இயக்குனர் பாலாவின் புதிய திரைப்படமான அவன் இவன் படப்பிடிப்பு செங்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்று வருகிறது. வசனம் எழுதுவதால் படப்பிடிப்பு தளத்தில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக இருந்துவருகிறேன். அங்கே இணையத்தொடர்பு மிக மெதுவாக இருப்பதால் தொடர்ந்து இணையத்தில் எழுத சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.
மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்புவது கூட மூன்று நாட்களுக்கு ஒரு முறையே சாத்தியமாகிறது. படப்பிடிப்பு மார்ச் இறுதி வரை தொடர்கிறது.
இன்னொரு பக்கம் புதிய நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருப்பதால் வேறு விசயங்களில் மனம் ஈடுபாடு காட்ட மறுக்கிறது. அதிகாலையில் எழுந்து நாவல் எழுதுவதில் கவனம் குவிந்துவிடுகிறது. புதிய உலகத் திரைப்படங்கள், புத்தகங்கள், இலக்கிய சந்திப்புகள் என்று இயல்பான ஈடுபாடு எப்போதும் போல தொடர்ந்த போதும் அதை எழுத்தாக்காமல் மனது ஆறப்போடவே விரும்புகிறது.
இரவில் தினமும் ஒரு முறை நேரம் வாசிக்கிறேன். கடந்த இண்டு நாட்களாக டிக்கன்ûஸ வாசித்து கொண்டிருக்கிறேன். பள்ளிநாட்களில் வாசித்தது. மறுபடி படிக்கும் போது எவ்வளவு தவறவிட்டிருக்கிறோம் என்று புரிகிறது. குறிப்பாக டிக்கன்ஸின் Great Expectations நூற்றாண்டை கடந்து இன்றும் புதியதாகவே இருக்கிறது.
நாவல்கள் தரும் கிளர்ச்சிக்கு இணையாக எதையும் சொல்ல முடியவேயில்லை. அது தனித்த அனுபவம். படித்த நாவல் என்றபோதும் மறுவாசிப்பில் அது தரும் ஆச்சரியம் மிகுந்த சந்தோஷம் தருவதாகவே உள்ளது.
நாவலின் துவக்கம் எப்போதுமே வாசிப்பவரின் அதிக பட்ச கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பது நாவலின் எழுதப்படாத விதி. அதற்கு சிறந்த உதாரணம் டிக்கன்ஸ்
பிப் தனது அப்பா அம்மாவின் கல்லறைக்கு சென்ற போது தப்பிவந்த குற்றவாளி ஒருவனை காண்பதும் பசியில் குற்றவாளி அவனை மிரட்டி உணவு கொண்டுவரச்சொல்வதையும் மறுபடி மறுபடி வாசித்துகொண்டேயிருக்கிறேன். அது போன்ற சம்பவங்கள் எங்கோ இங்கிலாந்தில் நடந்தது மட்டுமில்லை. எனது பால்யத்தில் திருட்டு குற்றத்திற்காக ஒளிந்து வாழ்பவர்கள் பலரை கண்டிருக்கிறேன்.
வறண்டு போன கிணறுகளில் ஒளிந்து கொண்டு யாரும் அறியாத நேரம் வெளியே வருவார்கள். பயமறியாமல் கிணற்றை நோக்கி செல்லும் சிறுவர்களை பிடித்து மிரட்டி பீடி வாங்கி வரச்சொல்வார்கள். கையில் காசில்லை என்றால் எங்காவது திருடி வரும்படி மிரட்டுவார்கள்.
நானே அப்படி ஒரு முறை மாட்டிக் கொண்டிருக்கிறேன். ஒரு பீடியை திருடுவது எளிதான வேலையில்லை. பீடி புகைக்கின்றவர்கள் ஒரு பீடி குறைந்தாலும் கண்டுபிடித்துவிடுவார்கள். ஒரு வேளை பிடிபட்டால் நானே பீடி புகைக்கிறேன் என்று வீட்டில் அடிவிழும். அந்த அபாயங்களை தாண்டி பீடி திருடி கொண்டு போய் கொடுக்க வேண்டும். அப்படி தரும் பீடியை கிணற்றில் ஒளிந்திருப்பவன் ஆனந்தமாக புகைத்தபடியே படியில் உட்கார்து கொள்வான். அவன் கண்களில் புகை வெளிவருவதை கண்டிருக்கிறேன். அந்த கண்கள் சிரித்து கொண்டிருக்கும்
எதற்காக வந்து ஒளிந்திருக்கிறான். எந்த ஊர் என்பதுதெரியாது. பிறகு ஒரு நாளில் அவன் காணாமல் போய்விடுவான். ஆனால் அவன் போன பிறகும் அந்த கிணற்றில் யாரோ ஒளிந்திருப்பது போலவே பயமாக இருக்கும்.
பிப் ஒரு குற்றாவளிக்கு தரும் உணவு அவனை வாழ்நாள் எல்லாம் காப்பாற்றுகிறது. பசியும் உணவுமே உலகின் ஆதார அம்சங்கள். அதை டிக்கன்ஸ் தன்வாழ்வில் முழுமையாக உணர்ந்திருக்கிறார். நாவல் முழுவதுமே பசி முக்கிய குறியீடாக வருகிறது. பிப்பை போன்ற சிறுவர்கள் உலகெங்கும் ஒன்று போலவே இருக்கிறார்கள். அவர்கள் டிக்கன்ஸின் நாவலில் வருவது போல உயரங்களை அடைகிறார்களா என தெரியாது. ஆனால் வயிற்றை காப்பாற்ற வேண்டி ஏதேதோ வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அவமானத்தின் கசப்பை குடித்து வளர்கிறார்கள்.
டிக்கன்ஸ் குறைவான வார்த்தைகளில் ஒரு இடத்தை, கதாபாத்திரத்தை முழுமையாக, வலிமையாக சித்தரித்துவிடுகிறார். எவ்வளவு உயர்வான எழுத்து நுட்பமது. கதாபாத்திரங்களின் குரல் நம் காதில் கேட்கிறது. கதையில் அடிக்கும் சீற்றமிக்க காற்றின் ஒசையை நமது செவியால் உணர முடிகிறது. இதயம் துடிப்பதை போல நாவல் உள்ளுற துடித்து கொண்டேயிருக்கிறது.
டிக்கன்ஸ் கதை சொல்வதில் கில்லாடி. கதையை அவர் வளர்த்து சொல்லும் பாங்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தேர்ந்த கதைசொல்லியின் அருகில்அமர்ந்து கதை கேட்பது போன்ற மகிழ்ச்சியை தருகிறது.
**