கோணங்கியுடன்

இரண்டு நாட்கள் கோணங்கியுடன் சுற்றித்திரிந்தேன். நானும் அவரும் ஒன்றாக திரிந்த நாட்கள்  மறக்கமுடியாதவை. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் இணைந்து சுற்றியிருப்போம். எத்தனையோ இலக்கியவாதிகளைத் தேடிச் சென்று சந்தித்திருக்கிறோம். வரலாற்றுபுகழ்மிக்க இடங்களை தேடி அலைந்திருக்கிறோம். எவரெவர் வீடுகளிலோ தங்கிப்பேசி கடந்து போயிருக்கிறோம். இன்று அவரது பாதையும் பயணமும் வேறு. ஆனாலும் மனதில் அந்த நெருக்கம் மறையவேயில்லை.

இருவரும் ஒன்றாக சாத்தூர்  சென்று  நண்பர் தியாகுவை அழைத்துக் கொண்டு பாபநாசம் சென்றோம். அங்கே ஒரு அறை எடுத்துக் கொண்டு விடியவிடிய இலக்கியம் பேசிக் கொண்டிருந்தோம்.  சேர்வலாறு அணைப்பகுதிக்கு சென்று குளித்தோம். சாலையோர கடைகளில் சாப்பிட்டுக் கொண்டு  தேநீர் கடையின் பெஞ்சில் அமர்ந்தபடியே மௌனி துவங்கி ரேமண்ட் கார்வர் வரை பேசிக் கொண்டிருந்தது மறக்கமுடியாத அனுபவம். இரண்டு நாட்கள் போனதே தெரியவில்லை.

எனது இடக்கை நாவலை அவருக்கு அளித்தேன். சமீபத்திய கல்குதிரை இதழ்களை எனக்கு கோணங்கி தந்தார். ராஜபாளையத்தில் என்னை இறக்கிவிட்டு அவரும் தியாகுவும் கிளம்பிப் போனார்கள். இன்றைக்கு காலையில் நான் மட்டும் கோணங்கியின் நென்மேனி மேட்டுபட்டிக்கு சென்று வந்தேன். அது தான் அவரது சொந்த ஊர். கோணங்கி விளையாடித்திரிந்த வீதிகளில் தனியாளாகச் சுற்றிவிட்டு திரும்பியது சந்தோஷத்தை மேலும் அதிகப்படுத்தியது

0Shares
0