கூட்டத்தின் மனநிலை

1981ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றவர்  எலியாஸ் கானெட்டி. ஜெர்மன் மொழி எழுத்தாளரான இவர் எழுதிய Crowds & Power மிக சுவாரஸ்யமான புத்தகம். மனிதர்கள் ஏன் கூட்டமாகத் திரளுகிறார்கள். கூட்டத்தின் மனநிலை எப்படி உருவாகிறது. ஏன் கூட்டம் சேர்ந்தவுடன் வன்முறை ஏற்படுகிறது. தனிநபர் கூட்டத்தின் வழியாக என்ன மனநிலையை அடைகிறார். எது போன்ற கூட்டங்களைச் சமாளிக்க முடிவதில்லை என்று கூட்டத்திற்கும் அதிகாரத்திற்குமான உறவைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். பத்திரிக்கையாளர்கள். அரசியல் செயல்பாட்டாளர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகமிது

எலியாஸ் கானெட்டி இந்த நூலின் துவக்கத்தில் மனிதர்கள் அறியாத எதையும் தொடுவதற்கு பயம் கொண்டவர்கள். எந்த ஒன்றையும் தொடும் முன்பே யோசிக்க கூடியவர்கள் என்கிறார். இந்த பயம் காலம் காலமாகத் தொடரக்கூடியது.  நம்பிக்கையானவற்றை மட்டுமே எளிதாகத் தொடுகிறார்கள். உறவு என்பதே தொடுதல் தான். தொடுதல் தொடர்பான பயம் களைப்படும் இடமே கூட்டம் என்கிறார்.

மேலும் கூட்டத்தில் இடிபடுவதில். நெரிபடுவதில் இன்பம் அனுபவிக்கிறான் மனிதன். ஆகவே நிறைய கூட்டம் சேரும் போது உள்ளுற மனது சந்தோஷம் கொள்கிறது என்கிறார் (It is only in a crowd that man can become free of this fear of being touched)

கூட்டம் அதிகமாகும் போது வன்முறைக்கான விதை ஊன்றப்படுகிறது. பொருட்களை அடித்து உடைக்கவும் சேதப்படுத்தவும் தூண்டுதல் உருவாகிறது.. கல் எறிவதும் கட்டையால் தாக்குவதும் அடக்கப்பட்ட உணர்ச்சிகளின் பீறிடலே. கூட்டம் அதற்கான சாத்தியத்தை உருவாக்கி தருகிறது.  கூட்டத்தின் இயல்பில் இக்குணம் முக்கியமானது.

தானாகக் கூடுகிற கூட்டம் வேறு. திரட்டப்பட்டு சேர்க்கபடும் கூட்டம் வேறு. சமூக கோபமே தானாக சேருகிற கூட்டத்தை உருவாக்குகிறது. மதம் கூட்டம் சேர்ப்பதை தனது ஆதார செயலாக கொண்டிருக்கிறது.  கூட்டம் கட்டுக்கு அடங்காத போது பீதி உருவாகிறது. இந்த பீதியை கையாளுவது எளிதானதில்லை. எந்த பக்கம் வெடிக்கும் என தெரியாத நிலை உருவாகிவிடுகிறது

சில நேரங்களில் கூட்டம் என்பது ஒரு அரண் போல செயல்படுகிறது.  கூட்டம்  எந்த திசையில் முன்னேற வேண்டும் என தீர்மானிக்கப் படாவிட்டால் நிச்சயம் வன்முறை வெடித்துவிடும்.

கூட்டத்திற்கென ஒரு லயமிருக்கிறது. அது திடீரென அதிகமாகிவிடுவதில்லை. சீராக அதிகமாகி பரவி உச்சத்தை தொடுகிறது. உணர்ச்சிவேகத்தை வைத்தே கூட்டத்தின் இயல்பை நாம் வகைப்படுத்த முடியும்.

போரின் போது திரளும் கூட்டம். விளையாட்டை காண கூடும் கூட்டம். கலை நிகழ்ச்சிகளில் திரளும் கூட்டம், புரட்சியின் போது ஏற்படும் கூட்டம்

என கூட்டத்தின் பின்னுள்ள உளவியல் காரணிகளை சிறப்பாக ஆய்வு செய்திருக்கிறார்.

இந்த ஆய்வுமுடிவுகளை கொண்டு தமிழ்சமூகத்தில் எப்போது, எதனால் கூட்டம் சேருகிறார்கள். கூட்டம் எப்படி கையாளப்படுகிறது, கலைந்து போகிறது. கூட்டத்திற்கும் கும்பலுக்குமான வேறுபாடு எவை என்பதை நாம் விரிவாக ஆராய வேண்டியிருக்கிறது. அவ்வகையில் இந்நூல் தமிழ் சமூகத்தை ஆய்வு செய்வதற்கான புதிய சாளரம் ஒன்றைத் திறந்துவிடுகிறது

0Shares
0