சினிமா உருவாகிறது.



தமிழில் சினிமாஸ்கோப் முறையில் உருவாக்கபட்ட முதல் படம் ராஜராஜசோழன் . எழுத்தாளர் அரு. ராமநாதன் எழுதிய இந்த நாடகத்தை தமிழகம் எங்கும் டிகேஎஸ் சகோதரர்கள் சிறப்பாக கொண்டு சென்று புகழ் பெற்றனர். இதைத் திரைப்படமாக்கியவர் ஏ.பி. நாகராஜன். சிவாஜி ராஜராஜசோழனாக நடித்திருக்கிறார். படத்தை தயாரித்தவர் ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் ஜி.உமாபதி ( அக்னி நட்சத்திரத்தில் வில்லனாக மிகச்சிறப்பாக நடித்திருப்பார் )



இந்த படம் துவங்கிய நாள் முதல் அதன் படப்பிடிப்பு முழுவதையும் கூடவே இருந்து அவதானித்து ஒரு புத்தகமாக்கியிருக்கிறார்கள். அந்த புத்தகத்தை சில நாட்களுக்கு முன்பாக வாசித்தேன்.


திரைப்படம் உருவாகிறது என்ற தலைப்பில் இதை எழுதியவர் கலை அன்பன் என்ற புனைபெயரில் எழுதும் சுப. இராமன் அவர்கள். 1973 ம் ஆண்டு இந்த புத்தகம் வெளியாகி இருக்கிறது.


 
ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்தில் ஒரு பத்திரிக்கையாளர் உடன் இருந்து அவதானித்து படம் குறித்து  இவ்வளவு விரிவாக எழுதிய முதல் புத்தகம் இது தான் என்று நினைக்கிறேன். படப்பிடிப்பை அருகில் அமர்ந்து பார்ப்பது போன்ற சுவாரஸ்யம் புத்தகத்தில் காணப்படுகிறது. இத்துடன் படப்பிடிப்பு அரங்கு மற்றும் தினசரி படப்பிடிப்பு காட்சிகள் பற்றிய புகைப்படங்களும் இந்த நூலில் இணைக்கபட்டுள்ளன. 


புத்தகத்தின் துவக்கத்திலே நாடகத்திற்கும் திரைப்படத்திற்கும் இடையில் எந்தெந்த காட்சிகள் மாற்றம் செய்யப்பட்டன. அது எப்படி மாற்றப்பட்டது என்ற விபரங்களை சுருக்கமாக தருகிறார். 1994 உலக தமிழ் மாநாடு தஞ்சையில் நடைபெற இருந்த போது தஞ்சை பெரிய கோவிலைப்பற்றி ஒரு ஒலி ஒளி காட்சி அமைப்பது என்று அரசு முடிவு செய்து அதற்கான ஆய்வுபணி நடந்த போது நானும் அதில் பங்கேற்றிருந்தேன்.


அந்த நாட்களில் தஞ்சை கோவிலை முழுமையாக காண முடிந்ததோடு ராஜராஜ சோழன் குறித்து விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது. ஆகவே ராஜராஜசோழன் படத்தை என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


அரு. ராமநாதன் சிறந்த எழுத்தாளர். இவரது வீரபாண்டியன் மனைவி சுவாரஸ்யமான சரித்திர நாவல். இவர் பூலோக ரம்பை, தங்கபதுமை  போன்ற படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். இவரே இந்த படத்தை இயக்கவேண்டும் என்றும் விரும்பினார். ஆனால் அதற்கான சூழல் அமையவில்லை.


 ராஜராஜசோழனை படமாக்குவது என்று ஜெமினி, வாகினி, என்று பல 17 முக்கிய தயாரிப்பு நிறுவனங்கள் வெவ்வேறு காலங்களில் முயன்றும் படம் உருவாக்கபடவில்லை. இந்த நிலையில் அதை ஜி. உமாபதி ஐம்பது லட்சம் செலவில் உருவாக்கி காட்டினார்.


