வந்துவிடுகிறது. ஆனால் உண்மையான குற்றவாளி அவள் இல்லை என இன்ஸ்பெக்டர் கண்டுபிடித்துவிடுகிறார். கொலையைச் செய்தவர் அங்குராஜின் தந்தை ராவ்பகதூர் சோமசுந்தரம் அவர் ஏன் அந்தக் கொலையைச் செய்தார் என்பதை இன்ஸ்பெக்டர் கடைசியில் விளக்குகிறார்.

இதைப்படித்து முடித்தவுடன் பாண்டுரங்கத்திற்கு இரண்டில் எது நிஜம் என்ற கேள்வி எழுந்தது.

சோம.வெங்கடலட்சுமி நாவலுக்குப் போட்டியாக நாவல் எழுதிய திருத்தேரி யார் எனத் தெரிந்து கொள்ள விரும்பி அவர் கொடுத்திருந்த முகவரிக்குச் சென்றான்.

திருவல்லிகேணி கணபதி மெஸ் சந்துக்குள் இருந்த ஒரு வீட்டில் திருத்தேரி குடியிருந்தார். பாண்டுரங்கத்தைப் பார்த்தவுடன் “புக் ரெடியாகிருச்சா“ என்று கேட்டார்.

அவன் இல்லையென்று தலையாட்டிவிட்டு “இந்த நாவல் சோம.வெங்கடலட்சுமி. எழுதி ஏற்கனவே வெளியாகியிருக்கு. நாம வேற பேர்ல திரும்பப் போட்டா.. கோர்ட் கேஸ் ஆகிரும்னு முதலாளி பயப்படுறாங்க“ என்றான்

“அது வேற நாவல். இது வேற நாவல்“

“நான் சந்திரகிரி கொலைவழக்குப் படிச்சிருக்கேன். ரெண்டும் ஒண்ணு தான். கனகம்மாவுக்குப் பதிலா உங்க நாவல்ல ராவ்பகதூர் கொலை செய்றார். “

“அது தான் உண்மை. கனகம்மா கொலை செய்யலை. அப்படி ஒரு பொண்ணே அந்த வீட்ல கிடையாது “

“அது உங்களுக்கு எப்படித் தெரியும்“

“இது உண்மையில நடந்த கதை. எனக்கு நல்லா தெரியும். ஏன்னா நான் தான் சோம. வெங்கடலட்சுமியோட புருஷன். அவங்க அப்பாவை காப்பாற்றுவதற்காக இப்படி ஒரு நாவலை எழுதியிருக்கா.. இப்போ உலகமே கனகம்மாவை கொலையாளியா நினைக்குது.

“நீங்க போலீஸ்ல சொல்ல வேண்டியது தானே“.

“ நான் சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க ரெண்டு வருஷம் முன்னாடியே எனக்குச் சித்தபிரம்மைனு வீட்டைவிட்டு துரத்திவிட்டாங்க.. அதான் நாவலா எழுதியிருக்கேன். “

“நீங்க சொல்றது தான் உண்மைனு நாங்க எப்படி நம்புறது. “

“அவ சொன்ன கதையை நம்புறீங்க. நான் சொல்ற உண்மைய நம்பமாட்டீங்களா“

“நீங்களும் கதை தான் எழுதியிருக்கீங்க. “

“அவளோடது கற்பனை.. என்னோடது நிஜம்“

“படிக்கிறவங்களுக்கு ரெண்டு ஒண்ணு தான்“.

“எது நிஜம்னு படிக்கிறவங்க முடிவு செய்யட்டும். நீங்க வெளியிடுங்க. கேஸ் போட்டா நான் நடத்துறேன். “

திருத்தேரியின் நாவலை அவர்கள் அச்சிட்டுக் கொடுத்தார்கள். ஆனால் அது வரவேற்பு பெறவில்லை. எந்தப் பத்திரிக்கையிலும் அதற்கு விமர்சனம் வரவில்லை. ஆனால் சோம.வெங்கடலட்சுமியின் நாவல் திரைப்படமாக உருவாக்கபட்டது. பெரிய வெற்றியை அடைந்தது.

இந்த நிலையில் ஒரு நாள் திருத்தேரி தனது அறையில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருந்தார். அவரை யார் கொன்றது என்று தெரியவில்லை. அந்த நிகழ்வைத் தனது அடுத்த நாவலாகச் சோம. வெங்கடலட்சுமி எழுதினாள்.

இதில் திருத்தேரியைக் கொன்றது கனகம்மாளின் கணவன் சாம்பசிவம். அவன் கொலையை எப்படித் திட்டமிட்டுச் செய்தான் என்று விரிவாக விளக்கியிருந்தாள். அந்த நாவல் வெற்றிபெறவில்லை. அத்தோடு திருத்தேரி கொலைவழக்கு காவல்துறையின் தீவிர விசாரணைக்கும் உள்ளானது. அதில் சில உண்மைகள் வெளிப்பட்டன.

சொத்தை அடைவதற்காகத் திருத்தேரியும் அவரது மனைவி சோம. வெங்கடலட்சுமியும் இணைந்து அங்குராஜை கொலை செய்திருக்கிறார்கள். அதைத் திசைதிருப்ப அங்குராஜிற்கு ஒரு காதலி இருப்பது போலச் சோம. வெங்கடலட்சுமி நாவல் எழுதி உலகை நம்ப வைத்திருக்கிறாள்.

ராவ் பகதூர் ஊதாரியான தனது மருமகன் திருத்தேரி மீது சந்தேகம் கொண்டு கண்காணிக்கச் செய்திருக்கிறார். ஆகவே சோம. வெங்கடலட்சுமியே தனது தந்தையைக் கொலை வழக்கில் மாட்டிவிட இன்னொரு நாவலை எழுதி அதைத் திருத்தேரி பெயரில் வெளியிட வைத்திருக்கிறாள்.

இந்தச் சதியை அறிந்து ஆத்திரமான ராவ் பகதூர் ஆளை அனுப்பித் திருத்தேரியை கொலை செய்திருக்கிறார். அதை மறைப்பதற்காகத் தனது மகளை வற்புறுத்தி இன்னொரு நாவலையும் எழுத செய்திருப்பதும் தெரிய வந்தது.

நிஜத்தை விடவும் எழுத்தில் குற்றம் பிரம்மாண்டமாகிறது. சிக்கலானதாகிறது. கதையில் இடம்பெறும் ஒரு துளி ரத்தம் ஒளிரும் சூரியனைப் போல உருமாறி விடுகிறது. நடந்து முடிந்தபின்பு விஸ்வரூபமாக வளர்ந்துவிடும் தாவரம் குற்றமே.

காவல்துறை கைது செய்வதற்குள் ராவ்பகதூர் தற்கொலை செய்து கொண்டதோடு தனது எல்லாச் சொத்துகளையும் கூன்போக்கி மடத்திற்கு எழுதி வைத்துவிட்டார்.

குடியிருக்கும் வீட்டைத் தவிர எல்லாவற்றையும் வெங்கடலட்சுமி இழந்தாள் . நிழலைப் போல ஒடுங்கிப் போனாள். மூடிய கதவிற்குப் பின்பாக அவளுக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை. அதன் பின்பாக அவள் எதையும் எழுதவில்லை.

பாதியில் கைவிடப்பட்ட நாவலின் துணை கதாபாத்திரம் ஒன்றைப் போலானது அவளது வாழ்க்கை.

0Shares
0