உமாபதி தமிழரசுக்கழகத்தலைவராக இருந்தவர். தனது வீட்டிற்கு தமிழரசு என்று பெயர் சூட்டி முகப்பில் தமிழ் மூவேந்தர்களின் உருவங்களை அலங்கார விளக்குடன் பதித்திருப்பவர் எனவே அவருக்கு சோழ வரலாற்றை படமாக்குவதில் இயல்பாகவே விருப்பம் இருந்தது. அக்பர் வரலாற்றை எப்படி மொகலே ஆசாம் திரைப்படம் உலகிற்கு எடுத்து சொன்னதோ அது போல தான் ஒரு படம் உருவாக்க விரும்புகிறேன் என்று உமாபதி இதன் தயாரிப்பை பற்றி கூறுகிறார்.


ஏ.பி.நாகராஜன் படம் துவங்கும் போதே படத்தில் ராஜராஜ சோழனின் வாழ்க்கையை முழுமையாக சித்தரிக்க முடியாது ஆகவே அவனது வாழ்வில் நடைபெற்ற சில சுவாரஸ்யமாக பகுதிகளை படமாக்கி அதன்வழியே அவனது ஆட்சிசிறப்பை பற்றி சொல்லலாம் என்று தனது எண்ணத்தை வெளிப்படுத்துகிறார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளவர் டபிள்யூ. ஆர் சுப்பாராவ். அவர் பம்பாய் சென்று சினிமாஸ்கோப்பிற்கான சிறப்பு கருவிகளை வாங்கி வந்து பயிற்சி செய்து பின்பு படமாக்கியிருக்கிறார்


இந்த புத்தகம் அன்றைய ஹாலிவுட் படங்களில் எப்படி திரைக்கதை உருவாகிறது. டேவிட் லீன் எப்படி லாரன்ஸ் ஆப் அரேபியா உருவாக்கினார் என்று இடையிட்டு நிறைய தகவல்களை தருகிறது. சினிமாவின் அடிப்படைகளை எளிமையாக அறிமுகம் செய்கிறது.


ஸ்பெஷல் எபெக்ட்ஸ் வராத காலம் என்பதால் கண்ணாடியில் சித்திரத்தை வரைந்து அதை வைத்து மேட்டி முறையில் படமாக்கியிருக்கிறார்கள். தஞ்சை பெரிய கோவில், கோபுரம் ஆகியவற்றை அரங்கு அமைத்து படமாக்கியும், பிருந்தாவனத்தில் முக்கிய காட்சிகளையும் எடுத்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இசை குன்னக்குடி வைத்தியநாதன். கலை இயக்குனர் கங்கா.


1972ம் வருசம் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது. ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் தஞ்சை பெரிய கோவில் அரங்கு அமைக்கபட்டு அதில் காட்சிகள் படமாக்கபட்டுள்ளன. வெற்றிலை போடும் பழக்கம் உள்ள சிற்பிக்கு மன்னர் வெற்றிலை எச்சிலை உமிழும் படிகத்தை ஏந்துவதை  போன்ற காட்சி முதல்நாளில் படமாக்கபடுகிறது. படப்பிடிப்பு அரங்கிற்கு வருகை தந்த புகழ்பெற்ற இயக்குனர்கள், நடிகர்கள் பற்றிய செய்திகள். படப்பிடிப்பில் ஏற்பட்ட மாறுதல்கள், அவஸ்தைகள் என்று நுட்பமாக ஒரு சினிமா உருவாக்கபடுவது எழுத்தில் பதிவு பெற்றுள்ளது.


ராஜராஜ சோழன் படம் பெரிதும் கற்பனை சார்ந்தே திரைக்கதை அமைக்கபட்டிருக்கிறது. யதார்த்தமான சித்தரிப்போ, காட்சிகளோ மிகக்குறைவு. நடிப்பிலும் அது அதிகம் நாடகத்தன்மை கொண்டதே. ராஜராஜ சோழன் என்ற பெயரை எடுத்துவிட்டால் அது வழக்கமான ஒரு திடுக்கிடும் திருப்பங்கள் ஆடல்பாடல்கள்  நிறைந்த மன்னர் படம் அவ்வளவே.


தமிழக மன்னர்களை பற்றிய நமது மனச்சித்திரம் எப்போதுமே மிகைப்படுத்தபட்டதாகவே இருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பாக நான் ஒரு ஜமீன்தாரின் வாரிசு ஒருவரை காண்பதற்காக  சென்றிருந்தேன். அந்த ஜமீன் குடும்பம் நூறு வருசங்களுக்கு முன்பு தங்களை அரசர்களாக அறிவித்துக் கொண்டவர்கள்.


ஆனால் நான் சென்ற நாட்களில் வீட்டுவரி கூட கட்ட முடியாமல் நெருக்கடியாக வாழும் சூழல். ஆனால் அந்த ஜமீன் வாரிசு ஐம்பது வயதிருக்கும். வெள்ளைவேஷ்டியும் கதர்சட்டையும் அணிந்திருந்தார். அவர் என்னை முகம் பார்த்து பேசவேயில்லை. என்னை ஒரு மர நாற்காலியில் அமர செய்துவிட்டு அவர் எதிரில் உள்ள கணக்குபிள்ளையிடம் என்னவிசயமாக வந்திருக்கிறேன் என்று கேட்டார்.


நான் சொன்ன பதிலை கேட்டு மறுபடியும் கணக்குபிள்ளையிடமே நாளைக்கு வரச்சொல்லுங்கள் என்று சொன்னார். ஏன் அப்படி என்று கேட்ட போது ஜமீன் யாரையும் நேராக முகம் கொடுத்து பேசமாட்டார் என்று கணக்கு பிள்ளை பதில் சொன்னார். நான் விடைபெறும் ஜமீன்தார் தனது விசிட்டிங் கார்ட் ஒன்றை என்னிடம் தந்தார். அதில் ஹிஸ் ஹைனஸ் ஸ்ரீஸ்ரீ என்று அவருக்கு நீண்ட பட்டம் பெயரின் முன்னால் இருந்தது.


வெளியே வந்து கணக்குபிள்ளையிடம் இவர் எங்கே படித்தார் என்று கேட்டேன். அய்யா சின்ன வயசில இலங்கையில் படிச்சார். லண்டன்ல ரெண்டு வருசம் மேற்படிப்பு. இங்கிலாந்து மகாராணி கூட ஒண்ணா விருந்து சாப்பிட்டு இருக்கிறார். அவுகளுக்கு பிரெஞ்சு, ஜெர்மன் எல்லாம் கூட பேசத்தெரியும் என்றார். இப்போது அவரது தினசரி வாழ்க்கை எப்படி போகிறது என்று கேட்டேன்.


உடனே கணக்குபிள்ளை அவருக்கு ஜோசியத்தில் ஈடுபாடு அதிகம். நாள் முழுவதும் அவர் ஜோதிடக்கணிதத்தில் தன்னை கரைத்து கொண்டுவிட்டார்.  சொன்னால் சிரிப்பீர்கள். இன்றைக்கும் அவர் படுக்கை அறையில் ஒரு ஆளை பாங்கா வீசுவதற்கு நிறுத்தி வைத்திருக்கிறார்.மின்சார விசிறியை உபயோகிப்பது  கிடையாது. நிறைய ரிக்கார்ட் வைத்திருக்கிறார். தனியாக அதை போட்டுவிட்டு ராக் அண்ட் ரோல் ஆடுவார் என்று சொன்னார். நினைக்கையில் அந்த தனிமை வருத்தம் தருவதாகவே இருந்தது.


ராஜராஜசோழன் திரைப்படத்தின் உருவாக்கம் பற்றிய இந்த புத்தகம் ஒரு சிறந்த முயற்சி. ஆனால் இது தொடர்ந்து பின்பற்றபடவில்லை. ஒவ்வொரு படத்தின் பின்பும் வெளிவராத நிறைய தகவல்கள், வலிகள், புறக்கணிப்பு, சந்தோஷம், ஏமாற்றம் யாவும் உள்ளன. அது படத்தின் வெற்றியில் கரைந்து போய்விடுகின்றன. அல்லது தோல்வியில் கவனிக்கப்படாமல் போய்விடுகின்றது.
தற்போது புகழ்பெற்ற படங்களின் உருவாக்கம் டிவிடியில் இணைப்பாக காண கிடைக்கிறது. தமிழில் அப்படியான முயற்சிகள் வெகு குறைவே.


ஒரு திரைப்படம் குறித்து இத்தனை விபரங்களுடன் குறிப்புகளுடன் வெளிவந்துள்ள இந்த புத்தகம் ஒரேயொரு பதிப்பு மட்டுமே வந்துள்ளது. இன்றுள்ள சூழலில் இது மறுபிரசுரம் செய்ய வேண்டிய ஒன்றே.


***

0Shares
0